செய்யு - 157
வடவாதி முருகு மாமாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகளோடு
சேர்த்து இரண்டு பெண் பிள்ளைகள் ஆக ஐந்து பிள்ளைகள். முருகு மாமா வடவாதி சர்க்கரை ஆலையில்
வேலை பார்த்துக் கொண்டிருந்தது. ஆலை இடம் மாறிய பின் கொல்லுமாங்குடி, விருத்தாச்சலம்
என்று எங்கெங்கெல்லாம் இடம் மாறியதோ அங்கெல்லாம் வேலை பார்த்தது. மூத்த மகள் சந்திராவை
நாரங்குடியில் கட்டிக் கொடுத்தப் பின் அடுத்திருந்த ரகுவை கொல்லுமாங்குடியில் வேலை
பார்த்த போது அங்கு அப்படியே வேலையில் சேர்த்து விட்டது.
ரகுவை வேலைக்குச் சேர்த்து விட்ட கதையை
சொந்த பந்த வகையறாக்களில் அப்பவே பெரிதாகப் பேசிக் கொள்வார்கள். இப்போதும் அதன்
காதுகளுக்குக் கேட்காமல் அதன் பாணியிலேயே குசுகுசுவென்றும் பேசிக் கொள்கிறார்கள்.
முருகு மாமாவுக்குப் புத்தி ஒரு நிலையில்
இருக்காது. நேரில் பார்க்கும் போது ஒரு பேச்சுப் பேசும். அந்தாண்ட பக்கம் போனால்
வேறு பேச்சுப் பேசும். அதாவது நேரில் பார்த்து விட்டால் உருக உருகப் பேசும். ஆள் பக்கத்தில்
இல்லை "இவம்லாம் ஒரு மனுஷன்னு எதுக்கு வேட்டியையும் சட்டயையும் கட்டிட்டுத் திரியுறானோ?
நாக்குப் பிடுங்கிட்டுச் சாக வேண்டியதுதானே!" என்று எதற்காக அப்படிச் பேசுகிறோம்
என்று யோசிக்காமலே குறை வழக்கு வைக்கும். இத்தனைக்கு முருகு மாமா இப்படி யாரையெல்லாம்
பேசுகிறதோ அந்த மனிதர்கள் எல்லாருமே அதனிடம்
அவ்வளவு பவ்வியமாக நடந்து கொண்டிருப்பார்கள். அவ்வளவு உதவிகள் செய்திருப்பார்கள்.
யார் என்ன செய்தாலும், எவ்வளவு மரியாதையாக நடந்து கொண்டாலும் முருகு மாமாவிடம் அப்படிப்
பேச்சு வாங்குவதை எந்தக் கொம்பனும் தடுத்தாண்டு கொண்டுத் தவிர்ப்பது என்பது முடியாது.
ஒருமுறை ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்
போது இப்படித்தான் சூப்பர்வைசர் பக்கத்தில் நிற்பது புரியாமல், "கொழாயும் சட்டையும்
போட்டுகிட்டு நின்னுட்டா ஆயிடுமா? ன்னம்மோ சோளக்காட்டு பொம்மைக்கு கொழாயும் சட்டையும்
சொருவி வுட்ட மாரி. நாம்ம இஞ்ஞ ன்னா கஷ்டப்படுறோம்! ன்னம்மா வெயர்வ சிந்திப் பாடுபடறோம்!
அந்தப் பயெ லூசு கணக்கா அலுங்கா நலுங்காம சட்டெ மடிப்புக் கலயாம என்னம்மா நின்னுகிட்டு
சம்பாதிச்சிட்டுப் போயிடுறாம்! அந்தக் காசு அவனுக்கு ஒட்டுமா? அவ்வேம் குடும்பம்தான்
வெளங்குமா? ஜட்டிக்குள்ள சீனியை அள்ளி மறைச்சி வெச்சிட்டுப் போற திருட்டுப்பயதானே
அவ்வேம்! அப்படிக் கொண்டுப் போற சீனியை அவ்வேம் பொண்டாட்டி அதாங் அந்த வெக்கம் கெட்ட
நாற முண்ட எப்படித்தாம் மூஞ்சைச் சுழிச்சுக்காம காபி தண்ணி வெச்சி கொடுக்குறாளோ எமகாதகி!
இந்தக் கட்டையில போற பயலும் எப்படித்தாம் மூஞ்சைச் சுளிச்சுக்காம நக்கி நக்கிக் குடிக்காறானோ
நாறப்பயெ குடும்பம்! அவ்வேம் பிள்ளைங்கலாம் என்னத்த விளங்குங்கரே! எல்லாந் நடுத்தெருவுல
நிக்கும் பாரு!" என்று முருகு மாமா பேசப் பேச சுற்றியிருந்தவர்கள் கெக்கெலிக்
கொட்டிச் சிரித்திருக்கிறார்கள்.
சூப்பர்வைசருக்கு வந்தக் கோபத்தில் மேனேஜரிடம்
வத்தி வைத்து முருகு மாமாவைச் சீட்டைக் கிழிக்காத குறையாக மூன்று மாதத்துக்கு வேலைக்கு
வர விடாமல் பண்ணியிருக்கிறார். முருகு மாமா அப்படிப் பேசியதற்கெல்லாம் எந்த யோசனையும்
பண்ணாமல் அப்படியே அந்த சூப்பர்வைசரின் காலில் விழுந்து அழுது, கதறி என்னென்னமோ செய்து
பார்த்திருக்கிறது. சூப்பர்வைசர் மசிவதாக இல்லை. ஆனால் பாருங்கள்! முருகு மாமாவின்
நல்ல நேரமோ, அந்த சூப்பர்வைசரின் கெட்ட நேரமோ மூன்றாவது மாதத்தில் சூப்பர்வைசர் ஆக்சிடெண்டில்
செத்துப் போக புது சூப்பர்வைசர் வந்துது முருகு மாமாவுக்கு வசதியாகப் போய் விட்டது.
முருகு மாமா புது சூப்பர்வைசரை ஆகா, ஓகோ
என்று புகழ்ந்து தள்ள ஆரம்பித்து விடுகிறது. "ஏற்கனவே இருந்தாம் ஒரு கையாளாகதப்
பயெ. பொண்டாட்டிய வெளில வுட்டுப் பொழக்கிற பயலுன்னா பாத்துக்குங்களேம்! அவனாலதாம்
இந்த ஆலையே கெட்டுக் குட்டிச் சுவராச்சி. அவ்வேம் அப்படிப் பண்றத பாத்துப் பொறுக்க
முடியாம ஒரு நாளு சத்தம் போட்டுட்டேம். அந்த விடியாமூஞ்சிப் பயலுக்கு வந்தது பாருங்க
சார் கோபம். போடா மயிரு! ஒன்னய விட நமக்கு ஆலைதாம் முக்கியம்னு ஒரு மூணு மாசத்துக்கு
வேலைக்கே வராம மொதலாளியப் பார்த்து செய்தி சொல்லலாம்னு பாத்தா அதுக்குள்ள அந்த சாமியே
அவனெ தண்டிச்சிட்டுங்க சார்! தெய்வம் எத்தன நாளுதாம் சார் பாத்துட்டே இருக்கும்? அரசன்
அன்று கொல்வான் சார்! தெய்வம் நின்று கொல்லும் சார்! அவ்வேம் செஞ்சப் பாவத்துக்குதாம்
போய் சேர்ந்துட்டாம். ஆலையோட நல்ல நேரம் பாருங்க நீங்க வந்திருக்கீங்க! இப்பதாம்
சார் ஆலை ஆலையா இருக்கு. இனிமே இந்த ஆலைக்கு நல்ல நேரம்தாம். ஒங்க முகத்தப் பாத்தா
போதும் சார்! செத்த நேரம் சும்மா இருக்க முடியல, ஒங்களோட சுறுசுறுப்பு அப்படியே ஒட்டிக்குது.
பம்பரம் மாரில்ல சுழலணும்னு தோணுது. ஒங்கள பாக்கிறப்ப அப்படியே எங்க வீரஞ் சாமிய பாக்குற
மாரியே இருக்கு சார்!" என்று முருகு மாமா பேசப் பேச புது சூப்பர்வைசர் அப்படியே
நெக்குருகிப் போய் விடுகிறார்.
இப்படி ஒவ்வொரு நாளாக நெக்குருகச் செய்த
முருகு மாமா ஒரு நாள் திடீரென்று சூப்பர்வைசரின் காலில் விழுகிறது. சூப்பர்வைசர் இருபத்தைந்து
முப்பது வயதுக்குள் ஏதோ ஒரு வயதுக்குள் இருந்த இளந்தாரி. திடீரென ஐம்பது வயதுக்கு
மேலுள்ள ஒரு பெரிய மனுஷர் நிலையில் இருக்குற முருகு மாமா காலில் விழுந்ததும்,
"என்னங்கய்யா எங் காலுல விழுந்துபுட்டு?" என்று விக்கித்துப் போய் விடுகிறார்.
சூப்பர்வைசர் முருகு மாமாவைக் கையைக் கொடுத்து தூக்கப் பார்க்கிறார். ம்ஹூம்! முருகு
மாமா தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டது போல அப்படியே கிடக்கிறது.
"சார்! நீங்கதாம் எங்க கொலதெய்வம்!
ஒங்கள பாக்குறப்ப அப்படியே எங்க வீரஞ் சாமிய பாத்த மாதிரிதாம் சார்! எங் குடும்பத்த
நீங்கதாம் காப்பாத்தணும் சார்! இல்லேன்னு மட்டும் சொல்லிடாதீங்க! குடும்பத்தோட உசுரே
ஒங்ககிட்டதாம் சார் இருக்கு. நீங்க நெனச்சு செய்றதலதாம் எங்க குடும்பமே இருக்கு!"
என்று அளந்து விடுகிறது முருகு மாமா.
காலில் விழுந்து கிடக்கும் முருகு மாமாவைத்
தூக்கி விடுவது ஆகாத காரியம் என்பது புரிந்து "என்ன மிஸ்டர் பெரியவரே! என்ன வெசயம்னு
சொன்னாத்தானே நாம்ம ஏதாச்சிம் செய்ய முடியும்!" என்கிறார் சூப்பர்வைசர்.
"சார்! மூத்தப் பொண்ண கல்யாணம் கட்டி
வெச்சி நாலஞ்சி வருஷம் ஆயிப் போச்சி சார்! அடுத்து பையம் சார்! வெட்டியா ஊர சுத்திட்டு
கோளாறு பண்ணிட்டு இருக்காம். நாளுக்கு ஒரு பெரச்சினை. குடிகாரப் பயலா மாறிட்டாம் சார்!
அவ்வேம் பண்ற ரவுச பாத்தா மருந்த குடிச்சிட்டுச் செத்துப் போயிடலாம் போல இருக்கு.
நாமளும் போயிச் சேந்துட்டா இந்தக் குடும்பத்துக்கு யாரு இருக்கான்னு தவிப்பா இருக்கு
சார்! நல்ல எடமா அவனுக்கு சம்பந்தம் வந்திருக்குங்க! நக நெட்டு காசு எல்லாம் நெறய செய்வாங்க
போலருக்கு. இவனுக்கு ஒரு வேல இருந்தா கலியாணத்த முடிச்சிடலாம் சார். இந்த வெட்டிப்பயலுக்கு
வீணாப் போன உருப்படாத முண்டத்துக்கு யாரு சார் வேல போட்டுக் கொடுப்பாங்க? நமக்குப்
பின்னாடி அவம்தாம் குடும்பத்த தாங்க வேண்டியவேம். ஒரு வேல வந்து கலியாணமும் நடந்துபுட்டா
கொஞ்சம் பொறுப்பா இருப்பான்னு பாக்கிறேம். அதாஞ் சார் ஒரு யோசனையா இருக்கு..."
என்று முருகு மாமா ஓர் இழுப்பு இழுக்கிறார்.
சூப்பர்வைசருக்கு தவிப்பான தவிப்பாகப்
போய் விட்டது. தன்னை குலம் காக்கும் வீரன் சாமி என்று சொன்னது சூப்பர்வைசரை எங்கோ
தூக்கிக் கொண்டு வேறு போய்க் கொண்டிருக்கிறது.
"சொல்லுங்க மிஸ்டர் பெரியவரே! நாம்ம
ன்னா பண்ணணும்?"
"சார்! இது போதும் சார்!" என்று
தன் கண்கள் இரண்டையும் சூப்பர்வைசரின் பாதங்களில் ஒற்றிக் கொண்டு, "நம்மள வேலைய
விட்டுத் தூக்குங்க சார்! எம் மவனுக்கு அந்த வேலையைப் போட்டுக் கொடுங்க சார்! எப்படியோ
அவ்வேம் ந்நல்லா இருந்தா போதும் சார்! இனுமே நாம்ம வேல பாத்து ன்னா பண்ணப் போறேம்?
அவ்வேம் இளந்தாரி. சுறுசுறுப்பா வேல பாத்தான்னு ஆலைக்கு ஒபயோகம் பாருங்க! வயசான கட்டெ
நாம்ம. இனுமே என்னத்த சுறுசுறுப்பா வேலயே பாக்கப் போறேம்? ஏத்தோ அவ்வேம் ந்நல்லா
இருந்தா போதும் சார்! ஒங்களாலதாம் இந்தக் காரியம் ஆகும்! வேற யாரு இந்த ஆலயில எது
நெனச்சாலும் அவங்களால இது முடியாதுன்ன நமக்குத் தெரியும் சார்!" என்கிறது முருகு
மாமா.
"இத்தாம் வெசயமா? மொதல்ல நீங்க எழுந்திரிங்க
மிஸ்டர் பெரியவரே!" என்கிறார் சூப்பர்வைசர்.
"முடியாது சார்! நீங்க ஏதாவது உத்திரவாதம்
பண்ணத்தாம் சார் எழுந்திருப்பேம்! இல்லாட்டி ஒங்க காலடியிலயே அப்படியே உசுரை வுட்டுட்டுதாம்
மறுவேல பாப்பேம் சார்!" என்கிறது முருகு மாமா.
சுப்பர்வைசர் சிரித்துக் கொண்டே,
"இங்க வேல இல்லேன்னா இன்னொரு எடத்துல வேலய வாங்கிக்கலாம்! உசுர அப்படி வுட்டுட்டா
வாங்க முடியுமா? நீங்க மொதல்ல எழுந்திரிங்க! நீங்களும் வேல பாருங்க! ஒங்க மவனுக்கும்
மேனேஜர்ட்ட பேசிட்டு எதாச்சிம் வேலய வாங்கித் தர்றேம்! நீங்க நம்மள நம்பலாம்!"
என்றதும், முருகு மாமா அப்படியே சிலிர்த்துக் கொண்டு எழுந்திரிக்கிறது.
"ன்னா சார்! நம்பலாம்னு அப்படி இப்படிச்
சொல்லிப்புட்டீங்க! ஒங்கள நம்பித்தானே சார் எம் பொழப்பு ஓடுது! நமக்கும் வேல போகல.
எம் புள்ளைக்கும் வேல வருதுன்னா நீங்கதாம் சார் எங் குடும்பத்து வீரஞ் சாமி! ஒங்களுக்குதாம்
சார் குடும்பத்தோட நாங்க கெடா வெட்டிப் பூசயே வைக்கணும். இனுமே வருஷா வருஷம் அதுதாம்
பண்ணப் போறேம்!" என்கிறது முருகு மாமா.
"அப்டிலாம் பண்ணிடாதீங்க மிஸ்டர்
பெரியவரே! நாங்க சுத்த சைவம்!" என்று சொல்லிவிட்டு ஏதோ பெரிய ஜோக்கைச் சொல்லி
விட்டது போல சிரிக்கிறார் சூப்பர்வைசர்.
"மன்னிக்கணும் சார்! மன்னிக்கணும்
சார்! இத்து தெரியாம சொல்லிப்புட்டேனே சார்! ஒங்க பேரச் சொல்லி எங்க ஊரு பொன்னியம்மனுக்கு
கஞ்சிக் காய்ச்சி ஊத்தறேம் சார்! அதுக்காவது பிராத ஏத்துக்கணும் சார்!" என்று
வழிகிறது முருகு மாமா.
"ஏதோ பண்ணித் தொலைங்க! ஏதோ நம்மால
முடிஞ்சதத்தானே பண்ணி வைக்கிறேம்! அதுக்கு ஏம் இவ்ளோ பெரிய வார்த்தையெல்லாம்? இவ்ளோ
பெரிய காரிங்க எல்லாம்?" என்கிறார் சூப்பர்வைசர்.
"சாமிக்கு எல்லா வேலயும் முடிஞ்சதுதாம்!
நம்மள மாதிரி மனுஷப் பயலுக்குதாம் சார் அத்தோட அருமெ தெரியும்! நீங்க நிஜமான சாமி
சார்! ஒங்கள மாரி இருக்குறவங்ளாலதாம் சார் நாட்டுல நல்ல மழெ பெய்யுது! வெவசாயம் செழிக்குது!
நம்மோட ஆலையும் அட்ரா சக்கங்றே அளவுக்கு ஓட்டமா ஓடுது சார்!" என்கிறது முருகு
மாமா.
சூப்பர்வைசர் முருகு மாமாவின் கன்னத்தில்
லேசாக தட்டி விட்டு செல்கிறார். முருகு மாமாவுக்கு ரகுவுக்கு வேலைக்கு வாங்கி விட்ட
அந்த சந்தோஷத்திலும் சூப்பர்வைசரை ஒரு மாதிரியாய் இளித்தபடி வாய் முணுமுணுக்கிறது,
"பெரிய ஹீரோன்னுதாம் நெனப்பு! கன்னத்துல தட்டிட்டுப் போறாம் போக்கத்தப் பயெ!
இவ்வேம் சூப்பர்வைசர்தானே! ன்னம்மோ ஆலயோட மொதலாளி கணக்கால்ல வேலெய போட்டுத் தார்றேங்றாம்
வெறும் பயெ! வேலயப் போட்டுத் தரட்டும் அப்பொறம் வெச்சிக்கிறேம்! இந்தப் பரதேசிப்
பயல பத்தி ஒரு மொட்ட கடுதாசி எழுதிப் போட்டாத்தாம் சரிபெட்டு வருவாம்! வேல வாங்கித்
தர்றேன்னு கேக்குறதுதாம் கேக்குறாம், ஒங்க வூட்டுல எத்தனிப் புள்ளீங்க? வேற யாருக்காவது
வேல போட்டுத் தரணும்மான்னு கேக்குறானா பாரு! ச்சும்மா மட்டரகமான பயலுங்க! சுயநலம்
பிடிச்சப் பயலுங்க! ஒத்த வேலய வாங்கித் தர்றத ன்னம்மோ பிச்சைப் போடுற மாரி நெனச்சிச்
செய்வானுங்க! இந்தப் பன்னிப்பெய காலுல்ல வேற வுழுந்து தொலச்சாச்சி! வூட்டுக்குப் போயி
மொதோ வேலையா எண்ணெய்ய தேச்சிக் குளிச்சாத்தாம் பிடிச்ச பீடை ஒழியும்!" என்று
நினைத்துக் கொள்கிறது.
இப்படியாக ரகுவிற்கு வேலை வாங்கி, ரகுவுக்கும்
தனக்குமாக சேர்த்து அதே சூப்பர்வைசர் துணையோடு அவர் கைகாலில் அலுக்காமல் சலிக்காமல்
மறுபடியும் மறுபடியும் விழுந்து, அதற்காக எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டு ரெண்டு
பேருக்குமாக லோன் போட்டு வாங்கி முருகு மாமா நான்காவது பிள்ளையான தேசிகாவின் கல்யாணத்தை
முடிக்கப் பார்க்கிறது.
*****
No comments:
Post a Comment