16 Jul 2019

மாடென்றால் மாடுதாம்!



செய்யு - 147
            நல்ல நாளிலே மாடுகளை ராத்தூக்கத்தில் மூணு தரம் முழிச்சிகிட்டு வந்து பார்க்கணும் என்பார்கள் கிராமத்தில். கட்டியிருக்கும் கயிறுகளில் மாடுகள் சமயத்தில் சிக்கிக் கொள்ளும். ஏதேனும் ஒரு மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு வந்து இன்னொரு மாட்டை நோக்கி வந்து முட்டிக் கொண்டிருக்கும். இதெல்லாம் எப்போதோ அசந்தர்ப்பமாக நடப்பதுதான் என்றாலும், அப்படி ஏதேனும் நடந்து மாடுகளுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகி விட்டால் வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப கவலையாகி விடும். ஊரிலும் இதே பேச்சாகி விடும். மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சிச் செய்து பேசுவார்கள். "ன்னா மாடு வளக்குறாம்? மாட்ட எழுந்திரிச்சிப் போயி கூட பாக்காம அப்படி ன்னா தூக்கம் வேண்டிக் கெடக்கு?" என்று பேசிப் பொரிந்துத் தள்ளி விடுவார்கள்.
            இந்த ஊரில் எல்லாருமே அப்படித்தான். நடுராத்திரியில் எவரேனும் விழித்துக் கொண்டு மாட்டுக்கொட்டகைக்கள் டார்ச் லைட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் இல்லாமல் மாடுகளும் மனுஷன் வந்து இப்படிப் பார்க்கிறானா? என்று எதிர்பார்க்கும் போலும். டார்ச் லைட்டை அடித்து அப்படிப் பார்க்குப் போதே "ம்ம்மா" என்று அடிவயிற்றிலிருந்து அப்படி ஒரு சத்தம் கொடுக்கும். அந்தச் சத்தத்தைக் கேட்டு விட்டு வந்து படுத்தால்தான் மாடு வளர்ப்பவர்களுக்கு நல்ல தூக்கம் வரும். ஏதோ அசந்து தூங்கினாலும் இந்த மாடுகளும் சும்மா இருக்காது. சத்தம் போட்டு கிளப்பி விட்டு வந்து பார்க்க வைத்து விட்டுதான் மறுவேலை பார்க்கும்.
            புது வீடு கட்டிக் கொண்டிருந்தபடியாலும், எதிரே மூன்று வீடுகள் தள்ளி முல்லேம்பாள் ஆத்தா வீட்டில் வாடகைக்கு இருந்ததாலும் மாடுகளை அங்கிருந்த இங்கே கொட்டிலுக்கு வந்து பார்ப்பதற்கு சுப்பு வாத்தியாருக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ரோட்டில் கிடந்த நாய்கள் பழகிய நாய்கள்தான் என்றாலும் அங்கிருந்து இங்கு எழுந்து வருவதைப் பார்க்கும் போது ஒரு வள் வள் சத்தம் போட்டு விட்டப் பிறகுதான் தலையைத் தாழ்த்தி படுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தன. இதை வைத்தே கட்டிலில் ஆங்காங்கே வீடுகளில் படுத்திருக்கும் பெரிசுகள், "சுப்பு வாத்தியார் மாடு பார்க்கப் போறார் போல!" என்று குசுகுசுத்துக் கொள்ளும்.
            அதுவும் கன்று போட இருக்கும் மாடு என்றால் இந்தக் கிராமத்து மனுஷர்கள் தூங்கவே மாட்டார்கள். கொட்டிலுக்குப் பக்கத்திலேயே பெஞ்சைக் கொண்டு வந்து போட்டு படுத்து விடுவார்கள். சில மாடுகள் கன்று போடும் பிரக்ஞையே இல்லாமல் படுத்துக் கொள்ளும். அதை எழுப்பி விட்டு நிப்பாட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். செல்லமாய் வளர்ந்த சில மாடுகள் கன்று போடுவதற்குள் ரகளை பண்ணி விடும். கன்று போட்டவுடன் மாடு கன்றை நக்க விடாமல், கன்றைக் குளிப்பாட்டி, தொப்புள் கொடியறுத்து, அந்தத் தொப்புள் கொடியில் மாடு வாய் வைத்து விடாமல் துணியை வைத்துக் கட்டி விட்டு, கால் குளம்பை அறுத்து விட்டு ரொம்பவே பக்குவம் செய்ய வேண்டியிருக்கும். 
            இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மாடு கன்று போட்டு விட்டால் வீடு கலகலப்பாகி விடும். மாடு கன்று போடுவது வீட்டுக்குக் குழந்தை பிறப்பதைப் போலத்தான். தாய்பசுவுக்கு கன்றை விட மனசிருக்காது. வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கும் கன்றை விட மனசு இருக்காது. மனுஷனோடு போட்டிப் போட்டு மாடு ஜெயிக்க முடியுமா? இந்தப் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து கொண்டு அந்தக் கன்றை மடியில் வைத்துக் கொஞ்சாத குறையாக விளையாட ஆரம்பித்து விடும். கன்று அப்படியே மான்குட்டிக் கணக்காய் பொசுபொசுவென்று பட்டு மாதிரி இருப்பதால் அதைக் கட்டி அணைத்துக் கொள்வது பிள்ளைகளுக்கு அப்படியே சொர்க்கத்தில் இருக்கிற மாதிரிதான்.
            அந்த கன்றுக்குட்டியின் மூஞ்சு இருக்கிறதே, பிள்ளைகள் முத்தம் வைத்தே நக்கி எடுக்காத குறையாய் முகத்தை வைத்தால் எடுக்காதுகள். அந்த மூஞ்சில் நெற்றியில் வெள்ளையாய் நெற்றிப்பொட்டு மாதிரி இருந்து விட்டால் அந்தக் கன்றை விடாது பிள்ளைகள். இந்தப் பிள்ளைகள் கன்றின் முகத்தை மடியில் போட்டு நெற்றியைத் தேய்த்து விடுவதில் அவ்வளவு லயிப்பாகி கன்றும் பிள்ளைகளைக் கண்டால் விடாது பிள்ளைகளோடு பிள்ளைகளாய் மாறி விடும். எந்த வீட்டில் கன்று போட்டாலும் தெரு பிள்ளைகளுக்கு அவர்கள் வீட்டில் கன்று போட்டது போல ஒரே கொண்டாட்டம்தான். பிள்ளைகள் இப்படி கன்றோடு கன்றாய் இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தாய்ப்பசு உர் உர்ரென்று முறைத்துக் கொண்டு கயிற்றை இழுத்தபடி சீறிக் கொண்டிருக்கும். பெரிசுகள் வந்து இந்தப் பிள்ளைகளை ஓட்டி விட்டு, தாய்ப்பசுவை அசை மடக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஒரே கொண்டாட்டமும், கும்மாளமுமாய் நாட்கள் போவதே தெரியாமல் போகும்.
            ரெண்டு மூணு மாதம் வரைக்கும் கன்றைக் கொட்டிலில் போடாமல் வீட்டுக்குள் கொண்டு வந்து சணல் சாக்கைப் போட்டு படுக்க வைத்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் பொட்டுப் பொடிசுகள் அது கூடவே படுத்துக் கொண்டு, விளையாடிக் கொண்டு கன்றைப் போட்டு பாடாய்ப் படுத்தி விடும். கன்றும் மஞ்சளாய் ஒரு மாதிரியாய் வெளிக்கிப் போய், மூத்திரத்தை அடித்து வீட்டை ஒரு வழி பண்ணி விடும். வீடு என்ன ஆனாலும் சரிதான். கன்றுக்குப் படுக்கை எப்படியும் மூன்று மாதம் வரை வீட்டுக்குள்தான். ராப் பொழுது ஆனால் கன்றைத் தாயிடமிருந்து பிரித்து வீட்டுக்குள் கொண்டு வருவதற்குள் அதுவும் போதும் போதுமென்றாகி விடும். தாய்ப்பசு கத்தி ரகளைப் பண்ணி விடும்.
            இந்த மாடுகளை ரொம்ப கவனமாகத்தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் சின்னபிள்ளை வீட்டில் நடந்த மாதிரி ஏதாவது சம்பவம் ஆகி விடும்.
            சின்னபிள்ளையின் வீடு சுப்பு வாத்தியாரின் வீடு இருக்கும் தெருவிலிருந்து நேராகப் போய் ரெண்டு தெரு தாண்டினால் வரும். மாட்டுக் கொட்டிலுக்கு தென்னஞ் சப்பைகள் அடித்து ரயில் ஓடு போட்டிருந்தவர் ஊரிலே அவர் ஒருவர்தான். மாட்டுக் கொட்டிலே மனுஷர் தங்கும் அளவுக்கு ஒரு பக்கா ஓட்டு வீட்டைப் போல வைத்திருந்தார். மாடுகளுக்கு கொசு கடி இருக்கும் என்று கொட்டிலில் ரெண்டு மின்விசிறிகள் வரைப் போட்டு ஊருக்கே மாடு வளர்ப்பதில் முன்னோடி போல வழிகாட்டிக் கொண்டிருந்தார்.
            கொட்டில் தளத்துக்கு சிமெண்ட் போட்டு ஒரு பக்கமாக சரிவாக இருக்குமாறு செய்து, சரிவின் முடிவில் சிமெண்ட் வாய்க்கால் மாதிரி செய்து வைத்திருந்தார். இந்தச் சுற்றுப்பட்டு ஊர்களுக்கு கொட்டிலுக்கு சிமெண்ட் தளம் இருந்தது அவர் வீட்டு கொட்டிலுக்கு மட்டும்தான். மாடு மூத்திரம் பெய்தால் தளத்தில் தங்காது அந்த வாய்க்கால் வழி ஓடி விடும். மாட்டுச் சாணியையும் அள்ளும் வேலை இல்லாமல், அப்படியே வழித்து வாய்க்காலில் போட்டு வாய்க்கால் வழியே ஹோஸில் தண்ணீர் பிடித்து விடும் வகையில் நிறைய யோசித்துச் செய்திருந்தார் சின்னப்பிள்ளை. அந்த சிமெண்ட் வாய்க்கால் அப்படியே நேராகப் போய்க் குப்பைக் குழியில் விழும் வகையில் ஏற்பாடு. சாணியை வழித்து அள்ளி தள்ளி விடுவதற்கு வண்டி டயரை வெட்டி தோதாக அதற்கு கைப்பிடி மாதிரியெல்லாம் வைத்து என்னென்னமோ பண்ணி வைத்திருந்தார். இந்தக் கிராமத்தில் தொழில்நுட்ப ரீதியில் மாடு வளர்த்துக் கொண்டிருந்தார் சின்னப்பிள்ளை. ஊருக்கே முதன்முதலாக தீவனப் புல் வாங்கிக் கொல்லையில் போட்டு அதை அறுத்துப் போட்டவரும் அவர்தான். கொல்லையில் வைக்கோல் போர் என்றால் பத்து யானைகள் சேர்ந்து ஒன்றோடென்று ஏறி நிற்பதைப் போல அவ்வளவு பெரிய வைக்கோல் போர். இப்படியாக எல்லா வசதிகளையும் செய்து சுமார் பத்து பனிரெண்டு மாடுகளையும் சின்னப்பிள்ளை செல்லப் பிள்ளைகள் போல வைத்திருந்தார்.
            மழைக்காலங்களில் கொசுகடிக்கு மூட்டம் போடுவார் சின்னப்பிள்ளை. இதற்கெனவே நான்கு பெருஞ்சட்டிகள் வாங்கி வைத்து அதில் நொச்சியிலை, வேப்பம் இலையெல்லாம் போட்டு மூட்டத்தையும் போட்டு விட்டு, மின்விசிறியையும் போட்டு விடுவார். அப்படி போட்டு விட்டு ஒருநாள் என்ன நினைத்தாரோ சின்னப் பிள்ளை, கொஞ்ச நேரம் டி.வி. பார்த்து விட்டு வருவோம் என்று உள்ளே வந்தவர்தான், கொஞ்சம் டி.வி.க்கு முன் உட்கார்ந்து விட்டார். இவர் உள்ளே உட்கார்ந்திருப்பது தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி காற்றை அள்ளி வீசியதில் மூட்டத்தில் தீப்பற்றி, அந்தத் தீ எப்படியோ பறந்து மேலே இருந்த தென்னஞ்சக்கைகளில் பற்றி கணகணவென்று தகதகக்க ஆரம்பித்து மாடுகள் அலற ஆரம்பித்ததும் டி.வி.யை விட்டு விட்டு வெளியே ஓடி வந்து பார்ப்பதற்குள் தீ அதே கணகண, தகதகவென்று பரவி கொட்டகைப் பார்ப்பதற்கே செக்கச்செலேலேன்று ஆகி விட்டது.
            சின்னபிள்ளையால் சும்மா இருக்க முடியவில்லை. கொட்டிலுக்குள் ஓடி மாடுகளை எப்படியோ அவிழ்த்து விட்டார். அவர் அவிழ்த்து விட விட தென்னஞ் சப்பைகள் எரிந்து எரிந்து விழ ஆரம்பிக்க சின்னபிள்ளையைக் காப்பாற்றுவது பெரும் பாடாகப் போய் விட்டது. ஊரில் இருந்தவர்களெல்லாம் திரண்டு சின்னபிள்ளையையும், மாடுகளையும் காப்பாற்றுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அப்படியும் நான்கு மாடுகள் செத்துப் போனது. உயிர் பிழைத்த மாடுகளுக்கு ஏன் பிழைத்தோமோ என்ற நிலையில் ரொம்ப நாளைக்கு வாதனைப் பட்டுப் போயின. சின்னபிள்ளையும் தீக்காயங்களோடு ஏழெட்டு மாதங்களுக்குப் படுத்தப் படுக்கையாகக் கிடந்தார்.
            இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் இதே பேச்சுதான் இந்தச் சுற்றுவட்டம் முழுக்க. இப்போதும் அந்தப் பேச்சு மாடுகளைப் பற்றி வந்து விட்டால் எப்படியோ வந்து சேர்ந்து கொள்கிறது. கொஞ்சம் மாட்டைக் கவனிக்கத் தவறி இந்த மாதிரி ஆகி விட்டால் அப்புறம் அது பற்றிய பேச்சை இந்த ஊர்மக்கள் மனதிலிருந்து மாற்றுவது லேசான காரியமில்லை. மனுஷன் செத்துப் போனால் கூட விட்டு விடுவார்கள். வீட்டில் மாடு செத்துப் போனால் அவ்வளவுதான். எந்தெந்த வீட்டில் எந்தெந்த மாடு செத்தது வரை என்பது வரைக்கும் துல்லியமாக பேசுவார்கள். அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் செத்தது என்றாலும் சரியாகச் சொல்வார்கள். வீட்டில் மாடு சாகக் கூடாது. அது குடும்பத்துக்கு ஆகாது என்பது அவர்களின் கணக்கு. இந்த ஊரில் எல்லாரையும் பொருத்த வரையில் மாடு வீட்டின் லெட்சுமி. அது சந்தோஷமாக இருந்தால்தனா மனுஷன் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற ஒரு நினைப்பு. அதனாலேயே மாடு என்றால் மனுஷனை விட ரெண்டு பங்கு கவனம் கொடுத்து பார்த்துக் கொள்வார்கள்.
            சுப்பு வாத்தியார் இருந்த தெரு வீடுகள் முழுக்க மாடுகள் இருந்தன. மாடுகள் இல்லாத வீடுகள் இல்லை என்றிருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தது. எருமை மாடுகள் கூட ரெண்டு மூணு வீட்டில் இருந்தன. ஒரு பத்து பத்தரை மணிவாக்கில் மாடுகள் மேய்ச்சலுக்குப் போற அழகைப் பார்க்கும் போதே தெருவுக்கு தனி அழகு கூடி விடும். மேய்ச்சலுக்கு விட்டு பார்த்துக் கொள்ள முடியாதவர்கள் புல்லறுத்துப் போட்டுக் கொள்வார்கள். வெங்குவுக்கு உடம்புக்கு நன்றாக இருந்த வரை சில நாட்கள் மேய்ச்சலுக்கு விடுவது, சில நாட்களுக்கு புல்லறுத்துக் கொண்டு வருவது என்று மாற்றி மாற்றி மாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது மாட்டைச் சரியாகப் பார்க்க முடியாமல் போய் அது வேறு ஊருக்குள் ஏதாவது பேச்சாகி விடுமோ என்று சுப்பு வாத்தியாருக்கு உள்ளுக்குள் அச்சமாக இருந்தது. மாடு கொழுகொழுவென்று இல்லாமல் கொஞ்சம் வத்தல் தொத்தலாகி விட்டாலும் இந்த ஊர்மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். "இவன்லாம் எதுக்கு மாடு வளக்குறாம் பாவிப் பய? இவ்வேம் மட்டும் நல்லா தின்னுபுட்டு மாட்டை இப்படிப் பட்டினிப் போட்டு சாகடிக்குறானே படுபாவிப் பயெ!" என்று அசால்ட்டாக டீக்கடைகளையும், கடைத்தெருவையும் தெறிக்க விட்டு விடுவார்கள்.
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...