16 Jul 2019

கெட்டவனாக இருக்க உள்ளூர எவ்வளவு ஆசை!



            எதிர் வீட்டு தாடி தாத்தா அடிக்கடி ஒரு கதை சொல்வார். அந்த ஒரே கதையைத்தான் அடிக்கடி சொல்வார். அவருக்கு அந்தக் கதையைத் தவிர வேறு கதையே தெரியாதோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு ஒவ்வொரு முறையும் அந்தக் கதையை உருகி உருகிச் சொல்வார்.
            "ஒரு கோயிலுக்கு பாலாபிஷேகம் பண்ணணும்னு ஊருக்கு நடுவுல ஒரு பெரிய பாத்திரத்தை வெச்சாங்களாம்.
            அவங்கவங்களால முடிஞ்ச அளவுக்கு பாலக் கொண்டாந்து பாத்திரத்துல ஊத்தணுங்றது ஏற்பாடு.
            ஆளாளுக்கு சனங்க சொம்புலயும், லோட்டாலயும், உருளியிலயும் கொண்டாந்து பால ஊத்துதுங்க.
            கடைசீயில பாத்திரத்தைப் பாத்தா எல்லாம் வெறுந்தண்ணி. பாலேயில்ல.
            நாம மட்டுந்தான தண்ணிய ஊத்தப் போறோம்! அம்மாம் பாலுல நாம மட்டும் தண்ணிய ஊத்துனா யாருக்கு என்ன தெரிஞ்சிடப் போவுதுன்னு சனங்க ஆளாளுக்கு தண்ணித் தண்ணியா ஊத்துனதுல பாத்திரம் முழுசுமா தண்ணியாப் போச்சி!
            இப்படிதாம்டா வெகடு! நம்ம சனங்க! நம்ம மக்க!"
            என்று என்னமோ உலக மகா ஜோக்கைச் சொல்லி விட்டது போல சொல்லி விட்டுச் சிரிப்பார்.
            அவர் உயிரோடு இருந்த வரை நினைத்த போதெல்லாம் இந்தக் கதையைக் கூப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தவர், செத்த பின்னும் கனவில் வந்து அவ்வபோது சொல்ல ஆரம்பித்து விட்டார்.
            வேறு ஏதுனாச்சும் புதுக் கதையா மொக்கையா இருந்தாலும் சொல்லுங்கன்னா சொல்ல மாட்டார் செத்தும் கனவில் வந்து கதை சொல்லும் தாடி தாத்தா.
            "நாம்ம மட்டும் தண்ணிய ஊத்துனா யாருக்கென்ன தெரிஞ்சிடப் போவுது?" என்ற வரியை மட்டும் அழுத்தந் திருத்தமாய்ச் சொல்லி சிரிக்காமல் போக மாட்டார்.
            ஏன் இந்தக் கதையை அடிக்கடிச் சொல்லி உசுரை விட்ட பின்னும் கனவில் வந்து சொல்லி உசுரை எடுக்கிறார் என்று யோசித்து தூக்கம் கெட்ட நாட்கள் நிறைய இருக்கின்றன.
            நாம்ம மட்டும் தப்பு பண்ணா யாருக்கென்ன கெடுதல்னு நெனச்சி தப்புச் செய்யக் கூடாதுங்றதுக்காக சொல்றாரா?
            நாம்ம மட்டும் லஞ்சம் வாங்குனா யாரு குடி கெட்டுடப் போயிடுதுன்னு நெனச்சி லஞ்சம் வாங்கக் கூடாதுங்றதுக்காக சொல்றாரா?
            எல்லாரும் தண்ணியத்தான் ஊத்தப் போறான்னு தெரிஞ்சிகிட்டு நாமளும் அதையே ஊத்திடலாம்னு நெனச்சிக்கிற மாதிரி, எவனுமே யோக்கியமா இல்லாதப்போ நாம்ம மட்டும் யோக்கியமா இருந்து என்னாகப் போகுதன்னு நெனச்சிகிட்டு இருந்துடக் கூடாதுங்றதுக்காக சொல்றாரா?
            இல்ல,
            நாம் மட்டும் யாருக்கும் தெரியாமல் ஓட்டுக்கு நோட்டை வாங்கினால் ஜனநாயகம் என்ன கெட்டு விடவா போகிறதுனு நெனச்சிகிட்டு ஆளாளுக்கு நோட்டு வாங்குறத ஒரு குறியீடா வெச்சு சொல்றாரா?
            இப்படி ஏகப்பட்ட கேள்விகள்! 
            ஒரு வகையில் பார்த்தா இது அடிக்கடிக் கேட்க வேண்டிய கதைதாம் போலருக்கு.
            இங்கு பிரச்சனையே அதுதானே.
            ஒருத்தன் திருந்துவதற்கு ஊரே திருந்த வேண்டியதாக இருக்கிறது.
            ஒருத்தன் தப்பு செய்வதைத் தடுக்கும் போது, என்னை மட்டும் தடுத்துட்டா உலகத்தில் நடக்கின்ற தப்பையெல்லாம் தடுத்து விட முடியுமா? என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கு.
            பாலுக்குப் பதிலா எல்லாம் தண்ணிய ஊத்துன மாதிரி, எல்லாரும் தப்புத் தப்பாவா இருந்துகிட்டு இந்த உலகத்துல எவம்ப்பா நல்லவன் இருக்கான்னு பேசுறதுக்கு அதுதாம் வசதியாயிருக்கு நமக்கு.
            ஆக, கூட்டிக் கழிச்சுப் பார்த்தா நல்லவனா இருக்குறத விட கெட்டவனா இருக்குறதுக்கே எல்லாருக்கும் ஆசையா இருக்கு. ஆனா கொண்டு போறது பாலா, தண்ணியாங்றது தெரியக்கூடாதுன்னு ஒரு பாத்திரத்துல எடுத்துட்டுப் போற மாதிரி, நல்லவனா? கெட்டவனா?ங்றது தெரியாத அளவுக்கு நல்லவன் மாதிரி பேசுற பேச்சு நமக்குத் தேவையாத்தான் இருக்கு!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...