26 Jul 2019

மனிதத்துக்கான கல்வி!



            தனியார் என்பது டவுனுக்குதான் ஆஸ்பிட்டல்களைத் தர முடிகிறது. அரசாங்கம்தான் கிராமங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கட்டித் தர முடிகிறது. அதனாலேயே அரசாங்க ஆஸ்பத்திரிகள் வேண்டியதாக இருக்கிறது.
            பள்ளிக்கூடங்களைப் பொருத்த வரையிலும் தனியார் என்பது பணக்காரர்களுக்கோ, காசு இருப்பவர்களுக்கோதான் கல்வியைக் கொடுக்க முடிகிறது. அரசாங்கம்தான் முடியாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், ஏழை பாழைகளுக்கும் கல்வியைக் கொடுக்க முடிகிறது. அதனாலேயே அரசாங்கப் பள்ளிகள் இழுத்து மூடப் படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டியிருக்கிறது. கல்வித்தரம் என்பதைக் காரணம் காட்டி ஏன் அரசாங்கப் பள்ளிகளை மட்டம் தட்டக் கூடாது என்றால் அரசாங்கப் பள்ளிகள்தான் மனிதர்களாக தரம் மறுக்கப்பட்டவர்களை அரவணைத்து கல்வி தந்து தரம் உள்ளவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. காசு கொடுத்து பயிற்சி பெற்று நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று விட்டால் அது கல்வித்தரமாகி விடுமா? அப்படி அதுதான் தரம் என்றால் அங்கே காசுதானே தரம் ஆகிறது. அது எப்படிக் கல்வித் தரமாகும்? கல்வித்தரம் என்பது தரமான மனிதவளம்தானே தவிர, வெறுமனே புத்தகச் சரக்காலான ஏட்டுச் சுரைக்காயாலான வெற்றுத்தனமான அறிவு வளமா என்ன?
            தரமான மனித வளம் என்பது மனிதரை மனிதர் தரம் பிரித்துப் பார்ப்பதன்று. கல்வியின் மூலம் சமமான தர வளர்ச்சிக்கு அவர்களைக் கொண்டு வருவதுதான். அப்படி சமமான தர வளர்ச்சியைக் கொண்டு வரக் கூடிய கல்வியையே தரம் பார்த்து நுழைவுத் தேர்வுகளின் மூலம் கொடுத்தால் சமமான சமூக வளர்ச்சி எப்படி ஏற்படும்?
            மனிதர்கள் யாவரும் எதோ ஒரு திறமையைப் பெற்றவர்கள்தான். அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதைக் கல்வியின் மூலம் வளர்த்து விட வேண்டும். மாறாக அதை நுழைவுத் தேர்வுகளின் மூலம் மனிதர்களை எந்தத் திறமையும் அற்றவர்கள் என்ற வகையில் நம்பிக்கையை முளையிலேயே கிள்ளி விடும் வேலையைச் செய்து விடக் கூடாது.
            ஆக கல்விக் கூடங்கள் என்பன நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக் கூடங்களாக மாறி விடக் கூடாது. மனிதர்களின் பல்திறனறி மையமாக அமைந்து அவரவர்களின் திறன்களுக்கு ஏற்ப வழிகாட்டும் வகையில் அமைய வேண்டும்! இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்காகவும்தான் கல்விதானே தவிர, இந்தக் கல்விக்காக இந்தப் பூமியில் மனிதர்கள் யாரும் பிறக்கவில்லை.
            மனிதர்களுக்காகவே கல்வி! கல்விக்காக மனிதர்களில்லை!
            அப்படி கல்விக்காக மனிதர்கள் என்றால் அதற்கேற்ப ரோபோட்டுகளை உருவாக்க அறிவியலும் தொழில்நுட்பமும் தயாராக இருக்கின்றன.
            நாம் உருவாக்க வேண்டியது மனிதர்களுக்கான கல்வியையும் மனிதத்துக்குமான கல்வியையும்தான்!
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...