ஓட்டுக்கு
நோட்டுக் கொடுப்பதை யாராவது புகார் செய்தால்தான் போலீஸ் நடிவடிக்கை எடுக்க முடியும்
எனும் நிலையில், எல்லாரும் ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் யார்தான் போலீஸில் புகார்
செய்வார்கள்?
சுற்றியுள்ளவர்களைச்
சுரண்டிச் சுரண்டி ஊழல் செய்து கொண்டே போகும் ஒருவர் கடைசியில் அதாவது எல்லாரையும்
சுரண்டி முடித்த பிறகு, கட்டக் கடைசியாக தன்னைத் தானே சுரண்டி ஊழல் செய்து கொள்வாரா?
பார்ப்பவர்களிடமெல்லாம்
அராஜகம் செய்யும் ஒருவர், அவர் மட்டும் இந்தப் பூமியில் எஞ்சியிருக்கும் சூழ்நிலையில்
தனக்குத் தானே அராஜகம் செய்து கொள்வாரா?
இருக்கின்ற
வயல்களையெல்லாம் ரியல் எஸ்டே்டுகளாக்கிச் செல்லும் ஒருவர் வயல்களே இல்லாமல் போகும்
நிலையில் பழகிப் போன பழக்க தோஷத்தை விட முடியாமல்
ரியல் எஸ்டேட்டுகளை வயல்களாக்கி மீண்டும் ரியல் எஸ்டேட்டுகளாக்குவாரா?
இப்படி ஒரு
நாளைக்குத் தோன்றும் பன்னாடைக் கேள்விகள் நிறுத்த முடியாமல் நீண்டு கொண்டே போகின்றன.
இந்தப் பன்னாடைக்
கேள்விகளைத் துரத்தி விட்டு, அதன் காரணமாக அந்த இடத்தில் வேறு பன்னாடைக் கேள்விகள்
வந்து, பின் அதையும் துரத்தி விட்டுக் கொண்டு... இப்படிப் பன்னாடைக் கேள்விகளைத் துரத்தி
விடுவதே வேலையாகிப் போய் விடுமோ என்ற பயத்தில் இந்தப் பன்னாடைக் கேள்விகளை என்னதான்
செய்வது என்று புரியாமல் பன்னாடைத் தனமாக யோசித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
வாழ்க்கை
என்பது அதுதான். ஒரு பன்னாடை போனால் இன்னொரு பன்னாடை வரும். ஒரு பிரச்சனை தீர்ந்தால்
இன்னொரு பிரச்சனை வரும். ஒரு தடையைத் தாண்டினால் இன்னொரு தடை நிறுத்தி வைக்கப்படும்.
இங்கு எல்லாம்
முடிவுக்கு வருவது போலத் தோன்றும். எதுவும் முடிவுக்கு வராது. இப்படி எதுவும் முடிவுக்கு
வர முடியாத, ஒரு முடிவு காண முடியாத அதன் பெயர்தான் வாழ்க்கை. வாழ்க்கைதான் எவ்வளவு
சுவாரசியமானது. ஹா... ஹா... என்று சிரித்துக் கொள்பவர்கள் சிரித்துக் கொள்ளலாம்.
அழுகையைக் கையைப் பிடித்து வரும் வாழ்க்கையில் சிரிக்க முடிகிற போதே சிரித்துக் கொள்ள
வேண்டும். அழ நேரிடும் போது சந்தோஷமாக அழுது கொள்ள வேண்டும். அபத்தமாகத் தோன்றும்
போது அபத்தவாதம் பேசிக் கொள்ள வேண்டும். எதையும் விலக்க முடியாத இந்த வாழ்க்கையில்
அதைத்தான் செய்தாக வேண்டும். ஏனென்றால், எதை விலக்க நினைத்தாலும் அதையே தொட்டுக் கொள்ள
சட்டினியாக்கி விட்டுதான் மறுவேலை பார்க்கும் இந்த வாழ்க்கை!
*****
No comments:
Post a Comment