24 Jul 2019

மூன்று '0'கள்



1.0
            தூர்க்கப்பட்ட அந்த கிணற்றின் மேல்தான் பச்சமுத்து பெட்டிக்கடை வைத்திருக்கிறார். பெட்டிக்கடையில் விற்பதற்காக தண்ணீர் பாட்டில்களை எடுத்து வரிசையாக அடுக்கி வைக்கிறார். கிணறு எழும்பி வந்து பாட்டில்கள் வடிவில் பேயாய்ப் பிசாசாய் நிற்பது போல பயமாக இருக்கிறது. மக்கள் பயப்படாமல் காசைக் கொடுத்து பாட்டிலை வாங்கி தண்ணீர் குடித்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
*****
2.0
            மழை வேண்டி யாகம் செய்கிறார்கள். பிரார்த்தனைப் பண்ணுகிறார்கள். நன்றாக செய்ய வேண்டியதுதான். யாகத்தோடு யாகமாக நூறு மரக்கன்றுகளை நடுவது, பிரார்த்தனையோடு பிரார்த்தனையாக நட்டு வைத்திருக்கும் மரக்கன்றுகளுக்கு ஆளுக்கொரு வாளி தண்ணீர் ஊற்றுவது என்றிருந்தால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருக்கும். யாகம் செய்வதற்கு மரக்குச்சிகளுக்காகவது வருங்காலத்தில் மரம் வேண்டுமே! பிரார்த்தனைச் செய்யும் ஆலயங்களின் தலவிருட்சத்துக்காவது ஒரு மரம் வேண்டுமே! வருங்காலத் தலைமுறைக்கு ஒரு மரத்தடியைத் தயார் செய்யாமல் ஏ.சி. ரூமுக்கடியில் நாம் உட்கார்ந்திருப்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நிலைமை அப்படியே வருங்காலத்தில் உல்ட்டாவாகி மரத்தடியில் அஞ்சு நிமிஷம் உட்கார்ந்திருப்பதற்கு அஞ்சு லட்சம் என்று கணக்குப் பண்ணி சினிமா கொட்டகையில் உட்கார்ந்து சினிமா பார்க்க வைப்பதைப் போல காசுதான் வாங்கப் போகிறார்கள்!
*****
3.0
            புத்தரை விமர்சித்து அநேகக் கவிதைகள் வருகின்றன. அவரே எதையும் கூர்மையாக விமர்சிப்பவர்தான். மிகக் கூர்மையான தர்க்கத்தால் தாக்குவதில் அவருக்கு நிகர் அவரே. மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் கொள்ளாமல் காட்டுக்குப் போய் விட்டார் என்பது அவர் மேல் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. புத்த மார்க்கத்தைக் கண்டறிந்த பிறகு அவர் மனைவியைச் சந்திப்பதைத் தவிர்க்கவோ மறுக்கவோ விரும்பவில்லை. புத்த மார்க்கத்தில் பெண்களைச் சேர்ப்பதில் அவர் காட்டிய நீண்ட தயக்கம் மற்றொரு குற்றச்சாட்டை அவர் மேல் வைக்கிறது. இவைகளைக் குற்றசாட்டுகளாகச் சொன்னால் அதை அவரே ஏற்றுக்கொள்ளக் கூடியவர்தான். அதற்காக அவரைக் குற்றவாளிக் கூண்டில் வைத்து விசாரிப்பதைப் போல கவிதை விசாரணை செய்வதைப் பார்க்கும் போது இறப்பிற்குப் பின்னும் புத்தர் எந்த அளவுக்குப் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்த கொள்ள முடிகிறது. அவர் தன் காலத்துக்கு ஏற்ற தன்னால் இயன்ற ஒரு மார்க்கத்தை ஓர் இயக்கமாகவே உருவாக்கிக் காட்டி விட்டார். அவரை அந்தளவுக்கு விமர்சிப்பவர்கள் அப்படி எதைச் செய்யப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...