19 Jul 2019

டீயும் வேணாம்! காபியும் வேணாம்!



செய்யு - 150
            ரெண்டு மாடுகள் இருந்தாலும் இருபது மாடுகள் இருந்தாலும் பராமரித்துக் கொள்வது ஒன்றுதான். மாடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து வேலை குறைவது போலத் தோன்றும். மெனக்கெடல்கள் குறைந்தாலும் இருபது மாடுகளுக்குக் கொடுக்கும் அதே கவனிப்பை ரெண்டு மாடுகளுக்கும் கொடுத்தாகத்தானே வேண்டியிருக்கிறது.
            வீட்டில் ஒரு மாடு பால் கறந்து கொண்டிருந்த அதே நேரத்தில் மற்றொன்றும் ஒரு கன்றை ஈன்றதும் இரண்டில் ஒன்றை விற்பது என்ற முடிவுக்கு வந்திருந்தது சுப்பு வாத்தியார். "எதுக்கு ‍ஒரே நேரத்துல ரெண்டு மாட்டைக் கறந்துட்டு! ஒண்ண வித்துப் புடுவோமா?" என்று ஆரம்பித்தது சுப்பு வாத்தியார்.
            "வூட்டுல ஒண்ணுக்கு ரெண்டா மாடு கறக்குறது ஏம்தாம் இப்படி வூட்டுல இருக்கறவங்களுக்கே கண்ண உறுத்துதோ! வூட்டுல இருக்குறதுங்கள இப்பிடின்னா வெளில இருக்குறவங்க கண்ணு வெளங்குமா? இத்து ன்னா எப்ப பாத்தாலும் மாட்ட விக்குறது மாட்ட விக்குறதுன்னு இந்த மனுஷம் ஒத்தக் காலுல நின்னுட்டு இருந்தா என்னத்தப் பண்றது? மாடு மனுஷன ன்னா பண்ணுது? அது பாட்டுக்கு நிக்குது! அது பாட்டுக்கு செவனேன்னு ரண்டு வைக்கல கடிச்சிட்டு அது வந்த விதிய நெனச்சிகிட்டு நொந்துகிட்டு கெடக்குது!" என்றது வெங்கு.
            ரெண்டு மாடுகளும் கன்று போட்டு நிற்பதைப் பார்க்கையில் அம்சமாகத்தான் இருக்கிறது. கன்று போட்ட பின் மாடுகள் ரெண்டும் ஒன்றையொன்று எதிரிகள் போல பார்த்துக் கொண்டு அங்கே இங்கே ஓடும் தங்கள் கன்றுகளை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள ஒரு மாதிரியாக உறுமுவதைப் பார்க்கையில் அதுவும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இப்படி ரெண்டு மாடுகள் கன்று ஈன்று விடும் போது, கன்று ஈன்ற ரெண்டும் தாயாய்ப் பிள்ளையாய் இருந்தாலும் ரெண்டுக்கும் ஒத்துக் கொள்ளாமல் ஒன்றையொன்று எதிரிகள் போல பார்த்துக் கொள்கின்றன. ஒன்றை அவிழ்த்தால் இன்னொன்றைப் போய் முட்டுகிறது. ஒரு புதிய கன்று பிறந்ததும் அப்படி என்னதான் கோபமோ அவைகளுக்குள். பிடித்துக் கட்டும் போது ரொம்பவே கவனமாக இருந்க்க வேண்டியதாய் இருக்கிறது. இது ஒருவகை அல்பத்தனமான ஒதுங்கி நின்று ரசிக்கத்தக்க ஒன்றுதான். இதுவே ஒரு மாட்டையும் கன்றையும் விற்க சுப்பு வாத்தியாருக்குப் போதுமானதாகப் போய் விட்டது.
            "ரெண்டும் ஒண்ணையொன்னு முட்டிக்கிறதா பாக்குறப்ப பயமால்ல இருக்கு! எதுக்கு இப்படி ரெண்டையும் போட்டுகிட்டு கண்ணுல வெளக்கெண்ணெய்ய வுட்டுகிட்டுக் கிடக்கணும்! பேயாம ஒண்ணு ஒட்டி விட்டுடுவோம்!" என்று கையில் காசு தட்டாய் இருப்பதைச் சாமர்த்தியமாய் மறைத்து அப்போதைக்கப்போ சொல்லிப் பார்க்கிறது.
            "வூட்டுக்கு ஒரு மாடு கன்னாவது இருக்கணும். அதயாவது வுடுவீயளா? இத்து மாதிரியே எதாச்சிம் ஒண்ணு கெடக்க சொல்லி வித்துப்புடுவீயளான்னு தெரியலயே. இந்த வூட்டுல இதுக்கு முன்னால ஒண்ணுக்கு ரெண்டா கண்ணு போட்டு இருக்கலியா? இல்லே அதைத்தாம் நாம்ம ன்னா கவனிக்கலயா? இப்பதாம் என்னமோ இது மாரி அதிசயமா நடந்துருக்குற மாரில்ல சொல்லிச் சொல்லி எல்லாத்தையும் கலச்சி வுடுறீயேளே! மாட்ட வித்துப்புடறது சுலவு. ஒரு நல்ல மாட்ட வித்துப்புட்டு அது மாரி ஒரு நல்ல மாட்ட வாங்குறதுக்கு ஊரு ஊரா அலஞ்சிப் பாத்ததாம் அதோட அருமெ தெரியும்." என்று வெங்குவும் தன் பங்குக்கு சத்தம் கொடுத்துப் பார்க்கிறது.
            என்ன சத்தம் கொடுத்தால் என்ன? என்று சுப்பு வாத்தியார், "ஏ எப்பா இந்தக் கருப்பும் நெறய கன்னுக ஈந்துட்டு. இதுக்கு மேல வெச்சிக்கக் கூடாது. தள்ளி வுட்டுடறதுதாம் நல்லது!" என்று அதற்கும் சேர்த்து ஒரு காரணத்தைக் கட்டுகிறது. அதிலிருந்து வெங்குவுக்குப் புரிந்து போகிறது அடுத்து விற்கப் போவது கருப்பும் அதன் கன்றும்தான் என்று.
            "அய்யே! அது எங்க அப்பம் வூட்டு மாடுய்யா! அது வந்துதாம் எம்ம வூட்டுல மாடு பெருகினிச்சி, எங்க அப்பம் வூட்டுல மாடே யில்லாமப் போயிடுச்சி. அதயும் ஓட்டி வுட்டுட்டா... நல்ல ராசியான மாடு. பசு மாடுன்னாலும் காள மாடு கணக்கா நிக்குற மாடு. அதுவும் கண்ண உறுத்துனா யாருதாம் ன்னா பண்றது? செய்யணும்னு முடிவாயிடுச்சி. இனுமே யாரு தடுத்து எது நிக்கப் போவுது!" என்று வெங்கு பிலாக்கணம் பிடித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் மாட்டை விற்பதற்கு நாள் குறித்து ஆட்களை வைத்து ஓட்டிப் போக விட்டு விட்டது சுப்பு வாத்தியார்.
            "ஏம்ய்யா! அத்‍தெ விக்கப் போறது ஒரு ரண்டு நாளிக்கு முன்னாடிச் சொன்னா கொறஞ்சா போயிடுவீய்யோ! ரண்டு கட்டு கூட புல்லறுத்து போட்டு பாத்திருக்க மாட்டனா? அந்தக் கன்னுக்குட்டிய அந்தான்ட இந்தான்ட நகராம ஆசெ தீர கொஞ்சிருக்க மாட்டேனோ! இப்படி திடுதிப்புன்னு ஓட்டிட்டுப் போகச் சொன்னா எப்பூடி? ஏம் மனுஷ புத்தி இப்டியெல்லாம் போவுதோ? யாரு சொல்லி நாட்டுல யாரு கேட்குறா? எல்லாம் அததது சுழிக்குதாம் ஓடிட்டு தாட்டிகிட்டு நிக்குது. இதல்லாம் எஞ்ஞப் போயி நிக்கப் போகுதோ? ஏம் எம் உஞ்சினி ஐய்யனரப்பா ஒனக்கல்லோ எல்லாம் அத்துப்படி. இந்த வூட்டு மக்களுக்குக் காட்டுய்யா நல்லபடி!" என்று புலம்பித் தள்ளுகிறது வெங்கு.
            கருப்பையும் கன்றையும் விற்ற வகையில் சுப்பு வாத்தியாரின் முகத்தில் சந்தோஷம் புரள்கிறது. இது போல பால் கறக்கும் கன்றோடு இருக்கு மாடு கிடைப்பது சாமானியமா என்ன? எந்த மாட்டை விற்றாலும் பால் கறக்கும் மாட்டைக் கிராமத்தில் விற்பதற்கு ரொம்பவே யோசிப்பார்கள். பால் கறப்பு நின்ற பிறகுதான் விற்பதற்கு அவர்களுக்கு மனசு தோதுபடும். அதனால் இதுபோன்ற கன்றோடு நிற்கும் பால் கறவை மாட்டுக்கு நல்ல கிராக்கி என்பதால் கருப்பும் கன்றும் நல்ல விலைக்குப் போயிருக்கிறது. அதில் கிடைத்த காசு கொஞ்சம் சுப்பு வாத்தியாரை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது. முல்லேம்பாள் வீட்டுக்குக் கொடுக்க வேண்டிய வாடகை பாக்கியையெல்லாம் தூக்கி எறியாத குறையாகக் கொடுத்து விட்டு உட்கார்ந்திருந்த அந்த முகத்தை நீங்கள் பார்க்க வேண்டுமே! வீடு கட்டுவதற்கு என்னென்னமோ கடனைப் போட்டு அதில் பிடித்தம் போக வந்து கொண்டிருந்த சொற்ப சம்பளத்தில் சமாளிக்க முடியாமல் தள்ளாடிய சுப்பு வாத்தியார் கத்தையாய்ப் பணத்தை நெடுநாட்களுக்குப் பின் அப்போதுதான் பார்க்கிறது.
            இதையே ஒரு வாய்ப்பாக வைத்து கருப்பின் மற்றொரு கன்றான மூக்குப் பெருத்த பிரிசியின் கன்றையும் விற்று விட்டால் என்னவென்று சுப்பு வாத்தியாருக்கு எண்ணம் ஓடுகிறது. சினைபடும் நிலையில் நின்று கொண்டிருக்கும் அதுவும் நல்ல விலைக்குப் போகும். மாடு வாங்கி வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அப்படிப்பட்ட மாடுகளைத்தான் தேர்ந்து கொள்வார்கள். பழக்குவதற்கு அதுதான் தோதுபடும். அத்தோடு தலச்சன் கன்றை தங்கள் வீட்டில் ஈனுவதை ஒரு வகையில் ரசாயிகாக நினைப்பார்கள். சுப்பு வாத்தியாருக்கு வைத்தி தாத்தா வீட்டிலிருந்து வந்த கருப்பே அப்படி வந்துததானே.
            ஏறத்தாழ கருப்பின் நிறத்திலேயே இருக்கும் மூக்குப் பெருத்த பிரிசியன் கன்று வீட்டில் இருந்த எல்லாருக்குமே ரொம்பவே பிரியமான கன்று. விகடு பல நேரங்களில் அதன் மேல் சாய்ந்து அப்படியே தூங்கிப் போயிருக்கிறான். அதுவும் கழுத்தைத் திருப்பி வற வற என்று அவ்வபோது நக்கிக் கொடுத்து விட்டுக் கொண்டிருக்கும். செய்யுவுக்கோ அதன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கொஞ்சிக் குலாவா விட்டால் தூக்கம் வாராது. மாடுகளோடு பழக்கம் வைத்துக் கொள்ளாமல் மனுஷர்களோடு பழக்கம் வைத்துக் கொள்கிறது மாடு அந்த மாடு.
            அதையும் விற்க வேண்டும் என்று சுப்பு வாத்தியார் சொன்ன போது வெங்குவின் மனதில் சோர்வு தட்டி விட்டது.
            "ஒண்ணொன்னா வித்துகிட்டு இருக்குறதுக்கு ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் வித்துத் தொலைச்சிட வேண்டியத்தானே. பெறவு ஒரு மாட்டையும் கண்ணையும் வெச்சு என்னத்த பாத்து தொலைக்கிறது? ஒரு தொணை கூட இல்லாம மாடுக தனியா நிக்கணும்னு முடிவு பண்ணியாச்சி. அது ஏம் தனியா நிக்கணும்? ன்னா பாவம் பண்ணித் தொலைச்சிதுவோ அதுகெ? இப்பிடி ஒத்ததையில் எதுவும் இந்த வூட்டுல நிக்க வாணாம். அதையும் வித்துத் தொலைச்சிடுங்க!"  என்று வெங்குவே சொல்லும் அளவுக்கு நிலை உருவானது.
            வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதே அளவு வேலை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தாக வேண்டும். அது கொஞ்சம் குறைந்தாலும் சுணங்கி விடுவார்கள். அதுதான் வெங்குவுக்கும் நேர்ந்தது. வெங்கு இப்படியும் அப்படியுமாக மாற்றி மாற்றி ஆற்றாமையில் பேசி ஓய்கிறது. "இந்தாருங்க! இந்த ஒரு மாட்டையும் கண்ணையுமாவது வுட்டு வையுங்கோ! அதையும் வித்துப்புட்டு நம்மள தனிமையுல தவிக்க வுட்டுப்புடாதீய்யோ!" என்கிறது. மறுகணமே என்ன தோன்றுமோ, "ம்க்கூம்! அது ன்னா பாவம் பண்ணிச்சி! ஒண்ணையும் விடாதீங்கோ! எல்லாத்தையும் வித்துத் தொலையுங்கோ!" என்கிறது. சுப்பு வாத்தியார் இப்படிப் பண்ணுவது வெங்குவுக்குப் புத்தியைப் பெசகி வைப்பது போலத்தான் இருக்கிறது.
            சுப்பு வாத்தியாருக்கு எதையும் பொருட்படுத்தும் மாதிரி நிலையில்லை. அவரின் பண நெருக்கடி அவரை உருமாற்றிப் போட்டு விட்டது. அதிலும் கருப்பு பிரிசியன் கன்று விற்றதிலிருந்து ஏழெட்டு முறைகளாவது வீடு தேடி ஓடி வந்து விட்டது. மாட்டை வாங்கிக் கொண்டு போனவர்கள் அதை வந்து ஓட்டிக் கொண்டு போகும் போது அடம் பிடித்து நிற்கும் அதை அடித்து ஓட்டிக் கொண்டு போகும் போது பாவமாக இருக்கிறது.
            "யே யப்பா! இத்தெ இஞ்ஞ வந்து வாரத்துக்கு ஒரு தடவெ வந்து பிடிச்சிட்டுப் போறதே வேலயா இருக்கே! பேசமா நாம்மள வாரத்துக்கு ஒரு தடவே ஓட்டியாந்து வாத்தியாரு வூட்டக் காட்டிட்டுப் போயிடலாம் போலருக்கே!" என்று ஓட்டிக் கொண்டு போனவர்கள் சொல்லிக் கொண்டு போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
            கடைசியாக இருந்த மாட்டையும் கன்றையும் விற்க அதன் பால் கறவை நிற்கும் வரை சுப்பு வாத்தியார் காத்திருந்தார் என்பதுதான் கடைசி மாட்டை விற்பதில் அவர் காட்டிய கருணை. மாடும் கன்றுமாக அது கடைசியாகக் கொட்டகையை விட்டுப் போன போது வாடகைக்கு முல்லேம்பாள் வீட்டிலிருந்த பீரோ, பத்தாயத்தை எல்லாம் அங்கே கொண்டு வந்து வைத்து மாட்டுக் கொட்டகைக்குக் குடியை மாற்றுகிறார் சுப்பு வாத்தியார்.
            ரூப் காங்கிரட்டுக்கான முட்டுகள் முன்பக்கம் மட்டும் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு உள்ளே பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தன. வீயெம் மாமாவுக்கு வேறு வேலையில்லாமல் இருந்ததால் அதுவும் பிரிக்காமல் அப்படியே போட்டு வைத்திருந்தது. அதையெல்லாம் சீக்கிரம் பிரித்துத் தரும்படி வேலைகளை முடுக்கி விடுகிறார் சுப்பு வாத்தியார்.
            மாடுகளை விற்று முடித்த பின் வீட்டை ஒரு வெறுமை கவ்வ ஆரம்பிக்கிறது. மாடு இருக்கும் வரை ஏதோ ஒரு வேலையை மனிதனுக்குத் தந்து கொண்டே இருக்கும். காலையில் எழுந்ததும் வேலையோடு வேலையாக சாணியள்ளி மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்தாக வேண்டும். பத்து மணி வாக்கில் மேய்க்க முடிந்தால் மேய்த்து விட்டு வரலாம் அல்லது தண்ணீர் காட்டி வைக்கோலை அள்ளிப் போட்டு விட்டு புல்லறுக்கப் போகலாம். மறுபடியும் ரெண்டு மணி வாக்கிலோ மூன்று மணி வாக்கிலோ தண்ணீர் காட்டி மேய்க்க அவிழ்த்து விட்டோ அல்லது வைக்கோலை அள்ளிப் போட்டு விட்டோ பார்த்தாக வேண்டும். சாயுங்காலம் ஆனால் மறுபடியும் சாணியள்ளி மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்து விட்டு இரவில் படுக்கப் போகும் முன் ஒரு முறை தண்ணி காட்டி விட்டு வைக்கோலை அள்ளிப் போட்டு விட்டுப் போக வேண்டும்.
            தூக்கத்தின் இடையிடையே எப்போது வேண்டுமானலும் கணக்கு வழக்கின்றி முழித்து மாட்டைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதனால் எந்நேரமும் மாடு பற்றிய நினைப்பு மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அந்த நினைப்பிலே எல்லா கவலையும் மறந்து போகும். உடம்பில் நோய் நொடி இருந்தாலும் அதை யோசித்துப் பார்க்க முடியாது. சாவகாசமாக வெளியூர் போய் தங்கி விட்டு வர முடியாது. மாட்டு நினைப்பு வந்து ஊருக்கு உடனே கிளப்பி விட்டு விடும். வீட்டுக்கு வந்து மாட்டைப் பார்த்தால்தான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இப்படி ஒரு வீட்டைப் பம்பரம் போல சுழல வைப்பதில் மாட்டுக்குதான் என்ன ஒரு அசாத்தியமான சக்தி!
            விவசாய வேலை இல்லாத நாட்களில் கிராமப் பொருளாதாரத்தின் அச்சாணி வேறு இந்த மாடுகள்தான். மாடு இருக்கும் வரை வீட்டில் காசுக்கு எந்தக் குறையும் இருக்காது. பால் விற்று, தயிர் விற்று, நெய் விற்று, சாண எருவை விற்று, வறட்டித் தட்டி விற்று என்று எப்படியோ கையில் காசு புரண்டு கொண்டே இருக்கும். மாடுகள் எண்ணிக்கையில் பெருத்துக் கொண்டே போகும் போது அதை அவ்வபோது விற்கையில் நகை நட்டுச் சாமான்கள் என்று வாங்கிப் போட்டாகி விடும். அப்படி மாடொன்று போனால் நகைநெட்டு வீட்டுக்குள் வந்தாகும். பெரும்பாலும் மாடு பெருத்த வீட்டில்தான் மாடு வாங்கப் பிரியப்படுவார்கள் இந்தக் கிராமத்து மக்கள். அப்படி அந்த மாதிரி வீட்டில் வாங்கினால்தான் அது மாதிரியே அவர்களது வீடுகளிலும் மாடுகள் பெருகும் என்று ஒரு நம்பிக்கை உண்டு அவர்களிடம். அப்படித்தான் சுப்பு வாத்தியாரின் மாடுகள் எல்லாம் சொல்லும் விலைக்கு விலை போனது.
            சேறு நிறைந்து கிடக்கும் கடைசி வயலும் விற்றான பின்தான் மனிதனுக்கு சோற்றின் அருமை தெரியும் என்பது போலாகி விட்டது, கடைசி மாட்டையும் விற்ற பின் சுப்பு வாத்தியார் வீட்டின் நிலைமை. இந்தத் தெருவில் சுப்பு வாத்தியாரின் வீட்டிற்கு வந்து எவ்வளவோ பேர் பாலும், தயிரும், நெய்யும், வறட்டியும், சாணியும் வாங்கிப் போன நிலைமை மாறிப் போனது.
            வீட்டுப் பாலில் டீ, காபி குடித்து விட்டு வெளியிலிருந்து வாங்கி வரும் பாலில் டீ, காபிப் போட்டு குடிப்பதைப் போல கொடுமை இந்த உலகில் ஏதுமிருக்காது. புதிதாக வெளியிலிருந்து வாங்கி வரும் பால் கவிச்சத்தின் வாடையே பக்கத்தில் அண்ட விடாது. அதெல்லாம் சகித்து வெளிபாலிருந்த டீ, காபி குடித்துப் பழகுவதற்கு பத்து பதினைந்து நாட்களாகி விடும்.
            வீட்டில் எல்லாரும் அதைச் சகித்துக் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். விகடுவால் அது முடியாமல் போய் டீ, காபி, பால் குடிப்பதையே நிறுத்தி விட்டான். இதை நினைத்துப் பார்த்த போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. சென்னையில் இருந்த காலகட்டத்தில் பசியை ஆற்றிக் கொள்ள ஒரு டீ கிடைக்குமா என்று அலமலந்து கிடந்தது போய், இப்போது கிடைக்கும் டீயும் வேண்டாம், காபியும் வேண்டாம், பாலும் வேண்டாம் என்று இருப்பது ஆச்சரியம்தான். மனித மனசு ரொம்பவே வித்தியாசமானதுதாம்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...