ஓட்டையை உருவாக்காத ஓட்டு!
அப்படி நினைத்துதான்
நாம் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். அவர்களோ பேசித் தீர்க்க
வேண்டிய மக்கள் மன்றங்களில் கூச்சல், குழப்பம், களேபரம் என்று அமளி துமளி செய்கிறார்கள்,
வெளிநடப்பு செய்கிறார்கள்.
பிரச்சனையைப்
பேசித் தீர்க்கலாம் என்று சங்கம் அமைத்து, அந்தச் சங்கத்துக்குள்ளேயே ஆயிரம் பிரச்சனை
என்றால் என்ன செய்வது சொல்லுங்கள்!
ஆக நம் பிரதிநிதிகள்
பலரும் நம்மிடம்தான் பிரச்சனையை உருவாக்குமாறு பேசித் தீர்க்கிறார்களே தவிர, பிரச்சனையைத்
தீர்க்குமாறு அவர்களுக்குள்ளாக எதுவும் பேச யோசிக்கிறார்கள்.
அப்படிச்
செய்வதன் மூலம் பேச்சின் மூலமாக வெளிவர வேண்டிய எவ்வளவோ கனபரிமாணங்கள் பரிணாம வளர்ச்சி
அடையாமலேயே போய் விடுகின்றன.
பேச்சைக்
குலைப்பதன் மூலம் அதன் பின்னணியில் ஒரு நிழல் உலகம் இயங்குகிறது என்றால் அதை எப்படிப்
புரிந்து கொள்வது?
ஒரு காப்புக்குத்தான்
வேலி. அந்த வேலியே நம்மை மேய்ந்து கொண்டிருந்தால்... வேற வெளி வேலி வந்து நம்மை மேயவில்லை,
நம் வேலிதான் நம்மை மேய்ந்து கொண்டிருக்கிறது என்று நாம் ஆறுதல் பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அத்துடன்
"ஆமாம் போ! எவனோ ஒருத்தன் வந்து தின்னுட்டுப் போறதுக்கு நமக்குத் தெரிஞ்சவன்
ஒருத்தன் தின்னுட்டுப் போகட்டும்!" என்று நமக்கு நாமே பேசி ஆறுதல் பண்ணிக் கொள்ள
வேண்டியிருக்கிறது.
நம்மை மூலதனமாக்கி,
நம் ஓட்டுகளை மூலதனமாக்கித்தாம் அவர்கள் தங்களின் மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கேட்டால் நாம் விற்கும் ஓட்டுகளுக்கு மூலதனத்தைத் தயார் செய்து கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.
நாம்தான்
காசு பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதோ வாங்கி விடுகிறோம் என்றால் அவர்களுக்கு என்ன ஏழு
தலைமுறைக்குச் சுருட்டிக் கொண்டு அதற்கு மேலும் காசு பணத்துக்கு ஆசைப்பட்டு சுருட்டிக்
கொண்டிருக்கிறார்கள் என்றால்... நம் விதிகளில்தான் எங்கோ குறை இருக்கிறது! அதாவது
காசு பணம் வைத்திருப்பவன் செய்தால் அது குற்றமில்லை என்பது போலவும், காசு பணம் இல்லாதவன்
செய்தால் அது குற்றம் என்பது போலவும் எங்கோ தப்பித்துப் போக ஓட்டை இருக்கிறது. அந்த
ஓட்டையையும் நமது ஓட்டைக் கொண்டே உருவாக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும்
போதுதான் நமது ஓட்டை எவ்வளவு கவனம் எடுத்துச் செலுத்த வேண்டும் என்பது புரிகிறது இல்லையா!
*****
No comments:
Post a Comment