22 Jul 2019

வெண்ணாற்றுக் குளியல்



செய்யு - 153
            வெண்ணாற்றில் குளிப்பதன் பூரண சுகம் வேறு எதிலும் குளிக்க விடாது. ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் போதும் மாதக் கணக்கில் குளிக்காமல் கிடப்பவர்களுக்கும் குளிக்கும் ஆசை வந்து விடும். ஆற்றில் தண்ணீர் வந்ததற்காகக் குளிக்கும் பழக்கம் வந்தவர்களும் ஊரில் இருக்கிறார்கள். ஊரில் பெண்டுகளுக்கு இந்தப் பிள்ளைகளைக் கிளப்பி குளிக்க வைத்து பள்ளிக்கூடம் கிளப்பி விடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் அந்தப் பிரச்சனை இருக்காது. அதிகாலையிலேயே குளிக்கக் கிளம்பி கண்கள் சிவக்க சிவக்க பிள்ளைகள் வீடு வந்து சேர்வதைப் பார்க்கும் போது பெண்டுகளுக்கு, "இனுமே குளிக்கக் கிளம்புனே மவனே கொன்னோ போட்டுடுவேன்!" என்று சொல்கிற மாதிரி நிலைமை ஆகி விடும்.
            ஆடி பெருக்குக்கு முன்பே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்து விடும் வெண்ணாற்றில். ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தால் எப்படியும் பத்து பதினைந்து நாட்களுக்குள் தண்ணீர் வந்து விடும். பள்ளிக்கூடம் போகும் காலையிலோ அல்லது இன்டர்வெல் பெல் அடிக்கும் இடைவேளைகளிலோ அல்லது பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பும் சாயுங்கால வேலையிலோ நொங்கும் நுரையுமாக தண்ணீர் வருவதைப் பார்க்க ஆசையாக இருக்கும். அவ்வளவு மெதுவாக பருவப் பெண் போல் அடி மேல் அடி வைத்து வருவதைப் போலத்தான் வரும் தண்ணீர். அங்காங்கே ஊரில் இருப்பவர்கள் ஊற்று தோண்டியிருப்பார்கள். வீட்டுக்கு மணல் அடித்திருப்பார்கள். அந்தப் பள்ளங்களில் விழுந்து எழுந்து அலுத்து சலித்துக் கொள்ளாமல், எவ்வளவு விழுந்து எழுந்திரித்தாலும் அடிபடாதது போல அவ்வளவு அலட்சியமாக வெண்ணாற்றுத் தண்ணீர் தவழ்ந்து வரும். தண்ணீர் வர வர பிள்ளைகளின் கூட்டம் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கும். பிள்ளைகளோடு பிள்ளைகளாய் ஊரே அப்படிதான் ஓடிக் கொண்டிருக்கும்.
            பள்ளிக்கூட நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் வாத்தியார்களின் பாடு திண்டாட்டமாகி விடும். இந்தத் திட்டையில் படிக்கும் பிள்ளைகளுக்கு எப்படித்தான் செய்தி தெரியுமோ, "வடவாதி பெட்டேம்கிட்ட தண்ணி வந்துட்டாம்! எப்படியும் அர மணி நேரத்துக்குள்ள நம்ம பள்ளியோடத்துட்ட தண்ணி வந்து விடும்!" என்று ஒரு பிள்ளை எடுத்து விட்டால் எல்லா பிள்ளைகளும் ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டிருக்கும். ஆற்றங்கரையில் தொடர்ச்சியாக நான்கைந்து பேர் தெரிய ஆரம்பித்து விட்டால், வலது கையின் ஆள்காட்டி விரலை வாயில் வைத்து, இடது கையை கவுட்டிக்குக் கீழ் வைத்து அடக்க முடியாத அஷ்டகோணலான முகத்தை எப்படியோ உருவாக்கி வைத்துக் கொண்டு வாத்தியாரிடம் போய் நிற்கும் பிள்ளைகள்.
            "எப்பப் பாத்தாலும் இதே வேலையா போயிடுச்சி! போய்த் தொலை!" என்று ஒரு பிள்ளைக்கு வாத்தியார் சொன்னதும், வரிசைகட்டி ரெண்டு மூன்று பிள்ளைகள் அதே போல எழுந்து நிற்கும். அதுகளுக்கும் அதே வாத்தியாரின் "போய்த் தொலை!" என்ற வரம் கிடைத்ததும், ரெண்டு மூணு நாலைந்தாகி, நாலைந்து அஞ்சாறு ஆகி, அஞ்சாறு ஆறெழு ஆகி வாத்தியார் விழிப்பதற்குள் வகுப்பு முழுவதும் ஆற்றங்கரைக்கு முன்னே ஆற்றில் தண்ணீர் வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வகுப்புக்கும் இதே சொல்லி வைத்தது போல நடக்கும்.
            "ஆத்துல தண்ணீர் வரப் போவுதுன்னு பேசிகிட்டாங்களே!" என்று வாத்தியார்களின் மண்டைகளுக்குள் பொறி தட்டி, அவர்கள் கம்பை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தால் அவர்களுக்கும் புதுத் தண்ணீரைப் பார்த்து விடும் ஆசை வந்து விடும். வந்து ஆசை தீர ஒரு கவுட்டுப் பார்வை பார்த்து விட்டு, "களவாணிக் கழுதைகளா! ஏமாத்துற படவாக்களா! ஒண்ணுக்குப் போறேம்னு யார ஏமாத்திட்டு எஞ்ஞ வந்து நிக்குறீங்க?" என்று கம்பைச் சுழற்றினால் பிள்ளைகள், "ஹோ" என்று சத்தம் போட்டுக் கொண்டே வகுப்பறைக்குள் ஓடும்.
            வகுப்பறைக்குள் வந்து விட்டால் இந்தப் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்த முடியாது. புதுத்தண்ணியில் என்னென்ன பார்த்தோம் என்பதை ஒன்று மாற்றி ஒன்று கதை அளந்து கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் வாத்தியாரும் அதைச் சொல்லி இதைச் சொல்லி அசை மடக்கிப் பார்த்து விட்டு, இது வேலைக்காகது என்று, "அந்தக் காலத்துல இப்படிதாம்படா டவுசர போட்டுட்டு நாங்க சின்ன புள்ளையா இருந்தப்போ ஆத்துல தண்ணி வரும் பாரு!" என்று ஆரம்பித்து விடுவார். அப்புறம் பிள்ளைகள் வாத்தியாரைக் கவனிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்! எல்லாம் எச்சில் ஒழுக வாத்தியார் முகத்தையே பார்த்துக் கொண்ட தானாகவே கவனிக்க ஆரம்பித்து விடும்.
            அந்த ஆற்றங்கரையிலே நின்று கொண்டிருந்தால் இந்த ஆறு அடித்துக் கொண்டு வரும் என்னென்னவோ வகை வகையான பொருட்களைப் பார்க்கலாம். நெய்வேலி காட்டாமணக்குதான் அதில் அதிகம். ஊரில் நான்கைந்து பெரிசுகள் இதற்காகவே நீள நீளமான அலக்குகளோடு கரைகளில் நின்று கொண்டு அதை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும். அப்படி இழுத்து விடும் போது அதனோடு சேர்ந்து வரும் பாம்பைப் பார்த்து விட்டால் விடலைப் பசங்களுக்குக் கொண்டாட்டமாகி விடும். பாம்பு பாடு திண்டாட்டமாகி விடும். அதன் வாலைப் பிடித்து கிறுகிறுவென்று சுற்றி தரையில் அடிப்பதிலிருந்து, ஒரு பிளேடை வைத்து நெடுக்குவாட்டில் தோலை ஒரு கிழி கிழித்து அப்படியே ஒரு கம்பில் தோலைச் சுருட்டிக் கொண்டே வந்து தோலை உரித்து தோலில்லாத பாம்பு அவஸ்தையில் நெளிவதைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பது வரை எல்லா வேலைகளும் நடக்கும். ஆற்றுத் தண்ணீருக்கு முன் துள்ளி குதித்துக் கொண்டு வரும் மீன்களைப் பிடிப்பதற்கு ஒரு கூட்டம் தைரியமாக ஆற்றில் இறங்கிப் பார்க்கும். அதற்குக் கொஞ்சம் அசாத்திய தைரியம் வேண்டும். ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் எல்லா அசாத்திய தைரியமும் ஊரில் கிடக்கும் பயந்தாங்கொள்ளிப் பசங்களுக்கும் வந்து விடும்.
            ஆற்றில் அடித்துக் கொண்டு வரும் தெர்மகோல் குப்பைகளுக்கு அப்பவே குறைவு இருக்காது. என்னவோ அது பெரிய விளையாட்டு சாமானைப் போல நினைத்து பிள்ளைகள் கரையோரத்தில் நின்று கம்புகளால் அதை அப்படியும் இப்படியுமாக இழுத்து எடுத்து வைத்துக் கொள்ளும். பழைய பர்சுகள், கிழிந்த பைகள், கிழிந்து போன தலையணை, மெத்தை, காய்ந்து போன மாலை, நைந்த புடவை, வேட்டி, துணி மூட்டைகள், தென்னம் மட்டைகள், பழைய கீற்றுகள், உடைந்த பிளாஸ்டிக்குகள், பாட்டில்கள், குப்பைகள், கூளங்கள் என்று ஆறு கொண்டு வரும் பொருட்களுக்கு அளவு இருக்காது. சமயத்தில் செத்துப் போன ஆடு, மாடு, நாய், மனுஷனோட எலும்பு கூடு என்று கைக்கு அகப்பட்டதை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு வருவதைப் போல இழுத்து வந்து மிரட்சிக் காட்டும். ஆற்றுத் தண்ணி குளுமைதான் என்றாலும் இந்த ஒரு விசயத்தில் எரியுற வீட்டில் பிடுங்குன வரைக்கும் ஆதாயம் என்பது போல கொஞ்சம் வெம்மையாகத்தான் நடந்து கொள்ளும் வெண்ணாறு.
            அதனால் எல்லாம் வெண்ணாற்றின் மேல் யாருக்கும் எந்த கோபமும் இருக்காது. ரெண்டு மூணு நாளைக்காவது சந்தனத்தைக் கரைத்து விட்டது போல மஞ்சள் மஞ்சளேன்று ஓடிக் கொண்டிருக்கும். பிறகுப் பார்த்தால் யாருடா இந்த ஆற்றில் பச்சை நிறத்தைக் கலந்து விட்டது எனும்படிக்கு பாசி பிடித்த கணக்காய்ப் பச்சைப் பசேலென்று ஓடிக் கொண்டிருக்கும்.
            புதுத்தண்ணியில் குளித்தால் ஒடம்புக்கு ஆகாது, சளி பிடித்துக் கொள்ளும், காய்ச்சல் அடிக்கும் என்று கரையில் நின்று பெரிசுகள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும். கரையில் கூடி நிற்கும் மக்களின் சத்தத்துக்கு முன் அந்தச் சத்தம் எங்கே எடுபடும்? புதுத்தண்ணியில் விழுந்து குளித்தால்தான் பசங்களுக்கு ஆசை மட்டுப்படும். "ஏலே! என்னடா இது ஆறு இவ்ளோ அசிங்கமா போயிட்டுருக்கு! இதுல போயி பன்னியோ மாரி விழுந்து குளிச்சிட்டு இருக்கீங்களே! ச்சீச்சீய் ச்சீய்! மேல ஏறி வாருங்கடா!" என்று அக்கறையுள்ள நலம் விரும்பிகள் யாரேனும் குரல் கொடுத்தால் அவர்கள் தொலைந்தார்கள். வேறெந்த பதிலும் இருக்காது, ‍"ஹோ" என்ற சத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஒரே பதிலாக அமைந்து அப்படிக் குரல் கொடுத்தவரைத் தெறிக்க தெறிக்க ஓட விட்டு விடுவார்கள். எப்படியும் ஆயிரத்தெட்டு ஹோ போட்டு விடுவார்கள் பசங்கள்.
            இந்தப் பொட்டுப் பொடிசுகள் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது ஆற்றில் குளித்து விட்டுதான் வரும். டவுசர், சட்டையெல்லாம் கழற்றி விட்டு முண்டகட்டையாக அம்மணாஞ்சியாக குளிப்பது குறித்து எதுக்கும் எந்த பிரக்ஞையும் இருக்காது. வீட்டுக்கும் அப்படியே வருவதுதான் வேடிக்கையாக இருக்கும். டவுசர், சட்டையெல்லாம் பைக்குள் போய் விடும். இடுப்பில் கருப்போ, சிவப்போ ஒரு அருணாகொடியும், தோளில் போட்டு பிடித்த பள்ளிக்கூட பையுமாக வீட்டில் நுழைந்து பையை வைத்து விட்டு ஒரே ஓட்டமாய் ஓடி விடும். ஆம்பிளைப் பிள்ளைக் கணக்காய் எல்லா பெண் பிள்ளைகளும் ஆற்றில் இறங்கா விட்டாலும் ஒரு சில பெண் பிள்ளைகள் ஆற்றில் இறங்கினால் ஆம்பிளைப் பிள்ளைகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும். வெண்ணாற்றையே ரவுசு பண்ணி விட்டுதான் கரையேறும். ஆம்பிளைப் பசங்களைப் போல இல்லாமல் இந்தப் பிள்ளைகள் பாவாடையை மட்டும் அவிழ்க்காது. அவ்வளவுதான் வித்தியாசம். வெட்கம் வந்து விடும் போலும். மத்தபடி இந்தப் பிள்ளைகளின் முன் பசங்கள் தொலைந்தார்கள் எனும்படிக்கு ஆற்றை உண்டு இல்லையென்று ஆக்கி விடும். இதில் எந்தப் பொட்டுப் பொடிசை தூக்கி வெள்ளமாய் வரும் ஆற்றில் போட்டாலும் சரி கடல் வரைக்கும் நீந்திக் கொண்டு போய் விடும். அந்த அளவுக்கு பிறக்கும் போது நீச்சல் கற்றுக் கொண்டு வந்ததைப் போல ஒவ்வொன்றும் மல்லாக்க, குப்புற, தம்பட்டம், சொருவு நீச்சல் என்று வித விதமாக நீச்சல் அடிக்கும். புதுத்தண்ணியை ஆசை ஆசையாய் பார்ப்பதைப் போல் இந்தப் பிள்ளைகள் அடிக்கும் லூட்டியை நாள் பூரா பார்த்துக் கொண்‍டே இருக்கலாம் போலிருக்கும். அதைப் பார்த்துக் கொண்டே இந்தப் பெண் பிள்ளைகள் வீட்டில் நைசாக நுழைந்து பையைப் போட்டு வெளியே ஓடி வருவதைப் பார்க்க இன்னும் வேடிக்கையாக இருக்கும். "ஆம்புளப் புள்ளைவோ குளிக்குறானுவோன்னு இந்தப் பொட்டச்சியும் சரிக்குச் சமமா எறங்கி வந்து குளிச்சிட்டு வந்து நிக்குறாளே! இவள வெளக்குமாத்தால அடிச்சி மசுர அறுத்தாத்தாம் சரிபெட்டு வரும்!" அந்த பெண் பிள்ளையைப் பெற்ற தாய்க்குலம் விசயம் அறிந்து ஒரு மிளாரை ஒடித்துக் கொண்டு ஓடி வருவதும், அதுக்கு அந்தப் பிள்ளை பெப்பே காட்டி விட்டு அப்படியும் இப்படியுமாக ஓடி அந்தத் தாய்க்குலத்தை அலைக்கழிப்பதும் ஆற்றில் தண்ணீர் நிற்கும் வரை நடந்து கொண்டிருக்கும்.
            ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் பைப்படியில் குளிக்க யாருக்குமே மனசு இருக்காது. ஊரே ஆற்றில்தான் குளிக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்! இதற்கென்றே சோப்பு டப்பா, துண்டை எடுத்துக் கொண்டு பொட்டுப் பொடிசுகள் தொடங்கி பெரிசுகள் வரை கிளம்புவதைப் பார்க்கும் போது என்னவோ பாகிஸ்தான் பார்டருக்கு சண்டைக்குக் கெளம்புற பட்டாளம் மாதிரிதான் இருக்கும். ஆற்றில் குளிக்கும் துறைக்குப் படித்துறை என்று பெயர். படித்துறையில் எந்நேரத்துக்கும் யாராவது ஒருத்தர் குளித்துக் கொண்டிருப்பார். ஆனால் இந்தப் பசங்களுக்கு ஆற்றோட கரை முழுக்க படித்துறைதான். பள்ளிக்கூடம் போற வரைக்கும், பின்பு பள்ளிக்கூடம் விட்டதிலிருந்து அந்தி கருக்குற வரைக்கும் அதுஅதுகளும் ஒரு படித்துறையை உருவாக்கிக் கொண்டு நின்று கொண்டிருக்கும்.
            வெங்குவுக்கும் செய்யுவுக்கும் ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் கொண்டாட்டம்தான். இந்தக் கிராமத்துப் பெண்டுகள் ஆற்றில் தண்ணீர் வந்ததிலிருந்த நான்கு நாட்களுக்கு அமைதியாக இருந்து விட்டு ஐந்தாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்து விடும்.
            அது எப்படியோ ஆண்கள், பெண்கள் எல்லாம் பக்கத்துப் பக்கத்தேதான் குளிக்கும், சோப்பு போட்டுக் கொள்ளும். எந்தக் கல்மிஷமோ, சில்மிஷமோமான பார்வை எதுக்கும் இருக்காது. என்னவோ எல்லாருக்கும் ஒரு துறை, எல்லாருக்கும் ஓர் ஆறு, எல்லாருக்கும் ஒரே குளியல் இடம் என்பது கணக்காய்க் குளித்துக் கொண்டிருக்கும். எல்லாருக்கும் குளிப்பதன் சந்தோஷம்தான் முக்கியம். அந்த சந்தோஷத்தை விடவா கரவு பார்வை பார்க்கும் சந்தோஷம் கூடுதலாக இருந்து விடும்?
            இந்த ஆற்றுக் குளியல் விசயத்தில் ஊரில் ஒரே விதிவிலக்காக இருந்தவன் விகடு. ஆற்றில் தண்ணீர் வந்தாலும் அவனுக்குப் பைப்படி குளியல்தான். ஆற்றில் குளித்தது, குளத்தில் குளித்தது எல்லாம் நரிவலத்தோடு சரி. அவனும் ஆற்றிலோ, குளத்திலோ குளிக்கமாமல் போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் நரிவலத்தில் படிக்க நேர்ந்ததோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.
            "அடே என்னடா மனுஷம் நீயி! பைப்படியில குளிக்க வேண்டிய பொட்டச்சியோளே ஆத்துல அன்ன ஆட்டாம் போடுறாளுவோ! நீ என்னான்னா பொட்டச்சி மாரி இப்பிடி பைப்படியில குளிச்சிட்டு இருக்கீயே! ஒரு எட்டு ஆத்துக்குப் போயி ஒரு நாளாச்சியும் குளிச்சிட்டு வாயாண்டா!" என்று வெங்கு சத்தம் விட்டுப் பார்க்கும்.
            "என்னவோம்மா! அந்த ஆற்றோட தூய்மையும், நகரத்தில் அதில் கலக்கின்ற சாக்கடையையும் பார்க்கையில் ஆற்றில் குளிப்பதே பிடிக்க மாட்டேங்குதும்மா!" என்பான் விகடு.
            "ஏலே! ஏம்டா இதுக்கும் பிலாக்கணம் வைக்கிறே? ஒரு நாளுதாண்டா குளிக்கச் சொல்றேம்! ஆத்துல நெறயா தண்ணி அடிச்சிட்டுப் போகுதுடா! ஓடுற தண்ணில ஏதுடா அசுத்தம்? ஓடுற தண்ணியே அதயெல்லாம் சுத்தம் பண்ணிடும்டா! போயி இன்னிக்கு ஒரு நா குளிச்சுப் பாருடா! வெண்ணாத்துக் குளியலுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்டா! இத்து ஓடி வர்ற தெசயும் வழியும் அப்புடி. பிடிச்ச தோஷமெல்லாம் போயிடும் தெரியும்ல!" என்று சொல்லும் வெங்கு.
            இந்த இடத்தில் விகடுவுக்குக் கோபம் வந்து விடும். இறங்கி அடிப்பது போல பேசி விடுவான். "இந்தாரும்மா! உனக்குத் தோஷம் பிடிச்சிருந்தா போயிக் குளி. நமக்கெல்லாம் எந்த தோஷமும் கிடையாது, மோஷமும் கிடையாது. நமக்குப் பிடிக்கலைன்னா விட்டுத் தொலையேன்! தோஷம் பிடிச்சவங்க குளிக்க வேண்டிய ஆற்றில என்னை ஏம் குளிக்கச் சொல்றே?" என்பான்.
            "ஊருல ஒவ்வொரு வூட்டுலயும் ஆத்துல கண்ணு செவக்க குளிக்காதேன்னு சண்ட நடக்குது. இஞ்ஞ என்னான்னா ஆத்துல போயி குளிச்சிட்டு வான்னு சொல்றதுக்கு அழிச்சாட்டியும் ஆவுது. ஊருல இந்த ஒரு வூடுதாம் வித்தியாசமான வூடு. ஒரு பூச்சுப் பூசாம செங்கல்லு தெரியுற மேனிக்கு குடி வந்து கெடக்குது!" என்று அப்படியே வீட்டையும் ஒரு குத்துக் குத்தி சுப்பு வாத்தியாரையும் குத்திக் காட்டுவது போல பேசி விடும்.
            கொஞ்ச நேரம் இந்தப் பேச்சுக்கு மத்தியில் ஒரு மெளனம் நீடிக்கும். அந்த மெளனத்தை உடைப்பது போலவே, "இந்தாருடா! நீயி போயி ஆத்துல குளிச்சா குளி. குளிக்காட்டிப் போ! நானும் ஒந் தாங்காச்சியும் போயிக் குளிக்கிறத வுட மாட்டேம்! ஒனக்கும் ஒங்கப்பாருக்கம் இந்தப் பைப்படிதாம்டா லாயக்கு. குண்டுச் சட்டியில குதுர ஓட்டுறவேம் கணக்கா குண்டாஞ் சட்டியில அடிச்சுப் பிடிச்சி இதுலேய நாயிக் குளியலு, காக்கா குளியலு போட்டுட்டுக் கெடங்க! ஆத்துல தண்ணி வந்துட்டா இந்தக் கருமம் பிடிச்சப் பைப்படியிலலாம் நம்மால குளிக்க முடியாதுங்காத்தா!" என்று வெங்கு தொடர்ந்து பேசும்.
            இதையெல்லாம் கேட்க நேரமில்லாதது போல அதற்கு மேல் அங்கு நிற்காமல் விகடு ஓடி விடுவான். இந்தப் பேச்சைக் கேட்கிற தூரத்தில் சுப்பு வாத்தியார் நின்றிருந்தாலும் அவரும் இந்தப் பேச்சைக் கேட்காததைப் போல ஏதோ ஒரு பக்கம் நகர்ந்து விடும்.
            அப்படி நகர்ந்து நூறடி தூரத்துக்குப் போனாலும் "தஞ்சாரூ சில்லாவுல பொறந்துட்டு வெண்ணாத்துல குளிக்கலேன்னா எப்பூடி? நமக்குலாம் வருஷா வருஷம் ஆத்துல தண்ணி வந்து அதுல குளிச்சாதாம் உசுரே திரும்ப வந்த மாரி இருக்கு. எப்பாடி ஐயனாரப்பா எல்லா வருஷமும் ஆத்துல குளிக்குற யோகத்த மட்டும் கொடும்யா! முடியாத காலத்துலயும் கம்ப ஊனிட்டுப் போயாவது ஒரு முக்கு முழுகிட்டு வந்திடணும்டி எம் மகமாயி!" என்ற வெங்குவின் சத்தம் சன்னமாய் வந்து கொண்டேயிருக்கும்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...