4 Jul 2019

விசாரணை



செய்யு - 135
            "எங்க அம்மைக்கு எங்க எல்லாத்து மேலயும் அம்புட்டுப் பாசம். அப்பாவுக்கும் அப்படித்தாம். ஆனா, வறும! ஆனா, வறுமைன்னாலும் எங்கப்பாவுக்கு ராத்திரியாயிட்டுன்னா ரெண்டு டம்ப்ளரு பிராந்திய போட்டுட்டு நல்லா சாப்புடணும். காசில்லங்றதுக்காக சும்மா இருக்க மாட்டாரு. இருக்குற நெலத்த வித்துட்டாவது கொஞ்சம் கொஞ்சமா செலவு பண்ணிட்டு இருப்பாரு. வூட்டு நெலம இப்படி இருக்கேன்னு பிராந்தி போடுறத நிப்பாட்ட மாட்டாரு. ராத்திரி ஆயிடுச்சுன்னா பிராந்திய போட்டே ஆவணும். வூட்டுல அரிசி, சாமான், கறிகாயி, மளிக இல்லாட்டியும் பிராந்தி இருந்தாவணும்.
            ராத்திரிச்  சாப்பாடு அப்பா சாப்புட்டது போக அம்மாவுக்குச் சாப்புடறதுக்குத்தாம் கொஞ்சம் இருக்கும். அம்மா சாப்புடாது. எங்களுக்குத்தாம் ஆளுக்குக் கொஞ்சமா அள்ளிப் போட்டுட்டு பட்டினியா கெடக்கும். என்ன பண்றது? நாங்க மொத்தம் ஆறு புள்ளைங்க. அண்ணம் விநாயகத்தோடு நாங்க மூணு பேரும் பெரிய புள்ளீக. மத்த ரண்டு தம்பிகளும் சின்ன புள்ளீக. அப்பா பாத்துச்சு. கடசீ ரண்டு பயலுகள வுட்டுப்புட்டு மித்த நாலு பயலுகளும் சம்பாதிச்சிக் காசு கொண்டாந்தா சோத்த போடு. இல்லாட்டி பட்டினி போடுன்னுட்டு. அம்மை என்ன பண்ணும்னா அப்பாவுக்குத் தெரியாம சோறு போடும். எத்தினி நாளிக்குத் தெரியாம சோறு போடுறது? ஒரு நாளு அப்பா பாத்துட்டு. தின்னுட்டு இருந்த சோத்துத் தட்ட காலால எத்தி விட்டுச்சு.
            "மான ரோசம் உள்ள புள்ளீகளா இருந்தா, எனக்கும் ஒம் அம்மைக்குதாம் பொறந்த புள்ளிகளா இருந்தா சம்பாதிச்ச காசிய கொடுத்துபுட்டுதாம்படா சாப்பிடணும்! இப்படி மானங்கெட்டு யாருக்குந் தெரியாம திருட்டுத்தனமாச் சாப்புடுறதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்டா அப்புடினிட்டு! அம்மை அப்பாவோட கால பிடிச்சிட்டு அழுகுது. காலயிலேந்து இப்போ வரிக்கும் ரவ சோறு சாப்புடல. இப்போ ராத்திரிதாம் புள்ளிக ஒரு வாயி சோறு சாப்பிடுதுக. அதுங்க வயித்துல இப்படி மண்ணள்ளிப் போட்டுடாதீகன்னு.
            "போடி அந்தான்டான்னு அம்மையையே எட்டி ஒதைக்குது அப்பா. அம்மை அந்தான்ட போயி வுழுந்ததுல சுவத்துல மண்ட மோதி ஒடைஞ்சி ரத்தமா ஊத்துது. நாங்க ஓடிப் போயி அம்மையைத் தூக்கி விட்டு ரத்தத்தைத் துடைச்சி விட்டு கட்டுப் போட்டு வுடறோம். எதுவுமே நடக்காத மாரி அப்பா நிற்குது.
            "நம்மாளதான்ன அம்மைக்கு இப்படி ஆயிடுச்சின்னு அன்னிக்கு சொல்லாம கொள்ளாம மூணு பேரும் மெட்ராஸூக்கு ஓடி வந்த நாங்கதாம். விநாயகம் அண்ணம் மட்டும் ஓடி வரல. ஊருலயே தங்கிட்டு. பாவம் அண்ணம். மறுநாளுலேந்து நெல்லு புடிக்குற சென்டர்ல மூட்டைத் தூக்கப் போயிருக்கு. அண்ணம் அப்பயே தருமபுரம் ஆதீன காலேஜ்ல பி.லிட்டு. முடிச்சது. ஒடனே வேல கெடைக்கல. மூணு புள்ளீகளா கண்காணாம ஓடிப் போக வுட்டுட்டு, இப்படிப் படிச்ச புள்ளைய மூட்டைத் தூக்க வுடுறீகளேன்னு அம்மை முணகிட்டுக் கெடக்குது. ஒரு நாளு அண்ணம் ஒடம்பு வலின்னு வூடு தங்கி மூட்டைத் தூக்கப் போகாமயிருந்து, காசிய கொடுக்காம போயிட்டா அவ்வளவுதாம். அன்னிக்கு அண்ணனுக்குச் சோறு போட முடியாத அளவுக்கு அப்பா வூட்டைச் சுத்திச் சுத்தி வரும். அதே அண்ணம் அன்னைக்கி வேலய்க்கிப் போயி சம்பாதிச்சி வந்து ராத்திரி தூங்குறப்ப ஒடம்பு வலிக்குதுன்னு முணகிட்டுப் பெரண்டு படுத்தா போதும் அப்பா எழுந்திரிச்சி வந்து அது குடிக்குற பிராந்தியில ஒரு டம்பளரு ஊத்திக் கொடுத்து கைய, கால அமுக்கி விடும்.
            "இப்படிப் பெத்த புள்ளைகள தொரத்தி அடிச்சிபுட்டு இவ்வேம் மட்டும் நல்லா சொகுசா உக்காந்துட்டு ராத்திரி ஆனா நல்லா குடிச்சிகிட்டு இருக்குதேன்னு ஊருலயும் அப்பாவைப் பத்திப் பேசிக்குறாக. பெத்த புள்ளீகளா இப்படித் தொரத்தி வுட்டுட்டு கடசீக் காலத்துல இந்த மனுஷம் எதைக் கொண்டுப் போகப் போறாம்? அப்பிடின்னும் பேசிக்குறாகங்கன்னா எல்லாம் அவங்கவங்களுக்குள்ளதாம் பேசிக்கிறாக! அப்பாவோட முகத்துக்கு நேரா பேசல. பேசுனா ஒம்ம வூட்டுப் புள்ளிகளுக்கு நீங்க வூட்டுல வெச்சாடா சோறு போடுறீக? திருட்டுப்பய நாதிகளான்னு அப்பா பேசிப் புடும்.
            "அப்பாவை எதித்து யாரு ஓரு வார்த்த பேச முடியும்? ஊருகார சனம், சொந்தக்கார சனம் இதை நெனச்சி மனசுக்குள்ள புழுங்கிட்டாலும் யாரும் போயி அப்பாட்ட பேசல. நாங்க இஞ்ஞ ஓடி வந்தா எங்களுக்கு யாரத் தெரியும்? என்னத்த தெரியும்? மெட்ராஸ்ஸ தெகைச்சிப் பாத்துட்டு சுத்திட்டு நிக்குறோம். வயித்துல பசின்னா பசி. கையில நயா பைசாயில்ல. திருட்டு ரயிலு ஏறி வந்தவங்ககிட்ட என்ன காசி இருக்கும்? ஊருலயும், சொந்தத்திலயும் யாரும் எங்கள தேடவும் இல்ல? கொஞ்ச நாளு பேசிட்டு எங்க போனோம், என்ன ஆனோம்ங்றத பேசுறதயும் வுட்டுட்டாங்க.
            "இப்ப நூறடி ரோடா இருக்குற வடபழனி ரோட்டுல நின்னுட்டு இருக்கோம் மூணு பேரும். எதுத்தாப்புல சைக்கிளு ஸ்டாண்டு அடிக்குற கடை. புது சைக்கிளுல ஸ்டாண்டு சரியா இருக்காது. அதால அந்த ஸ்டாண்டைக் கழட்டிபுட்டு புதுசா வேற ஸ்டாண்டுதாம் அடிச்சிப்பாங்க. அந்த ஸ்டாண்டைச் செய்யுற கடை அது. அந்தக் கடைக்கு எதுத்தாப்புலதாம் நாங்க நின்னுட்டு இருக்கோம். தெகைச்சி நின்னுட்டு இருக்குற எங்களப் பாத்துட்டு உள்ளேந்து மேலுக்குச் சட்டையில்லாம, துண்டைப் போட்டுகிட்டு கீழுக்கு காவி வேட்டி கட்டிட்டு இருக்குற ஒருத்தரு வாராரு. யாருங்கம்பி நீங்க? எந்தூருங்கறாரு?
            "தஞ்சாரூ ஜில்லாலேந்து சோத்துக்கு வழியில்லாம ஓடி வந்த கதைய நாங்க சொன்னாக்கா, அதைக் கேட்டுபுட்டு உள்ளே வந்து சைக்கிளு ஸ்டாண்டு அடிங்கங்றாரு அந்த ஆளு. ஒரு ஸ்டாண்டு அடிச்சிக் கொடுத்தா அப்போ ஒத்த ரூவா. ஒரு நாளுக்கு பதினைஞ்சி ஸ்டாண்டு வரிக்கும் அடிக்கலாம். நாங்க மூணு ‍பேருமா சேந்துகிட்டு ஆளுக்கு இருபத்தஞ்சி ஸ்டாண்டுன்னு எழுபத்தைஞ்சி எண்பது ஸ்டாண்டு வரை அடிச்சிப் போடுவோம்.
            "நாங்க ஆளுங்க நல்லா மோட்டாவ இருக்குறதயும், அத்தோட நாங்க வேல செய்யிறதயும் பாத்துட்டு ஓனருக்கு எங்கள ரொம்பப் பிடிச்சிப் போயிடுச்சி. அப்போ அவரு மெட்ராஸ்ல இந்த ஸ்டாண்டு அடிக்கிற கடையோட நாலு பாரு நடத்திட்டு இருந்தாரு. அந்த நாலு பாருல ஒரு பார எங்கள நம்பி ஒப்படைச்சிப் பாத்துக்கச் சொன்னாரு. அதுல ஆரம்பிச்ச ஏத்தம்தான். இப்போ நாங்களே ஆளுக்கொரு பாருன்னு சொந்தமா மூணு பாரு நடத்திட்டு இருக்கோம். மெடிக்கல் ஷாப்பு வடபழனியிலேயே நாலு இருக்கு நமக்கு. நம்ம ஜில்லாகாரரூ கலைஞரு கட்சியோட இந்த ஏரியா வட்டச்செயலாளரும் இப்போ நாம்மதான். ஆரூரு எஸ். ரவிநாயகம்னா ஏரியா அலறும் பாத்துக்கோ.
            "நாங்கலாம் சோத்துக்கு வழியில்லாம எங்கப்பா வெரட்டி வுட்டாருன்னு ஓடி வந்தா... ஒனக்கு என்னா... ஒங்கப்பாரு நல்லா சம்பாதிச்சிப் போட்டு சோத்தப் போட்டு காலேஜூல படிக்க வெச்சா... படிப்ப வுட்டுப்புட்டு ஓடி வார்றே?
            "நாங்களும் திருட்டு ரயிலு ஏறி ஓடி வந்தவங்கதாம்! இஞ்ஞ ஓடி வந்தா எல்லாரும் நல்லா பொழச்சிட்டுதாம் இருக்காங்க. அண்ணம் சொல்லிச்சி ஆளு நல்லா திமிசு கட்ட கணக்கா இருப்பாம்னு ஒன்னயப் பத்தி. ஒன்னய இப்போ பாத்தா திமிசு கட்டயோட கம்பு கணக்கால்ல இருக்கே! ஊருல ஒன்னயப் பத்தி ஏதோ பொண்ண இழுத்துட்டு ஓடி வந்திட்டதா பேசிக்கிறாங்க தெரியும்லே! அப்படி ஏதாச்சிம் உண்டா? எதுக்காக இஞ்ஞ ஓடியாந்தே? யாரு மேலாச்சிம் கோபமா? ன்னா? சொல்லிவுடு. பேசி வுடறேம்!" என்று வடபழனியில் இருக்கும் அவரது வீட்டில் வைத்து தம்பிகளுடன் தன்னுடைய ஆட்களின் முன்னிலையில் வைத்து விசாரிக்கிறார் ஆருர் எஸ். ரவிநாயகம்.
            விகடு மெட்ராஸூக்கு ஓடி வந்த காரணம் தெரிய வேண்டும் இப்போது அவருக்கு.
            இப்படி மெட்ராஸூக்கு வந்து கெளரவமாக அல்லாமல், உடல் மெலிந்த நிலையில் அசிங்கப்பட்டு மாட்டிக் கொண்டேமே என்று சங்கடமாக இருக்கிறது விகடுவுக்கு.
            "ச்சும்மா சொல்லு! எந்தக் காரணமா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்! நாம்ம பேசித் தீத்து வுடறேம். ஊருக்குப் போன் போட்டுச் சொல்லிட்டேம். ஒங்க வூட்டுல போயி எங்க அண்ணம் விநாயகம் வாத்தியாரு சொல்லப் போயிருக்காரு!" என்கிறார் ரவிநாயகம்.
            "திரைப்படத்தில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை! வீட்டில் சொன்னால் விட மாட்டார்கள் என்று சொல்லாமல் கிளம்பி வந்து விட்டேன்!" என்கிறான் விகடு.
            இதைக் கேட்டதும் ரவிநாயகமும், அவரின் தம்பிகளும் ஆட்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். "இதென்னடா புது காமெடியா இருக்கு? சினிமாவுல பாட்டெழுதணும்னா நம்மள வந்து பாக்க வேண்டியதுதானே! ஒங்க அத்தைப் பையனுங்க எல்லாம் இங்கதான அரும்பாக்கம் அங்க இங்கன்னு இருக்காங்கன்னு சொல்றாங்க. அவங்கள வந்து பாக்க வேண்டியதுதான! கொட்டாரத்துல வந்து குந்திகிட்டு வட்டாரத்த அலற வுட்டவம் கதையால்ல இருக்கு ஒங் கதெ. நீ சொல்றதுக்கும் நடந்துருக்கதுக்கும் எதுவுஞ் சம்மந்தம் இருக்கா பாரு! இதென்ன ஒடம்பு? ஒடம்புல பிட்டு சதயில்ல. மண்டயில மண்டையோடு தோலு தவுர ஒண்ணுமில்ல. ஒனக்கு வேற ஏதோ பெரச்சின. அதச் சொல்லு." என்கிறார் ரவிநாயகம்.
            அவர் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போன் வருகிறது. எடுத்துப் பேசுகிறார் ரவிநாயகம். விநாயகம் வாத்தியார்தான் ஊரிலிருந்து பேசுகிறார்.
            "இஞ்ஞதான் பிடிச்சிப் போட்ருக்கேம். ஒடம்புல ஒண்ணுமில்ல. ஒடம்ப தேத்துறதுக்கு வருஷக் கணக்கா ஆவும்." என்கிறார் ரவிநாயகம். சொல்லிவிட்டு விகடுவைப் பார்த்து, "அண்ணேம். ஒங்கிட்டே பேசணும்னு சொல்லுது! இந்தா பேசு!" என்று ரீசீவரை நீட்டுகிறார்.
            விகடு ரீசீவரைப் பிடித்து, "வணக்கம்! நான் விகடு பேசுகிறேன்!" என்கிறான்.
            "செளரியமா இருக்கீயா? அப்பா வந்திருக்கு பேசுறீயா?" என்கிறார் விநாயகம் வாத்தியார்.
            "ம்!" என்கிறான் விகடு.
            சில நொடிகளுக்குப் பிறகு,
            "அப்பா பேசலியாம்! என்னயே பேசச் சொல்லுது. ஒனக்கு எங்க விருப்பமோ அஞ்ஞயே இருந்துக்கச் சொல்லுது. ஒனக்கு எந்தப் பொண்ணு விருப்பமோ அந்த பொண்ணயே கட்டிக்கச் சொல்லுது. பணம் ஏதும் வேணும்னா ரவிட்ட வாங்கிக்கச் சொல்லுது. ஏதுக்கு நீ ஓடிப் போனே?" என்கிறார் விநாயகம் வாத்தியார்.
            விகடுவுக்கு குரல் தழுதழுக்கிறது. கண்ணிலிருந்து பொல பொலவெனக் கொட்டுகிறது. ஒரு கனத்த மெளனம் நீடிக்கிறது.
            ரவிநாயகம் ரிசீவரைப் பிடுங்கி, "அண்ணேம்! நாம்ம விசாரிச்சிட்டேம். வெவரத்த பெறவு சொல்றேம். தம்பி இஞ்ஞ சூளைமேட்டு ஏரியாலதாம் இருக்கு. என்ன பண்ணணும்னு சொல்லு?" என்கிறார்.
            "என்னத்தப் பண்றது? இவ்வேம் பண்ணதுல சுப்பு வாத்தியாரு ஒடஞ்சிப் போயிட்டாரு. அவ்வேம் போக்குல வுட்டுடச் சொல்லிட்டாரு. ஒன்னய கொஞ்சம் பாத்துக்கச் சொல்றாரு. எதாச்சிம் பணம் கேட்டான்னா கொடுக்கச் சொல்றாரு. அவ்வேம் மேல ஒரு கண்ண வெச்சிக்க. அவ்வேம் அம்மைதாம் வெசயத்தப் போயிச் சொன்னதும், ஒடனே அவனெ பாக்கணும்னு அழுகாச்சியாப் போயி ரொம்ப நெலம சங்கட்டமா போயிடுச்சிப் போ! நீயி அவனெ ந்நல்லா வெசாரிச்சிட்டுப் பேசு. இஞ்ஞ வாத்தியாரு பாவம் அழுதுட்டு உக்காந்திருக்காரு. பெறவு பேசுறேம்!" என்று விநாயகம் வாத்தியார் பேசுவது சன்னமாகக் கேட்கிறது.  இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...