17 Jul 2019

தூண்டிலில் சிக்கப் போகும் மாடுகள்



செய்யு - 148
            மாடுகளைக் குறித்த கவலை சுப்பு வாத்தியாருக்கு அதிகம் வந்துப் போனது. வைத்துப் பார்க்க முடிந்தால் பார்க்க வேண்டும், இல்லையென்றால் விற்று விட வேண்டும் என்ற யோசனையில் உழன்று கொண்டிருந்தது சுப்பு வாத்தியாரின் மனசு. இப்போது இருக்கும் நிலையில் இதைத்  தவிர சமாளிப்பதற்கு வேறு வழியில்லை என்கிற அளவுக்கு போக ஆரம்பித்திருந்தது அவரது யோசனை.
            வீட்டில் மாடு இருந்தால் பாலுக்கு, தயிருக்கு, நெய்க்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. வீட்டில் மாடு வைத்துப் பால் கறந்து குடித்தவர்களுக்கு வெளிபால் வாங்கி மனசுக்கு தோதுபட்டு வராது. நாக்கு ஒத்துக் கொள்ளாது. ஒண்ணு கெடக்க ஒண்ணு குறையாக அவிழ்த்து விடும். அத்தோடு வீட்டுப்பால் குடித்து வெளிப்பால் வாங்கி கட்டுபடியும் ஆகாது. வீட்டில் இருக்கும் மாடுகள் மனுஷர்களை மட்டுமா வளர்த்து விடுகின்றன? நாக்குருசியையும் அல்லவா சேர்த்து வளர்த்து விடுகின்றன! மாட்டை விற்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், பாலும் தயிரும் குடித்த நினைவு வந்து விற்க விடாமல் செய்து விடும். மாட்டை லேசில் விற்க மனம் வராது. அத்தோடு மாடு இருந்தால்தான் வீடு விளங்கும், செல்வம் பெருகும் என்ற எண்ணம் வேறு உண்டு. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற பொருள் அப்படித்தான் வந்திருக்க வேண்டும்.
            சுப்பு வாத்தியாருக்கு அப்படி ஒரு யோசனை விற்க வேண்டும் என வந்தால், இப்படி ஒரு யோசனை விற்கக் கூடாது என்றும் வருகிறது. இப்படியும், அப்படியுமாக அல்லாடிப் பார்க்கிறார்.
            வீட்டில் இருந்தவர்களைக் கூட்டிக் கேட்டால் வெங்குவுக்கு விற்க மனசில்லை. விகடுவுக்கும், செய்யுவுக்கு மாட்டை விற்றால் போதும் என்று நிலையாய் நிற்கிறார்கள். சுப்பு வாத்தியாருக்கு மனசு இப்போது விற்று விடுவதே உசிதம் என்ற நிலைக்கு வந்து விட்டது.
            "மாட்ட வெச்சிருந்தா நல்லபடியா பாக்கணும்! ஊருல ஒருத்தம் பல்லுல நாக்கு ஒரு படுற மாரி ஒரு வார்த்த வுட்டுடக் கூடாது. மாடு இப்போயே லேசா வதங்குன மாரி ஆயிடுச்சிங்க! வூட்டயும் கட்டிட்டு, மாட்டயும் பாத்துகிட்டு வூட்டுக்காக மாட்ட வுடுறதா? மாட்டுக்காக வூட்ட வுடறதான்னு மயக்கமா இருக்கு! மாட்டுகள இதுக்கு மேல வதங்க வுட்டா அது வூட்டுக்கும் நல்லதல்ல. மாட்டுக்கும் நல்லதல்ல. சரி வித்துப்புடுவோம்னு நெனச்சாலும் மாட்டுகள வதங்குன நெலயில வந்து பாத்தான்னா வாங்க மாட்டாம்! நேரத்துல சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடுத்துடறதுதாம் நல்லதுன்னு நெனைக்கிறேம்!" என்றது சுப்பு வாத்தியார்.
            வெங்குவுக்குக் கோபம் வந்து விட்டது. "மாடு இருந்தவாசிதான் குடும்பத்த இவ்ளோ நாளு சமாளிக்க முடிஞ்சிச்சு! இல்லேன்னா ஒங்க அப்பாரு சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு திங்குறதுக்கும், உங்கறதுக்கும்தான் சரியா இருந்துப் போயிருக்கும்!இந்தக் குடும்பத்துல ஒங்க அப்பாரு மட்டுந்தாம் சம்பாதிக்கிறோம்னு நெனைப்பு. மாடுங்களுதாம் சம்பாதிச்சி. அதாலதாம் பாலு, தயிரு, நெய்னு ஒத்த காசி செலவில்லாம காலத்த ஓட்ட முடிஞ்சிச்சி. அதயும் விட்டுப்புட்டு பாலு, தயிருன்னு வெளில காசி கொடுத்து வாங்கிப் பாத்தாத்தாம் அத்தோடு ஒழைப்பு என்னான்னு தெரியும்! கஷ்டப்பட்டாதாம் ரெண்டு காசி பாக்க முடியும்! சும்மானாச்சின்னு உக்காந்துட்டே ரெண்டு காசிய மிச்சப்படுத்தணும்னா எப்பிடி? காலம் முழுக்குமா வூட்ட கட்டிட்டே இருக்கப் போறீங்க? கட்டி முடிச்சாச்சின்னா வேல முடிஞ்சிடுச்சி. அப்பொறம் மாட்டயும், வயலயும் பாக்குறத வுட ன்னா வேல இருக்கு? வயல்லன்னு சொல்றப்பதாம் ஞாபவத்துக்கு வர்ருது பாரு! வயலுக்கு வருஷா வருஷம் நாட்டு எரு அடிக்கிறீங்களே! எங்கேர்ந்து வருது? மாடு இருக்குறவாசித்தான அடிச்சிக்கிறீங்க! ஏய்யா காலயில எழுந்திரிச்சி வூட்டு வாசல்ல சாணி கரச்சிப் போடணும்னா மாடு இருந்தாதாம்ன சாணி! இல்லேன்னா வூடு வூடா ஓடணும்! எந்த வூட்டுல எவ்வே சாணி கொடுப்பா? ஒரு கை சாணி அள்ளுறதுக்கு அவ்வோ வூட்டு சொத்தையே எழுதிக் கொடுக்குற மாரில்ல மொறைப்பு காட்டுவாளுங்க! இந்தாருங்க எல்லாம் இருந்தாத்தாம்! இருக்குறப்ப அத்தோடு அருமெ தெரியாது. வித்துப்புட்டு நின்னாத்தாம் அத்தோடு அருமெ தெரியும்ணா அப்பொறம் ஒங்க விருப்பம். எந்தக் கருமத்தயாவது பண்ணித் தொலங்கோ! எங்கிட்ட கேட்காதீங்க!" என்று பிள்ளைகளோடு பேசுவதைப் போல சுப்பு வாத்தியாரிடம் கோபம் காட்டிப் பேசுகிறது.
            "சொல்றதெல்லாம் சரிதாம்! மறுபடியும் ஒடம்ப போட்டுக் கெடுத்துகிட்டீன்னா அலஞ்சிக் கொண்டு பாக்குறதுக்கு நாதியில்ல பாரு. ஒரு பத்துப் பாஞ்சி நாளு ஆஸ்பிட்டல்ல போயி கெடந்தீங்க. இஞ்ஞ வூடு வூடாயில்ல. வூட்டுல ஒருத்தரு படுத்துகிட்டாலும் வூட்டுக்கே கஷ்டமாப் போயிடுது. நாள பின்னிக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணுன்னா நம்மால முடியல!" என்கிறது சுப்பு வாத்தியார்.
            "ஒங்களால என்னத்தாம் முடிஞ்சிது? ஊரு ஒலகத்துல அவனவனும் காசி பணத்துக்கா என்னம்மா கஷ்டப்படுறானுங்கன்னு போயிப் பாருங்க! மாடுங்க ஒங்கள என்னங்கய்யா பண்ணிச்சி! அது பாட்டுக்கு நிக்குதுங்க! முடிஞ்சா புல்லறுத்துப் போடப் போறேம். முடியாட்டி போர்லேந்து வைக்கல புடுங்கிப் போட்டு தண்ணிய வைக்கப் போறேம். ஒங்களுக்கு ன்னா வந்திச்சி? முடிஞ்சாப் பாருங்க. இல்லேன்னா நம்மாள முடியற வாரிக்கும் நாம்ம பாத்துக்கிறேம். எங் காலத்துக்கு அப்பொறம் எதாச்சியும் பண்ணித் தொலயுங்கோ! அதுக என்ன மாடுக மாரியா பழகுது? இந்த வூட்டுல மனுஷங்க மாரித்தான பழகுது! அத்தே வித்துத் தொலைக்கணும்னா இந்தப் பயலால வூட்டுக் காலிப் பண்ணிட்டுப் போயி நரிவலத்துல கெடந்தோமே அப்பயே வித்துத் தொலைக்க வேண்டியதுதானே. அப்போ வுட்டுப்புட்டு இப்போ வந்துட்டு வித்துப்புடுவோமா? வேண்டாமானுகிட்டு! அப்டியல்லாம் கஷ்டப்பட்டாச்சி. இனுமே இதுக்கு மேல ன்னா கஷ்டம் வந்துடப் போவுது?" என்கிறது பதிலுக்கு வெங்கு.
            வெங்கு சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஆடு, மாடு, கோழிகள் இல்லாமல் போனால் கிராமத்துப் பெண்களின் கையில் காசு புழங்காது. பால் விற்று, தயிர் விற்று, முட்டை விற்று கையில் எப்போதும் காசு இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். அந்தக் காசை சிறுவாடாக சேர்த்து வைத்துக் கொள்வதில் அவர்களுக்கு அலாதியான சந்தோஷம். சமயங்களில் புருஷன் கையிலேயே காசு இல்லாமல் போகும் போது இவர்கள் கையில் இருக்கும் காசுதான் கை கொடுக்கும். ரொம்ப பெருமையாக அப்போது கையிலிருக்கும் காசை எடுத்துப் புருஷன் கையில் கொடுக்கும் போது அவர்களின் மூஞ்சைப் பார்க்க வேண்டுமே! அவ்ளோ பெருமிதமாக இருக்கும்! புருஷங்காரங்களுக்கும் நம்ம பொண்டாட்டி இவ்ளோ சமத்தா இருக்கிறாளே அந்த பெருமிதத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத ஒரு கடுகடுப்பான முகத்தை எங்கிருந்தோ வரவழைத்துக் கொண்டு ஆனால், உள்ளுக்குள் சந்தோஷமான ஓர் எண்ணம் இருக்கும் பாருங்கள்! அது எல்லாவற்றுக்கும் ஆடுகளும், மாடுகளும், கோழிகளும்தான் காரணம்.
            எந்தக் கஷ்டத்திலும், எப்படிப்பட்ட வறுமையிலும் இந்த ஆடு, மாடு, கோழிகள் கை கொடுப்பது போல சொந்த பந்தம் கூட கை கொடுக்க முடியாதுதாம். கையில் காசே இல்லாத போது தீபாவளி வந்தால் என்ன? பொங்கல் வந்தால் என்ன? வீட்டில் ஏதேனும் விஷேசம்தான் வந்தால் என்ன? ரெண்டு ஆட்டை விற்றால், பத்துக் கோழியை விற்றால் காரியம் ஆகி விடும். வீட்டுக்குள் இருக்கும் ஒரு பேங்கைப் போலத்தான் அவைகளெல்லாம். எப்போது வேண்டுமானாலும் காசாக்கிக் கொள்ளலாம். காசிருக்கும் போது ஆட்டையோ, மாட்டையோ வாங்கி விட்டுக் கொள்ளலாம். வாங்கி விட்டால் பிக்சட் டெபாசிட் போலத்தான். நன்றாக வளர்த்து ஆளாக்கி விட்டால் கேட்குற காசுதான். கொடுத்து விட்டு வாங்கிப் போக சுற்றுப்பட்டியில் ஆட்கள் இருக்கின்றன.
            கிராமத்தில் நிற்கும் ஆடுகளோ, மாடுகளோ, கோழிகளோ எல்லாம் பெண்களின் உழைப்பும் பெண்களின் ரத்தமும்தான். புண்ணாக்கு, தீவனம் என வாங்கிப் போட்டால் காசு செலவாகும் என்று மாய்ந்து மாய்ந்து புல்லறுத்து, எந்தப் புல்லை அறுத்துப் போட்டால் பால் நிறைய கறக்கும் என்பதைக் கணக்குப் பார்த்து, அந்தப் புல்லை அறுத்துக் கொண்டு வந்து போட்டு பாலை நிறைய கறந்து விற்று இந்தக் கிராமத்துப் பெண்களின் சாமர்த்தியம் மூக்கில் மேல் விரல் வைத்தாலும் தீராது.
            "இந்தாரும்மா! நீயி இப்பிடி காலம் முழுமைக்கும் கஷ்டப்பட்டுட்லாம் இருக்க முடியாது! அப்பாவும், அண்ணணும் சொல்றதக் கேளு! மாட்ட வித்துப்புட்டு பேசாம இருக்குற வேலய பாத்துட்டு சும்மா கெட. இப்போ ஒனக்கு ன்னா கொறைச்சல்? நெலம புரியாம பேசிட்டு! இப்பதான மாத்திர மருந்துன்னு தின்னுட்டு தேறிட்டு வார்றே! அதுக்குள்ள மறுபடியும் போயி ஆஸ்பத்திரில படுத்துட்டு மருந்து தின்னுட்டு ஊசிய ஏத்திகிட்டு கெடக்கணும்னு நெனைக்கிறீயா?" என்கிறது செய்யு.
            "உழைத்ததெல்லாம் போதும். பாடுபட்டதெல்லாம் போதும். கொஞ்சம் நிம்மதியா இரும்மா!" என்கிறான் விகடுவும்.
            "நிம்மதின்னா ஒழைப்புதாம்டா நிம்மதி! பாடுபட்டத்தாம்டா சந்தோஷம். சும்மா உக்காந்திருக்கிறதுக்கு பேரு ன்னாடா நிம்மதி? வேல வெட்டி இல்லாம கெடக்குறதுக்குப் பேரு ன்னாடா சந்தோஷம்? நீயி நாளு பூரா பொத்தக வெச்சிட்டு உக்காந்திருக்கேன்னா எல்லாராலயும் முடியுமா? ஒங்கப்பாரு வேலைக்குப் போயிடுவாரு! நாளாச்சின்னா நீயி காலேஜி போயிடுவே! ஒந் தங்காச்சி பள்ளியோடம் போயிடுவா! எல்லாரும் போயித் தொலஞ்சிட்டீங்கன்னா, வூட்டுல நமக்கு பேச்சுத் தொணைக்கு யாருடா இருக்கா? இந்த மாடுங்கதான்னடா! அதுங்ககிட்ட பேசிட்டு, அதுங்க‍ளுக்குப் பாடுபட்டு கெடக்குறதுலதாம்டா நம்மோட சீவனு ஓடிட்டு இருக்கு! எல்லாத்தியும் யோசிச்சுத் தொலைங்கடா! படிச்சிறீக்கீங்களே தவுர புத்தி கொஞ்சமாச்சிம் ஒங்களுக்கெல்லாம் இருக்குதா? எதுக்கெடுத்தாலும் எடுத்தேம் கவித்தேம்னு எதாச்சியும் யோசிச்சிகிட்டு, ஏதாச்சிம் குந்தாங் கூறுமா முடிவு பண்ணிட்டு? ஒங்களுக்கு வேற வேலையே இல்லையாடா?" என்கிறது வெங்கு.
            மாடுகளை விற்பதற்கு இவைகளெல்லாம் உப காரணங்களோ, உதிரி காரணங்களோதாம் சுப்பு வாத்தியாருக்கு. அவருக்கு வீட்டைக் கட்ட ஆரம்பித்ததில் நாலா பக்கமும் கடன்சுமை கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. வாடகைக்கு இருக்கும் முல்லேம்பாள் வீட்டுக்கு மாதப் பணம் கொடுத்து ரெண்டு மாதங்களாகின்றன. அது வேறு அவ்வபோது நாசுக்காய் நெருக்கிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் வாயை விடப் போகிறது? வெடிக்கப் போகிறது? என்ற தெரியாத நிலையாய் இருக்கிறது. அத்தோடு சூழ்நிலையும் இப்படி வெங்குவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் இதைச் சரியான சமயமாய்க் கணக்குப் போட்டுப் பார்த்து தூண்டிலை வீசிக் கொண்டே இருக்கிறார் சுப்பு வாத்தியார்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...