15 Jul 2019

ஒரு சிறு திருத்தத்துக்கு முன்...



            உலகைத் திருத்த வேண்டும் என்று பைத்தியமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக எதையாவது எழுத வேண்டும் என்பது எஸ்.கே.வின் ஆசை. அவரது நெடுநாள் ஆசை இன்று நிறைவேறுகிறது. எஸ்.கே. தட்டச்சு செய்யத் துவங்கினார்...,
            யாருக்கும் எதையும் சொல்ல வேண்டியதில்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்தே இருக்கிறது. அதைச் செயல்படுத்துவதற்கான விருப்பம் பலருக்கு இருப்பதில்லை. செயல்படுத்துவதற்கான விருப்பம் இல்லாத போது அதைச் செய்யுமாறு சொல்கின்றவர் எதிராளியாகி விடுவார். நல்ல விசயத்தைச் செய்ய சொல்வதானாலும் இந்த மோசமான எதிர்விளைவிலிருந்து தப்ப முடியாது.
            அவரவர்க்கு எது விருப்பமோ அதையேத்தான் அவர்கள் செய்கிறார்கள். அதிலிருந்து அவர்களை மாற்ற முடியாது. அவர்களாக நினைத்தால் அன்றி மாறவும் மாட்டார்கள்.
            என்ன செய்ய வேண்டும் என்பதையோ, என்ன செய்யலாம் என்பதையோ ஒரு ஹாஸ்யமான பேச்சு வாக்கில் சொல்லலாம். பணிவான ஒரு விண்ணப்பமாக முன்வைக்கலாம். அதற்கு மேல் வலியுறுத்த முடியாது. வலியுறுத்த முடிந்து தவறாகப் போகும் சந்தர்ப்பங்கள் நிறைய. ஆகவே அது தேவையே இல்லாதது.
            என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது அவரவர் மனநிலைச் சார்ந்த விசயங்களாக இருக்கின்றன. அதில் தலையிடுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஒருவருக்கு விருப்பமில்லாத ஒன்றை எப்படிச் செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியும். அப்படிச் செய்ய முயல்வது ஏராளமான எதிர்மறை பின்விளைவுகளை உண்டாக்கி விடும்.
            கேட்கப்படும் யோசனைகளும் அவரவர் மனநிலையைச் சாந்தப்படுத்திக் கொள்வதற்காகக் கேட்கப்படுகின்றன. இது புரியாமல் சரியான யோசனைகளைச் சொல்வதாக நினைத்துக் கொண்டு ஒருவரின் மனவெறுப்பை வரிந்து கட்டிக் கொள்ளக் கூடாது. கேட்பவர் தனக்கான இணக்கமானப் பதிலை எதிர்பார்க்கிறாரே அன்றி நீங்கள் சொல்லும் மிகச் சரியான, மிகத் துல்லியமான பதிலை அன்று.
            இவர்களையெல்லாம், இதையெல்லாம் மாற்ற முடியாதா என்று நினைக்கும் உங்கள் மனநிலைதான் மாற்றப்பட வேண்டியதேயன்றி அவர்களோ, அவையோ அல்ல. நீங்கள் உங்கள் மனநிலைகளை மாற்றிக் கொண்டால் உலகை மாற்ற வேண்டிய அவசியம் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...