23 Jul 2019

கரையேற்றம்



செய்யு - 154
            வெண்ணாறு ரொம்பவே மாறி இருக்கிறது. ஆற்றில் மணல் அப்படி கிடக்கும். ஆற்றில் தண்ணீர் கிடக்கும் வரை தண்ணீரில் விளையாட்டு என்றால், ஆறு வற்றி மணலாய் கிடக்கும் வரை மணல் மேல் விளையாட்டு. கபடி, ஓடி பிடித்து, ஒளிஞ்சாம் பிடித்து, சில்லுகோடு என்று அவரவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மணலில் நடந்து கொண்டிருக்கும். பெளர்ணமி நாட்களின் இரவுகள் என்றால் சொல்லவே வேண்டாம். ரா முழுவதும் விளையாட்டுதான். வீட்டில் கிடந்த நாட்களை விட அதிக நாட்கள் மக்கள் ஆற்றில் கிடக்கும்.
            ஊரில் யார்தான் மணலை காசு கொடுத்து அடித்தார்கள்? மாட்டு வண்டியை ஆற்றில் இறக்கி இஷ்டத்துக்கு அள்ளிக் கொள்ள வேண்டியதுதான். மாட்டு வண்டி இறங்கி ஏறும் வகையில் ஆறு மேடாகத்தான் இருந்தது. கறந்த பாலில் காபி போட்டு ஆற்றும் நுரை தளும்புவதைப் போல ஆறு மணல் மணலாய்த் ததும்பிக் கிடக்கும். இப்போது மாட்டு வண்டியை இறக்கலாம். ஏற்ற முடியாது. ஆறு பள்ளமாக போய் விட்டது. ஆற்று மணலை அடி வரை அள்ளி அள்ளி ஆறு ஆழப்பட்டுப் போய் விட்டது. முன்பு ஆற்றில் தண்ணீரோடு மணலும் கலந்து வரும். இப்போது சாக்கடை கலந்து வருவதோடு சரி.
            பெட்டேம்கள் கட்டிய பிறகு மணல் வரத்து குறைந்து விட்டதாக ஆளாளுக்குப் பேசிக் கொள்கிறார்கள். அதுவும் சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. வடவாதி, திட்டையிலிருந்து கிழக்கே போகப் போக ஆறு கிணறு அளவுக்கு ஆழமாக இருக்கிறதே தவிர பொட்டுக்குக் கூட மணல் இல்லை. குளம் வெட்டினால் எப்படி களிமண்ணாக இருக்குமோ அந்த அளவுக்கு ஆறும் அடியில் களிமண்ணைக் கொண்டிருக்கிறது.
            முன்பு போல் ஆற்றில் நெடுங்காலத்துக்கா தண்ணீர் வருகிறது? ஆடிப் பெருக்கிற்குத் தண்ணீர் வருவதே அதிசயமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. ஊர்ப் பெண்டுகள் தண்ணீர் இல்லாத ஆற்றில் பைப்படியிலிருந்து குடத்தில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு போய் ஒரு சிறு வாய்க்காலை வெட்டி அதில் ஓட விட்டு ஆடிப் பெருக்கைக் கொண்டாடி விட்டு வருகின்றன. எவ்வளவோ மாறி விட்டது. ஆனால் ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் அதில் குளிக்கும் உறசாகம் மட்டும் இன்னும் மாறவில்லை.
            அதே உற்சாகத்தோடு ஆற்றில் தண்ணீர் வந்த ஐந்தாம் நாள் வெங்குவும், செய்யுவிம் ஆற்றில் குளிக்கப் போகிறார்கள். படித்துறைக்குப் போய் பார்த்தால் அவர்ளுக்கு முன்னே தம்மேந்தி ஆத்தா குளித்துக் கொண்டிருக்கிறது. குளிப்பதிலிருந்து, துணி துவைப்பதிலிருந்து ஆற்றில் என்றால் சகலமும் செளகரியம்தான். குளித்துக் கொண்டிருக்கும் போதே, துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும் போதே ஆறு பாட்டுக்கு அழுக்குகளை அடித்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கும். நாம் அள்ளிக் கொண்டு போகும் அழுக்குகளை அள்ளிக் கொண்டுப் போவதில் ஆறுகளுக்கு அலாதிப் பிரியம். அப்படி அழுக்குகளை அள்ளிக் கொண்டு போவதைப் பார்த்தான் மனுஷப் பயல். சும்மா இருப்பானா? நாம் செய்யும் பாவங்களையும் அது அப்படியே அள்ளிக் கொண்டு போகும் என்று முடிவுக்கு வந்து, ஆற்றில் மூழ்கி எழுந்தால் பாவங்களையும் அது அப்படியே அடித்துக் கொண்டு போகும் என்று முடிவு கட்டி விட்டான். புண்ணிய நீராடல், தோஷம் கழிப்பது, பரிகாரம் பண்ணுவது என்று ஏகப்பட்ட சமாச்சாரங்களை ஆற்றைச் சுற்றிக் கொண்டு வந்து விட்டான்.
            அழுக்கு, தோஷம், பரிகாரம், புண்ணியம் என்று ஆற்றோடு ஆறாய் எதைக் சேர்த்து விட்டாலும் அது அடித்துக் கொண்டு போகிறது. சமயங்களில் இவன் பண்ணும் அக்கிரம் தாங்காமல் இவனையும் அடித்துக் கொண்டுதான் செல்கிறது. எதைச் சேர்த்து விட்டாலும் அதை அடித்துக் கொண்டு செல்லும் ஆறு மனிதனுக்கு அதிசயமாகப் போய் விட்டது. பார்த்தான் மனுஷன்! சாக்கடை, கழிவுகள், குப்பைகள் என்று சகலத்தையும் ஆற்றிலே கலந்து விட ஆரம்பித்து விட்டான். அப்படிச் சகலத்தையும் கலந்து விட்டு சென்னை மாநகரிலே ஓட வேண்டிய கூவம் ஆற்றையே டிராபிக் ஜாமாகி நிற்கும் வகையில் நிறுத்தி வைத்து விட்டானே இந்த மனுஷப் பயல். இந்த ஆறுகள் எல்லாம் எப்போது நிற்கப் போகிறதோ! இப்போது வரை ஓடிக்கொண்டு இருக்கிறது.
            இந்த வெண்ணாற்றில் முறை வைத்து தண்ணீர் விடும் போதுதான் ஆற்றில் ஓட்டம் தெரியும். மற்ற நாட்களில் தண்ணீர் அப்படியே தேங்கிதான் நிற்கும். அது குளத்தைப் போலவா? கிணற்றைப் போலவா? என்பது அந்தந்த இடத்தின் ஆழத்தைப் பொருத்தது. எப்படியும் தை, மாசி, பங்குனி வரை இடங்களைப் பொருத்து வெண்ணாற்றில் தண்ணீர் கிடக்கும். அதுவரை மக்களின் குளியல் ஓயாது.
            வெண்ணாற்றில் குளிக்க குளிக்க மீன்கள் வந்து கடிப்பது ஓர் அலாதியான சுகமாக இருக்கும். காலிலோ உடம்பிலோ புண் இருந்தால் இந்த மீன்கள் அதைக் கொத்திக் கொத்தியேப் புண்ணைச் சுத்தம் செய்து விடும். ஆற்றில் இறங்குபவர்கள் முதற்கொண்டு சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் என்று மீனுக்கு இருக்கும் புத்தி கூட இந்த மனுஷப் பயலுக்கா இருக்கா என்ன? இந்த மனுஷப் பயல் ஆற்றை அசுத்தம் பண்ணி சுத்தம் செய்யும் மீனையும் செத்து மிதக்கும் படியல்லவா பண்ணி விடுகிறான்! வெங்குவும், செய்யுவும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கிறது. வந்தவர்கள் குளிப்பதும் போவதுமாக ஒரு வேகம் காட்டியபடி இருக்கிறார்கள். முன்பெல்லாம் எல்லா நாளும் ஞாயிற்றுக் கிழமை என்பது போல ஆற்றில் ஆட்டம் போட்டவர்கள் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஞாயிற்றுக் கிழமையைப் போல ஆட்டம் போடுகிறார்கள். தம்மேந்தி ஆத்தாவுக்கு வயதாகி விட்டதால் அது மட்டும்தான் நிதானமாக அனுபவித்து ரசித்துக் ‍குளித்துக் கொண்டிருக்கிறது. என்னவோ ஆத்துத் தண்ணி அதன் ஒவ்வொரு உடம்பு செல்லிலும் புகுந்து வெளியே போவதைப் போல ஒரு மதப்பு அதற்கு. 
            ஊருக்குள் விவசாயம் பார்ப்பவர்கள், ஆடு மாடு மேய்ப்பவர்கள் என்ற எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. கணிசமாக பலருக்கு டவுனில் ஏதோ வேலையிருக்கிறது. காலையில் எட்டாம் நம்பர் பஸ்ஸை எட்டு மணிக்குப் பிடித்தால்தான் டவுனுக்கு வேலைக்குப் போகத் தோதாக இருக்கிறது என்று மக்கள் அவசர அவசரமாக் குளித்து விட்டுக் கிளம்புகிறது. எட்டு ஒன்பது மணியாகி விட்டால் துறையில் குளிக்க ஆளில்லை என்பதாக ஆகி விடுகிறது. ஒன்றிரண்டு பெரிசுகள் மட்டும் பத்து பதினோரு மணி வாக்கில் ஆடி அசைந்து வந்து குளித்து விட்டுப் போகிறதுகள். ஊர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே போகிறது. எல்லாம் பஸ் பாஸை வாங்கி வைத்துக் கொண்டு டவுன் பள்ளிக்கூடத்துக்குப் போக ஆரம்பித்து விட்டதுகள். அதுகளுக்கு டவுனுக்குப் போயி திரும்புவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதுகளுக்கு படித்துறைக்கு வந்து குளித்து விட்டுப் போவதற்கு அலுப்பும் தட்டிப் போய் விடுகிறது. எல்லாம் அதது வீட்டு பைப்படியிலே குளித்து விட்டு கிளம்பிக் கொண்டு இருக்கிறதுகள். இப்படியானதில் பாதிப் பிள்ளைகளுக்கு நீச்சல் தெரியுமோ என்னவோ! அதற்கு மேல் அந்தப் பிள்ளைகளைப் பெற்றதுகளும் ஆற்றில் குளித்து பிள்ளை ஆற்றோடு போய் விடுமோ என்று ஏகத்துக்குப் பயப்படுதுகள்!
            இதெல்லாம் உள்ளூர் கவர்மெண்ட் பள்ளியோடத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு இல்லை. அதுகள் ஆற்றில் இறங்கி ரவுண்ட் கட்டி ரவுசு அடித்து விட்டுதான் பள்ளியோடம் கிளம்புகிறதுகள். அதனால் ஆறு கொஞ்சம் கலகலப்பாக இருக்கிறது.
            "வர வர ஆத்துலயே குளிக்க முடியாது போலருக்கேடி! இந்த ஆத்துத் தண்ணிய மஞ்சளா பாத்துருக்கேம்! பச்சையா பாத்திருக்கேம்! சமயத்துல பழுப்பா, கருப்பாலாம் பாத்ததே யில்லயேடி!" என்று சொல்கிறது கூடவே குளித்துக் கொண்டிருக்கும் தம்மேந்தி ஆத்தா. பேசிக் கொண்டே குளிக்கா விட்டால் அதுக்கு குளித்த மாதிரி இருக்குமா என்ன!
            "அதுக்கு என்னக்கா பண்றது? ஒரு நட நடந்து ஆத்துல குளிச்சிட்டு துணிய அள்ளிப் போட்டுட்டு மறு நட நடந்து வீட்டுக்குப் போனா அதுல வர்ற கலகலப்பு ஏதுல வர்ருது? ஓடுற தண்ணிதான என்னாவாயிடப் போவுது?" என்கிறது வெங்கு.
            "ஆமாண்டிப் போ! சமயத்துல நாத்தமும் தாங்க முடிய மாட்டேங்குது! ஏத்தோ அந்த பேக்டரி இருந்தப்பதாம் அப்படின்னா அவ்வேம் நிப்பாட்டுன்ன பின்னாடியும் இப்படித்தான்னா ன்னா பண்றது சொல்லு! போன வருஷத்துல மார்கழிக்கு அப்பால ஆத்துலயே நாம்ம குளிக்க வர்லேன்னா பாத்துக்கோ! ஆத்துல தண்ணி ஓட்டம் இருந்தாத்தாம் குளியலு. இல்லேன்னா இந்தப் பக்கம் தல காட்டுறதில்ல. குளிக்க வாரப்பவே கேட்டுக்கிறது ஆத்துல தண்ணி ஓட்டம் இருக்கா இல்லையான்னு!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            "ஆடு, மாடு, நாயி, பூனைன்னு நாட்டுல ஒண்ணு சாக முடியல! எல்லாத்தியும் ஆத்துலயயே இழுத்து விட்டுடுறானுவோ! நம்ம வூட்டுல கெடக்குறானே பயலுக்கும் இதனாலயே ஆத்துல குளிக்குறதுன்னா பிடிக்க மாட்டேங்குது! ஆத்துல ஒரு எட்டு குளிச்சிட்டு வாடான்னா மூஞ்சைத் தூக்கி வெச்சிருக்கிறாம். முசுடு மாரி பேச ஆரம்பிச்சிடுறாம். எக்கேடு கெட்டோ போயித் தொலயின்னு விட்டுட்டேம். போன வருஷம் அப்படித்தாம் குளிச்சிட்டு இருக்கேம். நாயி ஒண்ணு செத்துப் போயி உடம்பெல்லாம் உப்பிப் போயி மெதந்துட்டு வருது. குளிச்சிட்டு இருந்த நமக்கு ஒரு மாரியா போயிடுச்சி. அப்புறம் பத்து நாளுக்கு ஆத்துப் பக்கமே தலை வெச்சிப் படுக்கல. அப்புறம் என்ன நெனச்சேனோ ஏது நெனச்சோனோ நம்மள அறியாம ஆத்துல வந்து குளிச்சிட்டு இருக்கேம்! ஏம் செத்துப் போன அதுகள ஒரு குழிய வெட்டிப் பொதைச்சு மண்ண மூடுனா ன்னா இந்த மண்ணாப் போறவனுவோ!"
            "காலம் கெட்டுப் போயிக் கெடக்குதுடி. அதுல ஆறும் கெட்டுப் போயி கெடக்குதுடி. காசிருக்கிறவன் அவனவனும் வூட்டுல பாத்துரூமு, குளிக்குற தொட்டி அது இதுன்னு கட்டி வெச்சிருக்கானுவோ. இல்லாத நம்மளக்கு ஆறுதான பாத்துரூமும், குளியலு தொட்டியும்! அப்போ ஊருக்குள்ள குளிக்கிறதுக்கு ஆறுதாம். ஆத்த விட்டா கேணிக்கரை அவ்வளவுதாம். இப்போதாம் அவளவளும் காசி இருக்குங்ற பவுசுல வூட்டுக்கு வூடு போரப் போட்டு வெச்சிருக்காளுவோளே! மேலே தொட்டிக் கட்டில்லடி கொழாய்ல வுட்டு பொழங்குறாளுவோ நாசமா போறவளுவோ! எங்கடி ஊருல பழங்கேசுங்க நாம்ம கொஞ்சம் கெடந்துட்டு ஆத்துக்கு வர்றோம். பசங்க கொஞ்சம் ஆத்துல விழுந்தடிச்சி விளையாடுறதுக்காக ஆத்துக்கு வர்ருதுங்க. அதுவும் இல்லாட்டி இந்த ஆறு அனாதியாத்தாம் கெடக்கும். ஆறு, கொளம்னா மனுஷம் இறங்கிப் பொழங்குனாத்தாம் அழகு. எங்க பொழங்க வுடுறானுவோ படு பாவிப் பயலுவோ! பொணத்த எரிக்கறப்ப பாதி எரியலன்னா ஆத்துலதாம் புடிச்சி இழுத்து வுடுறானுவோ! அதுலயும் டவுனு ரொம்ப மோசம்டி. கக்கூசுல போறதய எல்லாம் இழுத்து ஆத்துல வுட்டுடறதா பேசிக்கிறாங்க!"
            "ஏம் யாத்தா இதல்லாம் சொல்லி ஏம்டா குளிக்கிறோம்னு பண்ணிட்டே இருக்கே?" என்கிறது செய்யு.
            "அட நீ ச்சும்மா கெடடி! நாட்டுல நடக்காததையா சொல்றேம்?" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            "ஏ யக்கா! ன்னக்கா இது ஒடம்புல வந்து மோதுது?" என்று மெரண்டபடி வெங்கு உடம்பில் பட்டதைப் பிடித்து பயத்‍துடன் மேலே தூக்கிக் காண்பிக்கிறது.
            "அட எங் கருமத்தே! அத தூக்கி அந்தாண்ட வீசித் தொலயிடி! அப்படியே ஒரு முங்கு முங்கிட்டு மொதல்ல ஆத்த வுட்டு வாடி! போறப்ப முச்சந்தியில ஒரு வாளி தண்ணிய அடிச்சி தலைக்கு முழுவிட்டுதாம் வூட்டுக்குப் போகணும்! இனுமே இந்த ஆத்துல குளிக்கக் கூடாதுடி! இதுல குளிச்சா ஏழுரு பாவந்தாம் வந்து சேரும்டி! ஆத்துல குளிக்கிற ஆசைய இத்தோடு வுட்டுத் தொலங்கடி!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            "என்ன யாத்தா அது?" என்கிறது செய்யு.
            "இவ்வே வயசுக்கு இவ்வேகிட்ட சொல்ல வேண்டியதா அது? இவளெ கெளப்பி மொதல்ல வூட்டுப் பக்கம் அடிச்சி விடுவேம்!" என்று செய்யுவை வேக வேகமாக கிளப்பி விட்டு ஒரு கோபத்தோடு முகத்தை வைத்துக் கொண்டு ஒரு வெறுப்புப் பார்வையை வீசி விட்டு வீட்டுக்கு அடித்து விட்டு, வெங்குவும், தம்மேந்தி ஆத்தாவும் படபடப்பாக துணியை முடிந்து போட்டுக் கொண்டு ஆற்றை விட்டு கரையேறுகிறதுகள்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...