7 Jul 2019

ஊருக்குள் வந்த வேற்றுக்கிரகவாசி!



செய்யு - 138
            வைத்தி தாத்தாவின் சாவு பெருஞ்சாவுதான். ஆறு பெண்மக்கள், இரண்டு ஆண் மக்கள், அவர்களின் உறவுகள், சாமியாத்தா வழி உறவுகள், வைத்தி தாத்தா வழி உறவுகள், ஊர் சனங்கள் மற்றும் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று பெருங்கூட்டமாய் வீடும், தெருவும் நிரம்பி வழிந்தது. ஊரில் பெரும் புள்ளிகளைத் தவிர ஒன்று அல்லது ஒன்றிரண்டு பிள்ளைகளைப் பெத்து வைத்திருக்கும் ஒரு தகப்பனுக்கு இனி அப்படிப்பட்ட கூட்டம் கூடாமல் கூட போகலாம். இனி கண் விழிக்கவோ, பேசவோ, அசையவோ, நடமாடவோ மாட்டார் என்பதால் கூட்டம் வந்து பார்த்துக் கொண்டே இருந்தது. அவர் கடைசியாகப் பேசியது, பார்த்தது, அசைந்தது எல்லாம் முடிவுக்கு வந்திருந்தது.
            வைத்தி தாத்தா இந்த உலகின் கடைசிப் பார்வைக்கு உட்பட்டுக் கொண்டிருந்தார். இனி அவரைப் பார்ப்பதென்றால் கடைசிப் புகலிடம் புகைப்படம்தான். மண்ணுக்குள் புதையுண்டு போக வைத்தி தாத்தாவின் உடல் தயாராகிக் கொண்டிருந்தது.
            மாலை கட்டிக் கொண்டு வந்து போட்டவர்களின் மாலைகள் ஒரு சிறிய வைக்கோற் போல் அளவிற்குக் குவிந்திருந்தது. மாலைகளைப் பிணம் போகும் பாதையெல்லாம் சிதறி அடிப்பதற்கென சிறு சிறு துண்டுகளாக அரிவாளால் வெட்டிக் கொண்டிருந்தனர். மாலையில் கட்டிய பூக்கள் வெட்டுப்பட்டு விழுந்து கொண்டிருந்தன. விகடுவுக்கு கோனார் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து பார்க்க இவையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தது.
            சுப்பு வாத்தியாரும் சரி, வெங்குவும் சரி இத்தனை மாதங்களாய் அவன் எங்கு போயிருந்தான், எப்படி இருந்தான் என்பதை வெகு சாமர்த்தியமாக யாருக்கும் தெரியாமல் மறைத்திருந்தார்கள். ஆனாலும் லேசான கசிவு இருக்கத்தான் செய்தது. கிராமத்தில் இதெல்லாம் மறைக்கக் கூடிய விசயமா என்ன? மறைக்கக் கூடிய அளவுக்கு தப்போ, தவறோ இதில் என்ன இருக்கிறது? கிராமப் பேச்சு வழக்கில் கண், காது, மூக்கு, வாய் வைத்துப் பேசாமல் இருக்க யாராலும் முடியாது. அது ஒரு பேச்சு வழக்கு முறையாகவே மாறி விட்டது. அந்தக் கண், காது, மூக்கு, வாய்க்கு கிராமத்தில் இருக்கும் எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும். அது விசித்திரமான கண். பார்க்காததைப் பார்த்தது போல சொல்லும். அந்தக் காது விசித்திரமான காது. கேட்காததைக் கேட்டது போல சோடித்துக் கொள்ளும். மூக்கும் அப்படியே விசித்திரமானது. நுகராத ஒன்றை நுகர்ந்து பார்த்ததாக சத்தியம் செய்யும். வாயைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஒருத்தர் இருக்கும் போது ஒன்றுக்கு இரண்டாய் பேசிக் கொண்டிருக்கும் அது, இல்லாத ஒருவரைப் பற்றி இஷ்டத்துக்குப் பேசிக் கொண்டு இருக்கும்.
            வைத்தி தாத்தாவின் மரணச் செய்தி சுப்பு வாத்தியாருக்குச் சொல்லப்பட்ட போது அவருக்கு அந்தத் துக்கத்தை விட, இந்தச் செய்தியை சென்னையில் இருக்கும் விகடுவுக்குச் சொல்வதா? வேண்டாமா? என்ற குழப்பம்தான் பெரும் குழப்படித் துக்கமாக இருந்தது. அவசியம் சொல்லியே ஆக வேண்டும் என்று வெங்கு அடம் பிடிக்க, சுப்பு வாத்தியார் வேற்குடி விநாயகம் வாத்தியார் வீட்டில் போய் உட்கார்ந்தது. இவன் ஊருக்குள் வந்தால் இத்தனை நாள் எங்கே போய், இப்போது எங்கிருந்து வந்தான் என்ற கேள்விகள் எழுந்தால் என்ன பதில் சொல்வது என்ற கேள்விகள் சுப்பு வாத்தியாரின் மனசில் குழப்படிப் பண்ணிக் கொண்டிருந்தது. அதற்கெல்லாம் சேர்த்து விகடு ரிசர்ச் ப்ராஜெக்ட் ஒன்றுக்காக போயிருக்கிறான் என்பது சப்பைக் கட்டு கட்டப்பட்டிருந்தாலும் உண்மையை மோப்பம் பிடித்த ஒரு சிலர் ஊருக்குள் இருக்கத்தான் செய்தார்கள்.
            விநாயகம் வாத்தியார்தான் அந்த யோசனையைச் சொன்னார், "பயல பிடிச்சுக் கொண்டாரதுக்கு இத விட்டா வேற வழியில்ல. ரவிக்கு போனு அடிச்சுச் சொல்றேம். நல்ல நேரத்துலதான் ஒங்க மாமனார் புட்டுகிட்டுருக்காரு. அவரு புட்டுகிட்டுதான் இவ்வேம் நட்டுகிட்டு ஊருக்குள்ள வாரணும்னு இருந்திருக்கு. வந்தா எப்புடியும் புடிச்சி ஊருக்குள்ள போட்டுருவேம்!"
            "சொல்லாம கொள்ளாம போன பய, வந்தா வூடு தங்குவாங்றதுக்கு என்ன நிச்சயம் இருக்கு? போனவன் போனதா இருந்தா ஏதோ எங்கேயோ படிக்கிறாம்னு சொல்லிவுட்டுட்டு இருந்துட்டுப் போயிடலாம்! வந்து மறுபடியும் கிளம்புறதுக்கு அவ்வேம் அஞ்ஞயே இருந்துடலாம். இவனெ படிக்க வைக்கிறதுக்காக வூட்ட காலி பண்ணி, வூட்டு வுட்டாச்சி. வூட்ட மறுபடியும் கெளப்புறப்ப அந்த வூட்டயும் கெளம்ப வுடாம இப்படி பண்ணிட்டாம். அப்படியும் இப்படியுமா சேதி தெரிஞ்சவமெல்லாம் வூடு கட்ட ஆரம்பிச்ச நேரங்றான் காதுபடவே. நாம்ம கட்டுற வூட்டப் பாக்குறதா? ஓடிப் போன இவ்வேம் பத்தி நெனச்சிட்டுக் கெடக்குறதா? வூடே நல்லாயில்ல. அவ்வே வூட்டுக்காரி படுத்த படுக்கையா ஆன மாரி கெடக்குறா. கெராமத்துல வூடு கட்டுனா அதப் பத்திதாம்னே பேசிட்டு இருப்பாங்க. அப்போ அவ்வேம் எப்படி இருந்திருக்கணும்? இப்போ கட்டிட்டு இருக்குற வூட்டோட அவனெ பத்தியும் அரசல் புரசலா பேசிட்டு இருக்காங்க. ஏதோ புரிஞ்ச மாரி அப்புடியும் இப்படியுமா பேசிட்டு இருக்காங்க. ஏதோ வில்லங்கம் இருக்குறதாவும், நாம்ம அத முழு பூசணிக்காய சோத்துல மறைக்குற மாரியும் பேசிட்டு இருக்கறதா கேள்வி. மனசுக்கு ரொம்ப அலுப்பா இருக்கு வாத்தியாரே! அவ்வேம் ஒண்ணும் கொல குத்தத்தப் பண்ணிட்டு ஓடிப் போயிடல. இருந்தாலும் நாலு பேரு நாலு விதமா பேசுறத சொல்றத கேட்டா சொல்றதுக்கு ஒரு மாதிரியா இருக்குப் பாருங்க! எல்லாம் சோத்துத் தண்ணிக்குக் கஷ்டப்பட்டிருந்தா, வறுமென்னா என்னான்னு தெரிஞ்சிருந்தா இப்படிப் பண்ணாதுங்க!" என்றது சுப்பு வாத்தியாரின் வாய்.
            "அப்புடிச் சொல்லாதீங்க வாத்தியாரே! அவ்வேம் ஒடம்புல ஒட்டுக் கறியில்லங்றாம் ரவி. ஒடம்ப வுட்டுட்டாட மறுபடியும் தேத்த முடியாது. வளர்ற வயசு. இந்த வயசுல இப்படிக் கிடந்தாம்னா பின்னால நாப்பது, அம்பது வயசுக்கலாம் ஆளு நடமாடணுமா இல்லியா! ஒங்க மாமனாரயே எடுத்துகிங்க. துரும்பாப் போயி எத்தனை வருஷம் கெடந்திருக்காரு. எல்லாம் சின்ன வயசுல தின்னுட்டு கெடந்ததுதாம். திங்குற வயசுல திங்காமப் போயிட்டா பின்ன எந்த வயசுலயும் எதயும் திங்க முடியாமப் போயிடும். யோஜனயெல்லாம் வாணாம். அது செரி! ஒங்க மாமங்காரு ஏம் இப்பச் சாகணும்? யோஜிச்சுப் பாருங்க. இன்னும் ரண்டு வருஷம் கெடந்து செத்திருக்கலாம்ல. இல்லே ரண்டு வருஷம் முன்னாடியே செத்திருக்கலாம்ல. இவரு செத்து அவ்வேம் ஊருக்கு வரணும்னு விதி இருக்கு. வந்துதாம் ஆகணும். புடிச்சிப் போடுவோம். அதக்கப்புறம் நடக்குறது நடக்கட்டும். பாத்துப்பேம்!" என்றது விநாயகம் வாத்தியார்.
            "அதுஞ் செரிதாம்! தாத்தன வந்து பேரம் பாக்கலேங்றத கொறயில்லாம போகட்டும். அவ்வேம் இதுக்கு வாராம போனாலும் அதுக்கும் சேத்து வெச்சிதாம் பேசுவாய்ங்க. வந்து தொலயட்டும். வந்து இருந்தா இருக்கட்டும். கெளம்புனா கெளம்புட்டும். எதுக்குதாம் நாம்ம என்ன செய்ய முடியும் சொல்லுங்க வாத்தியாரே! நடக்குறதுக்கு யாரு ன்னா பண்ணா முடியுது! வூடு, மாடு, வெசனத்துல படுத்தே கெடக்குற வூட்டுக்காரி, பள்ளியோடத்துக்குப் போயிட்டுருக்குற பொண்ணு சமயத்துல சமாளிக்கிறதே கஷ்டங்ற மாரியிருக்கு. இவ்வேம் ஒண்ணும் செய்யாட்டியும், கண்ணுல பட்டுட்டு இருந்தாத்தான மனசுக்குத் தெம்பா இருக்கும். குடும்பத்துக்கு மூத்தப் புள்ள மாரியா நடந்துக்குறாம்? ஒங்க அப்பா ஒங்களயெல்லாம் சம்பாதிச்சுக் கொண்டாந்து போட்டா போடுங்க, இல்லே வூட்ட வுட்டு ஓடுனா ஓடுங்கன்னு வெரட்டுனப்ப நீங்க ஓடுனீங்களா சொல்லுங்க! அப்பங்காரு ஒரு ரோஷத்துல பேசுறாரு. யாரு ஓடுனாலும் மூத்தப் புள்ள ஓடக் கூடாதுனு கரிசனமா இருந்தீங்களாயில்ல. புள்ளீங்கன்னா அது மாரில்லா இருக்கணும்." என்றார் சுப்பு வாத்தியார்.
            "பேசிட்டு இருக்குறதுல அர்த்தமில்லே. அஞ்ஞ மாமங்காரு செத்துக் கெடக்குறாரு. நீங்க அஞ்ஞ இருக்கணும். இஞ்ஞ இப்படி பேசிட்டே உக்காந்துருக்கப் படாது. அப்பொறம் அதுக்கு வேற ஒரு கொற வழக்கு வெய்ப்பானுங்க ஒங்க சாதிக்காரப் பயலுங்க. கெளம்புங்க நீங்க. நாம்ம ரவிட்ட சொல்லி அவனெ ஊருக்கு அனுப்பி வைக்குற வேலயப் பாக்கச் சொல்றேம். நாளைக்கிக் காலையில அவ்வேம் இஞ்ஞ இருப்பாம்." என்றார் விநாயகம் வாத்தியார்.
            விநாயகம் வாத்தியாரிடமிருந்து செய்தி ரவிநாயகத்துக்குக் கிடைத்ததும் அவர் சூளைமேட்டுக்கு டாட்டா சுமோவில் ஆள் அனுப்பி விகடுவை வடபழனிக்குக் கொண்டு வந்தார். விசயத்தைச் சொல்லி, அத்தோடு சூளைமேட்டில் எடுத்துக் கொள்ள வேண்டியதை எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பச் சொல்லி, அவன் பையில் ஆயிரம் ரூபாயைத் திணித்து அதே ஆளிடம் டாட்டா சுமோவில் கொண்டு போய் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஊருக்குப் பஸ் ஏத்தி விடுமாறு சொன்னார்.
            சூளைமேட்டில் எடுக்க என்ன இருக்கிறது? இருந்த ஒரு கிங் சைஸ் நோட்டும் ராஜேஷ் சிந்தியாவிடம் இருக்கிறது. ஊரிலிருந்த போட்டுக் கொண்டு வந்திருந்த பேண்ட், சட்டையைத்தான் துரதிர்ஷ்டவசமாக அன்று போட்டுக் கொண்டிருந்தான் விகடு. வாங்கிய ரெண்டு ஜட்டி, பனியன்களில் ஒரு செட் தற்போது போட்டுக் கொண்டிப்பதால் விகடு போட்டுக் கொண்டு வந்த பனியன் ஜட்டியோடு, ஒரு செட் வாங்கிய பனியன், ஜட்டி சூளைமேட்டில் கொடியில் காய்ந்து கொண்டு கிடக்கலாம். அத்தோடு அவன் அவ்வபோது எழுதிய காயிதங்கள் நிறைய இருக்கலாம். எல்லாம் மெட்டுக்கு எழுதிப் பார்க்கிறேன் என்று எழுதித் தள்ளியவை. அதையெல்லாம் போனால் போகட்டும் போடா என்று தாத்தனைப் பார்க்க ஊருக்கு வந்தவன்தான் விகடு.
            எலும்பும் தோலுமாய் விகடு வடவாதி பஸ் ஸ்டாண்டில் இறங்கி கடைத்தெரு வழியாக நடந்தான். அடையாளம் தெரியாத ஊர் பேர் தெரியாத வேற்றூர்க்காரன் போல இருந்தது அவனது தோற்றமும் நடையும். அப்படியும் சொல்லி விட முடியாத அளவுக்கு மண்டைப் பெருத்து, ஒடம்பு சிறுத்து வெற்றுக்கிரகவாசியின் தோற்றத்தையும் அவன் உருவம் தந்தது. இவன்தான் விகடு என்று ஒரு சிலர் ஊகித்தார்கள். அவர்கள் ஊகித்து முடிப்பதற்குள் அவன் நடையில் வேகத்தைக் கட்டி பொன்னியம்மன் கோயிலைக் கடந்து, இடப்பக்கமாகத் திரும்பி பாஞ்சாலம்மன் கோயில் பக்கத்தில் இருக்கும் வைத்தி தாத்தா வீட்டின் முன் கூட்டத்தை விலக்கி விட்டுக் கொண்டு வந்து நின்றான்.
            விகடுவைப் பார்த்ததும் செத்துக் கிடந்த தன் அப்பனைப் பார்த்து அழுததை விட அதிகமாக அழுதது அம்மா வெங்கு. சுற்றியிருப்பவர்கள் அவனைப் பார்த்து பேசி விடுவதற்கு முன்னால் அவனை இழுத்துக் கொண்டு, எதிர்த் தெருவில் இருக்கும் கோனார் வீட்டுக்குள் வந்தது வெங்கு. அதைப் பார்த்துக் கொண்டே சுப்பு வாத்தியாரும் கோனார் வீட்டுக்குள் வந்து நின்றார். கோனாரின் வீட்டுக்குள் யாருமில்லை. எல்லாரும் துக்க வீட்டில் இருந்தனர். கதவை லேசாக சாத்தியவாறு உள்ளே வந்து,  "செத்துக் கெடக்குற எங்கப்பனே பரவால்லடா போலருக்கு. நீ ன்னாடா உசுரோட இப்படிச் செத்துக் கிடக்குறவேம் மாரி வந்து நிக்குறே? ஏம்டா இப்படி எங்கெங்கேயோ போயிக் கஷ்டப்பட்டுட்டு! வூட்டோட கெட. நீயி படிக்கவும் வாணாம். ஒண்ணும் வாணாம். ஒங்கப்பாருக்கு ன்னா கொறச்சல்? வாத்தியாரு வேல பாக்கிறாரு. எனக்கென்ன கொறச்சல்? புல்லறுத்து மாடு கறந்து கொடுத்தாவது சம்பாதிச்சிப் போடறேம். எங்கேயும் போயித் தொலயாதடா ராசா! நீயி வேலக்கிப் போயிக் கூட சம்பாதிக்க வாணாம். எங்க கண்ணு படவே இஞ்ஞயே இருடா பயலே!" என்றது வெங்கு.
            இதைக் கேட்க கேட்க சுப்பு வாத்தியாருக்கு ஆத்திரமாக வந்தது. "அவ்வேம் கெட்டுப் போயிட்டான்னு நெனச்சிட்டிருந்தேம். அவ்வேம் கெட்டுப் போகல. அவ்வனெ கெட்டு அடிக்கிறதுக்குன்னே இந்த வூட்டுல ஒரு சென்மம் இருக்கு. அவ்வனெ கெட்டு அடிக்காம வுடாதுங்க! பேச்சப் பாரு! படிக்க வாணாம். வேலக்கிப் போக வாணாம்னுகிட்டு. எவ்வளவு காலத்துக்கு நாம்மளே சம்பாதிச்சிப் போட முடியும்? அவ்வேம் தலயெடுத்துதாம் குடும்பத்தத் தாங்கணும்! இப்படிப் பேசிப் பேசியே அவனெ ஒழிச்சுக் கட்டிப்புடுங்க!" என்று சத்தமிட்டார் சுப்பு வாத்தியார்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...