8 Jul 2019

குடிகாரச் சித்தன்



செய்யு - 139
            வைத்தி தாத்தா தன் இறுதி யாத்திரையைத் துவங்க தயாரானர். பெண் பிள்ளைகளை ஒரு மாதிரியாகவும், ஆண் பிள்ளைகளை வேறொரு மாதிரியாகவும் நடத்தியது குறித்த விமர்சனங்கள், ஆண் பிள்ளைகளில் குமரு மாமாவை ஒரு விதமாகவும், வீயெம் மாமாவை வெறொரு விதமாகவும் கையாண்டது குறித்த கேள்விகள் எல்லாம் இன்றோடு வைத்தி தாத்தாவோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாகப் போகின்றன. அந்த விமர்சனத்துக்கும், கேள்விக்கும் உள்ளானவர் இனி சாவின் மரியாதையோடு சமாதானம் ஆகப் போகிறார்.
            அந்தக் கேள்விகளை வைத்தி தாத்தாவிடம் வலுவாக யாரும் எழுப்பவில்லை. ஒருவேளை எழுப்பியிருந்தால் அவரிடம் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். அப்படியும் சொல்வதற்கில்லை. அவரிடம் யாரும் எத்தகைய வலுவான கேள்வியையும் எழுப்ப முடியாத நிலையில் இருந்தனர். எப்படி எழுப்ப முடியும்? அவர்களும் அவர்களின் அளவில் ஒரு வைத்தி தாத்தாவாகவே இருந்தார்கள். நிலைமை இப்படியிருக்க தங்களின் பிம்பத்தை நோக்கி தாங்களே எப்படி கேள்வி எழுப்ப முடியும்?
            இது குறித்த கேள்விகளை மென்மையாக முன் வைத்தது சுப்பு வாத்தியார் மட்டும்தான். அந்தக் கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே மலுப்பும் அளவுக்கு வைத்தி தாத்தா மனசாட்சியோடு இருந்தார். எதிர்கேள்விகள் எதையும் எழுப்பவில்லை. ஆனாலும் அதற்கு சுப்பு வாத்தியார் மனக்கசப்பை விலையாக கொடுக்க வேண்டியிருந்தது.
            வைத்தி அவரளவுக்கு அழுத்தமான ஆளுமையாக வாழ்ந்து விட்டு மயானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவருக்கு குடிப்பழக்கமோ, புகைப் பழக்கமோ, போதைப் பழக்கமோ இல்லாமல் இருந்தது. தன் ஆயுட்காலம் முழுவதும் வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை என்று அவரால் இருக்க முடிந்தது ஆச்சரியம்தான். தனக்கென எந்தப் பொழுதுபோக்கையும் இறுதி வரை அவர் வைத்துக் கொள்ளவில்லை. கட்டிலில் உட்கார்ந்து கொண்டு பட்டாணி தின்றதே அவரது அதிகபட்ச பொழுதுபோக்கு அம்சமாக இருந்திருக்க வேண்டும். சித்திர எழுத்துகளைப் போல ஒரு நோட்டில் கணக்கு வழக்குகளை எழுதி வைத்துக் கொண்டிருந்தவர் அதை எடுத்து அவ்வபோது பார்த்துக் கொள்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்.
            அவரது சம்பாத்தியம் அவரது குடும்பத் தேவைக்கு எப்போதும் குறைவாகவே இருந்தது. அதை அவர் ஒரு பொருட்டாகவே கடைசி வரை எடுத்துக் கொள்ளவில்லை. தன்னால் இயன்றதைச் சம்பாதித்து விட்டு அந்த அளவோடே இருந்து விட்டார். குடும்பத்தில் பெண்டுகள் யாரும் பட்டினி கிடந்ததை அறியாமலே அவர் மூன்று வேளையும் சாப்பிட்டிருக்கிறார். குடும்பத்தில் எல்லாரும் சாப்பிட்டார்களா இல்லையா என்பது குறித்த கேள்விகள் அவரிடம் இருந்ததில்லை.
            குடும்பப் பெண்டுகளும் அவர் பட்டினிக் கிடக்காமல் சாப்பிட வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கின்றனர். அதற்கு வலுவான காரணம் என்று பார்த்தால் வைத்தி தாத்தாவின் பிள்ளைப் பிரயாத்திலிருந்து பார்த்தால் அவர் பசி தாங்காத சிறுவனாக இருந்திருக்கிறார். அவர் பசி தீர்ந்து விட்டால் அவரால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. யாரது? என்ற அவரது குரலுக்கு முன் சாப்பாடு வந்து விட்டால் போதுமானது. கருவாடு, மீன் என்றால் அவருக்கு நிரம்ப இஷ்டம். இதற்காகவே சாமியாத்தா பை நிறைய கருவாடுகளை வாங்கி வைத்திருக்கும்.
            அவரது முதுமைக் காலத்தைக் கழித்து கொண்டால் அவர் வேலைக்குப் போகாமலோ, ஓய்ந்து போய் ஒரு நாளோ உட்கார்ந்ததில்லை. எவர் வீட்டிற்கும் போய் ஒரு வாய் தண்ணீர் குடிப்பதோ, டீ, காபி குடிப்பதோ அவர் வழக்கத்தில் இருந்ததில்லை. எவ்வளவு நெருக்கமான வீடாக இருந்தாலும் அந்த வீட்டின் படியில் சைக்கிளில் இருந்தபடியே காலை ஊன்றி சத்தமாக செய்தியைச் சொல்லி விட்டு கிளம்பி விடுபவராக அவர் இருந்தார். அவர் மற்ற வீடுகளில் சாப்பிட்டார் என்றால் விஷேச நாட்களில் சம்பிரதாயத்துக்காக சாப்பிட்டார்.
            எவர் வீட்டு விவகாரங்களிலோ, பஞ்சாயத்துகளிலோ அவர் மூக்கை நுழைத்ததில்லை. அவரைப் பொருத்த மட்டில் பிரச்சனைகளை அவரவர் அளவில் முடித்துக் கொள்ள வேண்டும். வெளியில் கொண்டு செல்லக் கூடாது. வெளியில் கொண்டு செல்லும் அளவுக்கு எதுவும் பிரச்சனையில்லை என்பதை அவர் உறுதியாக நம்பினார். வெளியில் கொண்டு செல்லும் எநதப் பிரச்சனையும் தீர்வில்லாமல் அல்லாடும் என்பதும், அந்தப் பிரச்சனையைப் பயன்பத்தி வேற்று ஆள் நுழைந்து குட்டையைக் குழப்பி விடுவார் என்பதும் அவரது கருத்தாக இருந்தது.
            அவரின் அந்திமக் காலங்களில் மூத்த மருமகளால் நேர்ந்த சிக்கல்களையோ, அவமானங்களையோ, வீயெம் மாமாவால் அவரது கண்ணியத்துக்கு நிகழ்ந்த குறைகளையோ, சம்பவங்களையோ இறுதி வரை சொல்லவில்லை. ஒரு சில சமயங்களில் அவரது மனதுக்கு உகந்தவராக, நெருக்கமானவராக சுப்பு வாத்தியார் இருந்தும் அவரிடமும் இது குறித்து முணுமுணுத்தது கூட கிடையாது.
            அவரிடம் யாரும் எந்த எதிர்கேள்வியையும் கேட்டு விட முடியாது. எல்லாவற்றிற்கும் ஆணித்தரமாக, வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற அளவுக்குப் பதில் சொல்லும் அவர், ஓரளவுக்கு மேல் கேட்டால் கொஞ்சம் கூட யோசிக்காமல் எவராக இருந்தாலும் 'வெளியில் போடா!' என்று சொல்லி விடுவார். அவரிடம் எதிர்கேள்வி போட்டு சமாளிப்பது சிரமம்தான். மருமகன் என்றெல்லாம் கணக்கில்லாமல், "இந்த மாரியல்லாம் பேசிட்டு இந்தப் பக்கம் வாராதீங்க!" என்று சுப்பு வாத்தியார் உட்பட அனைவரிடமும் வலுவான மாமனராக இருந்த வகையில் அவர் அனைவரும் அச்சப்படும் வகையில் இருந்திருக்கிறார்.
            வீயெம் மாமாவுக்கு கல்யாணம் செய்திருந்தால் அவர் கட்டை நிம்மதியாக வேகும் என்று எல்லாரும் அந்த இறுதி ஊர்வலத்தில் பேசிக் கொண்டார்கள். அவர் நினைத்திருந்தால் அதையும் அவரால் முடித்திருக்க முடியும்தான். ஆனாலும் அவர் வீயெம் மாமாவுக்கு கல்யாணத்தைத் தான் கல்யாணம் செய்து வைக்கக் கூடாது என்பதில் எண்பது விழுக்காட்டுக்கு மேல் உறுதியாகவும், போனால் போகிறது அதுவாக கல்யாணம் நடந்தால் நடந்து தொலையட்டும் என்பதில் இருபது விழுக்காட்டு அளவுக்கு நெகிழ்வாக இருந்ததால் வீயெம் மாமாவின் கல்யாணம் கைகூடாமலே போய் விட்டது. ஒரு சில பெண்களைப் பார்த்து சுப்பு வாத்தியார் சொன்ன போது வீயெம் மாமா அதையெல்லாம் தாட்சண்யமின்றி நிராகரித்ததைப் பார்த்து வைத்தி தாத்தா அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார். அவருக்குள் ஓடிக் கொண்டிருந்த கணக்கிற்குள் வீயெம் மாமாவுக்குத் திருமணம் என்பது மட்டும் இல்லாமல் இருந்தது.
            இடுகாட்டில் இறக்கி வைத்தி தாத்தா சமாதி வைக்கப்பட்ட போது அதற்கான சடங்குகள் ஆரம்பமாகின. என்ன சடங்குகள் இவைகள்? செத்தவருக்காக ஆசை தீர அழ முடியாத சடங்குகள்! அதற்கென ஒருவரை நிறுத்தி அவர் சொல்லச் சொல்ல செய்யும் சடங்குகள் எல்லாம்! உட்கார வைத்து சமாதி நிலையில் மண்ணை அள்ளிக் கொட்டுவது வரை, பிரியங்களையெல்லாம் மண்ணள்ளிப் போட்டு மூடிக் கொண்டு சொல்வதை மீறி எதைச் செய்ய முடியும்?
            சடங்குகளைப் பொருட்படுத்தாத லாலு மாமா மட்டும் குழிக்குள் இறக்கப்படுவதற்கு முன், "அத்தாம்! அத்தாம்! ஒங்கள மாரி ஒருத்தர இனி எங்க பாக்க முடியும்!" என்ற வைத்தி தாத்தாவைக் கட்டிக் கொண்டு அழுதார். "இந்தப்பா! இப்டி பொணத்தக் கட்டிட்டு அழுவாத! அந்தாண்ட தூரப் போ!" என்று சமாதிக் கரையில் நின்றவர்கள் சொன்னதைப் பொருட்படுத்தாமல் அவர் ஒருத்தர் மட்டும் விழுந்து புரண்டு அழுதார்.
            வழக்கமாக தப்பு தப்பாக திருவாசம் சொல்ல நேர்ந்திடும் அவல நிலையை இந்தச் சாவு காரியத்தின் போது லாலு மாமா முதன் முறையாக மாற்றினார். அவர் கொண்டு வந்த கைபையிலிருந்து கிழிந்து போன திருவாசகப் புத்தகத்தை எடுத்து  பாடினாரா? வாசித்தாரா? என்று குழம்பும் அளவுக்கு ஒருவாறாக வாசித்தும், பாடியும் ரெண்டுங் கெட்டான் தனமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தார். திருவாசகத்தோடு சரக்கின் வாடையும் அவர் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தது.
            "யப்பா! குடிகாரச் சித்தேன் பாட ஆரம்பிச்சிட்டானப்பா! சாவுல சாவடி அடிக்கிறானுவளேயப்பா!" என்றது பக்கத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் சிப்பூர் பெரியப்பா.
            மண்ணை மூடி முட்டாக்கி, தலைமாட்டில் மூங்கில் ப்ளாச் ஒன்றை அடித்து மாலை போடும் வரை அவரது ஓதுதல் நிற்கவில்லை. அந்த மண்முட்டைக் கட்டிக் கொண்டும் அழுது கொண்டிருந்தார். அந்த இடத்தில் வைத்தி தாத்தாவோடு கவனிக்கத்தக்கவராக அவர் மட்டுமே இருந்தார். அது அவருக்கு உள்ளூர சந்தோஷமாகவும் இருந்திருக்கக் கூடும். இப்படிக் கவனம் பெற்ற ஒருவர் எப்படிக் கவனத்தில் விடுபட்டார் என்று தெரியாமல் சாவு காரியம் முடித்து வைத்தி தாத்தாவின் வீடு வந்து, அதைத் தொடர்ந்த இரவு வந்ததும் லாலு மாமாவைத் தேட வேண்டியதாகி விட்டது. 
            வடவாதி ஒன்றும் லாலு மாமா தொலைந்து போகும் அளவுக்கு நெருக்கடியான மாநகரமோ, பரபரப்பான நகரின் மையப்பகுதியோ இல்லைதான். ஆனாலும் அவர் தொலைந்த இடம் குறித்த பிரக்ஞை யாருக்கும் இல்லை. அவர் எங்கு தொலைந்தார் என்பதுதான் பிரதான கேள்வியாக இருந்தது. ஒருவேளை தஞ்சாவூருக்கு அவர் கிளம்பிப் போயிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் கடைத்தெரு, பஸ் ஸ்டாண்ட் முழுவதும் விசாரித்தாகி விட்டது.
            முருகு மாமா தானும்தான் சமாதிக்கரைக்கு வந்தது என்பதை மறந்தது போல சத்தமிட்டுக் கொண்டிருந்தது. "அவனவனுக்கும் அவனவன் வேலதான் முக்கியம். சமாதிக் கரைக்கு வந்தவன் காரியம் முடிஞ்சி சாப்புட்டானா? செத்தானான்னா? கூட எவனும் கவனிக்க மாட்டாம்! மானக்கெட்ட பயலுவோ!" வைத்தி தாத்தா இருந்தால் இப்படி ஒரு சத்தத்தை முருகு மாமா எழுப்பியிருக்க முடியாது. "ஏம்டா மானங்கெட்ட பயலே இஞ்ஞ வந்து இப்பிடி சத்தம் போடுறே?" என்று ஒரே அடியில் அடித்து விடுவார். அவரைப் பார்த்தாலே, அவர் இருக்கிறார் என்று தெரிந்தாலே முருகு மாமாவுக்குச் சத்தம் வராது. பம்மிப் பம்மி வந்து போகும்.
            இப்போதையி நிலையில், வைத்தி தாத்தாவின் வீட்டிலிருந்த எல்லாருக்கும் லாலு மாமாவைத் தேட வேண்டிய நிர்பந்தமாகி விட்டது. "இவ்வேம் ஒருத்தம் சாவு காரியத்துக்கு வந்து எங்கேயோ தொலஞ்சிப் போயி நம்மள சாவடிக்கிறாம்!" என்று ஆளாளுக்குப் பேசியபடி நாலு திக்கிலும் ஆட்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
            சமாதிக்குக் குழி தோண்டிய தொப்புளான்தான் சமாதிக் கரையில் நீண்ட நேரம் இருந்ததாக தகவல் வர தொப்புளான் வீட்டுக்கு ஆட்கள் பஞ்சாய்ப் பறந்தார்கள். தொப்புளான் வீட்டில் போய் கேட்டால், தொப்புளானும் வீடு வந்து சேரவில்லை. தொப்புளான் வீடு வந்து சேரவில்லை என்றால் சமாதிக் கரையிலேயே குடி போதையில் கண்ணயர்ந்து கிடக்க வேண்டும் என்று தொப்புளான் வீட்டில் சொன்னார்கள்.
            செய்தி கேட்டவர்கள் தொப்புளானைத் தேடி சமாதிக் கரைக்குப் போனார்கள். சமாதிக் கரைக்குப் போனால் தொப்புளானும், லாலு மாமாவும் வைத்தி தாத்தாவின் சமாதியின் மீது போதையில் கிடந்தார்கள். காரியம் முடிந்ததும் அவரவர்களும் குளிக்க வேண்டும், அடுத்தடுத்து ஊருக்குக் கிளம்ப வேண்டும், ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பியதில் லாலு மாமாவைக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள். நல்லவேளையாக இராப் பொழுதில் ஞாபகம் வந்ததால் தேட ஆரம்பித்து கண்டுபிடித்து, லாலு மாமாவை சமாதிக் கரையிலிருந்து தூக்கிக் கொண்டு வைத்தி தாத்தாவின் வீட்டில் போட்டாகி விட்டது. இப்போது வீட்டிலிருந்த வைத்தி தாத்தா சமாதிக் கரையிலிருந்தார். சமாதிக் கரையிலிருந்த முருகு மாமா வைத்தி தாத்தாவின் வீட்டிலிருந்தார். "ஒரு பொணம் போயி, மறுபொணம் வந்திருக்கு!" என்றது வாழ்கப்பட்டு பெரியம்மா யாருக்கும் கேட்காத மெல்லிய குரலில் தனக்கு தானே.
            முருகு மாமாதான் அள்ளு கிளப்பும் வகையில், வைத்தி தாத்தாவின் வீட்டின் முன் நின்று கொண்டு, "எவனாவது மாமங்காரன்னு பாத்து அழச்சிட்டு வந்தான்னா பாரு? இப்படி சமாதிக் கரையிலேயே பொணத்தோடு பொணமா போட்டுட்டு வந்திருக்கானுவோளே! நீங்கலாம் ன்னாடா மனுஷங்க?" என்றது.
            முருகு மாமாவும் தம்பிக்காரன் என்ற முறையில் கூட இருந்து பார்த்துக் கொண்டு அழைத்து வந்திருக்கலாம்தான். ஆனால் அதை இப்போது பேச முடியாதே! "பொணத்த சமாதிக் கரையிலதாம் போட்டுட்டு வார முடியும். அதெ தேடிக் கண்டுபிடிச்சி தூக்கிட்ட வார முடியும்?" என்ற முணுமுணுத்துக் கொண்டதோடு எல்லாரும் நிறுத்திக் கொண்டார்கள்.
            "வுடுங்க மாமா! நாம தேடாட்டியும் பொழுது விடிஞ்சா போத தெளிஞ்சு லாலு மாமா எழுந்து வந்திருக்கப் போவுது!" என்ற சிப்பூர் பெரியம்மா சொன்னதுதான் தாமதம், "ன்னாடி நெனச்சிட்டு இருக்கீங்க! ஒங்க வூட்டு எழவெடுத்தக் காரியத்துக்கு வந்து நாங்க மட்டையாயி சுடுகாட்டுல கெடக்கணுமா? நீங்க மாட்டும் எழவ முடிச்சிட்டு வூட்டுக்குள்ள சொகமா கெடப்பீங்களா? நாதாரி நாயிங்களா! ஒங்களக் கொண்டு போயி அஞ்ஞ படுக்கப் போடணும்டி! ஏம்டி எந் தம்பி அஞ்ஞ போயி படுக்கணும்?" என்றது முருகு மாமா.
            "ச்சும்மா நிறுத்துங்க மாமா! அதெப் போயி யாரு அஞ்ஞ படுக்கச் சொன்னது? எல்லாரும் வாரப்ப இதுவும் வார வேண்டித்தானே. இதென்ன விருந்துக்கு மொய் பாக்கு வெச்சிக் கூப்புடறதா ன்னா? சுடுகாட்டுக்குப் போனமா? காரியம் ஆச்சுன்னா வந்தோமான்னு இருக்குறத வுட்டுட்டு, குடிச்சிட்டு இது பாட்டுக்கு சாஞ்சு கெடந்ததுக்கு யார்ர நாதாரி நாயிங்றீங்க?" என்றது சிப்பூர் பெரியம்மா.
            "எல்லாம் வாயி துடுக்கா போயீட்டீங்கடி! இது நல்லதில்லடியோய்!" என்றது முருகு மாமா.
            "பேசாதீங்க மாமா! லாலு மாமாவ கூட்டியாராம போனதுக்கு நாம்ம மன்னிப்புக் கேட்டுக்கிறேம்! மொதல்ல மாமாவ குளுப்பாட்டுவோம். சட்டையெல்லாம் மண்ணுஞ் சேறுமா. பாக்கச் சகிக்கல!" என்றது குமரு மாமா.
            "சகிக்காதுடா ஒங்களுக்கு! அவம்தேம் ஒங்கள மாருல தூக்கிட்டு பள்ளியோடம் கொண்டு போனவேம்! அதுக்குதாம் இப்ப மாருல எட்டி ஒதைக்கிறீங்க!" என்ற முருகு மாமவை வாயைப் பொத்திக் கொண்டு போயி  வீட்டின் மேலண்டைப் பக்கம் இருந்த கொல்லைப் பக்கம் விட்டது குமரு மாமா. அதற்குப் பின் முருகு மாமாவிடமிருந்து சத்தம் வரவில்லை. கொல்லையின் மேலண்டைப் பக்கம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த சரக்கின் வாடை முருகு மாமாவின் மூக்கைத் துளைத்து நாக்கை கட்டுபடுத்தியிருக்க வேண்டும். "இதுக்குதான்டி இப்படிச் சத்தம் போடுறானுவோ! சாவு கெரக்கிங்க! கட்டயல போறவனுவோ!" என்றது சாமியத்தாவும் வைத்தி தாத்தா செத்த துக்கம் தாளாமல்.
            "யேய் மணி! இஞ்ஞ வந்து இத்து மேல தண்ணிய ஊத்தித் தொலைடா!" என்றது குமரு மாமா வீயெம் மாமாவிடம். லாலு மாமா மரண அமைதியில் கொண்டு வந்து போட்டிருந்த மர பெஞ்சில் கிடந்தது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...