5 Jul 2019

பிரசுர அவசரங்கள்!



செய்யு - 136
            "நீயி இஞ்ஞயே இருக்குறதுன்னாலும் இருக்கலாம். யாரும் ஒன்ன எதுவும் சொல்லப் போறதில்ல. இஞ்ஞ ஒனக்கு நல்ல வசதி. சாப்பாட்டு தண்ணிக்கு எந்த கொறையும் இருக்காது. சும்மா இஞ்ஞ தங்கியிருக்கோம்னு தோணிச்சுன்னா நம்ம மெடிக்கல் ஷாப்புல ஒண்ணுல வேலக்கிச் சேந்துக்கோ. கட்டாயம்லாம் இல்ல. ஒனக்கு இந்த யோஜனப் பிடிச்சிருந்தாத்தான். படிச்சவேம் நீயி. ரண்டு நாளிக்கு நின்னின்னா எப்படி மருந்த எடுத்துக் கொடுக்கணுங்றது கத்துப்பே. ஒனக்கு எப்போ எஞ்ஞ வெளில போவணும்னாலும் போயிக்கே. யாரும் ஒன்ன எதுவுஞ் சொல்ல மாட்டாங்க. சான்ஸ் தேடுறதுக்கு அதல்லாம் ஒத்து வராதுன்னு நெனச்சா இஞ்ஞ தங்கிட்டு மட்டும் சான்ஸ் தேடுறதை மட்டுமும் தாரளாமா அதையுஞ் செஞ்சுக்கலாம். இஞ்ஞ வடபழனிலேந்து சூளைமேட்ட விட எல்லாம் பக்கம்தாம்.
            "ஒன்னய கட்டாயப்படுத்துறதா நெனச்சிக்காத. இது ஒத்து வாராது அப்படின்னு நெனச்சா, அஞ்ஞ இருக்குறதுன்னாலும் இருந்துக்க. அந்தப் பக்கம் வாரப்ப போறப்ப பாத்துக்கிறேம். நம்மால முடிஞ்ச அளவுக்கு சினிமாவுல சொல்லி விடறேம். அண்ணேம் பேசுறப்ப சொல்லிச்சு பணம் கொடுத்துடச் சொல்லி" என்று சொல்லி விட்டு ரவிநாயகம் சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டுகளாய் எண்ணி ரெண்டாயிரம் ரூபாயை நீட்டுகிறார்.
            விகடு தலையைக் குனிந்த படியே மறுக்கிறான். "இல்லை. வேண்டாம். என்னிடம் பணம் இருக்கிறது!" என்று மெல்ல முணுமுணுக்கிறான்.
            "அதாங் ஒடம்ப பாத்தாத் தெரியுதே! பணம் எவ்ளோ இருக்குன்னு? ன்னடா புள்ளே நீயி?" என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் குரல் கொடுக்கிறார் ரவிநாயகம், "இந்தாரு! நம்ம சுப்பு வாத்தியாரு மவேம்! பேரு வெகடு! வந்திருக்காம்!"
            வீட்டுக்குள்ளிருந்து இரண்டு மூன்று பெண்மணிகள் வந்து அவனை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். ஷோபாவில் அவனை உட்கார வைத்து டீப்பாயில் பலகாரம், பச்சை வாழைப்பழம் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து, ஒரு கோப்பையில் காபியை வைக்கிறார்கள். அவனுக்கு அதைச் சாப்பிட தயக்கமாக இருக்கிறது.
            "இந்தாருங்க! கொஞ்சம் உள்ளே வந்துட்டுப் போங்க! புள்ளே சாப்புட மாட்டேங்றாம்!" என்று குரல் கொடுக்கிறார் ஒரு பெண்மணி.
            ரவிநாயகமும் அவரது தம்பிகள் இருவரும் உள்ளே வருகிறார்கள்.
            "ன்னதான்டா ஒனக்குப் பெரச்சின? பணத்தையும் வாங்க மாட்டேங்றே! சாப்புடவும் மாட்டேங்றே! ரெளடிகள வெச்சி தூக்கிட்டு வர்ற மாரி ஒன்னய தூக்கிட்டு வந்தோங்ற கோவமா? எங்களுக்கு ன்னாடா தெரியும்? ஊர்லேந்து ஒன்னயக் காணோம்னு சொன்னாங்க! எதுக்கு ஓடி வந்தே? என்னத்துக்கு ஓடி வந்தேங்றது எங்களுக்கு எப்பூடித் தெரியும்? சினிமாவுக்குன்னுதாம் ஓடி வந்தேங்றது தெரிஞ்சா நாங்க ஏம் ஒன்னய அப்படி வல போட்டு தேடிட்டு இருக்கப் போறேம்? கெளம்புற நீ ஒரு வார்த்த... அதச் சொல்ல முடியலயா... ஒரு காயிதத்தை எழுதி வெச்சிட்டுக் கெளம்ப வேண்டியதானடா! செரி, வந்தது வந்துட்டே வந்த பெறப்பாடாவது ஒரு லட்டர் எழுதிப் போடலாம்ல! எதயும் யோஜனயில்லாம பண்றது! பெறவு சங்கோஜப்படறது! நாங்க ஒண்ணும் ஒனக்கு விரோதியில்ல. மொதல்ல நீ சாப்பிடு. நாம்ம ஒன்னய கொண்டு போயி சூளைமேட்டுலயே விட்டுடறேம். இஞ்ஞ ஒனக்கு இருக்கப் பிடிக்கல போலருக்கு!" என்கிறார் ரவிநாயகம்.
            அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் அவன் சாப்பிடுகிறான். "செரி கெளம்பு! கொண்டு போயி விட்டுடறேம்!" என்று அவனை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறார் ரவிநாயகம்.  "நீங்க யாரும் வர வாணாம். நாம்ம மட்டும் போயி கொண்டு விட்டுட்டு வந்திடறேம்!" என்று சுற்றியிருந்தவர்களைப் பார்த்து ரவிநாயகம் சொல்லி விட்டு அவனை ஏற்றிக் கொண்டு வண்டியை எடுக்கிறார்.
            வடபழனியிலிருந்து சூளைமேட்டை நோக்கி டாட்டா சுமோ விரைந்து கொண்டிருக்கிறது. விகடுவைப் பக்கத்தில் வைத்து ரவிநாயகம் பல அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார்.
            "எங்க அண்ணேம்கிட்ட எல்லாத்தியும் சொல்லிட்டேம். ஒன்னோட விருப்பப்படி வுட்டுட சொல்லியாச்சி. இருந்தாலும் சில வெசயங்கள சொல்ல வேண்டிய கடமை இருக்கு நமக்கு. இஞ்ஞ நாம்ம பாத்த வரிக்கும் சினிமாவுக்குனு வந்து எடுபட்டவங்க கம்மி. சினிமா வயச அப்படியே உறிஞ்சிச் சப்பிடும். காலம் போன காலத்துல இதப் புரிஞ்சிகிட்டு வேற வேலய்க்குப் போறப்ப வயசு போயிருக்கும். அதாலதாங் சொல்றேம் யோசிச்சி முடிவு பண்ணு. சம்பாதிக்கிறதுக்கு ஒரு வழிய வெச்சிக்கோ. ஆசைய வுட்டடச் சொல்லல. தாமசமா எதையும் புரிஞ்சிகிட்டு யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லங்றேம். பணமில்லன்ன மதிப்பில்லங்றது மட்டுமில்ல, பரிதாபப்படக் கூட மாட்டானுங்க இந்த மெட்ராஸ்ல. எட்டி ஒதைச்சிட்டுப் போயிட்டே இருப்பானுங்க! ஒன்னய பெரிசா சம்பாதிச்சி பெரிய ஆள கூட ஆகச் சொல்ல. ஒன்னோட வயித்துக்குச் சாப்பிடுற அளவுக்காவது சினிமாவுல சம்பாதிக்க முடியுமான்னு பாத்துக்கோ." வண்டியை ஓட்டிக் கொண்டே சொல்லிக் கொண்டு வந்த ரவிநாயகம் தடார் என்று ஒரு கையால் தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து சட்டென்று விகடுவின் சட்டைப் பையில் வைத்து விட்டு வண்டியை நிறுத்துகிறார். சூளைமேடு பெரியார் பாதை வந்தாகி விட்டது.
            அவரிடம் ஒன்றும் சொல்லாமல் வண்டியை விட்டு இறங்கி ரூம் விட்டுக்குள் செல்கிறான் விகடு. பையில் அவர் வைத்தப் பணம் அப்படியே இருக்கிறது. அவனுக்கு ஆத்திரமாகவும், அவமானமாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. இந்நேரத்துக்கு ஒரு பாட்டு எழுதியிருந்தால் இப்படி ஆகியிருக்காது என்று அவன் மனசு சொல்கிறது. சான்ஸ் தேடி அலைவது பத்தாதோ என்பது போலத் தோன்றுகிறது. நாளையிலிருந்து படுப்பதற்குத் தவிர இந்த ரூம் வீட்டில் நிமிஷ நேரம் தங்கக் கூடாது என்று முடிவு செய்து கொள்கிறான்.
            மறுநாளிலிருந்து அலைச்சல் ஆரம்பமாகிறது. எங்கு செல்வதென்றாலும் யாரையும் முன்பு போல் துணைக்குக் கூப்பிடுவதில்லை. எப்படிச் செல்ல வேண்டும் என்று வழியும் கேட்பதில்லை. காலையில் எழுந்து கால் எந்தப் பக்கம் நடக்க ஆரம்பிக்கிறதோ அந்தப் பக்கமெல்லாம் நடக்க ஆரம்பிக்கிறான். எங்கெங்கு டீக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் நிற்பதும், அங்கு இருப்பவர்களை விசாரிப்பதுமாக போய்க் கொண்டே இருக்கிறான்.
            யாரையும் இங்கு பார்ப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எட்டு மணிக்கு வருபவருக்காகக் காத்திருந்தால் அவர் பனிரெண்டு மணிக்கு வருகிறார். அப்படி பனிரெண்டு மணிக்கு வருபவரையும் பார்ப்பது எளிதாக இல்லை. அவரை நெருங்குவதற்குள் ஒரு பெருங்கூட்டம் நெருங்கி விடுகிறது. அந்தக் கூட்டத்தோடு கூட்டமாய் கரைந்து போகிறான் விகடு. தவிரவும் இங்கு எல்லாவற்றிற்கும் ஆட்கள் இங்கு ஒன்றுக்கு நூறாய் இருக்கிறார்கள். ஒன்று போனால் ஒன்று குறைந்து எண்ணிக்கை தொண்ணூற்று ஒன்பதாய் ஆவதற்குப் பதில் அந்த ஒன்றை நிரப்புவதற்கு இன்னொரு நூறு குவிந்து எண்ணிக்கை நூற்று தொண்ணூற்று ஒன்பதாய்த்தான் ஆகிறது.
            சினிமா சான்ஸ் தேடிக் கொண்டே இன்னொரு வேலையையும் செய்கிறான் விகடு. கண்ணில் படுகின்ற பத்திரிகை ஆபிஸ்களில் ஏறி இறங்குகிறான். தான் எழுதிய கவிதைகளைக் காட்டிப் பிரசுரிக்க முடியுமா எனக் கேட்கிறான். அப்படிப் பிரசுரமானால் பணம் கிடைக்குமே என்று கணக்குப் போட்டுப் பார்க்கிறான். "பிரசுரமானால் உடனடியாகப் பணம் கொடுப்பார்கள்தானே!" என்று கேட்டும் பார்க்கிறான் விகடு. "அப்படியென்ன பிரசுரம் ஆனவுடன் பணம் கெடைக்கப் போவுது? இருபதோ, ஐம்பதோதாம்! அதுவும் கைக்கு வரதுக்கு மூணு நாலு மாசம் ஆகும்! எல்லாம் பிரசுரம் ஆனாத்தாம். ஆகலேன்னா அதுவும் போச்சு. இங்க நான் பாத்து, அத அதுக்கு மேல ஒருத்தரு பாத்து, அப்புறம் அதுக்கும் மேல உள்ளவரு பாத்து... எனக்குப் பிடிச்சது மேல உள்ளவருக்கு பிடிக்காமப் போகலாம். மேல உள்ளவருக்கு பிடிச்சது அதுக்கும் மேல உள்ளவருக்குப் பிடிக்காமப் போகலாம். எல்லாருக்கும் பிடிச்சுப் போயி ஒரு வேள செலக்ட் ஆயி... அந்த இஷ்யூல வேற முக்கியமான கவர் ஸ்டோரிஸ் போடற மாதிரி வந்தால் அதுவும் காலி. இந்த இருபது முப்பதுக்கு இப்படி அலஞ்சிட்டு நிற்குறத வுட்டுட்டு உருப்படுற வழியப் பாருங்க. பேசாம வயித்துப் பாட்டுக்கு ஒரு வேலையைப் பாத்துகிட்டு பொழுதுபோக்கா எதாச்சிம் எழுதிப் போடுங்க!" என்கிறார்கள் விசாரிக்கும் பத்திரிகை ஆபீஸ்களில் எல்லாம்.
            ஒவ்வொரு பத்திரிகை ஆபிஸிலும் பண்டல் பண்டலாய்க் குவிந்து கிடக்கும் கவிதைக் கட்டுகளைக் காட்டுகிறார்கள். அதையும் தாண்டிக் கவிதைகளைக் கொடுத்தால், "கொடுத்து விட்டுப் போங்கள்!" என்று வாங்கி பண்டலாய் இருக்கும் கட்டுக்கு அடியில் வைத்துக் கொள்கிறார்கள். அந்த சீனியாரிட்டி லிஸ்ட்படி கவிதை வர வேண்டுமானால் எப்படியும் சில பல ஆண்டுகள் ஆகும் என்பது விகடுவுக்குப் புரிகிறது.
            உண்மையைச் சொல்லப் போனால் நாட்டில் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்தான். உலக மக்கள் தொகையை விட எண்ணிக்கையில் அதிகம்தான். எல்லாரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது கவிதை எழுதிப் பார்த்து விடுகிறார்கள். கவிஞர்களாக தொடர்ந்து இருக்க நினைப்பவர்கள் பற்பல கவிதைகளை எழுதி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அறிவியல் கணக்குப் படிப் பார்த்தாலும் பூமியில் தோன்றிய நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமா? பூமியில் தோன்றிய கவிதைகள் அதிகமா? என்று கேட்டால் கவிதைகள்தான் அதிகம். நுண்ணுயிரிகள் வளர ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப சூழ்நிலை தேவைப்படுகிறது. கவிதைக்கு அந்த மாதிரி எந்த தட்பமோ, வெப்பமோ, சூழ்நிலையோ தேவைப்படுவதில்லை. அது பாட்டுக்கு யாராவது ஒருத்தர் வழியாக ஒழுகும் கூரையிலிருந்து கொட்டும் மழையைப் போல சித்தன் போக்கு சிவன் போக்குக்கு வந்து கொட்டிக் கொண்டே இருக்கிறது.
            இதுவரை இந்தப் பூமியில் பிறந்தவர்களையும், பிறந்து செத்துப் போனவர்களையும் கணக்குப் பார்த்தாலும் கவிஞர்களைக் கணக்குப் பார்க்க முடியாது. கணக்குக்கு அப்பாற்பட்ட கவிதைகள் எழுதியாகி விட்டது. இந்த நொடியில் இப்போது உலகில் லட்சம் கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கலாம். பிறகு எப்படி கவிதைகளை, கவிஞர்களைக் கணக்கிடுவது?
            ஆக, வெறும் கவிதை மட்டும் வேலைக்கு ஆகாது என்று கதை, கட்டுரை, நகைச்சுவை துணுக்கு என்று எதையெதையோ எழுதிப் பார்க்கிறான். ஒருமுறைக்கு ரெண்டு முறையாகப் பத்திரிகை ஆபீஸ்களுக்குப் போனால் அனுதாபப்பட்டாவது பிரசுரிப்பார்களோ என்று அப்படியும் செய்து பார்க்கிறான் விகடு.
            அப்படி மறுபடியும் போன இடத்தில், "கவிதை கொடுத்து பத்து நாளுக்கு  மேல இருக்கும்!" என்கிறான் விகடு.
            "ஒங்க இம்சை தாங்க முடியலப்பா! நாட்டுல எல்லாரும் கவிதையே எழுதிட்டு இருந்தா, பக்கம் புல்லா கவிதையாவா போட்டுத் தள்ள முடியும். ஏதோ அங்க ஒண்ணு இங்க ஒண்ணுதாம் போட முடியும். அப்படிப் போடுறதயும் இப்பலாம் எவன் கவிதன்னு படிக்கிறான்னு இப்படி எழுதித் தள்ளுறீங்கன்னு புரியல. போயி வேற ஆக வேண்டிய வேல இருந்தா பாரு!" என்கிறார்கள். விகடு வெளியே வந்து அந்த பத்திரிகை ஆபீஸின் பிரமாண்ட கட்டடத்தின் மேல் எழுதியிருக்கும் பெயரைப் படித்துப் பார்க்கிறான். அந்தப் பெயருக்குக் கீழ் தானொரு புழுவைப் போல நெளிவதைப் போல நினைத்துக் கொள்கிறான். பிரசவத்துக்கு இலவசம் என்று எழுதிச் செல்லும் ஆட்டோக்களையும், பிரசவத்துக்கு அவசரம் காட்டும் ஆஸ்பிட்டல்களையும் கடந்து பிரசுரத்துக்கு எதையும் காட்டாத பத்திரிகை ஆபீஸ் சாலைகளில் நடக்கிறான் விகடு.
            இன்னொரு பத்திரிகை ஆபீஸில் கவிதைகள் எல்லாம் பெரிது பெரிதாக இருப்பதால், கவிதை எழுதிய தாளை நான்காய்க் கிழித்து நான்கின் பின்னாலும் பேர், முகவரி எழுதித் தரச் சொல்கிறார்கள். அதையும் செய்கிறான் விகடு. கவிதை எழுதியாயிற்று. எழுதியும் கிழித்தாயிற்று. இப்படி கவிதை எழுதிய தாள்களையெல்லாம் கிழித்தால் நான்கு மடங்காகி விடும் அவனது கவிதைகள். ஒருவர் எழுதத் தொடங்கும் போது கவிதை எழுதாமல் இருப்பதுதான் எவ்வளவு நல்லது! அநேகமாக ஆசீர்வதிக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கே அது போல நடக்கிறது!
            இப்படி விகடு அலைந்து கொண்டிருந்த போது, ஒரு பத்திரிகை ஆபிஸில் சொன்னார்கள், "இப்போ எழுதுறதுல ராஜேஸ் சிந்தியாத்தான் டாப்! அவரு நெனச்சா நீயி எங்கேயோ போயிடுவே! அவர ஒரு தடவ போயி பாரு!" என்கிறார்கள். அட்ரஸையும் தருகிறார்கள். 'ராஜேஸ் சிந்தியா திறமைகளை அறிந்து பூஜிப்பவர். திறமையாக எழுதுபவர்களை கை தூக்கி விடுபவர்!' என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படிப்பட்டவரைப் போய் பார்க்காமல் இருக்க முடியுமா!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...