6 Jul 2019

அட்ரஸ் கொடுத்தா வந்துடுவீங்களா?



செய்யு - 137
            சென்னை சாலைகள் என்பவை யாரேனும் ஒருவர் யாதேனும் ஒரு முகவரியை விசாரித்துக் கொண்டு இருக்கும் அதிசயம் வாய்ந்தவை. இந்தச் சாலைகளுக்கு புதிது புதிதாக எங்கிருந்தோவெல்லாம் பரீட்சயமாகிக் கொண்டிருப்பவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி வருபவர்களைப் பற்றி இந்தச் சாலைகள் கண்டுகொள்ளுமோ என்னவோ! வருபவர்கள் அந்தச் சாலைகளைக் கண்டு கொண்டாக வேண்டியிருக்கிறது. அவர்கள் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். விசாரணையின் முடிவில் நல்ல வழி கிடைப்பதும், கிடைக்காமல் போவதும் அந்தச் சாலைவழிப் போனவரின் தலையெழுத்தா? அந்தச் சாலை எழுதிய தலையெழுத்தா? என்பது அவ்வளவு எளிதாக புரிந்து விடாதபடி இந்தச் சாலைகள் குழப்பி விடும் வகையில் சந்து சந்துகளாகப் பிரிந்து கிடக்கின்றன. எந்தச் சாலையின் வழியாக உள்ளே வந்தோம், எந்தச் சாலையின் வழியாக வெளியே போக வேண்டும் என்ற மனக்குழப்பம் மட்டும் இந்தச் சாலைகளில் நிரந்தரமாக படிந்து கிடக்கிறது.
            ஒரு புதிர் பாதையில் போய் திரும்பி வருவதைப் போலத்தான் இருக்கின்றன இந்தச் சாலைகள். சமயங்களில் விசாரித்துக் கொண்டு உள்ளே சென்ற பின்னும், மீள வருவதற்கு விசாரித்துக் கொண்டுதான் வெளியே வர வேண்டியதாக இருக்கும். இந்தச் சாலைகளைப் புரிந்து, அந்தச் சாலைகள் மனதுக்குப் பழகி ஒரு வாறாக குழப்பமில்லாமல் நடமாட சில வார காலங்கள் ஆகி விடுகிறது. சாலிகிராமத்தில் இருக்கிறது ராஜேஸ் சிந்தியாவின் வீடு இருக்கிறது என்பது தெரிந்து விசாரித்துக் கொண்டே செல்கிறான் விகடு. இந்தச் சாலைகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அடையாளம் வைத்துக் கொண்டு உள்ளே சென்று வெளியேற இந்தக் கட்டடக்காட்டில் ஒன்றா? இரண்டா? கட்டிடங்கள். உள்ளே போகப் போக வேட்டையாடும் சுவாரசியத்தில் வழிதவறிப் போன வேட்டைக்காரனின் நிலையாகி விடுகிறது.
            ராஜேஸ் சிந்தியாவின் வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினால் அவர் மனைவி வந்து கதவைத் திறக்கிறார். அப்படி ஒரு சிரித்த முகம். அவ்வளவு கனிவாகப் பேசி உள்ளே அழைக்கிறார். அவர் அப்படிப் பேசியதிலே பாதி காரியம் முடிந்த விட்டதாகத் தோன்றுகிறது. வீடென்றால் நல்ல பெரிய வீடு. தரையெங்கும் மார்பிள்ஸ். தரையிலேயே முகம் பார்க்கலாம் போல. அப்படியிருக்கிறது. "கொஞ்சம் உட்காருங்க! இதோ வந்துடறேன்!" என்று சொல்லி விட்டு ராஜேஸ் சிந்தியாவைக் கூப்பிட உள்ளே போகிறார் அவர். அந்த ஷோபாவில் உட்கார அரையடிக்கு கீழே உடம்பு உள்ளே போவது போல இருக்கிறது. அவ்வளவு சொகுசான சோபா உட்காருவதற்கு ஆசையாக பொசுபொசுவென்று இருக்கிறது.
            உள்ளேயிருந்த ராஜேஸ் சிந்தியா வருகிறார். வெளிர் பழுப்பு நிறத்தில் ஒரு பெர்முடாசும், மேலுக்கு ஒரு சாம்பல் நிற முண்டா பனியனும் போட்டிருக்கிறார். முகத்தில் பிரெஞ்சு தாடி. வசீகரமான மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கிறார். வயது முப்பதுக்குள் இருக்கும். யார் என்னவென்று தெரியாவிட்டாலும் சிரித்தபடி வந்து, "ஹலோ! எப்படி இருக்கீங்க?" என்றபடி கை கொடுக்கிறார். விகடு எழுந்து நின்று கை கொடுக்கிறான்.
            "நலம்தான் ஐயா! என் பெயர் விகடபாரதி!" என்றபடி விகடு கை கொடுக்கிறான்.
            "இன்னுமொரு பாரதி!" என்றபடி புருவங்களை உயர்த்தியவாறு பெரிதாகச் சிரிக்கிறார்.
            அவர் அப்படிச் சொல்லியது மனசுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது. ஒரு மாதிரியாக தலையை அசைக்கிறான் விகடு.
            "சொல்லுங்க! என்ன பண்றீங்க?" என்கிறார்.
            "திரைத்துறையில் பாடலாசிரியராக வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கிறேன். பத்திரிகைகளில் கவிதைகள் எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்!" என்கிறான் விகடு.
            "குட்! பட் நாட் பேட்! பத்திரிகைலேந்து சினிமாவுக்குப் போக ஆசைப்படுறீங்கன்னு நெனைக்கிறேன்! இங்கயிருந்து ஒங்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு தேவைப்படுது அப்படித்தானே!"
            அநேகமாக அது அப்படித்தான் என்றாலும், இதற்கு என்ன பதில் சொல்வது என்று விகடுவுக்குக் குழப்பமாக இருக்கிறது. அந்தக் குழப்பத்தைப் போக்கிக் கொள்ளும் வகையில் அவன் கவிதை எழுதி வைத்திருக்கும் கிங் சைஸ் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டுகிறான்.
            ராஜேஸ் சிந்தியா அதன் பக்கங்களை இப்படியும், அப்படியுமாக சில நொடிகள் புரட்டிப் பார்க்கிறார். "பேரு... ஏதோ பாரதின்னு..." என்று யோசிப்பவரைப் போல இழுக்கிறார்.
            "விகடபாரதி" என்கிறான் விகடு.
            "யெஸ்! விகடபாரதி! படிச்சுப் பாக்கிறேன். இதுல அப்படியே ஒங்க பேரை எழுதுங்க! இன்னிக்கு நான் கொஞ்சம் பிஸியா இருக்குறேன். நைட்டுக்குள்ள ஒரு ஆர்ட்டிகிளை முடிச்சாகணும். நீங்க இப்போ கிளம்பிட்டு நாளைக்கு மே பீ இதே டயத்துக்கு வர முடியுமா?" என்கிறார்.
            "அப்படியே ஆகட்டுங்கய்யா!" என்றபடி அந்த நோட்டின் முதல் பக்கத்தில் பேரை எழுதி அவரிடம் நீட்டுகிறான். அவர் வாங்கிக் கொள்கிறார்.
            "ரொம்ப நன்றிங்கய்யா!" என்று சொல்லி விட்டு விகடு கிளம்புவதற்குள் அவரது மனைவி காபியுடன் வருகிறார். ராஜேஸ் சிந்தியா சிரித்துக் கொண்டே, "காபி சாப்பிட்டுப் போங்க! எனக்கு வேல கொஞ்சம் அர்ஜென்ட்! முடியல. பட் முடிச்சாகணும்." என்று கண்களில் ஒரு கெஞ்சலான பார்வையோடு சொல்லி விட்டு உள்ளே போகிறார்.
            விகடு காபியைச் சாப்பிட்டு விட்டு "ரொம்ப நன்றிங்க!" என்று அவரிடமும் சொல்லி விட்டுக் கிளம்புகிறான். பல பத்திரிகை ஆபீஸ்களுக்கு அலைந்ததால் கிடைத்த நன்மை இதுவென்று நினைத்துக் கொள்கிறான் விகடு. எத்தனையோ பத்திரிகை ஆபிஸ்களில் அவநம்பிக்கையான பதில்கள் கிடைத்தாலும், ஒரு நம்பிக்கையான வழியைக் காட்டவும் சில பத்திரிகை ஆபீஸ்கள் இருக்கத்தான் செய்கின்றன. பல அவநம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அலையும் போதுதான் ஒரு நம்பிக்கையைப் பிடிக்க முடிகிறது. ஒரு நம்பிக்கையை நம்பிக் கையைப் பிடிப்பதற்குள் நூறு அவநம்பிக்கைகளின் கைகளைப் பிடித்துக் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆயிரம் தடவை இப்படி அலுக்காமல் அலைந்தால்தான் ஒரு விளைச்சலைப் பார்க்க முடிகிறது. ஆக அலையாமல் எதுவும் ஆகாது. இப்படியெல்லாம் விகடுவுக்குள் சிந்தனைகள் ஓடுகின்றன.
            இந்த விசயத்தை வந்து பூரணலிங்கத்திடமும், லெனினிடமும் சொன்னால் அவர்களுக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.
            "கொஞ்சம் பத்திரிகையில பேரு வந்தா... அது சினிமாவுல சான்ஸ் கேட்கிறப்ப ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்!" என்கிறார் லெனின்.
            "ஒரு ரைட்டருக்கு பத்திரிகைப் பிரசுரம் ரொம்ப முக்கியம்! அதனால நாளைக்கி அவர பாக்கப் போறப்ப நாங்களும் வாரோம்!" என்கிறார் பூரணலிங்கமும்.
            ஒரு மாற்றம் உண்டாகி விட்டது போலத்தான் தோன்றுகிறது விகடுவுக்கு. இரவு வந்து செய்தி கேள்விபட்டு இதயச்சந்திரனும் வருகிறேன் என்கிறார்.
            எல்லாருமாக மறுநாள் அந்தப் பொன்மாலைப் பொழுது வேளையில் சூளைமேட்டிலிருந்து கிளம்பி சாலிகிராமத்தில் ராஜேஸ் வைத்தியாவின் வீட்டின் முன் போய் நின்று அழைப்பு மணியை அழுத்தினால்... நேற்று வந்தது போலவே அவர் மனைவி வந்து கதவைத் திறக்கிறார்.
            அவருக்கு விகடுவின் முகம் பரீட்சயம் ஆகியிருக்கும் போல. அதே சிரித்த முகம், கனிவான பேச்சோடு உள்ளே அனைவரையும் வரவழைத்து உட்காரச் சொல்கிறார். "இருங்க அவர்ட்ட சொல்லிட்டு வர்ரேன்!" என்று உள்ளே போகிறார்.
            போன வேகத்தில், "எல்லாருக்கும் காபி ஓ.கே?" என்றபடி வெளியே வந்து சமையல்கட்டுப் பக்கம் போகிறார்.
            "ரொம்ப நாளா டீ அடிச்சி அடிச்சி ஒரு மாதிரியா போயிட்டுப்பா! இன்னிக்குதான் லைப்ல ரொம்ப நாளைக்கு அப்புறம் காபி அடிக்கப் போறேன்! அதுவும் ஒரு வீட்டுக் காபி!" என்கிறார் பூரணலிங்கம்.
            "விகடுவுக்கு மட்டும் இதுல சான்ஸ் கெடைச்சிடுச்சின்னா அதுக்கப்புறம் நோ டீ! ஒன்லி காபிதான்!" என்கிறார் இதயச்சந்திரன்.
            "ஒனக்கு டயம் ஒர்க் அவுட் ஆகுதுப்பா விகடு! அப்பிடியே பிடிச்சிட்டு மேல போயிடு! நாங்களும் அப்படியே ஒன்னய பிடிச்சிட்டு அப்படியே மேல வந்துடறோம். எம் மெட்ராஸ் லைப்ல இது மாரி கூப்பிட்டு உக்கார வெச்சல்லாம் யாரும் காபி கொடுத்ததில்ல. ஒம் மூலமா நமக்கு அப்படி ஒரு சான்ஸ் கெடைக்கணும்னு இருந்துருக்கு! ‍ஷோபா செமத்தியான ஷோபாயில்ல!" என்கிறார் லெனினும்.
            இப்படியெல்லாம் பேசிக் கொண்டே, ராஜேஸ் சிந்தியா எப்போது வருவார் என்று எல்லாரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
            ராஜேஸ் வைத்தியா வேட்டி கட்டிக் கொண்டு வருகிறார். மேலே ஒரு டீஷர்ட் மஞ்சள் நிறத்தில். முகத்தில் ஒரு அசதியும், களைப்பும் தெரிகிறது. வசீகரமான கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்துக் கொள்கிறார். அவர் வருவதைப் பார்த்ததும் இவர்கள் எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள்.
            கூட்டத்தைப் பார்த்து மருண்டு விட்டாரோ என்னவோ! கூட்டம் என்றும் சொல்ல முடியாது. நான்கு பேர்தான்.
            "ஒங்களுக்கெல்லாம் வேற வேலயில்ல! யாருய்யா நீங்க? இப்படி எப்ப பாத்தாலும் வந்து தொந்தரவு பண்ணா எப்படிய்யா வேல பாக்கிறது? எப்படி ஒங்களுக்கு அட்ரஸ் தெரியும்? யாரு அட்ரஸ் கொடுத்தாலும் கெளம்பி வந்துடறதா? நான்சென்ஸ்! இடியட்ஸ்! கெட் அவுட் ஐ சே!" என்கிறார் ராஜேஸ் சிந்தியா.
            நேற்றுப் பார்த்த ராஜேஸ் சிந்தியாவா இவர்? அல்லது இன்று பார்க்கும் இவர்தான் ராஜேஸ் சிந்தியாவா? என்று குழப்பமாக இருக்கிறது விகடுவுக்கு. எல்லாருக்கும் ஒரு மாதிரியாகப் போய் விட்டது. எழுந்து வெளியே வந்து விடுவதுதான் மரியாதை என்பது போல படுகிறது. முகத்தில் அடித்து கிளப்பி விட்டதைப் போல எழுந்து எல்லாரும் வெளியே வருகிறார்கள். சிந்தியா உள்ளே போகிறார். அவரது மனைவி அவசர அவசரமாக வெளியே வருகிறார்.
            "எந்த நாயிங்க வந்தாலும் கதவத் தொறந்து நடுவூட்டுல உக்கார வெச்சிடறது! ரிடிகுலஸ்!" என்ற ராஜேஸ் சிந்தியாவின் குரல் மெல்லமாக காதுகளில் வந்து ஒலிக்கிறது.
            "சாரி! ஏதும் தப்பா நெனச்சுக்காதீங்க!" என்றபடி கண்களால் கெஞ்சுகிறார் அவரது மனைவி.
            இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் முன்னே சாலையையும் பார்க்க முடியாமல், பின்னால் அவரையும் பார்க்க முடியாமல் ஒரு மாதிரியாக முன்‍னே பின்னே என்று குழப்படியாக அவரைத் திரும்பிப் பார்த்தபடி நடக்கத் தொடங்குகிறார்கள் நான்கு பேரும்.
            "எம் மெட்ராஸ் லைப்ல இந்த மாரி அவமானப்பட்டதில்ல!" என்கிறார் லெனின்.
            "என்னமோ பெரிய பருப்பு மாரில்ல பேசுறான். அப்புடி இவன் என்ன பெரிசா புடுங்கிருக்கான்னு தெரியலீயே! அட்ரஸ் கொடுத்தா வந்துடுவீங்களாங்றான்? அதுக்குதானாட அட்ரஸ்! வேற எதுக்கு அட்ரஸ்?" என்கிறார் இதயச்சந்திரன்.
            "வெகடு! இதயெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க! மெட்ராஸ்னா இப்படித்தான். அடுத்தத ஆக வேண்டியதப் பார்க்கணும்! ஆனாலும் அந்த நரம்பு ஒடம்புக்கு மண்டயில இவ்ளோ திமிரு ஆகாதுடா சாமி!" என்கிறார் பூரணலிங்கம்.
            அடுத்து ஆக வேண்டியது என்றால்... உருப்படியான கவிதைகளோ, உருப்படியற்ற கவிதைகளோ? ராஜேஸ் சிந்தியாவிடம் கொடுத்த நோட்டை எப்படி வாங்குவது? என்று யோசனையாக இருக்கிறது விகடுவுக்கு. மறுபடியும் இப்படிப் போய் திட்டு வாங்கி அசிங்கப்படுவதா? இப்படி அசிங்கப்படுவதற்கு அஞ்சி போகாமல் இருந்த விடுவதா?
            அந்த யோசனையோடே நடந்து வந்தால்... சூளைமேட்டு ரூம் வீட்டுச் சந்தில் ரவிநாயகம் அழைத்துக் கொண்டு வரச் சொன்னதாக சரீரம் கனத்த ஒருத்தர் வெள்ளை வேட்டியும், சட்டையுமாக நிற்கிறார்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...