8 Jul 2019

புத்தகக் கடைகளை அழித்த பரிசுக் கடைகள்!



            "நான் என் பிள்ளைக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பதில்லை!"
            "வேற என்னத்த சார் கொடுத்து வளர்க்கிறீங்க?"
            "புத்தகத்தைக் கொடுத்து வளர்க்கிறேன்!"
            "சபாஷ்!"
            செல்லம் கொடுப்பதை விட்டு விட்டு, புத்தகத்தைக் கொடுத்து வளர்ப்பது நல்ல விசயம்தான் இல்லையா!
            புத்தகம் என்று சொன்னதும் சில விசயங்கள் ஞாபகத்துக்கு வந்து போகின்றன. அப்போது திருவாரூரில் வரிசையாக மூன்று புத்தகக் கடைகளும், ஒரு பத்துக் கடை தள்ளி மற்றொரு புத்தகக் கடையுமாக நான்கு இருந்தன.
            இப்போதும் அந்தக் கடைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் புத்தகக் கடையாக இருக்கின்றது. மற்ற மூன்றில் ஒன்று மூடியாகி, இரண்டு நோட்டுகளும், நோட்ஸ்களும் விற்கும் புத்தகக் கடைகளாகி விட்டன.
            அப்போது திருவாரூரில் இருந்த இரண்டு பெரிய ஜவுளிக் கடைகளின் கணக்கு இப்போதைக்கு ஆறு கடைகளுக்கு வந்து விட்டது. பேர் பெற்ற பெரிய மளிகைக் கடைகள் ஐந்திலிருந்து எப்படிக் கணக்குப் போட்டாலும் இருபதுக்கு மேல் அதிகரித்திருக்கிறது. புத்தகக் கடைகளின் கணக்கு குறைந்து போயிருக்கிறது.
            நம் வாங்கும் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுபாடுகள் புத்தகக் கடைகளை அழித்து விட்டன என்று சொல்வது சமூகத்துக்கு ஏதோ எதிர் கருத்தைச் சொல்வது போல ஒவ்வாமையாக இருக்கிறது. கல்யாணம், காது குத்தல், புதுமனை புகு விழா என்று விழாக்களில் எல்லாம் புத்தகப் பரிசுகள் இருந்த வரை புத்தகக் கடைகளும் புத்தகக் கடைகளாக இருந்தன. எப்போது புத்தகப் பரிசுகள், பரிசுப் பொருட்களாக மாற்றம் பெற்றனவோ அன்றே அவைகளும் 'கிப்ட் ஷாப்கள்' எனும் பரிசுப் பொருள் கடைகளாக மாற்றம் பெறத் துவங்கி விட்டன.
            இப்போதைய கணக்குக்கு ஒவ்வொரு சாலைக்கும் நான்கைந்து பரிசுப் பொருட்கள் கடைகளாவது திருவாரூரில் இருக்கின்றன. புத்தகக் கடைகளைக் கொஞ்சம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தாலும் ஆறாங் கிளாஸ் நோட்ஸ், எட்டாங் கிளாஸ் நோட்ஸ், லாங் சைஸ் நோட்டுகள், கிங் சைஸ் நோட்டுகள் என்று இவைகள்தான் கிடைக்கின்றன.        
            "என்னங்கய்யா! இப்படிப் பண்ணிப் போட்டீங்களே?" என்றால்,
            "இப்போல்லாம் யாருங்கய்யா புத்தகம் படிக்குறாங்க?" என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
            உண்மைதான் இல்லையா!
            தேரோடும் வீதியெங்கும் கிப்ட் ஷாப் வீதிகளாகி விட்டன.
            திருவாரூர் பஸ் ஸ்டாண்டை விட்டு விட்டால் நாளிதழ்கள் எனப்படும் நியூஸ் பேப்பர் வாங்குவதற்கு கடை கடையாக அலைய வேண்டியிருக்கிறது.
            என்ன இப்படி அலைய வேண்டியிருக்கிறதே என நினைத்தால், "எந்தக் காலத்துல சார் இருக்கீங்க? பாக்கெட்லதாம் செல்லு வெச்சிருக்கீங்களே! நெட்ட ஆன் பண்ணிட்டு என்ன பேப்பரு வேணாலும் படிச்சுக்குங்க!" என்கிறார்கள்.
            காலம் இப்படியே போய் விடுமா என்ன? இதே திருவாரூரில் கடைகள் அனைத்தும் புத்தகக் கடைகளாக ஒரு காலத்தில் ஆவதாக என சபித்து முடித்தேன். சாபம் லேசாக பலிக்க ஆரம்பித்தது போல, அபூர்வமாக ஒரு சூப்பர் மார்கெட்டுக்குப் போன போது அங்கு ஒரு ராக் வைத்து புத்தகங்கள் வைத்திருந்தார்கள். உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது. சாபம் பலித்த சந்தோஷம். இதுதான் ஆச்சரியம்! இதுதான் அதிசயம்! திருவாரூரில் இப்படியெல்லாம் ஆச்சரியப்படவோ, அதிசயப்படவோ கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ, அண்மையில் அதே சூப்பர் மார்கெட்டுக்குப் போன போது அதே ராக்கில் கலர் கலர் கிப்ட் பொருட்களும், வித விதமான சாக்லெட்டுகளும் வைத்திருந்தார்கள்.
            மறுபடியும், "என்னய்யா இப்படிப் பண்ணிப் போட்டீங்களே!" என்றால்,
            "புக்ஸ்லாம் சேல்ஸ் ஆக மாட்டேங்குதுய்யா!" என்ற பதில் வருகிறது.
            நோட்டுக்கு ஓட்டுகள் சேல்ஸ் ஆகும் நாட்டில் புத்தகங்கள் சேல்ஸ் ஆவது கஷ்டந்தான்!
            புத்தகக் கடைகளை அழித்த ஒவ்வொருவருக்கும் பரிசுக் கடைகளிலிருந்து பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதான்!
            ஓம்! சாந்தி ஓம்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...