அரசு வங்கிக் கிளையொன்றின் நீண்ட காத்திருப்புக்குப்
பிறகு, "இதையெல்லாம் பிரைவேட்டு ஆக்கினாத்தாம் சார் நாடு சரிபடும்!" என்ற
குரல் கேட்கிறது.
நாடு சரிபடவில்லை என்றுதான் அன்று தனியாராக
இருந்து வங்கிகளெல்லாம் அரசுடைமை ஆக்கப்பட்டன.
இன்று வங்கிகள் சரிபடவில்லை என்பதால் மீண்டும்
தனியார் மயமா? என்னமோ நம் குரல்களும், கோஷங்களும் இப்படித்தான் இருக்கின்றன.
அரசு பஸ் பிடிக்கவில்லை என்றால்... பிரைவேட்
பஸ்தான் சரிபட்டு வரும் என்று சத்தம் வர ஆரம்பித்து விடுகிறது.
அரசு ஆஸ்பத்திரி பிடிக்கவில்லை என்றால்...
பிரைவேட் ஆஸ்பிட்டல்தான் சரிபட்டு வரும் என்று குரல் கேட்க ஆரம்பித்து விடுகிறது.
அரசுப் பள்ளி பிடிக்கவில்லை என்றால்...
பிரைவேட் ஸ்கூல்தான் சரிபட்டு வரும் என்று கோஷங்கள் ஒலிக்க ஆரம்பித்து விடுகின்றன.
பேருந்து, மருத்துவமனை, பள்ளி, வங்கி என்று
இந்த தனியார் மய கோஷம் ரொம்பவே ஆபத்தானது. அதிலுள்ள அரசுப் பணிகள் பறிபோவது ஒரு
வகை ஆபத்து என்றால், எந்த தனியார் பேருந்தோ, தனியார் மருத்துவமனையோ, தனியார் பள்ளியோ,
தனியார் வங்கியோ நஷ்டத்தில் இயங்காது என்பது அதன் பின்னாலிருக்கும் மற்றொரு ஆபத்து.
அவர்களுக்கு லாபம் என்றால்தான் அவைகளை இயக்குவார்கள். இல்லையென்றால் யார் குடி எப்படிக்
கெட்டால் என்ன இழுத்து மூடி விட்டோ, திவால் நோட்டீஸைக் கொடுத்து விட்டோ போய்க்
கொண்டே இருப்பார்கள். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நஷ்டத்தில் இயங்கவும், லாபமின்றி
இயங்கவும் அரசுத்துறை நிறுவனங்களால் மட்டுமே முடியும்.
அதிலும் வங்கிகளைப் பொருத்த மட்டில்...
அமெரிக்காவில் ஒரு லேஹ்மன் பிரதர்ஸைப்
பார்த்தும் இப்படி ஒரு குரல் எழுகின்றது என்றால் வங்கிகள் திவாலாவதை விட காத்திருப்பு
என்பது சகிக்க முடியாததாக இருக்கிறது!
ஆனால், திவாலுக்குப் பின் வரிசையாக காத்திருப்பதைத்
தவிர வேறு வழியே இருக்காது. ஆக, இப்போதைய காத்திருப்பு என்பது கேள்விக்கும், கோஷத்துக்கு
உட்பட்டது என்றால், அப்போதைய காத்திருப்பு கேள்விக்கோ, கோஷத்துக்கோ அப்பாற்பட்டது.
*****
No comments:
Post a Comment