18 Jul 2019

அரசியலுக்கு ஆயிரம் பயிற்சிகள்



            நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு நடிகர் சங்கத் தேர்தல்கள்தான் காரணம் என்று நினைக்காமல் இருக்க முடிகிறதா?
            அரசியல் தேர்தல்களை விட பரபரப்பாக, கிரிக்கெட் மேட்சை விட செம திரில்லாங்காக, ஏன் அமெரிக்க பிரசிடெண்ட் தேர்தலையே ஒரங்கட்டி விடும் அளவுக்கு செட டப்பாக நடிகர் சங்கத் தேர்தல் இந்த பிரபஞ்சத்தக்கே எப்போதும் ஸ்பெஷல்தான்.
            இப்படிப்பட்ட நடிகர் சங்கத் தேர்தல்களைச் சந்திக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். உலகில் பல பகுதிகளில் நடிகர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதற்கு தமிழ்நாட்டில் இருப்பது போல நடிகர் சங்கத் தேர்தல்கள் அந்தந்தப் பகுதிகளில் நடக்காமல் போவதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் இருப்பது போன்ற நடிகர் சங்கத் தேர்தல்கள் எங்கெங்கும் இருந்தால் அங்கங்கும் நடிகர்கள் அரசியலில் இறங்குவதற்கு வாய்ப்புகள் நிச்சயம் ஏற்பட்டு இருக்கும்.
            ஆக, இப்படித் தமிழக அரசியலுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு கல்விக் கூடமாகவே நடிகர் சங்கம் இருக்கிறது. அதன் விளைவாக பல நடிகர்கள் தமிழக அரசியலுக்கு வந்து கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
            ஒரு திரைப்படத்தை ரெண்டு, ரெண்டரை மணி நேரத்துக்குத்தான் சுவாரசியமாக பார்க்க முடியும் இல்லையா! ஆனால் ஒரு திரைப்படத்தின் சுவாரசியத்துக்குச் சற்றும் குறைவில்லாமல் நடக்கும் அந்தத் தேர்தலை ஆயுள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறதே! ஆயுள் முழுவதும் அந்தத் தேர்தல் செய்திகளைக் கேட்டுக் கொண்டே காலத்தைக் கழித்து விடவும் முடிகிறதே!
            அதே நேரத்தில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியத் தேர்தலையே நடத்தி முடிக்க முடிந்தாலும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தி முடிப்பது எவ்வளவு சவாலாக இருக்கிறது பாருங்கள். அந்தச் சவால்தான் நடிகர்களுக்கு தமிழக அரசியல் சவாலைப் பொடிப் பொடியாக்கி எதிர்கொள்வதற்கான தனித்துவத்தைக் கொடுக்கிறது.
            இந்த நடிகர் சங்கத் தேர்தல்களால் முழு அரசியல் பயிற்சி பெற்று விடும் நடிகர்கள் அதன் காரணமாக, எனக்கு அரசியல் தெரியாது என்ற பேட்டி கொடுக்கும் போது அவர் முழுமையான அரசியல்வாதியாகி விட்டார் என்பதையும் எவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல்வாதிகள்தான் உள்ளுக்குள் இருப்பதை எப்போதும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்களே!       
            நடிகர்களிடம் தமிழக மக்கள் ஏன் ஆட்சியை ஒப்படைக்கிறார்கள் என்பதற்கு இதுவும் காரணம்! இதன் அடிப்படையில்தான் அரசியல்வாதிகளிலும் நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் உருவாகிறார்களோ என்பது ஆராய்வுக்கு உரியது!
*****

2 comments:

  1. சிறப்புப் பதிவு

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி ஐயா!

      Delete

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...