இந்திரா பார்த்தசாரதியின் 'மாயமான் வேட்டை'
நாவல் அறிமுகம்
முழுக்க முழுக்க அரசியல் பேசும் நாவலின்
வரிசையில் இந்திரா பார்த்தசாரதியின் 'மாயமான் வேட்டை' முக்கியமான நாவலாகும்.
அரசியலே இந்நாவலின் கதைக்களம். அத்துடன்
காதல், தன்னுணர்வு, அறவுணர்வு ஆகியவற்றைத் தூவி இந்நாவலைச் செய்திருக்கிறார் இந்திரா
பார்த்தசாரதி.
நாவலின் கதைக்கருவிற்கு அவர் செய்ய நினைக்கும்
நியாயங்கள் அனைத்தையும் உரையாடல்கள் மூலமாகவே செய்கிறார். சூழ்நிலைகளின் விவரணைகள்,
பாத்திரங்களின் பின்னணி குறித்த விவரணைகளில் கவனத்தைச் செலுத்தாது நாவலை உரையாடல்கள்
மூலமாகவே கடத்திக் கொண்டு போகிறார். உரையாடல்கள் மூலமாகவே பாத்திரப் பின்னணிகள்,
சூழ்நிலைகளின் பின்னணிகள் ஆகியவற்றை உணர வேண்டியிருக்கிறது.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி தன் தாய்நாட்டுக்குப்
பயன்பட வேண்டும் என்று ஒரு வெளிநாடு வாழ் இந்தியன் நினைத்தால்... என்ற வரிக்கு நாவலாக
விரிகிறது 'மாயமான் வேட்டை'.
ஜெயராமன் விவசாயம் சார்ந்த பொருளாதாரப்
பேராசிரியர். அமெரிக்காவில் பேராசிரியராகப் பணியாற்றும் அவர் தனது அறிவு இந்தியாவுக்குப்
பயன்பட வேண்டும் என்பதற்காக அப்பணியைத் துறந்து விட்டு இந்தியாவுக்கு வருகிறார். வந்தவர்
அமெரிக்காவில் தான் சந்தித்த இந்திய அமைச்சருக்குக் கட்டுரை எழுதிக் கொடுத்து அதன்
வாயிலாக கவனம் பெறுகிறார்.
ஜெயராமன் எழுதிக் கொடுத்த கட்டுரையால்
புகழ் பெறும் அமைச்சர் அவருக்கு உப்புச்சப்பில்லாத ஓர் இயக்குநர் பதவி ஒதுக்குவதைக்
கண்டு மனம் வெறுத்து, எதிர்கட்சி நடத்தும் பத்திரிகையின் ஆசிரியராகி அதன் மூலம் எதிர்கட்சியின்
ராஜ்யசபா எம்.பி.ஆகிறார்.
அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு அளிக்கும்
பேட்டியால் சர்ச்சையில் சிக்கும் ஜெயராமனுக்கு அதன் மூலமாகவே ஆளுங்கட்சியின் அமைச்சர்
பதவி கிடைக்க அதையும் ஏற்றுக் கொள்கிறார். படிப்படியாக பிரதமரின் நம்பிக்கையைப் பிடிக்கும்
ஜெயராமன் அதன் மூலமாகவே காபினட் அமைச்சராகி பத்திரிகைச் சுதந்திரத்தை நெரிக்க வேண்டிய
நிலைக்குத் தள்ளப்படும் போது, இந்தியாவின் நிலையை அமெரிக்கா போன்ற நாடுகளில் விளக்கப்
போவதாகச் சொல்லிக் கொண்டு அமெரிக்கா வந்து தலைமறைவாகி விடுகிறார். இதுவே நாவல் கடந்து
வரும் பாதை. இப்பாதையில் செல்லும் அரசியல் பிரவேசத்தால் அவர் இழக்கும் தன்னிலை, அறவுணர்வு,
காதல் போன்றவைகள் நாவலில் பேசப்படுகின்றன.
அரசியல் பொருளாதாரக் குற்றங்களுக்கானப்
புகலிடமாக மாறுகிறது என்பது இந்நாவல் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. அதில் மனசாட்சியை
அடகு வைத்து அறவுணர்வைத் தூக்கி எறிபவர்களுக்கே அரசியல் சரிபட்டு வருவதான தோற்றத்தை
இந்திரா பார்த்தசாரதி இந்நாவலில் அழுத்தமான வாதமாக முன்வைக்கிறார்.
நாவலில் ஜெயராமனின் அரசியல் செயல்பாடுகள்
கட்சியின் பொருளாதாரத்தை வளர்த்து விடுதல், கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் பெருமுதலாளிகளைப்
பயமுறுத்தி பணம் பிடுங்குதல், கட்சிக்குப் பொருளாதாரம் பாய்ச்சுபவர்களையே தலைவர்களாக
நியமித்தல் என்பதாக அமைகிறது. அதற்கேற்றாற் போல் பிரதமர் அலுவலகத்தின் கைப்பாவையாக
பிரதமரின் உதவியாளரான கோயல் என்பவர் மூலமாக வடிவமைக்கப்படுகிறார். இந்தியாவுக்கான
புதிய பொருளாதாரத்தை வடிவமைக்க வந்த ஜெயராமன் இப்படி தன்னையும் அறியாமல் இந்திய அரசியலுக்கான
கையாளாக வடிவமைக்கப்படுவதாக இந்திரா பார்த்தசாரதி நாவலில் உரையாடல்களை முன்னெடுக்கிறார்.
நாவலின் முடிவுல் இந்திய அரசியலுக்கு எதிராக
எதையும் செய்ய முடியாது என்பது போன்ற அவநம்பிக்கையான தோற்றமே எஞ்சுகிறது. அதை இராமாயணத்தில்
மாயமான் வேட்டையில் ஈடுபட்ட ராமனின் நிலையோடு ஒப்பிட முயற்சித்திருக்கிறார் இந்திரா
பார்த்தசாரதி.
இராமாயணத்தில் மாயமான் வேட்டையில் ஈடுபட்டதால்
சீதையைப் பறிகொடுத்த ராமனைப் போல, அரசியல் வேட்டையில் ஈடுபட்ட ஜெயராமனும் சுரேகாவைத்
தவற விடுவதாகவும், முடிவில் அந்த மாயமான் வேட்டையை உணர்ந்து ராமன் சீதையைப் போராடி
அடைவதைப் போல, ஜெயராமனும் சுரேகாவுடன் அமெரிக்கா தப்பியோடி சுரேகாவை அடைவதாகவும்
நாவலை முடிக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. சீதையை அடைந்த ராமனுக்கு அயோத்தியில் பட்டாபிஷேகம்
நடந்தது என்றால் அதற்கு மாறாக ஜெயராமன் சுரேகாவுக்காக தலைமறைவு ஆகிறார். அதற்கு அமெரிக்கா
புகலிடமாக ஆகிறது. ஒரு புரட்சியாளராக அவ்வண்ணம் தஞ்சமடைந்தால் ஜெயராமனை ஏற்றுக் கொள்ளலாம்
என்ற பழி வந்து விடக் கூடாது என்பதற்காக ஜெயராமனின் தங்கை நளினா அந்தப் புரட்சியாளரின்
பங்கை நாவலில் வகிக்கிறார்.
இந்நாவல் இந்திரா காந்தியின் அவசர நிலை
பிரகடனத்தை மையமாகக் கொண்ட பின்புலத்தைக் காட்சியமைப்புகளாகக் கொண்டிருக்கலாமோ அல்லது
மேலை நாட்டிலிருந்து தாயகம் திரும்பி ஒரு மாற்றத்தை உண்டாக்க நினைத்த எம்.எஸ்.உதயமூர்த்தி
போன்றோர்களைப் பின்புலமாக கொண்டிருக்கலாமோ என்ற தோற்ற மயக்கத்தைத் தருகிறது.
எழுத்தாளர்கள் என்பவர்கள் சோதனைகர்த்தாக்கள்.
அவர்கள் சமூகம், அரசியல், எதார்த்தம், கற்பனை என்று எல்லாவற்றிலும் சோதனைகளை எழுத்தின்
மூலம் நிகழ்த்திப் பார்க்கிறார்கள். அவ்வகையில் இந்திரா பார்த்தசாரதியும் அப்படி ஒரு
கற்பனாரீதியான அரசியல் மாற்றத்தை இந்நாவலின் மூலம் அரசியல் நடப்புகளோடு பொருந்திப்
போகுமாறு நிகழ்த்திப் பார்க்கிறார். அரசியலிலிருந்து, இலக்கியத்திலிருந்து, சினிமாவிலிருந்து
அரசியல்வாதிகள் பலவிதமாக உருவாகிறார்கள். ஒரு மாற்றமாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலமாக
ஒரு அரசியல்வாதி உருவானால் அவர் எப்படி இருப்பார் என்பதற்கான இந்திரா பார்த்தசாரதியின்
எழுத்து வடிவமாகவும் இந்நாவலைப் பார்க்கலாம்.
நாவலில் இந்திரா பார்த்தசாரதி ஓரிடத்தில்
குறிப்பிடுவது போல, 'அரசியல்வாதின்னா அசிங்கமான வார்த்தை ஆயிடுத்து' என்பதை மெய்ப்பிப்பது
போலவே அரசியலில் ஆவலோடு வந்த ஜெயராமனை முடிவில் அரசியல் விலக்கம் செய்து பற்றற்ற
மனிதனின் பார்வையில் அரசியலைப் பார்க்கக் கற்றுத் தருகிறார். அரசியல் என்பது மாயமான்
என்பதாகவும், அம்மாயமானைப் பொறுப்புள்ள ஒரு வேலையில் இருந்து கொண்டு, அதைத் துறந்து
தேடி உன்னை இழந்து விடாதே என்பதை ஒரு செய்தியாகச் சொல்லும் வகையில் இந்நாவலை இந்திரா
பார்த்தசாரதி கட்டமைக்கிறார்.
அறிவுஜீவிகளின் அரசியல் ரீதியான தோல்விகளைத்
தோலுரித்துக் காட்டும் வகையில் இந்நாவல் அமைந்திருந்தாலும், கோட்பாட்டு ரீதியில்
வலுவான சித்தாந்தங்களை முன்வைக்கும் வாய்ப்புகள் ஜெயராமனுக்கு இருக்கவே செய்கின்றன.
அந்த வாய்ப்புகள் இருந்தும் ஜெயராமன் மென்மேலும் அரசியலில் முன்னேறிச் செல்ல வேண்டும்
என்ற ஆசையில் அதைத் தவற விடுவதாக நாவல் சித்தரிக்கிறது. ஜெயராமனைப் பொருத்த வரையில்
அரசியலில் தன் அறிவுஜீவித்தனத்தைக் காட்ட வேண்டும் என்ற விதத்தில் செயல்பட்டுத் தோல்வியைத்
தழுவுகிறார். ஜெயராமனின் படிப்பறிவிலான அரசியல் சித்தாந்தம், பட்டறிவில்லாமல் ஒரு வித
ஜிகினா தன்மையை ஏற்படுத்த முயன்று கலைகிறது. அரசியலின் வெற்றி என்பது சரியான வழியை
சரியான நேரத்தில் காத்திருந்து காட்டுவதாகும் என்பதை ஜெயராமன் ஒவ்வொரு வாய்ப்பிலும்
தவற விட்டதன் பின்விளைவை அனுபவிக்கிறார்.
எப்படிப் பார்த்தாலும் எதிர்நிலையில் நின்று
அரசியலுக்கான ஓர் எதிர்மறைப் பார்வையைப் பார்த்த வகையில் படித்த இளைஞர்களின் அரசியலை
நோக்கிய முன்னெடுப்பை இந்நாவல் தடுக்கவே செய்யும். அவ்வகையில் ஒருவித பிற்போக்குத்
தனத்தை நோக்கி இளைஞர்களை இந்நாவல் தள்ளினாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை.
ஜெயராமன் போன்ற அரசியலில் தோல்வியடைந்த
பொருளியல் அறிஞர் இருந்த அதே இடத்தில்தான் ஜெ. குமரப்பா போன்றோர்கள் இருந்தாலும்
அவர்கள் வாழ்நாள் முழுவதும் தமது சரியான கோட்பாட்டை விட்டு விடாமல் போராடிய வண்ணம்,
தங்களது சித்தாந்தங்களை பரப்பிய வண்ணம் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார்கள்
என்பதை நினைக்கும் போது ஜெயராமன் போன்றோர்கள் தோல்வியடைய வேண்டிய வெற்று சிந்தனைவாதிகள்தான்
என்பதையும் மறுப்பதற்கில்லை.
அதே வேளையில், ஜெயராமன் மூலமாக நாவலில்
வெளிப்படும் சில விசயங்களும் இன்றைய அரசியலில் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும்
மறுப்பதற்கில்லை.
காந்தியம், பொதுநலம் என்று பேசிப் பேசி
அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை மிரட்டுவதும், தொழிலதிபர்களின் பயம் என்ற ஆணிவேரை அசைத்து
அசைத்து காரியம் சாதிப்பதையும் நாவல் நுட்பமாகப் பதிவு செய்கிறது. ஆக இந்த தேசத்துக்கான
பொருளாதார கொள்கை என்பது கட்சி வருவாயை அதிகரிப்பது, தொழிலதிபர்களை மிரட்டிப் பணம்
பிடுங்குவது, கட்சியில் யாரை நியமித்தால் லாபம் என்று பார்ப்பது, மக்களுக்கு வெற்று
கோஷங்களைப் பரிசளிப்பது என்பதாக ஆகிறது. மக்களுக்கானப் பொருளாதா கொள்கை என்பது மக்களை
விட்டு எப்போதும் விலகியே நிற்கிறது. ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் ஊழல் பணமதிப்பும்,
மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக் கணக்குமே அதற்குப் போதுமான சாட்சியமாகும். அந்த வகையில்
அரசியல்வாதிகளின் பொருளாதார வேட்டையில் நல்லோருக்கான அரசியல் மாயையில் சிக்கிச் சீரழியும்
மாயமான் வேட்டையாகிறது. அந்த வேட்டையையும் வெற்றி கொள்ளும் ஒருவரைத்தான் இந்திய அரசியல்
மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள அரசியல் எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கு
ஓர் ஏமாற்றத்தையேப் பரிசளிக்கிறது மாயமான் வேட்டை!
*****
No comments:
Post a Comment