18 Jul 2019

ஒன்று போய் வந்துப் போனது!



செய்யு - 149
            மனுஷனுக்குக் காசு பிரச்சனை வந்தால் நிலைகுழைந்துதான் போகிறான். கடனையும், கடமையையும் எத்தனை நாளுக்கு வளர்த்துக் கொண்டு போக முடியும்? இரண்டுமே முடிவுகளுக்காக ஏங்குபவை. சுப்பு வாத்தியாருக்கு வீட்டைக் கட்டி முடிப்பது கடமை என்றால், அந்த வீட்டுக்காக வாங்கிய கடனை அடைத்து முடிப்பது இன்னொரு கடமையாக ஆகி நிற்கிறது. எப்படியோ கையில் காசு புரண்டால் தேவலாம் போலிருக்கிறது. சொசைட்டி லோன், பார்ட் பைனல் என்று ஆரம்பித்து தெரிந்தவர்களிடமும் இஷ்டத்துக்கு கடன் வாங்கி வைத்திருக்கிறது சுப்பு வாத்தியார்.
            பொதுவாக வீடுகள் கூரை வீடுகளாக இருக்கும் வரைதான் அந்த வீடுகளில் ஆடு, மாடுகள் தங்கி இருக்கும் போலிருக்கிறது. ஒரு சில விதிவிலக்கான மாடி வீடுகளை மட்டும் கணக்கில் சேர்த்துக் கொள்ளாவிட்டால், எப்போது ஒரு வீடு மாடி வீடாக ஆகிறதோ, அப்போதே அந்த வீட்டிலிருந்து ஆடு, மாடுகள் போய் விடுமோ என்னவோ! இந்த தெருவுக்கே அப்படித்தான் ஆகி விட்டது. மாடி வீடு கட்ட கட்ட இந்தத் தெருவில் இருந்தவர்கள் செய்த முதல் வேலை மாட்டை வைத்துக் கொண்டு சரியாகப் பார்க்க முடியவில்லை என்று ஆடு, மாடுகளை விற்றதுதான். மாட்டை விற்று மாடி வீடு கட்டியவர்களின் ‍தெருவாகி விட்டது இது. அது என்னவோ இந்தத் தெருவைப் பிடித்த சாபக் கேட்டைப் போல எல்லா வீடுகளுக்கும் அதுதான் நடந்தது. மாடி வீடு என்ற சொகுசு வர வேண்டும் என்பதற்காக அவர்கள் மாட்டை விற்றார்களா? மாட்டை விற்று விட்டு மாடி வீடு கட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் வீடு கட்டினார்களா? என்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது. வீடு கட்டிய போது யாருக்கும் அப்படித் தோன்றவில்லை. இப்போது யோசிக்க யோசிக்க அப்படித்தானே தோன்றுகிறது. ஆனால் எப்படியோ மாடி வீடுகளில் மாடுகள் இல்லாமல் போனது. மாட்டை விற்கக் கூடாது என்ற எண்ணமிருந்தாலும் மாடி வீட்டைக் கட்டி முடிக்கும் போது ஒரு பணமுடை வந்து போகும் பாருங்கள்! அது ஆடிக்காற்றில் அம்மி பறப்பது போலத்தான். யானையே வைத்து ஆண்டிருந்தாலும் அதை விற்று கடனை அடைத்தால்தான் முடியும் என்பது போலாகி விடுகிறது.
            குடியிருந்த வீட்டை விற்பதும், வீட்டில் வளர்த்த மாட்டை விற்பதும் ஒன்றுதான். இரண்டுமே விற்பதற்குரியல்ல பண்டமே இல்லைதாம். ஆனால் சூழ்நிலையும் நெருக்கடியும் விற்க விடாமல் செய்து விடுமா என்ன? குடியிருந்த வீட்டை விற்று விட்டு அந்த ஊர்ப் பக்கம் போவதே பெரும்பாடுதான். அதுவும் அந்தத் தெருபக்கம் கல்யாணம் காட்சி என்று போவது சொல்லி மாளாத பெருந்துயர்தான். வீட்டின் நினைவுகள் சுனாமி அளவுக்கோ, சூறாவளி அளவுக்கோ வந்துத் தாக்கிக் கொண்டிருக்கும். விற்ற வீடு மனசில் வாழ்ந்து கொண்டே மனத்தை வருத்திக் கொண்டிருக்கும். என்றாலும் விற்று விட்ட வீடு விற்றவரை நினைத்து ஓடி வந்து விடாமல் இருப்பது ஒரு வகை ஆறுதல்தான். மாட்டைப் பொருத்த வரையில் அப்படி ஆறுதல் பண்ணி விட முடியுமா? பாசத்தோடு வளர்த்த மாடு ரெண்டு மூணு மாதத்திற்குள் விற்றவன் வீட்டை ஓடி வந்து பார்க்காமல் இருக்காது.
            மாட்டை விற்ற பின் எந்த மாட்டைப் பார்த்தாலும் விற்று விட்ட மாட்டின் சாயல் தோன்றுவதிலிருந்து விடுபடவே நாட்கள் ஆகும். அது ஒருவாறாக மறந்து போகும் போது விற்ற மாடு ஒரு நாள் வீட்டின் முன் வந்து நின்று "ம்மா" என்று கத்தினால் இருக்கின்ற உயிர் போன கதைதான். அதை விற்றவரிடம் அனுப்புவதற்கும் கஷ்டமாகப் போய் விடும். அனுப்பாமலும் இருக்க முடியாமல் தர்ம சங்கடமாகி விடும்.
            சுப்பு வாத்தியாரின் வீட்டில் வளர்ந்த மாடுகள் எல்லாம் மனுஷன் கணக்காய் வளர்ந்தவை. யாரைப் பார்த்தாலும் குத்தித் தூக்கும் கருப்பு வீட்டில் இருக்கும் யாரையாவது பார்த்து விட்டால் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போய் கிட்டே வந்து நக்கத் தொடங்கி விடும். அது நக்குவது அப்படியே உப்புத்தாளைப் போட்டு தேய்ப்பது போலிருப்பதால், 'அட யப்பா! எப்படிடா இந்த நக்கலிலிருந்து தப்பிப்பது?' என்று அதன் நக்கலில் சிக்கியவரின் நிலையாகி விடும். இந்த மாடுகள் பக்கத்தில் இருப்பது தெரியாமல் ஒரு ரொட்டியையோ, கொஞ்சம் மிக்சரையோ கூட வாயில் போட்டு விட முடியாது. கட்டியிருக்கும்  கயிற்றை எப்படியாது அப்படி இப்படி இழுத்துக் கொண்டு வந்து கையில் இருப்பதைப் பிடுங்கித் தின்று விட்டுதான் மறுவேலை பார்க்கும். ஒருவேளை கிட்ட நெருங்கி வந்து தின்ன முடியாவிட்டால் "ம்ம்மாமா" என்று அடிவயிற்றிலிருந்து ஒரு மாதிரியாகக் கேவிக் கேவிக் கத்திக் கத்தி வாங்கி தின்று விட்டுதான் மறுவேலை பார்க்கும். அதுவும் கருப்பு போட்ட மூக்குப் பெருத்த பிரிசியன் கன்றுகுட்டி இருக்கிறதே, அதற்கு உப்பு ரொட்டி என்றால் அம்புட்டு இஷ்டம். ஒரு பாக்கெட்டையே தின்னக் கொடுத்தாலும் தின்று விட்டு ஏக்கமாய்ப் பார்க்கும். ஐஸ் வாங்கித் தின்னும் போது பார்த்து விட்டால் போதும் கத்திக் கத்தி கிட்டே வர வைத்து அதை ஒரு நாலு நக்கு நக்கிப் பார்த்தால்தான் அதுக்கு மனசு அடங்கும். வீட்டில் இருந்த வேறு எந்த மாடும் இந்த ஐஸ் நக்கும் வேலையை வைத்துக் கொள்ளாது. இந்தப் பிரிசியின் கன்று மட்டும் ஐஸ் நக்குவது என்றால் அவ்வளவு இஷ்டப்பட்டுக் குதிக்கும். எப்படித்தான் ஐஸ்காரனின் பாம் பாம் சத்தம் அதுக்குக் கேட்குமோ? வீட்டில் ஐஸ் வாங்கியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்குமோ? கத்திக் கத்திக் கூப்பிட்டு விடும்.
            இப்படியெல்லாம் வளர்த்த மாடுகளை விற்பது வெங்குவுக்கு வேதனையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இது விகடுவுக்கோ, செய்யுவுக்கோ அப்போது ஒரு பெரிய விசயமாகத் தெரியாமலே போய் விட்டது. அதை அவர்கள் ரெண்டு பேரும் புத்திசாலித்தனமான முடிவை எடுப்பது போலவே நினைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வருத்தாத அந்த நினைவுகள் அவர்களுக்குக் காலப்போக்கில் வந்து வருத்திய போது, அதிலிருந்து மீள முடியாத நினைவுச் சுழலில் சிக்கும் ஒரு பரிதவிப்பு பிற்பாடுதான் வந்தது. மாடுகளின் சேட்டைகள் ஒவ்வொன்றும் முன்தப்பி பின்னிருந்து வருத்தும் ஒரு நினைவு வேட்டைக்காரனின் நிலைக்குத் தள்ளியது.
            மரத்தை வெட்டுவது எளிதாக இருக்கிறது. அதே மரத்தை உருவாக்குவதற்குள் போதும் போதுமென்று ஆகி விடுவதைப் போலத்தான் அந்த நிலையும் இருக்கும் என்பது பிற்காலம் விகடுவுக்கும், செய்யுவுக்கும் சொன்ன பாடம். பிற்காலத்தில் எவ்வளவோ ஆசையோடு அவர்கள் மாட்டை வாங்கிக் கட்ட வேண்டும் என்று நினைத்த போதெல்லாம் அது நடக்கவே வாய்ப்பில்லாதது போல் ஆனது. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிப் போனது. ஒரு சில விசயங்கள் போனால் போனது போலத்தான். கயிற்றை விட்டால் விட்டது போலத்தான். அதற்கான சூழல் அமையாமலே போய் விடுகிறது.
            கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் போது, சுப்பு வாத்தியார் கரைக்க கரைக்க மாட்டை விற்கக் கூடாது என்று கல்லு மனசாய் இருந்த வெங்குவின் மனசும் கரைய ஆரம்பித்தது. அதற்குத் தோற்றுவாய் முதலில் சினை படாமல் இருக்கும் கருப்பின் தலைச்சன் கன்றை மட்டும் விற்பது என்று முடிவானதுதான். விகடுவும், செய்யுவும் மாட்டை விற்பதில் அப்போது அதீத சுறுசுறுப்பு ஏன் காட்டினார்களோ? இந்தக் காலத்தில் மாட்டையெல்லாம் வைத்துக் கொண்டு எவன் கஷ்டப்படுவான் என்று நினைத்தார்களோ? உண்மையில் ஆடு, மாடுகளை வைத்துக் கொண்டு பாடுபடுவதுதான் எவ்வளவு அருமையான வாழ்க்கை. எந்த மனுஷனும் ஊரில் பேசாமல் ஒருத்தனை ஒதுக்கி விட்டால் என்ன? அந்த ஆடு, மாடுகள் மனுஷனிடம் பேசும் பாஷை இருக்கிறதே! அது போதும். காலத்துக்கும் யாரோடும் பேசாமலே அப்படியே இருந்த விட முடியும். அதுகளோடயே பேசிக் கலந்து உறவாடி அப்படியே இருந்த விட முடியும். சில விசயங்கள் சின்ன வயதில் புரியாமல் பிற்பாடு புரியும் போது அந்த விசயம் கைக்கு எட்டாத தூரத்தில், கண்ணுக்கு மட்டுப்படாத தொலைவில் போய் விடுகிறது. மாடுகளும் அப்படிப் போனதுதான். எங்கேயோ அவை தூரத்தில் புள்ளிகளாய் மேய்ந்து கொண்டிருப்பது போல தெரிகின்றனவே தவிர அருகில் வரவே மாட்டேன்கின்றன.
            வீட்டுக்கு ஒரு மாட்டை வைத்துக் கொள்வது என்று அவ்வபோது சாமர்த்தியமாக சுப்பு வாத்தியார் பேசித்தான் முதலில் சினை படாமல் நின்ற கருப்பின் கன்றை விற்க ஏற்பாடான போது, வெங்குவும் என்ன செய்யும்? வீட்டில் விகடுவோ, செய்யுவோ யாராவது ஒருத்தர் அதன் பேச்சுக்கு கொஞ்சம் பக்கத்தில் இருந்திருந்தால் ரகளை பண்ணி மாடுகளை விற்க விடாமல் பண்ணியிருந்திருக்கும். இதுகள் ரெண்டும்தான் என்னவோ உடம்பு முடியாமல் மாடுகளைப் பார்த்து மறுபடியும் வெங்குவுக்கு உடம்பு முடியாமல் போய் விடுமோ என நினைத்து மாடுகளை விற்பதுதனா சரி என்பது போல தலையை ஆட்ட ஆரம்பித்திருந்தன.
            விற்க முடிவான கருப்பின் கன்று எத்தனையோ ஆண்டுகள் ஆகி சினைபடாமல் நின்றாலும் வீட்டில் அதன் மீதான பாசம் யாருக்கும் குறைந்து பட்டது கிடையாது. வைத்துக் கவனித்துச் சமாளிக்க முடியாத குறைதான் பெரிதாகப் போய் விட்டது. வாங்கிச் சென்றவர்கள் நல்லவிதமாக வளர்த்தால் சரிதான் என்பதே சரியான முடிவாகத் தெரிந்தது. அதில் நடந்த ஒரே நல்ல கதை மாட்டை நன்றாகக் கவனித்து வளர்ப்பவர்களாய்ப் பார்த்து விற்றதுதான். அதை விடவும் நடந்த இன்னொரு நல்ல கதை, சினைபடாமல் நின்ற அது விற்ற பின் வாங்கிச் சென்றவர்களின் வீட்டில் போய் சினையானதுதான். அது சினையாகி விற்றிருந்தால் நல்ல காசுக்கு விற்றாகியிருக்கும். சினைபடாமல் விற்று வாங்கியவர்களின் வீட்டில் போய் உடனே சினையானதால் வாங்கிப் போனவர்களுக்கு நிரம்ப சந்தோஷம். "வாத்தியாரய்யா வீட்டு மாடு வாங்கிட்டு வந்ததும் செனயாகிப் போச்சு!" என்று பார்க்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை விடவும் அதை விடவும்  அதை விற்று விட்டு ரெண்டு மூணு வாரம் இருக்கும். அது வீட்டுக்கு முன் வந்து நிற்கிறது.
            அதைப் பார்க்க பார்க்க வீட்டில் எல்லாருக்கும் ஏன்தான் விற்றோம் என்ற நிலைதான். அதை வாங்கிக் கொண்டு போனவர்கள் சும்மா இருப்பார்களா? அது வந்தால் இங்குதான் வந்திருக்கும் என்று கணக்குப் பண்ணிச் சரியாகவே வந்து விட்டார்கள். விற்றவர்களிடம் மாட்டைக் கொடுக்க முடியாது எனவா மன்றாட முடியும்? ஓட்டிக் கொண்டு போப்பா என்று சொல்லி அனுப்பியாகிறது. அதை விற்ற போது வராத கண்ணீர் இப்போது எல்லாருக்கும் வந்து தொலைக்கிறது.
            வாங்கிக் கொண்டு போனவர்கள் அந்தக் கண்ணீரைப் பார்க்கிறார்கள்.
            "ஒண்ணும் வெசனப்பட வாணாம் வாத்தியாரய்யா! வேணும்னா ரண்டு நாளிக்கு வூட்டுல கட்டிப் போட்டு வெச்சுக்குங்க. ரண்டு நாளு கழிச்சு வந்து ஓட்டிட்டுப் போறோம்!" என்கிறார்கள் அவர்கள்.
            "யே யப்பா! நீங்களல்லாம் நல்லாருப்பீயே! மொத்தல்ல மாட்டை ஓட்டிட்டுப் போயிடுப்பா! இப்பவே கண்ணு கலங்குது. நெஞ்சு அலமலந்துப் போவுது. இதுல ரெண்டு நாளு கட்டி வெச்சிட்டா அவ்ளதாம். ஒம் கூட வுடவே மனசு வாராது. கெளப்பிட்டு போ. மொதல்ல இஞ்ஞ நிக்காதே!" என்று வெட்டி விட்டது போல வெங்குதான் பேசுகிறது.
            இப்போது வெங்குவின் மெல் விகடுவுக்கும், செய்யுவுக்கும் ஆத்திரமாக இருக்கிறது. ரண்டு நாள் வேண்டாம், ஒரு நாள்! ஒரு நாள் கூட வேண்டாம், ராப்பொழுதி கட்டி வைத்திருந்து விடிந்ததும் அனுப்பக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது.
            மாட்டை வாங்கியவர்கள் ஓட்டிக் கொண்டு போகிறார்கள். மாடு திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே அவர்கள் பின்னால் போகிறது. அதன் கால்கள் அவ்வபோது தரதரவென்று நின்றபடியே பின்னால் இழுக்கிறது. ஓட்டிக் கொண்டு போகுபவர்கள் முன்னால் இழுக்கிறார்கள். எவ்வளவு நேரம் அதனால் போராட முடியும்? தன் ஆசை நிராசை ஆன மனுஷனைப் போல மாடு போய்க் கொண்டிருக்கிறது. கண்ணிலிருந்து மறையும் வரை விகடுவும், செய்யுவும் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்க்க முடியாமல் வெங்குவும், சுப்பு வாத்தியாரும் வீட்டுக்குள்ளே போய் விட்டார்கள். பாசத்தை மறந்து உள்ளொடுங்கி தாழ்ப்பாளைப் போட்டுக் கொள்ள ஒவ்வொருவருக்கும் வீடு ஒன்று தேவையாய் இருக்கிறதே!
*****

2 comments:

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...