எங்கு போனாலும் செல்பி எடுத்துக் கொள்வது
அனிச்சைச் செயல் போலாகி விட்டது. ஒவ்வொரு சடங்கும், சம்பிரதாயமும், நல்லதும், கெட்டதும்
செல்பி எடுத்த பின்பே முழுமை பெறுகின்றன.
பிறந்த நாளில் செல்பி, இறந்த நாளில் செல்பி,
கல்யாணத்தில் செல்பி, கருமாதியில் செல்பி, மனமொத்து வாழும் போது செல்பி, மனமொத்துப்
பிரியும் போது செல்பி, நல்லவிதமாக வீடு வந்தால் செல்பி, ஆக்சிடென்ட் ஆகி விழுந்து
கிடந்தால் செல்பி, விருந்துக்குப் போனால் செல்பி, வயிற்றுப் போக்குப் போனால் செல்பி
என்று செல்பிக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.
செல்பேசிகள் செல்பிகளால் நிறைந்து வழிகின்றன.
மெமரி பிரச்சனைகள் அதிகம் வந்து சேர்கின்றன. நடுத்தெரு மச்சான் கல்யாணத்துக்குப் போனோமா,
இல்லையா என்ற சந்தேகம் வரும் போது செல்பிக்களைத் தோண்டும் போது, சுற்றிச் சுற்றிக்
காக்க வைத்து திறக்கும் செல்பிப் போட்டோக்களைப் பார்த்துதான் தெளிவு பண்ண வேண்டியதாய்
இருக்கிறது.
'இறைவா! கொடூரமான என் எதிரிகளிடமிருந்து
என்னை நானே காப்பாற்றிக் கொள்கிறேன்! செல்பி எடுத்துக் கொல்லும் என் நண்பர்களிடமிருந்து
என்னைக் காப்பாற்று!' என்று அண்மைக் காலமாக கோயில்களில் முக்கால வேண்டுதல் பூஜைகள்
நடைபெறுகின்றன. வேண்டுதலின் முடிவில் பொம்மை செல்பேசிகள் வாங்கி ஆலமரத்தில் கட்டுவது
நடக்கின்றது.
செல்பி வகைமைகளில், இரு சக்கர வாகனங்களில்
செல்லும் போது எடுக்கப்படும் செல்பிகள் அதிகம். அப்படி எடுக்கப்படும் செல்பிகளே கண்ணீர்
அஞ்சலி போஸ்டருக்கான படங்களாகவும் அமைந்து விடுகின்றன.
இப்படியெல்லாம் ஆகி விடுவதால் இந்தக் கருமம்
பிடித்த செல்பியை விட்டு விடத்தான் முடிகிறதா என்றால்... "டேய் மாப்ளே! எம் பொண்ணு
சடங்குக்கு வந்தியாடா?" என்று கேட்கிறார் தெக்குட்டு மாமா. "வந்தேன் மாமா!"
என்றால், "உன்னைய நம்ப முடியாதுடா மாப்ளே! செல்பி எடுத்திருப்பியே! அதைக் காட்டு!"
என்கிறார்.
செல்பி எடுக்காமலும் இருக்க முடியவில்லை.
செல்பி எடுத்தும் முடியவில்லை. மெமரி தாங்க முடியாமல் வெடித்து விடுவேன் என்று மிரட்டிக்
கொண்டிருக்கிறது செல்பேசி.
*****
No comments:
Post a Comment