25 Jul 2019

கறுக்காத தங்க நிற கைக்கடியாரம்!



செய்யு - 156
            பாக்குக்கோட்டை ராஜாமணி தாத்தா மிகுந்த சிரம தசையில் இருந்தது. அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாததா என்ன? நகை ஆசாரி தொழில் செய்த வகையில் அதை நம்ம யாரும் தயாராக இல்லாமல் போயி ஜோசியராக மாறியிருந்தது. நகை ஆசாரியாய் இருந்த காலத்தில் சூதாட்டச் சீட்டு விளையாடப் போயி வீடு, வாசல், நகை, நெட்டு எல்லாவற்றையும் அதிலேயே விட்டு விட்டது. ஒரு வார்த்தைச் சொல்லி ராஜாமணி தாத்தாவை யாரும் நேர் செய்ய முடியாமல் போய் விட்டது. எதிர்கேள்வி ஏதேனும் கேட்டால், "என்னை கேட்குறதுக்கு எவனுக்குடா யோக்கியதெ இருக்கு?" என்று பட்டென முகத்தில் அடித்தாற் போல பேசி விடும் ராஜாமணி தாத்தா. ஆரம்பத்தில் நல்லவிதமாய்த்தான் நகை நட்டுகள் செய்து கொடுத்து ஓகோ ஆகோ என்று இருந்தது. சூதாட்டச் சீட்டு அதைப் பிடித்துக் கொண்ட பின் அதில் தோற்றுத் தோற்று பணத்தேவைக் கையைக் கடிக்க ஆரம்பித்த போது செய்யக் கொடுத்த நகை நெட்டுகளில் கை வைக்க ஆரம்பித்து அதில் ஏகப்பட்ட கெட்டப் பெயராகப் போய் விட்டது. கெட்டப் பெயராகப் போனதோடு ரெண்டு மூணு பேர் போலீஸில் கொடுத்த புகாரில் ஜெயிலுக்கும் போய் வந்தது. ஜெயிலுக்குப் போய் வந்த கையோடு கேராளவுக்கு ஒரு ரவுண்ட் அடித்து விட்ட வந்த ராஜாமணி தாத்தா ஜோசியத்தைக் கரைத்துக் குடித்து விட்டதாய் காவி வேட்டியும், கலரு சட்டையுமாய் ஜோசியராய் உட்கார்ந்து விட்டது. காவி வேட்டியிலும், கலர் கலர் சட்டையிலும் சோபித்த சோபிப்பு, ஜோசியத்தில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
            குடும்ப வகையறாக்களில் ஏதேனும் விஷேசம் என்றால் சரசு ஆத்தாவுக்கு வீட்டில் இருந்த அண்டா, குண்டான்களை விற்று விட்டோ, அடகு வைத்து விட்டோ வந்தோ முறை செய்ய வேண்டிய நிலை. ஒவ்வொரு விஷேசத்திலும் சரசு ஆத்தாவைப் பார்க்க பாவமாக இருந்தது. வறுமையைச் சொல்லவும் முடியாமல், ஒளிக்கவும் முடியாமல் படாத பாடு பட்டது. வாடகைக்கு இருந்த வீட்டில் ரொம்ப நாட்களாய் வாடகைக் கொடுக்க முடியாமல் போயி இப்போது வேறு ஒரு வசதியே இல்லாத வீட்டுக்கு மாறியிருந்தது. முன்பிருந்த வீடு எல்லாவற்றுக்கும் வசதியான வீடு. இப்போது இருக்கும் வீடு ஏதோ பத்துக்குப் பத்து என்ற அளவில் பெயருக்கு ஒரு வீடு. மேலே ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு. தாத்தா, ஆத்தா, மூணு பிள்ளைகளோடு அந்த வீட்டில் படுப்பது, புழங்குவது எல்லாம் கஷ்டமாகத்தான் இருந்தது. மூத்தப் பிள்ளை பாலாமணி சிம்மக்கலில் ஆயுர்வேத டாக்குடரு படிப்புக்குப் படித்ததால் வீட்டில் ஒரு டிக்கெட் குறைந்திருந்தது. ரெண்டாவது பெண் பிள்ளை சுந்தரி வயசுக்கு வந்திருந்தது. வயசுக்கு வந்த பிள்ளையை அந்த வீட்டில் வைத்துக் கொண்டு சிரமமாக இருப்பதாக சரசு ஆத்தா புலம்பிக் கொண்டிருந்தது.
            பகல், ராத்திரி என்று எந்நேரமும் ஒரு புழுங்கல்தான் அந்த வீடு. சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் டரக் டரக் என்று சத்தம் போடுவதில் கில்லாடியாக இருந்ததே தவிர காற்றைக் கொண்டு வர அல்லாடிக் கொண்டிருந்தது. பட்டினியாகக் கிடப்பதை விட அந்த வீட்டில் படுத்துக் கிடப்பதே சிரமமாக இருப்பதாகச் சொல்லும் சரசு ஆத்தா.
            "ஏத்தோ நம்ம வீட்டுப் பய தலயெடுத்துதாம் குடும்பம் ஒரு நெலைக்கு வரணும்! அவனுக்கு என்னான்னா முணுமுணுக்குன்னு கோவம் வருது. ஒரு வார்த்த சொல்ல முடியல. ஏதும் சொன்னா சிம்மக்கல்லுலேந்து சாப்பிடாமலே வந்ததும் வராததுமா கெளம்பிடுறாம். அது செரி வூட்டு சமைச்சிப் போடறதுக்குந்தாம் ன்னா இருக்கு? இந்த மனுஷம் வேலை வித்துக்குப் போயி ரண்டு காசி சம்பாதிச்சி வந்தா சாப்பிடலாம்னா பாத்தா ன்னம்மோ முனிவரு கணக்கா எந்நேரமும் பீடியைப் பிடிச்சிட்டு அப்படியே உட்காந்தே கெடக்குது. வூட்டுல யார ன்னா சொல்ல முடியுது? இந்த ரண்டு குட்டிங்களுக்கும் கூட ஒண்ணுஞ் சொல்ல முடியாது. முசுக்குன்னு கோவம் எங்கேந்து வருதுன்னே தெரியல. வந்துடுது. ஒண்ணு உக்காந்துகிட்டு. இன்னொண்ணு எப்போ உக்காரப் போவுதுன்னே தெரியல!" என்று சொல்லும் சரசு ஆத்தா கையில் ஒரு கடியாரம் கட்டியிருக்கும்.
            எவ்ளோ கஷ்டத்தின் மத்தியில் அந்த ஒரு கடியாரத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருவதை அது ரொம்ப பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தது. அது பெருமைபடுவதிலும் தப்பேதும் இல்லை. ராஜாமாணி தாத்தாவிடம் அதைப் பத்திரமாக வைத்து பாதுகாத்து வருவது சிரமந்தான். அடகு வைக்க வேண்டும் என்று ராஜாமணி தாத்தா நினைத்து விட்டால் அதனிடமிருந்து பெண்டாட்டிப் பிள்ளை வரை காப்பாற்றுவது சிரமந்தான். பெண்டாட்டிப் பிள்ளை வரை அடகு வைத்து விட்டு அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்.
            சரசு ஆத்தாவுக்கு அது லாலு மாமா வாங்கிக் கொடுத்த கடியாரம். சரசு ஆத்தாவுக்கென்ற பிறந்த வீட்டு முறையில் செய்ததில் அது ஒன்றுதான் அதன் கையில் இருக்கிறது. மண்டைப் பெருத்து அதாவது டயல் ரொம்ப பெரிதாய் தங்க நிற செயின் போட்ட கடியாரம். அப்போதைக்கப்போ சாவி கொடுத்து ஓட விட்டுக் கொள்ள வேண்டும். அதற்கென அந்த சாவியை திருவு திருவு என்று திருவி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்தக் காலத்திலும் அப்படி ஒரு கைக்கடியாரத்தைக் கட்டிக் கொள்வதை ரொம்ப விஷேசமாக நினைத்திருந்தது சரசு ஆத்தா. அந்த கடியாரமும் பார்ப்பதற்கு என்னவோ தங்க கடியாரம் போலவே கருக்கவோ, வெளுக்கவோ இல்லாமல் அப்படியே புதுமை குலையாமல் இருந்தது. அந்தக் காலத்து தயாரிப்புகள் எல்லாம் அப்படித்தான் தரமாக இருக்கும் போலிருக்கிறது. இப்போ ஒரு தங்க நிற கடியாரம் வாங்கினால் ஒரு வருஷத்துக்குள்ளேயே பல்லிளித்து விடுகிறது.
            அந்தக் கடியாரத்தைப் பார்த்தால் சரசு ஆத்தாவுக்கு லாலு மாமா பற்றிய பேச்சு வந்துடும். "பாவம் ஏம் யண்ணன்! எனக்காக நெறய செஞ்சிருக்கு. அதெ சமத்தா காபந்து பண்ணிருந்தேன்னாவே போதும் இந்தச் செரமம் வந்திருக்காது. எஞ்ஞ அந்த மனுஷன் அதெ காபந்து பண்ண விட்டாம்! எல்லாத்தையும் வித்துச் சூதாடுனதாம் மனசு நெறையும் மனுஷனுக்கு. ஏதோ புள்ளைக் குட்டிகளை வெச்சு சூதாடாமா விட்டாங்ற சந்தோஷம்தான். இப்பயும் பாக்குக்கோட்டைக்கு வந்துட்டுப் போனா நூறு, எரநூறுன்னு கொடுக்காம போவாது!" என்று புராணம் படிக்கும் கதையாய்ப் பேச ஆரம்பித்து விடும்.
            லாலு மாமாவுக்கு தங்கச்சியான சரசு ஆத்தாவின் குடும்ப நிலைமையை நினைக்கும் போது மனசுக்குக் கஷ்டமாகப் போய் விடும். "ந்நல்லா இருக்கணும்னு நெனச்சுதாம் நகெ ஆசாரி வூட்டு மாப்பிள்ளையா பாத்து பண்ணி வெச்சோம். அது தலயெழுத்து இப்படியிருக்கு! ஆனா அந்தப் பய தலபட்டு குடும்பத்துத் தூக்கிடுவாம். அதுல நமக்கு சந்தேகம் இல்ல!" என்று ஆரம்பிக்கும்.
            "அது எப்படி பய தலபட்டு குடும்பத்தத் தூக்கிடுவாம்?" என்று கேட்டால்...
            "அவ்வேம் ன்னப்பா டாக்குடருக்குப் படிக்கிறப்பவே ஏத்தோ கிளினிக்குல வேல பாத்துச் சம்பாதிக்கறாம். படிச்சி முடிக்கிறதுக்குள்ளயே மருந்து கொடுத்துச் சம்பாதிக்கிறாம். ஒடம்புக்கு முடியாதவங்கள கேரளாவுக்கு சோட்டாணிக்கல்லு மருத்துவ சாலைக்கு அனுப்பி வைக்கிறேம்னு அங்கேருந்து கமிஷம் வாங்கிக்கிறாம். அவ்வேம் படிப்புன்னு வூட்டுக்குச் செலவு வைக்கிறதில்ல. செலவு வெச்சாத்தாம் அந்த ஆளால ன்னாத்த கொடுக்க முடியும்? கொடுக்குறதுக்கு ன்னா இருக்கு? அவ்வேம்தான் படிப்பையும் சமாளிச்சிகிட்டுக் குடும்பச் செலவுக்கும் அப்பைக்கப்போ பணம் கொடுத்துட்டும் இருக்காம். பயெ பலே கெட்டிக்காரப் பயெ. ன்னா இந்தப் பயலால ஒரே ஒரு செரமம்தாம் வாய்ச்சுப் போச்சி!" என்று சொல்லும் லாலு மாமா.
            "அது ன்னா சிரமம்?" என்று கேட்டால்...
            "அந்தக் கதயே ஏம் கேட்குறே? நம்ம வூட்டுப் பயெ வேலன் கெடக்குறானே அவனெ ஏம் தங்கச்சிப் பயலுக்கு கொறைச்சா படிக்க வைக்க முடியும்? அவனெ விட கூட படிக்க வைக்க முடியாட்டியும், அவ்வேம் அளவுக்காகவது படிக்க வைக்கணும்‍னு அவனெயும் ஆயுர்வேத டாக்கடருக்குப் படிக்க வைக்க வேண்டியதாப் போச்சி. அவனெ அவ்ளோ செலவு பண்ணி ஆஸ்டலலாம் தங்க வெச்சிப் படிக்க வெச்சா அவ்வேம் ப்ளஸ்டூவுல எடுத்த மார்க்குக்கு டாக்குடரு படிப்புக்குச் சேத்துப்புட்டு வருஷா வருஷம் செலவுதாம் செஞ்சிக் கட்டுப்படியாகல. ஏத்தோ ஓடிட்டு இருக்கு!" என்று சொல்லும் லாலு மாமா. லாலு மாமாவுக்கு அப்படிதான் என்ன பெரிய சிரமம்? தஞ்சாவூரில் வீட்டோட இடம் வாங்கிப் போட்டு அங்கே தங்கிக் கொண்டு அதனோட பென்ஷன் பணம், செத்துப் போன வேணி அத்தையின் குடும்பப் பென்ஷன் பணம் வாங்கிக் கொண்டு ஜாலியாகச் செலவு பண்ணிக் கொண்டுதான் இருந்தது. இருந்தாலும் பேசும் போது இப்படி ஒரு கஷ்ட தசையைப் பேச்சில் கொண்டு வந்து பேச வேண்டும். இல்லையென்றால் கைமாத்து, கடன் என்று யாராவது ஏதாவது கேட்டு விடுவார்களோ என்ற பயம் அதன் மனதில் எப்போதும் அப்பிக் கொண்டு கிடந்தது.
            ஒரு குடும்ப விஷேசம் என்றால் பாக்குக்கோட்டையிலிருந்து சரசு ஆத்தாவும், தஞ்சாவூரிலிருந்து லாலு மாமாவும் வந்து விட்டால் அதுகள் இரண்டு பேசும் பேச்சுகள், அத்தோடு அதுகள் இரண்டும் மற்றவர்களோடு பேசும் பேச்சுகள் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.
            சரசு ஆத்தாவுக்கும், லாலு மாமாவுக்கும் ஆம்பிளைப் பிள்ளைகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை. எப்படியும் பிழைத்துக் கொள்ளும் என்று நம்பிக்கை இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தன. சரசு ஆத்தாவுக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகளை நினைத்து ஏகத்துக்கும் கவலையாக இருந்தது. அதே போல லாலு மாமாவுக்கும் குயிலியைக் கட்டிக் கொடுப்பது குறித்த கவலைப் பீடித்திருந்தது. வேற்குடியிலேயே இருந்திருந்தால் குயிலியைக் கல்யாணம் செய்து கொடுப்பதில் ஏகத்துக்கும் சிரமம் இருந்திருக்கும். இப்போது தஞ்சாவூர் போனது அதுக்கு ஒரு வகையில் வசதியாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தது. எப்படியோ மெட்ராஸ், பெங்களூருன்னு எங்கேயோ ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து தள்ளி விட்டுடுவேம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தது.
            சரசு ஆத்தாவின் பெண் பிள்ளையான சுந்தரி பத்தாவது முடித்து ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தது. சுந்தரி நல்ல நெடுநெடுவென்ற உயரம். பின்னால் போட்டிருக்கும் சடை முழங்காலுக்குக் கீழே தொங்கும். சடையை ஒரு மடிப்பு மடித்து போட்டால்தான் முதுகோடு நிற்கும். தேகம் ரொம்ப ஒடிசல். அந்த ஒடிசலான தேகத்தோடு ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்று பள்ளியோடத்தில் நடந்த எல்லா போட்டிகளிலும் ஏகப்பட்ட பரிசுகளை வாங்கிக் குவித்திருந்தது. படிப்பும் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தது. பேச்சு என்றால் ரொம்ப யோசித்து கறாராய்ப் பேசும். அந்தப் பேச்சில் அவ்வளவு அடக்கம் நிறைந்திருக்கும்.
            சுந்தரியைப் பார்ப்பவன் எப்படியும் கல்யாணம் கட்டிக் கொண்டு போய் விடுவான். அப்படி ஒரு பாந்தமான முகம். அதுக்கு கல்யாணம் முடிக்க இன்னும் வருஷங்கள் இருக்கிறது என்றாலும் பெண் பிள்ளை வயசுக்கு வந்து விட்டால் இந்த நாட்டில் எப்படியோ எங்கிருந்தோ பெத்தவர்களுக்குக் கல்யாணக் கவலை வந்து விடுகிறது. சரசு ஆத்தாவின் அந்தக் கவலைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு முற்றுப்புள்ளி வருமென்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...