செய்யு - 146
"சிக்கல்ல வந்து எறங்கியாச்சி! சிக்கலு
சிங்காரவேலன கும்புட்டுட்டுப் போனா எந்தச் சிக்கலும் இனுமே இருக்காது!" என்றது
சாமியாத்தா.
சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் அருகருகே
ஒன்றாக இருக்கும் கோயில்களில் சிக்கல் கோயிலும் ஒன்று. சிக்கலில் சிவன் சந்நிதியை
விட, சிங்காரவேலரின் சந்நிதிக்கு தனி மவுசு. சிங்காரவேலரின் சந்நிதியில் எந்நேரமும்
ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சிங்காரவேலரைத் தரிசனம் பண்ண பின்தான் சிவலிங்க
தரிசனம். சாமியாத்தா சிங்காரவேலரிடம் மனமுருகி வேண்டிக் கொண்டு, சிவ லிங்கத்தைக் கும்பிட்டதோடு
சரி.
"ஏன்த்தா மூலவர்ட்ட ஏதும் வேண்டிக்
கொள்ளவில்லையோ?" என்றான் விகடு.
"மவன்ட்ட வேண்டிகிட்டாவே எல்லா கொறையும்
தீந்துடும். அப்பொறம் அப்பார்ட்ட வேண்டிக்க ன்னா இருக்கு! புள்ள தலையெடுத்துட்டா அப்பாருக்குச்
செரமம் கொடுக்கக் கூடாது. அப்பாருக்கு வயசாவும்ல. அவர அமைதியா ஓய்வெடுக்க உட்டுப்புடணும்.
இஞ்ஞ பாத்தியா புள்ளயா இருக்கற சிங்காரவேலரு அப்பார இருக்குற சிவனுக்கு ஒரு செரமும்
கொடுக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிறவங்களோட எல்லா கொறையையும் அப்பாருட்ட போறதுக்கு
முன்னாடியே தீத்துப்புடுவாரு. அதால இந்தக் கோயில்ல அப்பார இருக்குற சிவபெருமான கும்புட்டா
போதும். எந்தக் கொறையையும் தீத்து வைய்யான்னு வேண்டிக்கணும்னு அவசியமேயில்ல. புள்ளன்ன
அப்புடில்ல இருக்கணும்!" என்று விகடுவைக் குத்திக் காட்டுவது போல சொன்னது சாமியாத்தா.
"ந்நல்லா சொல்லும்மா இந்த வெளங்கா
மண்டைக்கு வெளங்குற மாரி! எதுக்கெடுத்தாலும் குத்தலு, கொதர்க்கம்னு பேசிட்டு திரியுறாம்!"
என்கிறது இதைக் கேட்டதும் சிப்பூர் பெரியம்மா.
"எல்லாம் அதது வயசுல அப்படித்தாம்
இருக்கும்! சிங்காரவேலன் இருக்கானே! அவ்வேம் மட்டும் ன்னா? அப்பன ஆயியைப் பிரிஞ்சிப்
போயி பழனி மலயில உக்காந்துட்ட பயதானே! அந்த அவ்வேப் பாட்டி இல்லேன்னா அவ்வேம் எங்க
அப்பன் ஆயோட வந்து சேரப் போறாம்? எல்லாம் நேரந்தாம்டி! சாமிக்கே அப்படி இருக்கேங்றப்ப
ஆசாமி ன்னா பண்ணுவாம்! வாழ்க்கையில எதத்தாம் ன்னா பண்ண முடியுங்றே? அதது நடக்குறப்ப
அத அப்படியே ஏத்துக்குறத தவுர ன்னா வழியிருக்கு? நடக்குறப்ப எதுவும் பிடிக்குற மாரி
இருக்காது. பெறவு எல்லாம் பிடிச்ச மாரி மாறும். மொதல்ல கஷ்டமா இருக்குறது பின்னாடி
இஷ்டமா மாறும். மொதல்ல இஷ்டமா இருக்குறது பின்னாடி கஷ்டமா மாறும். எதையும் ஒண்ணும்
பண்ணுறதுக்கில்ல. வந்துப் பொறந்தாச்சி. சாவுற வரைக்கும் நடக்குறதையெல்லாம் எதிர்நின்னுதாம்
ஆகணும். ஓடிட முடியாது. ஒளிஞ்சிட முடியாது. ஓடுனாலும் எவ்ளோ தூரம் ஓடுவே? ஒளிஞ்சாலும்
எத்தனி நாளிக்கு ஒளிவ்வே? நமக்கு நடக்குற எல்லாமும் சாமிக்கும் நடந்துருக்கு. அதுக்காக
அதுங்க ன்னா கோபப்பட்டுதா? ஆத்திரப்பட்டுதா? மனசொடிஞ்சி உக்காந்துப்புட்டுதா? அதத்தாம்டி
சாமிய கும்புடற ஒவ்வொரு நேரத்திலயும் மனசுல நெனச்சிக்கணும். அதே நெனக்க நெனக்க மனசுக்கு
ஒரு தெம்பு வரும் பாரு. அதாம்டி அந்தச் சாமி தர்ற சக்தி! இப்படித்தாம் நாம்ம நெனச்சிட்டு
சாமிய கும்பிட்டுட்டு இருக்கிறேம்!" என்கிறது சாமியாத்தா.
சாமியாத்தா எல்லாரையும் பேசிப் பேசியே
தெளிவு செய்து விட்டாற் போன்ற நடையோடு எல்லாரையும் கூட்டிக் கொண்டு செல்கிறது. சிங்காரவேலர்,
லிங்கம், பெருமாள் என்று தரிசித்து விட்டு எல்லாரும் வெளிப்பிரகாரத்தில் வந்து உட்கார்ந்தாகிறது.
"யம்மா! நாங்க எல்லாரும் ஒங் காலுல
வுழுறோம். விபூதி அடிச்சி விடு!" என்கிறது தேன்காடு சித்தி.
"ஏம்டி தங்காச்சிகளா! அதாங் சாமிய
வுழுந்து கும்புட்டாச்சே! அப்பொறம் ன்னாடி?" என்கிறது.
"ன்னம்மோ ஆசையா கேட்குறால்ல! எழுந்திரிச்சிதாம்
நில்லேம்!" என்கிறது சிப்பூர் பெரியம்மாவும்.
சாமியாத்தா எழுந்து கிழக்குப் பார்க்க
நிற்கிறது.
சிப்பூர் பெரியம்மா, தேன்காடு சித்தி,
வெங்கு எல்லாம் வரிசையாக காலில் விழுகிறார்கள். விகடு மட்டும் விழாமல் அப்படியே நிற்கிறான்.
"இவ்வேம் ஒருத்தம்! ஒங்க ஆயால பெத்த
ஆயாதானடா! வுழுந்து தொலயேண்டா!" என்கிறது தேன்காடு சித்தி.
"ரொம்பத்தாம் அழிச்சாட்டியம் பண்றாம்டி!"
என்கிறது வெங்குவும்.
விகடுவும் அந்த வரிசையில் சேர்ந்தாற் போல்
காலில் விழுகிறான். சாமியாத்தா ஒவ்வொருவராய் பேரைச் சொல்லி எழுப்பி விட்டு கண்களை
மூடிக் கொண்டு மனதில் முணுமுணுத்தபடியே விபூதியை முகத்தின் முன்னே வைத்து ஊதி விட்டு,
உடம்பு நடுங்க நெற்றியில் பூசி விட்டு குங்குமத்தை வைத்து விடுகிறது. விகடுவின் எழுந்திரித்ததும்
அவனுக்குப் பூசி விட மட்டும் நெடுநேரம் எடுத்துக் கொள்கிறது.
"ன்னம்மா அவனுக்கு மட்டும் பூசுறதுக்கு
இம்மாம் நேரம் எடுத்துக்கிறே?" என்கிறது சிப்பூர் பெரியம்மா.
"சாமி இல்லேங்ற பயலாச்சே! நம்ம மனசு
கஷ்டப்படக் கூடாதுன்னு இப்பிடி நம்ம கூட வந்து நின்னுட்டுருக்காம். அடுத்த மொற வாரப்ப
எந்தச் சாமிய இல்லேன்னு சொன்னான்னோ அதே சாமி இருக்குன்னு சொல்லிகிட்டே காலுல வுழுந்து
விபூதி அடிச்சிக்கணும். அதுக்குதாம்டி ந்நல்லா வேண்டிட்டு பூசி வுடுறேம்." என்று
சொல்லி சிரித்துக் கொண்டே பூசி விடுகிறது.
"யம்மா! அவனுக்கு ந்நல்ல புத்திய
கொடுக்கணும்னு வேண்டிட்டு இன்னொரு தடவ பூசி வுடும்மா!" என்கிறது வெங்கு.
"அடுத்த தடவ வாரப்ப பாரு! எப்புடி
பக்திப் பழமா வாரப் போறான்னு!" என்கிறது சாமியாத்தா.
விகடு நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்.
"ன்னாடா சிரிப்பு?" என்கிறது
அதைப் பார்த்து விட்டு சாமியாத்தா.
"நடக்குதான்னு இல்லியான்னு பாக்கறீயா?"
என்கிறது சாமியாத்தா.
"பார்க்கலாம்!" என்கிறான் விகடு.
"ன்னாடா சவாலா?" என்கிறது சாமியாத்தா.
"அஃதே!" என்கிறான் விகடு.
"ன்னா பழக்கம்டா இது?" என்கிறது
சாமியாத்தா.
"ஒங்க சாமி சொல்லிக் கொடுத்த பழக்கம்தாம்.
நீ கும்பிட்டு வர்றீயே சிங்காரவேலர்! அவரே அவங்க அப்பாகிட்டேயே சவால் விட்டவர்தானே!
அவர் அவங்க அப்பாகிட்டே சவால் விடுறார்! நாம்ம எங்க ஆத்தாகிட்டே சவால் விடுறோம்!"
என்கிறான் விகடு.
"அப்பனுக்குப் புத்திச் சொன்ன மாரி,
நீ ஆத்தாளுக்குப் புத்திச் சொல்லிட்டுப் போறே! இந்த எடம் அப்பிடி! அதாம் பேசுறே!"
என்கிறது சாமியாத்தா.
எங்குச் சுற்றி எப்படி விட்டாலும் கடைசியில்
சாமியாத்தா சாமியிடம் வந்து நிற்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது விகடுவுக்கு.
"இதுலல்லாம் தெளிவாத்தாம் இருக்குறாம்!
அப்பொறம் புத்திக்கு ன்னா ஆவுதேன்னு தெரியல. அவ்வேம் பாட்டுக்கு நடந்துக்குறாம்!"
என்கிறது வெங்கு.
கடைத்தெருவுக்கு வந்தப் பிறகு கடையில்
கொடுத்திருந்த மீன், கருவாடு எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பஸ் பிடித்து திருவாரூரில்
வந்து இறங்கி, எட்டாம் நம்பர் பஸ்ஸூக்காகக் காத்திருந்து திட்டையில் வந்து இறங்கியதும்
எல்லாருக்கும் புது தெம்பு வந்தது போலத்தான் இருக்கிறது.
"யக்கா! ரொம்ப வேல பாத்து மறுபடியும்
ஒடம்ப கெடுத்துக்காத. அதாம் பொண்ணும், புள்ளயும் இருக்குல்ல. வேலைய வாங்கு! எலே எதுக்கெடுத்தாலும்
பிரசங்கம் பண்றவனே, இல்லாட்டி அப்படியே உட்காந்திருக்கவனே! கொஞ்சம் கூட மாட ஒத்தாசைய
இருந்து ஒங்கம்மால காபந்து பண்ணு!" என்கிறது தேன்காடு சித்தி.
சுப்பு வாத்தியாருக்கு இப்படி எல்லாரும்
சேர்ந்து கொண்டு வந்து வெங்குவையும், விகடுவையும் வீட்டில் விட்டு விட்டுப் போனது
ஒரு பக்கம் சந்தோஷம் என்றால் இன்னொரு பக்கம் வீட்டையும் கட்டிக் கொண்டு, மாடுகளையும்
எப்படி பார்த்துக் கொள்வது என்று சங்கடமாக இருக்கிறது.
கருப்பு மாடு இந்த இடைப்பட்ட நாட்களில்
கன்று ஈன்றிருக்கிறது. கன்று பார்க்க செவலையாக அழகாக இருக்கிறது. ஜெர்ஸி கலப்பாக இருக்க
வேண்டும். துள்ளிக்கொண்டும், ம்மே என்று கத்திக் கொண்டும் படு சுட்டியாக இருக்கிறது.
இதனாலேயே சுப்பு வாத்தியாரால் திருத்துறைப்பூண்டி வந்து ஆஸ்பிட்டலில் பார்க்க முடியாத
அளவுக்கு சூழ்நிலை ஆகி விட்டது. வேலங்குடி பெரிய மாமாவைக் கொண்டு வந்து ரெண்டு நாளைக்கு
நிலைமையை சமாளித்திருக்கிறது சுப்பு வாத்தியார். கன்று ஈன்ற மாட்டை வீட்டில் பெண்கள்
இல்லாமல் சமாளிப்பது கஷ்டமான காரியம்தான். குறைந்தது மூன்று நாட்களுக்காவது ஆட்டுக்கல்லில்
போட்டு பருத்திக் கொட்டை அரைத்துப் போட வேண்டும். கன்று ஈன்றதும் நஞ்சுகொடி பிசகில்லாமல்
வந்து விழ வேண்டும். அதை கன்றோ, நாயோ தின்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூங்கில் தழையாகப் பார்த்து ஒடித்துக் கொண்டு வந்து போட வேண்டும்.
செய்யுவும், சுப்பு வாத்தியாரும் மூச்சடைத்துதான்
போயிருப்பார்கள். எதுவும் சொல்லாமல் எப்படியோ சமாளித்திருக்கிறார்கள். தம்மேந்தி
ஆத்தாவும், முல்லேம்பாள் ஆத்தாவும் மாறி மாறி பால் கறந்து கொடுத்திருக்கிறார்கள்.
கருப்பின் மூன்றாவது கன்றும் இப்போது கன்று ஈனும் நிலையில் நின்று கொண்டிருந்தது.
அந்த மூன்றாவது கன்று ஈன்ற தலைக் கன்றும் அரை மாடு அளவுக்கு வளர்ந்த நிற்கிறது. இது
தவிர கருப்பு ஈன்ற தலைக்கன்று இன்னும் சினைபடாமலே நிற்கிறது. மாடு கணக்குக்கு நான்கும்,
கன்றுகுட்டி கணக்குக்கு ஒன்றும் என்று ஐந்தையும் வைத்துக் கொண்டு சமாளிப்பது சிரமமாகத்தான்
இருக்கிறது.
*****
No comments:
Post a Comment