9 Jul 2019

பாகம் ரண்டு பங்கு!



செய்யு - 140
            ஒரு மரணம் உறவுகளையும், சொந்தங்களையும் எங்கிருந்தாலும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. நல்ல சேதிக்கு செவி கொடுக்காவிட்டாலும், கெட்ட சேதிக்கு செவி கொடுத்து மரணத்திற்கு வந்து கடைசியாக அந்த முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற தவிப்பை அந்தக் கெட்ட செய்தி உண்டு பண்ணி விடுகிறது. இப்படித்தான் ஒவ்வொரு மரணத்திலும் பார்க்காத பல சொந்தபந்தங்களைப் பார்க்க முடிகிறது. நல்லவரோ, கெட்டவரோ, விமர்சனத்துக்கு உள்ளானவரோ, உள்ளாகாதவரோ மரணத்திற்குப் போய் முகம் காட்டி முகம் பார்த்து விட்டு வந்து விட வேண்டும். இது ஒரு சம்பிரதாயமாக‍, ஊறி விட்ட சடங்காகவே ஆகி விட்டது.
            மரண சடங்கின் தொடர்ச்சியாக வைத்தி தாத்தாவின் மரணத்தில் கூட்டம் கூடியதாகச் சொல்வதா? இல்லை ஒவ்வொரு மரணத்திலும் குடித்துக் குடித்துப் போதையில் கிடக்கலாம் என்பதற்காக கூட்டம் கூடுகிறதா? என்பதைச் சொல்லத் தெரியவில்லை. முன்பொரு காலத்திலும், இப்போதொரு காலத்திலும் கூடிய கூட்டத்துக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கூட்டம் கூடுகிறது. அதிலும் கருமாதி ரொம்ப விஷேசமாகப் போய் விட்டது. குடித்து விட்டு அடித்துப் புரளுவதற்கு ரொம்ப வசதியானது அதுவே. சாவிலாவது "பொணத்தை எடுக்கணும்பா! நீங்க பாட்டுக்குப் பெரச்சன பண்ணிட்டு இருந்தா எப்பூடி?" என்று விலக்கி விட கிராமத்திலிருந்து தலையிடுகிறார்கள். கருமாதியில் அந்த தலையிடலும் கிடையாது. மண்டை உடையும் வகையில் அடித்துக் கொண்டாலும் கேட்பார் இல்லை. அது விழுப்புண்களுக்கு நிகரானது. இந்தக் கருமாதியில் இப்பிடியிப்படி அடித்துக் கொண்டு வாங்கியது என்று மாய்ந்து மாய்ந்து கதைத்துக் கொள்ளலாம்.
            மற்றொரு வகையிலும் கருமாதி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அதில் சொத்துப் பிரிப்புப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்தாகி விடும். இதில் இந்தக் கருமாதியை நடத்துபவர் முக்கியத்துவம் வாய்ந்தவர். அவரைக் கருமாதியை நடத்துபவர் என்று சொல்வதை விடவும் கருமாதிக்கான குடிக்கும் சடங்கை நடத்துபவர் என்று சொல்வது ஏகப் பொருத்தமாக இருக்கும். சொந்தம் கூடி கருமாதி செய்வது என்பதெல்லாம் மாறி விட்டது. குமரு மாமாதான் குடியோடு கூடிய கருமாதியை நடத்தியது. கருமாதியிலோ, சாவு காரியத்திலோ குடிக்காதவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. குடி சடங்கு ரொம்ப கோலாகலமாக இருந்தது. அதற்காகவே கருமாதிக்கு வரும் கூட்டம் அதிகம். அத்துடன் பிரியாணியைப் போட்டு சாவினால் உண்டான துக்க மனநிலையை மாற்றுவதாகச் சொல்கிறார்கள். துக்க மனநிலையில் இருப்பவர்களுக்கு இது பொருந்தும் என்றாலும், சாவு என்றாலே இஷ்டத்துக்கு குடிக்கலாம் என்ற சந்தோஷ மனநிலை வந்து விட்டப் பிறகு இது எந்த அளவுக்குப் பொருந்தும் என்று தெரியவில்லை. இருந்தாலும் அதற்காக விட்டு விட முடியாதே! ஒரு துக்க மனநிலையைச் செயற்கையாக உருவாக்கிக் கொண்டு, அதற்காகத்தான் குடிப்பதாக ஓர் அச்சாரத்தைப் போட்டு ஆரம்பித்தால், சாவுத் துறையிலேயே பிணமாய் மயங்கி விழும் அளவுக்கு குடித்துத் தள்ளுகிறார்கள். பிணத்தைக் கொண்டு போய் சாவு துறையில் அடக்கம் செய்து விட்டு, இந்தக் குடி பிணங்களை வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வர வேண்டியதாக இருக்கிறது.
            கருமாதித் துறையில் ஆக வேண்டிய காரியங்களை முடித்து குளித்து முடித்து விட்டு வந்த பின்பு, குமரு மாமா, மேகலா மாமி, அதன் பிள்ளைகள், வீயெம் மாமா, சாமியாத்தா எல்லாருக்கும் புத்தாடை கொடுத்து அணியச் சொன்னார்கள். அவர்கள் அணிந்து வந்ததும் அவரவர் பங்குக்கு மொய்பணம் வைத்துக் கொடுக்கிறார்கள். சாவு விழுந்த வீட்டில் யார் வேலைக்குப் போயிருப்பார்கள்? அவர்கள் செலவுக்கு என்ன செய்வார்கள்? என்பதற்காகக் கொடுக்கப்படும் தொகையாக அதைச் சொல்கிறார்கள். வைத்தி தாத்தா இறந்த அன்று குமரு மாமா பட்டறையை மூடியது. மறுநாளே திறந்து விட்டது. பால் தெளிக்கு மட்டும் இடையில் வந்து போனது. மேலும் கருமாதிக்காக மொய் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் குமரு மாமாவும் இல்லை. குடிக்காக வாங்கிக் கொடுத்த சரக்கிற்காக செய்யப்படும் மொய்யாகவும் இருக்கலாம். பஞ்சாயத்துப் பேசுபவர்களுக்கு ஒரு கை வெட்ட வேண்டும் என்பதற்காக தம்மை அறியாமல் கொடுக்கப்படும் மொய்யாகவும் இருக்கலாம். எவ்வளவு துக்கமாக இருந்தால் என்ன, அந்த மரணத்தின் இழப்பு எவ்வளவு பெரியதாக இருந்தால் என்ன? இது ஒரு சடங்காகி விட்டது. சந்தோசமும் ஒரு சடங்கு. துக்கமும் ஒரு சடங்கு. சந்தோசச் சடங்கில் சந்தோசமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். துக்கமனா சடங்கில் துக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.
            விஷேசத்தில் நடக்கு சண்டைகளும் விஷேசமாகத்தான் இருக்கின்றன ஒவ்வொரு விஷேசமும் ஏதோ ஒரு சண்டைக்காகத்தான் என்பது போல. குமரு மாமாவும், வீயெம் மாமாவும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டார்கள். திடீரென ஏன் அப்படி ஒரு சண்டை? எதற்கு அப்படி ஒரு கட்டிப் புரளல்? அதுவும் இத்தனை நாட்களாக இல்லாமல்? மனதுக்குள் நெடுநாட்களாக ஏதோ புகைந்து கொண்டிருந்ததோ என்னவோ! அவர்கள் இருவரையும் விலக்கி விடுவதே பெரும்பாடாகப் போய் விட்டது.
            "ஒன்னய எங்க வெச்சுப் பாக்கணுமோ அஞ்ஞ வெச்சுப் பாக்கிறேன்டா!" என்கிறது குமரு மாமா.
            "அதாதாம்டா நாமளும் சொல்றேம்! கவனிக்க வேண்டிய எடத்துல வெச்சு கவனிச்சாதாம் சரிபட்டு வருவே நீயி!" என்கிறது வீயெம் மாமா.
            "கட்டுன வீட்டுலயும், பட்டறையிலயும் எந்த பங்கும் கெடயாது. திட்டையில இருக்குற நெலத்திலயும், ஓகையூர்ல இருக்குற நெலத்திலயும்தான் பங்கு!" என்கிறது குமரு மாமா.
            "கட்டுன வூடு இருக்குற நெலமும், பட்டறை இருக்குற நெலமும் இவ்வேம் ஓழச்சி வாங்குனதா ன்னா? அது எங்கப்பாரு ஒழச்சி வாங்குனது. அப்பங்காரு ஒழச்சி வாங்குனதுல ரெண்டு பேருக்குந்தான சமபங்கு இருக்குது! அதெப்படி இவனுக்கு மட்டும்தான் அதுங்ற மாரி பேசுறது?" என்கிறது வீயெம் மாமா.
            இச்சண்டையில் குமரு மாமா சொந்த பந்தங்களைத் தன் பக்கத்துக்கு திரட்டி வைத்திருந்தது. வீயெம் மாமா தெருக்கார பசங்களைத் தன்பக்கம் திரட்டி வைத்திருந்தது. அப்படியே விட்டால் ரெண்டு பக்கமும் அசம்பாவிதம் ஆகி விடுவது போன்ற நிலை உண்டாகி விட்டது.
            "ஏம்ப்பா! இப்படி ரண்டு பேரும் அடிச்சிக்கிட்டீங்கனா அவரு பெத்த பெண்டுகளுக்கு ஒண்ணும் கெடயாதா? அதுங்க ன்னப்பா பாவம் பண்ணிச்சி?" என்று எடுத்து விட்டார் சிப்பூர் பெரியப்பா.
            "இந்தாரு! யாருடா இவ்வேம்! பெண்டுகளப் பத்தின பேச்ச மட்டும் எடுக்காதே! அதுஅதுங்களுக்கு நக நட்டு போட்டு சீர் சனத்த செஞ்சு செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வெச்சாச்சி. வளகாப்பு, தலபெரசவம் அது இதுன்னு ஏகப்பட்டது செஞ்சாச்சி. அதுகளுக்கு ஒண்ணும் சொத்துல பாத்தியதயில்ல!" என்றது லாலு மாமா.
            "அதானே! முட்டாப் பயலுக்குப் பொறந்த மொட்டப் பசங்களா இருப்பானுங்களா! ஆம்பள வாரிசு புள்ளீங்க ரண்டுக்குமா நக்குதாம் கக்குதாம்னு இருக்காம். இதுல ஆறுக்கும் சேத்து எட்டுக்கும் பங்கு பிரிச்சா நக்கிட்டுப் போவ வேண்டியதுதாம். இல்லாத மொற தலயெல்லாம் இஞ்ஞ கொண்டாரக் கூடாது. அப்பறம் நாம்ம கெட்ட மனுஷம் ஆயிடுவேம் பாத்துக்க!" என்றது முருகு மாமா.
            "சுப்பு வாத்தியார் ன்னா சொல்றார்னு ஒரு வார்த்த கேட்டுக்குங்க!" என்றனர் ஊரில் இருந்தவர்கள்.
            "எங்களுக்கு பொங்க சீரு, தீவாளி சீரு கொடுக்குறத நின்னுப் போச்சி. அதுக்கு மேல நாம்ம ன்னா சொல்றது? இருக்குறத அண்ணம் தம்பி ரண்டு பேரும் பெரச்சின இல்லாம பிரிச்சுக்கச் சொல்லுங்க! சின்னம்பிக்கு இன்னும் நல்லது கெட்டது நடக்கல. அதுக்கு ஏத்த மாரி பிரிச்சி வுட்டுட்டுங்க!" என்றது சுப்பு வாத்தியார்.
            "அதுவுஞ் சரிதாம்!" என்று ஊர்க்காரர்கள் கூடிப் பேசிக் கொண்டனர். அதில் முருகு மாமாவும், லாலு மாமாவும் சேர்ந்து கொண்டனர். பேசி முடித்து விட்டு கோனார் தாத்தாவை விட்டே பாகப் பிரிவினையைச் சொல்லுமாறு சொல்லி விட்டனர்.
            கோனார் தாத்தா ஆரம்பித்தார்.
            "மொத்தத்துல பாக்கிறப்ப வூடுங்றது பெரியம்பி தலபட்டு கட்டுனதுதாம். எடம் அப்பாரடோது. வூடு கட்டன மனயில பாதி மனெய இனி பிரிச்சிக் கொடுக்குறது ஆகாத காரியம். ஆகையால மனையோட அந்த எடம் பெரியம்பிக்குப் போகட்டும். பக்கத்துல கெடக்குற மனையில ஒண்ணும் இல்ல. அதெ சின்னம்பி எடுத்துகிடட்டும். பட்டறை எடத்துக்கும், வீடு இருக்குற மனைக்கும் சேர்த்து சின்னம்பிக்கு பெரியம்பி வூட்ட கட்டிக் கொடுத்துடட்டும். அதுவா பாத்து எத்தன சதுர அடிக்கு கட்டிக் கொடுத்தாலும் அதுதாங் வூடு. அதுல கணக்குப் பாக்க முடியாது. அத்தோட கூட கொறச்ச இருக்குற பங்குக்கு அண்ணங்ற மொறயில உரிமை உண்டாறதும், ‍அதே உரிமையில சின்னம்பிக்கி கல்யாணத்த பண்ணி வுட்டு வுட வேண்டியதும் அத்தோட கடமெ. திட்டையில ஈஸ்வரம் கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற நெலத்த பெரியம்பியும், உள்ளார தள்ளி இருக்குற நெலத்த சின்னம்பியும் எடுத்துகிடட்டும். ஓகையூர்ல இருக்குற நெலத்துல ரோட்டுக்குப் பக்கத்துல இருக்குற மூணு மாவ பெரியம்பியும், பின்னால இருக்குற ரெண்டர மாவ சின்னம்பியும் எடுத்துகிடட்டும்! சின்னம்பிக்குக் கொறய அரை மாவுக்கு ஈடா பெரியம்பி சின்னம்பிக்கு ஒரு வண்டிய வாங்கிக் கொடுத்தடட்டும். மத்த நெலங்க எல்லாம் சாமியம்மாளுக்குதாம். அவுகள யாரு வெச்சிப் பாத்துகுறாங்களோ அவங்க அதெ விவசாயம் பண்ணிகிட்டு அவங்களுக்கு அப்புறம் அதெ எடுத்துக்கலாம். இதாஞ் சரியா இருக்கும்!"
            "எல்லாஞ் சரிதாம்! ஆனா நெலத்த முன்னாடி இருக்குறதெ பெரியவனுக்கு, பின்னால இருக்குறத சின்னவனுக்குன்னு குறுக்கால பிரிக்கிறது என்ன ஞாயம்னு தெரியல. எந்த நெலமா இருந்தாலும் நெடுக்கால பிரிச்சி ரெண்டு சமமா போடுங்க. இந்தப் பக்கம் இருக்குறது பெரியவம் வெச்சிகிடட்டும். அந்தப் பக்கம் இருக்குறத நாம்ம வெக்கிறோம்." என்றது வீயெம் மாமா.
            "அட எவம்டா இவ்வேம்! ஈஸ்வரன் கோயில தள்ளி இருக்குற ஒன்றரை மா நெலத்த நெடுவால ரண்டா பிரிச்சா கோவணத் துணியாட்டாம் முக்கா முக்கா மாவாயி ரண்டு பேருக்கும் பிரியோசணம் இல்லாம போயிடம்டா! சொன்னா கேட்டுத் தொலைங்கடா!" என்றார் கோனார் தாத்தா.
            "அதாம்னே!" என்றனர் ஊர்க்காரர்களும்.
            "பாகம்னா பாகம்தான். இப்படிப் பிரிச்சா சம்மதிக்கிறேம். இல்லேன்னா பாகமும் பிரிக்க வாணாம். ஒண்ணும் பிரிக்க வாணாம். அது அப்டியே இருந்துட்டுப் போகட்டும். இதுக்கு ஒத்து வாரப்ப பிரிச்சிகலாம். அது வரிக்கும் இவனேயும் வூட்ட வுட்டு வெளியில போகச் சொல்லுங்க. நாமளும் வூட்டு வுட்டுப் போயிடறேம். வூடு, கொல்ல எல்லாத்தியும் இழுத்து அடச்சிப் போட்டு மூடுங்க" என்றது வீயெம் மாமா.
            "நீ யென்னாடா சொல்றே பெரியவனே!" என்றார் கோனார் தாத்தா.
            சொத்து பாகம் ரண்டு பேருக்கும்தான் என்ற முடிவு வந்து விட்டதால், "பெரியவங்களா பாத்து என்ன முடிவு பண்ணாலும் அத ஏத்துகிறேம்!" என்றது குமரு மாமா.
            "அப்போ சின்னம்பி சொல்ற மாரி பண்ணிக்கலாமா?" என்றார் கோனார் தாத்தா.
            "அதாஞ் சொல்லிட்டேம்னே! பெரியவங்க நீங்களா பாத்து ன்னா பண்ணாலும் ஒத்துக்கிறேம்!"
            "இந்தாருடா சின்னம்பி! நீ சொல்றது சரியில்லே. பாகம் பண்ணச் சொல்றதும் முறையில. அண்ணேம், தம்பிக்குள்ள பாகப் பெரச்சன வேணாம்னு நீயி சொல்ற மாரி பண்ணி விடறோம்! இத்து இத்தோட முடிஞ்சது. இதுக்குப்புறம் இத அப்பிடிப் பிரி, அத இப்படிப் பிரின்னு யாரும் யாரயும் கூட்டிட்டோ, தாட்டிட்டோ வந்து நிக்கக் கூடாது. அப்படி வந்து நின்னீங்கன்னா ஊருல யாரும் வந்து நிக்க மாட்டோம். போலீஸ் ஸ்டேசன்னு, கோர்ட்டுனு பாத்துக் வேண்டியது, அலஞ்சிக்க வேண்டியது. அவ்ளோதாங்! அப்பொறம் ஒண்ணு. பொம்பள புள்ளீங்க வயிறு எரிஞ்சிப் போயிடப்படாது. முடிஞ்சா அதுங்க கையில ஆளுக்கு ரண்டாயிரம் ரொக்கமா கொடுத்து விடலாம். அதுக்கு மனசு வராட்டியும் அதுகளுக்கு செய்ய வேண்டிய பொங்கலு, தீவாளி சீர எந்தக் கொறயும் இல்லாம மூத்தம்பி மொத மூணு பொண்ணுங்களுக்கும், சின்னம்பி கடசீ மூணு பொண்ணுங்களுக்கும் மொறயா செஞ்சிப்புடணும். அதுல எந்தக் கொறயும் பஞ்சாயத்தும் பின்னால வரப்படாது. அதுக புள்ளீகளுக்குச் செய்ய வேண்டிய மாமஞ் சீருகளயும் அந்த வண்ணமே பண்ணிப்புடணும். அதுலயும் அலுப்பு சலிப்புக்கு எடம் இருக்கக் கூடாது. தம்பிங்க ரண்டு பேருக்கும் இதுக்குச் சம்மதமா?" என்று கேட்டு முடித்தார் கோனார்.
            சம்மதம் என்பது போல ரண்டு பேரும் தலயாட்டி நின்றனர். ரெண்டு பேர் முகத்திலும் ஒரு குரூர புன்னகை தோன்றி மறைந்தது. அது ரொம்ப சாமர்த்தியமாக சண்டை போட்டுக் கொண்ட மாதிரி போட்டுக் கொண்டு, அந்தச் சண்டையைக் காரணம் காட்டி பெண் புள்ளைகளுக்கு சொத்து எதுவும் இல்லாமல் செய்தாயிற்று என்பதைக் காட்டுவதைப் போல இருந்தது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...