23 Jul 2019

வந்தான்டா காம்பெளண்ட்காரன்! அடடா!



            ப்ளாட்பாரத்துல நடந்து நடந்து அது பொது இடம் என்கிற பார்வை வந்து விட்டது. ரோட்டுக்குப் பக்கத்தில் காம்பெளண்ட் கட்டியிருப்பதாலேயே அதற்கும் ரோட்டுக்கும் சம்மந்தமில்லை என்ற பார்வை உண்டாகி விட்டது. ரோட்டுக்கு அவ்வளவு பக்கத்திலா காம்பெளண்ட் சுவர் கட்டுவார்கள் ரெண்டும் அப்படியே கட்டிப் பிடித்து லிப் லாக் முத்தம் கொடுப்பது போல?
            ரோடும் அதற்குத் தகுந்தாற் போல வயசுக்கு வந்த பெண்ணைப் போல நாணிக் கோணி வளைந்து நெளிந்து நடந்து போகிறது. இதைப் பார்த்துதான் பாரதி, 'அச்சமும் மடமும் நாய்களுக்கு வேண்டுமாம்!' என்று எழுதியிருப்பார் போலும்.
            நம்ம ஆட்களுக்கும் வீட்டை ஒட்டிக் காம்பெளண்ட் கட்டுவதை விட ரோட்டை ஒட்டிக் காம்பெளண்ட் கட்டுவதில் அலாதியான ஆர்வம் வந்து விட்டது. ரோட்டில் ஒதுங்க இடமில்லை என்றாலும் கட்டி வைத்திருக்கும் காம்பெளண்டில் முட்டிக் கொண்டு சாகட்டும் என்று நினைத்து விடுகிறார்கள்.
            எவ்வளவுதான் கொல்லைப் பக்கத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தாலும் இது ஒரு பொது புத்தியைப் போல ரோட்டை ஒட்டி கொஞ்சம் காம்பெளண்டை நகர்த்தி இடம் பிடித்து வைத்துக் கொள்வது மக்களுக்கு வாடிக்கையாகப் போய் விட்டது. என்ன இருந்தாலும் ரோட்டில் கொஞ்சம் இடம் கிடைத்தால் தாரும், கப்பியும் வருங்காலத்தில் சொத்தாகக் கிடைக்கும் என்று நினைத்து விட்டார்கள் போல. அதிலும் இந்த பங்களாக்காரர்கள் பங்களாவைக் கட்டுவதற்கு முன் காம்பெளண்டை ரோட்டை ஒட்டிக் கட்டி விட்டு மறுவேலை பார்க்காமல் விட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.
            காணி நிலம் வேண்டும் என்று பாடிய பாரதி ரோட்டோரத்தில் வாகனத்தில் சென்றால் ஒதுங்குவதற்குக் கொஞ்சம் இடம் வேண்டும் என்றுதான் பாடியிருப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காம்பெளண்ட்காரர்களின் அட்டகாசம் அந்த அளவுக்குத் தாங்க முடியவில்லை.
            அதே,
            இந்த
            ப்ளாட்பாரத்தில் யாராவது முடியாத மக்கள் கொஞ்ச நேரம் தங்கி இருந்தால் அடித்துப் பிடித்து அப்புறப்படுத்தி விட்டு மறுவேலை பார்க்கிறார்கள்.
            அட,
            இந்தக் காம்பெளண்ட்காரர்களின் காம்பெளண்ட்களைத் தட்டி விட்டால் அவர்களுக்குக் குடியிருக்க குடியிருக்கும் வீடு இருக்கிறது. இந்தப் ப்ளாட்பாரக்காரர்களுக்கு என்ன இருக்கிறது அதன் பக்கத்தில் ஓடும் சாக்கடையைத் தவிர?! 
            அட போப்பா! உன் வீட்டுக் காம்பெளண்ட் ஓரத்தில் ஓடும் சாக்கடைக்குப் பக்கத்தில் கூட ஒருத்தனை ஒதுங்க விட மனசில்லாத நீ ரோட்டில் ஒதுங்க விடுவதற்குக் கூட இடமில்லாமல் காம்பெளண்ட்டைக் கட்டி வைத்திருக்கிறாயே! உன் வீட்டு காம்பெளண்ட் ஓரத்தில் மட்டும்தான் சாக்கடை ஓடுகிறதா? ஒம் மனசிலும் அதுவேதான் ஓடுகிறதா? என்று சந்தேகமாக இருக்கிறது போ!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...