17 Jul 2019

நீயெல்லாம் எப்படிப் படிச்சே?



            பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதால் படிக்க வைக்கிறோமா? படிக்க வைப்பதற்காகவே பெற்று வளர்க்கிறோமா? ஏதோ ஒன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
            இரண்டரை வயதிலிருந்து இந்தப் பிள்ளைகள் மூட்டைத் தூக்க ஆரம்பித்து விடுகின்றன. அவ்வளவு புத்தகங்களையும் இந்தப் பிள்ளைகள் எப்படித்தான் படிக்கின்றனவோ! படித்துத் தொலைக்கின்றன! அந்தப் புத்தகங்களை பள்ளிக்கூடத்தில், வீட்டில் படிப்பது போதாதென்று டியூசன் வைத்து வேறு படிக்கின்றன. முன்பு படிக்காத பிள்ளைகளுக்குதான் டியூசன். இப்போ படிக்கிற பிள்ளைக்குதான் டியூசன். முன்பு ஒரே ஒரு டியூசன்தான். இப்போ நாலைந்து டியூசனுக்குப் போகிறவன் பெரிய படிப்பாளிப் பிள்ளை.
            எந்தப் பிள்ளையைப் பார்த்தாலும் படிப்பு படிப்புதான். முன்பெல்லாம் பிள்ளைகளைப் பார்த்து, "நீ என்னவாகப் போகிறே?" என்ற கேட்டால் டாக்டராகப் போகிறேன், இஞ்சினியர் ஆகப் போகிறேன், டீச்சர் ஆகப் போறேன், கலெக்டர் ஆகப் போறேன் என்று எதையாவது சொல்லிச் சிரிக்கும். இப்போது கேட்டுப் பாருங்கள்! நீட் எழுதப் போறேன், கேட் எழுதப் போறேன், டெட் எழுதப் போறேன், ஐ.ஏ.எஸ். எழுதப் போறேன் என்று என்னென்னவோ எவ்வளவு விவரமாகச் சொல்கின்றன. அதுங்க சொல்றதோட அப்பிரிவியேஷன் புரியறதுக்குள்ளயே நமக்கு மண்டை கழன்று மறை கழன்று விடும் போலிருக்கிறது. அதுக்காக படித்து எழுதுகின்றப் பிள்ளைகளைச் சொல்ல வேண்டும். அதுகளின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது.
            நண்பர் ஒருத்தர் ஏதோ என்ட்ரன்ஸ்க்காக படித்த அவரோட பிள்ளையைச் சைக்கியாஸ்ரிட் ஒருத்தர்கிட்ட காட்டிட்டு இருக்கிறதா சொல்றார். இன்னொரு நண்பர் ஒருத்தரு அவரோட பிள்ளையை சூசைட் அட்டெம்பட்லிருந்து காப்பாத்தியிருக்காத போன் பண்ணிச் சொல்லிட்டு அழுவுறார். ரொம்ப படி படின்னு நெருக்குனதுல ஒரு நண்பரோட பிள்ளை வீட்டை விட்டு ஓடிட்டதா சொல்லி ஒருத்தர் வருத்தப்படுறார். இதைக் கேட்கிறப்பவே நமக்கு பகீர் பகீர்ங்றதா! அதனால் ஆறுதல் சொல்ல கூட முடியல!
            "நீங்கலாம் படிக்கிறப்ப எப்பிடிம்பி? இப்பிடியா மாய்ஞ்சு மாய்ஞ்சு படிச்சீங்க?" அப்படின்னு வேற அந்த நண்பர்களோட வீட்டுப் பெரிசுகள் அப்பைக்கப்போ கேள்விகளப் போட்டுத் தாக்குறாங்க.
            அது சரி! நாம்ம மாய்ஞ்சு மாய்ஞ்சுப் படிக்காத படிப்பா என்ன! அதில் ஒரு உண்மை என்னவென்றால் அப்படிப் படித்த எதுவும் பாடப்புத்தகம் இல்லை என்பதுதான். பாடப்புத்தகத்திற்குள் ஒளித்து வைத்து பிடித்த புத்தகங்களாகப் படித்துக் கொண்டிருந்ததுதான். இப்போ இந்தக் காலத்துப் புள்ளைங்க செல்லைப் போட்டு நோண்டு நோண்டுன்னு நோண்டுற மாதிரிதான் அப்போ புத்தகங்கள் நமக்கு!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...