27 Jul 2019

சைக்கிள் டியூப் ரிப்பன்காரன்



செய்யு - 158
            முருகு மாமாவின் மகன் ரகு வேலைக்குச் சேர்ந்த ரெண்டு மாதத்திலேயே அதுக்கு உடம்பில் சர்க்கரை ஏறியிருந்தது. ரகு மாமாவின் போக்கு சித்தன் போக்கு சிவன் போக்குதாம். முருகு மாமாவுக்கு அப்படி ஒரு பிள்ளை இருக்கிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பொதுவாக ரகு வீடு தங்காது. வீடு தங்கினாலும் பாயும் தூக்கமாகத்தான் இருக்கும். யாருக்கும் கட்டுபடாது. உருவம் என்று பார்த்தால் சுமாரான உயரம், மாநிறமான உடம்பு. மனசுக்குள் அசாத்திய துணிச்சல்.
            யாரும் ஒரு வார்த்தை ரகுவிடம் இதை அப்படிச் செய்யலாமே, அதை இப்படிச் செய்யலாமே என்று சொல்லி விட முடியாது. "அதாங் இதை அப்டிச் செய்யலாமே! அதை இப்டிச் செய்யலாமேன்னு நீயே சொல்றீயே! அப்புறம் அந்த கருமத்த நீயே செஞ்சு தொலைக்க வேண்டியதுதானே! ஒனக்கு என்ன ஒரு வேலையாளு! இப்டி சொல்றதுக்குன்னே அஞ்ஞயிருந்து இஞ்ஞ வேல மெனக்கெட்டு கிளம்பி வந்தீயா? ஒனக்கெல்லாம் வேற வேல வெட்டி யில்ல! வந்துட்ட இப்டி!" என்று ஒரே போடாய்ப் போடும். இதனால் "ஒரு வேலை வெட்டிக்குப் போகக் கூடாது! இப்டி தடி மாடு கணக்கா வயசாகுதே!" என்று அதன் இருபத்தொன்பது, முப்பது வயது வரைக்கும் யாரும் கேட்க முடியாமல் போய் விட்டது.
            லாலு மாமா ஒரு முறை கேட்டுப் பார்த்தது, "ஏம்டா இப்டிச் சும்மா கெடக்குறதுக்கு கடெ கண்ணிக்கு டவுனு பக்கத்துல ஒரு வேலைக்கிப் போனா ன்னா?" ரகு மாமாவுக்கு லாலு மாமாவைப் போட்டுப் பொளக்க நல்ல வாய்ப்பாகப் போய் விட்டது.
            "ஏத்தோ ஒம் நேரம் ஒனக்கு ஒரு வேலெ கெடச்சி, வேலயில இருக்குற பொம்மனாட்டியும் பொண்டாட்டியா கெடச்சிட்டுன்னு பேசுறீயா? ஒனக்கு ஒம் பொண்டாட்டிக்கு வேலெ போட்டுக் கொடுத்தாம் பாரு அவனெ சொல்லணும். ரெண்டு பேரும் பள்ளியோடத்துலப் போயி ன்னா வேலெ பாக்குறீங்கன்னு தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கீயா? ஒரு நாளு ஒரு வார்த்த சொல்லி பாடம் நடத்தியிருப்பீயா? வயல்ல நடக்கற வேலெ கணக்க நோட்டுல எழுதி வெச்சிட்டு அததாம்ல பாத்துட்டு இருப்பே! ஒம் பொண்டாட்டிக்கு உக்கார்றதுக்கு நாற்காலி பத்தாது. மூச்சு வுட ஒடம்புக்கு முடியாது. பெறவு அது எங்க பேசுறது? பாடம் நடத்துறது? நமக்கு ன்னா தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கீயா? இவ்ளோ புத்திச் சொல்ல வாரில்ல! ஏம் ஒம் பொட்டப் புள்ளைக ரண்டையும் ந்நல்லா புத்திச் சொல்லி படிக்க வெச்சா ன்னா? ஊரு மேய வுட்டுட்டு நாடுமாறி கணக்கா திரியுறே? இன்னும் ஒம் வண்டவாளம்லாம் நமக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கீயா ன்னா? அவித்து விட்டேன்னா வெச்சுக்க வேற்குடியில மட்டுமில்ல, வடவாதியிலும் நாறிப் போயிடுவே நாறி! வந்தீயா ரண்டு வா டீய குடிச்சியான்னு போய்ட்டே இருக்கணும். புத்திச் சொல்லிட்டு நின்னே சித்தப்பான்னு பாக்க மாட்டேம்! செத்தப்பாவ ஆக்கிப் புடுவேம்!" என்று ரகு போட்ட போட்டில் கப்சிப் ஆனதுதான் லாலு மாமா.
            ரகுவால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லைதாம். யார் விசயத்திலும் தலையிடாதுதாம். அதே நேரத்தில் அதன் விசயத்திலும் யாரும் தலையிடக் கூடாது. கையில் காசிருந்தால் பஸ்ஸில் ஏறி டவுனுக்குப் போய் விடும். ஓட்டலில்தான் காசு கரையும் வரை சாப்பிடும். டவுனில் சாப்பிடுவதற்கு என்றே பஸ் ஏறிப் போய் வந்த ஒரே ஆள் ரகு. அப்படி மிலிட்டரி ஓட்டலில் கறியும், மீனுமாகச் சாப்பிடப் போய்தான் எப்படியோ குடிப் பழக்கம் ஒட்டிக் கொண்டு விட்டது அதுக்கு. குடித்து விட்டு டவுன் கடைவீதிகளில் எங்கேயாவது விழுந்து கிடக்கும்.
            அப்படி விழுந்து கிடக்கும் ரகுவைப் பார்த்து, ஐயோ நம்ம ரகு இப்படி குடிச்சிட்டுக் கெடக்கே என்று தூக்கிப் போட்டுக் கொண்டு வந்து விட முடியாது. "நாந்தாம் குடிச்சிட்டுப் படுத்திருந்தேன்லே! ஒன்னய ஏதாவது தொந்தரவு பண்ணேனா? சிவனேனே நாம்ம விழுந்து கெடந்தா ஒனக்கு ன்னாடா? ன்னா மயிருக்கு நம்மள தூக்கிட்டு வந்தே? மறுபடியும் மரியாதியா ஆட்டோ பிடிச்சி டவுனுக்கு அழச்சிட்டுப் போயி நம்மள குடிக்க வெச்சி அத்தே லெவல்ல அத்தே எடத்துல படுக்க வையுடா போக்கத்தப் பயலே! ஒனக்குப் பொண்டாட்டிப் புள்ளே இருந்தா அத்தே போயிப் பாரு! எதுக்கு நம்மள பாக்கறே! இந்த நலவிரும்பி வேலயல்லாம் இன்னொரு தடவ பார்த்தே நாம்ம ஒன்னோட கொலவிரும்பியா மாறிடுவேம் பாத்துக்க! ன்னா குடிச்சிட்டு கெடந்தான்னு தூக்கிட்டு வந்து ஊரெல்லாம் குடிகாரம்னு நமக்குப் பேரு வாங்கித் தர்றீயா? ஆமாம்டா நாம்ம குடிகாரம்தாடா! அதால ஒங் குடி ன்னாடா கெட்டுச்சி! ...." என்று அதற்கு மேல் சொல்ல முடியாத அளவுக்கு நாராச வார்த்தைகளைப் போட்டு போதை தெளிந்ததும் பேச ஆரம்பித்து விடும். ஆட்டோவில் தூக்கிக் கொண்டு வந்து போட்டவன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்தால்தான் மறுஜென்மத்திலாவது அவனுக்கு நிம்மதியான தூக்கம் வரும். மற்றபடி ரகு யாருக்கும் எந்த தொந்தவும் கொடுக்காது. அதற்கும் யாரும் எந்தத் தொந்தரவும் கொடுக்கக் கூடாது. ஆகாரம் இல்லையென்றாலும், "பசிக்குதே! சோறு போடுங்க!" என்று கெஞ்சல் பார்வை பார்க்காமல் கூட அப்படியே படுத்துக் கிடக்கும். "இப்டி பசியா கெடக்கீயே!" என்று கூப்பிட்டுப் போட்டால்தான் சாப்பிடும்.
            ஓயாத குடி அதன் உடம்பையே மாற்றியிருந்தது. அத்துடன் சர்க்கரை நோயும் சேர்ந்து கொண்டதில் உடம்பு இளைத்து துரும்பாய்ப் போயிருந்தது. அதன் உடம்பில் ரத்தம் ஓடுகிறதா? ஆல்கஹால் ஓடுகிறதா? என்று அதைச் சோதித்துப் பார்த்த மருத்துவரே மருண்டு போனதுதாம் மிச்சம். "இந்த லெவல்ல குடியை நிப்பாட்டுன்னா கூட பொழச்சிக்கலாம்!" என்று சொல்லியிருக்கிறார் மருத்துவர். ரகுவுக்குதாம் அது மாதிரி சொன்னால்தான் பிடிக்காதே! "பொழச்சி ன்னா பண்ணப் போறேம்? ஒங்கிட்ட வைத்தியம் பாத்துட்டே ஒமக்கு மாசா மாசம் கொட்டி அழுதுட்டு இருக்கணும் அதாங்ல! யோவ் ஒங்கிட்ட வந்தா அதுக்கு ஏத்தா போல வைத்தியத்த பாப்பியா! ச்சும்மா குடிய நிப்பாட்டு, புகை வுடுறத நிப்பாட்டுன்னுகிட்டு! அதயெல்லாரும் நிப்பாட்டிட்டா நீயில்லாம் எப்டிப் பொழப்பே? ஒம்ம மாரி படிச்சவங்க பொழக்கணும்னுதாய்யா நாட்டுல குடியைத் தடெ பண்ணாம, புகைக்குறத தடெ பண்ணாம வெச்சிருக்காங்க! குடிக்குறத நிப்பாட்டுன்னா எந்த வெயாதியும் வராதுன்னு நினைச்சிட்டு இருக்கீயா? குடியை நிப்பாட்டிட்டு அந்த வெயாதியெல்லாத்தியும் நிப்பாட்டிக்க நமக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கீயா? டாக்கடருக்குதாம்ல படிச்சிருக்கே! இதுக்கு என்ன வைத்தியம் பாக்கணுமோ அதெப் பாரு! வியாக்கியாணம் பண்ணாத! ஒம்மால முடியலன்ன சொல்லு நாம்ம வேற டாக்கடர்ர பாத்துக்கிறேம்!" என்று ரகு வளைத்துக் கட்டியதில் பாவம் டாக்டர் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாமல் ஏதோ மருந்த மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விட்டு கையெடுத்துக் கும்பிடு போட்டு விட்டு அனுப்பி விட்டு விட்டார்.  
            நாளுக்கு நாள் குடி அதிகமாகிப் போனதில் குடித்தால்தான் நடுக்கமில்லாமல் இருக்க முடியும் என்று நிலைக்கு ஆளாகி விட்டது ரகு. ஒரு நாளைக்கு நானூறு, ஐநூறுக்குக் குடித்தால் எல்லா நாளும் குடிக்க காசு எப்படி இருக்கும். ரகுவிடம் இருந்த நல்ல பழக்கம் என்றால் குடிக்க காசு இல்லா விட்டால் அது பாட்டுக்கு சைக்கிள் டியூப்பை ரப்பர் பேண்டுகள் போல் வெட்டி வைத்துக் கொண்டு கை, கால்களில் வரிசையாக மாட்டிக் கொண்டு அப்படியே சுருண்டு கொள்ளும்.
            "ஏம்டா ரகு இப்டி கையி புல்லா வளையலு கணக்கா சைக்கிளு டியூப்பை வெட்டி வெச்சு மாட்டிருக்கே?" என்றால், "நடுக்கம் தாங்க முடியல! கை காலு வெலவெலன்னு வருது! நரம்புலாம் இழுக்குது. இப்டி மாட்டிகிட்டதாம் தேவலாம் போலருக்கு! ன்னம்மோ பண்ணுது! உள்ளுக்குள்ள யாரோ உக்காந்துட்டு ரத்தத்த உறியுறாங்க! நரம்ப பிடிச்சி இழுக்குறாங்க! இதயத்து மேல ஏறி மிதிக்கிறாங்க! முடியல அதாங்!" என்றபடி முணகிக் கொண்டு கிடக்கும். அப்படிக் கிடக்கும் போது மட்டுந்தாம் ரகுவிடம் இப்படி சாந்தமான பேச்சைக் கேட்க முடியும். அதைப் பார்க்கும் போது நமக்கே காசைக் கொடுதுது குடித்து விட்டு வந்து படு என்று சொல்லலாம் போல ஆகி விடும்.        ரகு சில நாட்களில் ஓவராகக் குடித்து, சில நாட்கள் குடிக்காமல் கிடந்து, சர்க்கரை அளவையும் கவனிக்காமல் விட்டதில், கால் பெருவிரலில் புண் வந்து புரையோடிப் போனது.
            திருவாரூர் ‍தெற்கு வீதியில் சர்க்கரைக்கு என்று இருந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் தூக்கிக் கொண்டு போனால் அவர் என்னென்னமோ மாத்திரைகள் எழுதிக் கொடுக்கிறார், காலில் மருந்தை வைத்து கட்டி விடுகிறார். குடி ரொம்ப அதிகமாகப் போனதால் எந்த மருந்துக்கும் சுகர் கட்டுப்பட மாட்டேன்கிறது. கால் வேறு விரல் பகுதியில் அழுகிக் தொங்குவது போல ஆகி விட்டது. அதிலிருந்த வரும் நாற்றத்திற்கு நூறடி தூரத்திற்கு ஆள் நிற்க முடியாதது போலிருக்கிறது. அது அப்படியே புரையோடிப் புரையோடி வேறு முன்னேறி வருகிறது.
            ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் காலை எடுப்பதுதான் நல்லது என்கிறார். இந்த இடத்தில்தான் ரகு விழித்துக் கொண்டது போல டாக்டரிடம் பேசுகிறது, "கால்ல எடுக்குறதுக்கு நீ ன்னாடா டாக்கடரு? ஒனக்கு இப்படிதாம் பாடஞ் சொல்லிக் கொடுத்தாங்களா? நீ படிக்குறப் புத்தகத்துல இப்படிதாம் எழுதி இருக்கா? எல்லே இது சாதாரண புண்ணுடா? வழிச்சி விட்டு மருந்து போட்டா சரியாயிடும்டா வெளக்கெண்ணப் பயலே! நம்ம காலயும் எடுத்து அந்தாண்ட போட்டுட்டு, காலெ எடுத்ததுக்கு காசும் வாங்கி கல்லால போடுறதுக்குப் பாக்குறதுக்கு நீயி நிக்குறே?" என்று ரகு எடுத்து விட்ட பாட்டில், டாக்டர் "ஆஸ்பிட்டலை விட்டு வெளியே போங்கடா!" என்று போட்ட சத்தம் திருவாரூரைத் தாண்டி தஞ்சாவூரு வரை கேட்டிருக்கும்.
            "ன்னா ஒனக்கு மட்டுந்தாம் சத்தம் போடத் தெரியுமா? கிழிச்சிப் புடுவேம் கிழிச்சி! கன்ஷ்யூமர் கோர்ட்டுல கேஸ் போட்டேன்னா வெச்சிக்க கிளினிக்கே ல்லாம போயிடும்! நீயி டிரிட்மெண்ட் பண்ண எல்லா காயிதத்தயும் பத்திரமாத்தாம் வெச்சிருக்கேம்!" என்று தன் கை பையிலிருந்து காகிதத்தை உருவி ரகு காட்ட டாக்டருக்கு சுகர் ஏறாத அல்லது இறங்காத குறையாக கிட்டினெஸ் ஆகி விட்டது. டாக்டர் அப்படியே ஆடிப் போய், மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று பவ்வியமாய் நின்றிருக்கிறார். "பில்லுன்னு பைசா காசி தர மாட்டேம்! இத்தே எப்டி கொணம் பண்றதுன்னு தெரியும். ஒரு ஆம்புலன்ஸ மட்டும் காரைக்காலு வரிக்கும் ஏற்பாடு பண்ணிக் கொடு. ஆம்புலன்ஸ்க்கும் பைசா காசி கொடுக்க மாட்டேம். காரைக்காலுல்ல போயிச் சரி பண்ணிக்கிறேம்!" என்றது ரகு. இப்படி டாக்டர் காசில் காரைக்கால் போய் கால் பெருவிரலை மட்டும் எடுத்துக் கொண்டு குணமாகி வந்தது ரகு. கால் பெருவிரலை எடுத்தது தெரியாத அளவுக்கு ஷூ போட்டுக் கொள்ள ஆரம்பித்தது ரகு. இப்போதுதான் ரகுவின் குடி கொஞ்சம் மட்டுப்பட ஆரம்பித்தது.
            ரகு இப்படியாக இருந்த காரணத்தால் என்னவாகியிருக்கும் என்று உங்களுக்கே தெரியாதா? ரகு ஆலைக்கு வேலைக்குப் போன நாட்களை விட வேலைக்குப் போகாத நாட்கள் அதிகமாக இருந்தன. ரகுவை வேலைக்குச் சொல்லி விட்ட சூப்பர்வைசருக்கு கெட்டப் பெயர் ஆனதுதான் மிச்சமானது.
            ரகுவை வேலையை விட்டே தூக்கி விடலாமா என்று நிர்வாக அளவில் யோசிக்கப்பட்ட போது முருகு மாமா படார் படாரென்று எல்லார் கால்களில் விழுந்து பீதியைக் கிளப்பியது. "என்னய்யா இது! முடி நரைச்ச வயசான மனுஷன் இப்படி பொத்து பொத்துன்னு எல்லார் கால்லயும் விழுறானே! கூப்பிட்டு அவம் மவனெ கண்டிச்சு விட்டுத் தொலைங்க! இப்படி ஆயுசுக்கு நாலு கேஸூங்க பேக்டரிக்கு வந்து சேர்ந்திடுது. ஒண்ணும் பண்றதுக்கில்ல!" என்று மேலே இருந்தவர்கள் கொஞ்சம் தாட்சண்யம் காட்டிய பின்புதான் முருகு மாமாவுக்கு சரட் சரட்டு என்று இழுத்துக் கொண்டிருந்த மூச்சு ஒரு நிதானத்துக்கு வந்தது.
            ஒரு விதமாக ரகுவின் விசயத்தில் நிதானத்துக்கு வந்த அதன் மூச்சை நிதானமில்லாமல் அடிப்பதற்கென்றே...
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...