3 Jul 2019

நம்பிக்கையின் பாட்டு



செய்யு - 134
            "இந்தக் கதையைக் கேட்டவங்கல்லாம் கண் கலங்கியிருக்காங்க! செளத்ரி சார் இந்தக் கதையைக் கேட்டா போதும், கன்பார்மா ஷூட்டிங்கதான்! இதுல மெயின் என்னான்னா வெகடு! அதுல வர்ற தன்னம்பிக்கை பாட்டுதாம்! செளத்ரி சாரு அதத்தான் முக்கியமா நோட் பண்ணுவாரு! நீங்க என்ன பண்றீங்கன்னா அந்த சுச்சுவேஷன் ஞாபகம் இருக்குல்ல. அதுக்கு ஒரு தன்னம்பிக்கை பாட்டை இப்போவே ரெடி பண்ணி அப்படியே பாடிக் காட்டுறீங்க! நான் கதைச் சொல்றப்போ அதையும் சேத்துக்கிறேன். என்ன சொல்றீங்க வெகடு! இப்டிலாம் சில கில்டிங் வேல பண்ணத்தாம் சொல்ற கதை புரடியூசரோடு நெஞ்சுல போயி நிக்கும்! இதுல என்னா மேட்டர்னா... இப்படிச் செஞ்சா, கதைய சொன்னத்துக்கு அப்புறம் ஒரு வாரம் கழிச்சு வந்து பாருங்கன்னு சொல்லா மாட்டாங்க! இந்தப்பா அட்வான்ஸ்! போயி ஷூட்டிங்க ஸ்டார்ட் பண்ணிடுன்னுடுவாங்க!" என்கிறார் பூரணலிங்கம்.
            இப்படி ஒரு வாய்ப்புக்காக அலைந்த கொண்டிருந்த விகடுவுக்கு, எழுதச் சொன்னதே போதுமென்று, மெட்டு டியூன் என்று எதுவும் பார்க்காமல் எழுதித் தள்ளுகிறான்.
            நம்பிக்கை நம்பிக்கை இருக்கு
            அவநம்பிக்கை எதுக்கு
            யானைக்கு இருக்கும் தும்பிக்கை
            வெளியில தெரியுது
            உனக்குள் இருக்கும் நம்பிக்கை
            உள்ளுக்குள்ள தெரியுது
            முயன்று பார்த்தா புரியுது
            மெழுகு போல எரியுது
            போகும் பாதையில் கிடக்கும்
            தடைக்கல் உடைந்து போகுது
            அதுவே உன் பாதைக்கு
            கப்பிக்கல் என்று ஆகுது
            வாழும் வாழ்வில் ஆயிரம்
            தடைகள் எட்டிப் பார்க்குது
            அதுவே வாழ்வுக்கு
            வரமாய் உரமாய் போகுது
            ரெண்டு கை போனாலும்
            மூன்றாம் கை நம்பிக்கை இருக்குது
            நம்பிக்கையில்தான் வாழ்க்கை இருக்குது
            நாளும் வேட்கை பெருக்குது
            சின்னஞ்சிறு தீ போதும்
            பெருங்காட்டை எரித்திடும்
            சின்னஞ்சிறு நெம்புகோல் போதும்
            பூமிப் பந்தைப் புரட்டிடும்
            சிறு வெளிச்சம் போதும்
            காரிருளைக் கிழித்திடும்
            சிறு ஊசிமுனை போதும்
            பெரிய பலூனை அழித்திடும்
            சின்ன விதை போதும்
            பெரிய மரம் ஆகிடும்
            சிறு நம்பிக்கை போதும்
            வாழ்வின் வரம் ஆகிடும்
                        - எழுதி விட்டு அவனுக்குத் தெரிந்த மெட்டில் விகடு பாடிக் காட்டுகிறான். பூரணலிங்கத்துக்கு தாங்க முடியாத சந்தோஷம். "செளத்ரி சாருகிட்ட கதை சொல்றப்ப நீங்களும் வர்றீங்க! அந்த எடம் வர்றப்போ நீங்களே இதப் பாடிக் காட்டுறீங்க!" என்று சொல்லிக் கொண்டே விகடுவைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்.
            லெனினுக்கும் பூரணலிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். லெனின் தனக்குத் தெரிந்த டேரக்டர்கள் யாரையும் குறிப்பிட்டு போய் பாருங்கள் என்று சொல்லாமல், அது விகடுவே தேடிக் கண்டடைய வேண்டும் விசயம் என்கிறார். பூரணலிங்கம் தனது படத்தின் எல்லா பாட்டுக்கும் விகடுதான் என்கிறார்.
            கண்ணதாசனின் 'கலங்காதிரு மனமே' என்பது போல இந்தப் பாடல் தனக்கு ஆகி விடும் என்று நினைக்கிறான் விகடு. காலம் அப்படியெல்லாம் விட்டு விடுமா என்ன! அந்த மனம் கலங்கிப் போகும் அளவுக்கு அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கின்றன.
            "வாங்க ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்! வந்து எழுதலாம்!" என்கிறார் பூரணலிங்கம்.
            "நீங்க போயி அடித்துக்கொண்டு இருங்கள்! எனக்கு இன்னும் சில நல்ல வரிகள் தோன்றிய வண்ணம் உள்ளன. முடித்து விட்டு வருகிறேன்!" என்கிறான் விகடு.
            பூரணலிங்கம் போய் டீ அடித்து விட்டு வருவதற்குள் மற்ற நான்கு பாடல்களையும் முடித்து விட வேண்டும் என்ற அவசரத்தில் விகடு எழுதிக் கொண்டிருக்கிறான்.
            இங்கு என்னதான் புழுங்கிக் தள்ளினாலும் யாரும் கதவைத் திறக்க மாட்டார்கள். கதவைத் திறந்து போட்டு விட்டுப் போக மாட்டார்கள். சுவராகவே இருக்க வேண்டிய கதவுகள்தான் அவை. எந்நேரமும் சாத்தி இருக்கும் அவை சுவராகவே இருந்திருக்கலாம். சுவராக இருக்க வேண்டிய அவை கதவுகள். வீட்டுக்குள் இருப்பவர் வெளியே செல்வதற்கும், வெளியே இருப்பவர் உள்ளே வராமல் இருப்பதற்கும் சாமர்த்தியமாக இருப்பதற்குப் படைக்கப்பட்ட அந்தக் கதவுகளை பூரணலிங்கம் டீ அடிக்கச் செல்லும் போது சாத்தி விட்டுச் செல்கிறார். புழுக்கத்தில் புழுங்கிக் கொண்டு சரச் சரக் என்ற சத்தத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறிக்குக் கீழே உட்கார்ந்து அந்தச் சத்தத்தை ஒரு மெட்டைப் போல கருதிக் கொண்டு,
            சர்ரக் சர்ரக் தர்ரக் தர்ரக் என்று மனதுக்குள் ஓட விட்டுக் கொண்டு, படத்தில் வரும் காதல் சிச்சுவேஷனுக்கு,
            கிட்ட வரவா
            கட்டித் தரவா
            கொட்டித் தரவா
            பட்டு இதழில்
            பத்து முத்தம்
            நித்தம் நித்தம்
            முத்த யுத்தம்
என்று எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் குத்துப்பாட்டுக்கு மெட்டுப் போடுவதைப் போல கதவு 'தட் தட் சட் சட் தடக் தடக்' என்று தட்டப்படுகிறது.
            "வருகிறேன்! வருகிறேன்! விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்! தூங்கவில்லை. மெதுவாக தட்டலாமே!" என்றபடியே விகடு கதவைத் திறக்கிறான்.
            கதவைத் திறந்தால் பத்து பேருக்கு மேல் அந்தச் சந்திற்குள் நிற்க முடியாமல் பிதுங்கிக் கொண்டு நிற்கிறார்கள். கதவை விகடு திறந்துதான் தாமதம். விகடுவைக் குண்டுகட்டாய்ப் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த ரூம் வீட்டின் உள்ளே பூராவும் தேடுகிறார்கள்.
            "பொண்ணலாம் யாருமில்லண்ணா!" என்கிறார் அதில் குண்டாக இருக்கும் ஒருவர்.
            "அது தெரியும்! தம்பி அந்த மாரிலாம் பண்ணாது! இருந்தாலும் இந்தக் காலத்துல யார நம்ப முடியுது! தம்பிய கெளப்புங்க!" என்கிறார் மொடமொடவென்று வெள்ளைச் சட்டையும், வெளிர்பச்சை நிற பேண்டும் போட்டிருக்கும் ஆஜானுபாகுவான அந்த நபர்.
            "யார் நீங்கள்? எதற்கு என்னை இப்படிப் பிடித்திருக்கிறீர்கள்? என்னை எங்கே கிளப்பிக் கொண்டு போகிறீர்கள்? இது என் அறை நண்பர்களுக்குத் தெரிந்தால் உங்களைச் சும்மா விட மாட்டார்கள்!" என்று திமிர முயலுகிறான் விகடு. அவன் உடம்பில் இருந்த பலத்துக்கு ஒரு சிறு அசைவைக் கூட அவனால் நிகழ்த்த முடியாத பரிதாபகரமான நிலையில் இருக்கிறான்.
            "தம்பி! ஒண்ணும் பயப்பட வாணாம்! வேற்குடி விநாயகம் வாத்தியாரு தெரியுங்களா! அவங்களோட தம்பிங்கதாம் நாங்க! மூணு மாசமாக மெட்ராஸ்ல ஒரு ஏரியா வுடாம தேடிட்டு இருக்கோம். சூளைமேட்டுக்கு ஒரு கான்ட்ராக்ட் விசயமா வந்து தீவார் ஓட்டல்ல டீ அடிச்சிட்டு இருந்தேம். ச்சும்மா விசாரிச்சுப் பாப்பேம்னு ஒங்க பேர சொல்லி விசாரிச்சா ஒல்லியா டீ அடிச்சிட்டு இருந்த ஒரு பையம் ஒங்கள தெரியும்னு சொல்றாம். ஒங்க சொந்தக்காரங்கதாம்னு சொன்னேம். ரூம காட்டி விட்டாம். ஒங்கள காங்காம ஊருல ஒங்க அப்பா அம்மா தங்காச்சிலாம் சொகவீனமா இருக்காங்க தெரியுங்களா! நம்ம ஏரியாவுக்கு வாங்க பேசிப்பேம்! அலும்புலாம் பண்ண வாணாம்!" என்கிறார் விநாயகர் வாத்தியாரின் மூன்று தம்பிகளில் ஒருவரான ஆரூர் எஸ்.ரவிநாயகம்.
            ‍போவதைத் தவிர வேறு வழியில்லை என்பது புரிகிறது விகடுவுக்கு. அவனைப் பிடித்தபடியே சந்தைக் கடந்து ரோட்டுக்கு வருகிறார்கள். டாடா சுமோவுக்குள் அவனை ஏற்றி நடுவில் உட்கார வைத்து ரெண்டு பக்கமும் ஆட்கள் உட்கார்ந்து கொள்கிறார்கள். டாட்டா சுமோ கிளம்புகிறது. சினிமா பாஷையில் சொல்வதானால் ரவுடிகள் டாட்டா சுமோவில் வந்து கடத்திக் கொண்டு போவது போலத்தான் இருக்கிறது அந்தக் காட்சி.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...