13 Jul 2019

நடப்பது ஒன்றே நடப்பதற்கெல்லாம் நன்மை!



செய்யு - 144
            திருத்துறைப்பூண்டி பஸ் ஸ்டாண்டைத் தாண்டி மன்னார்குடி போகும் ரோட்டுக்கு முன்பாக அன்பரசி கிளினிக் இருந்தது.  மெயின் ரோடு என்பதால் வாகனங்கள் போவதும் வருவதுமாக இருந்து கொண்டிருந்தன. ஆட்டோ நிதானமான வேகத்தில் போய்ச் சேர்ந்த போது, சுப்பு வாத்தியார் டிவியெஸ் பிப்டியில் திருத்துறைப்பூண்டி அன்பரசி கிளினிக்கில் போயிருந்தார். அன்பரசி டாக்டர் பிரசவ கேஸை முடித்து விட்டு வீடு போயிருப்பதாகச் சொன்னார்கள். வலியோடு அதுவேறு வெங்குவுக்குக் குடைச்சலாக இருந்தது. "டாக்டரு வருவாங்களா மாட்டாங்களா?" என்று அப்படியும் இப்படியுமாக நடந்தபடி அங்கிருந்தவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு எரிச்சலடையப் பண்ணிக் கொண்டிருந்தது.
            "இந்தாரும்மா! பேசாம கொஞ்சம் உக்கார மாட்டே! டாக்டரு வர நேரந்தான்!" என்று சொன்ன நர்ஸூக்கு வீங்கியருந்த கால்களைப் பார்த்ததும் பரிதாபமாகப் போயிருக்க வேண்டும். "காலுதான் இப்படி வீங்கியிருக்குல்ல. உக்காந்தாதான் ன்னா!" என்று கொஞ்சம் மென்மையாகச் சொன்னது.
            "கோவிச்சுக்காதாடியம்மா! வலியில அவளுக்கு ன்ன பண்றதுன்னே தெரியல. பெசகிப் போனவ மாரி பேசுறா, நடந்துக்குறா!" என்றது சாமியாத்தா.
            அந்த நர்ஸ் டாக்டர் ரூமுக்குப் போய் அங்கிருந்த போனிலிருந்து டாக்டரின் வீட்டுக்குப் பேசியது. அன்பரசி டாக்டர் போன் பேசிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்தது. ரூமுக்குள் வரச் சொன்னது. வெங்கு, சுப்பு வாத்தியார், சாமியாத்தா, விகடு என நான்கு பேரும் ரூமுக்குள் திமுதிமு என்று நுழைந்ததும், "இத்தன பேருக்கும் வைத்தியமா? ஒவ்வொருத்தராத்தான பாக்க முடியும்?" என்றது டாக்டர்.
            "நாங்க தொணைக்கு வந்தவங்க! இதோ இவளுக்குதான் முதுகுல அடிவயித்துல வலி! நீரு பிரிய மாட்டேங்குது! ரத்தமா போவுது!" என்றது சாமியாத்தா வெங்குவை டாக்டரின் பக்கத்தில் உட்கார வைத்தபடியே. வெங்குவைப் பார்த்ததுமே அன்பரசி டாக்டருக்குப் புரிந்து விட்டது.
            "எவ்ளோ நாளாம்மா வலி இருக்கு?" என்றது.
            "அது ஒரு மூணு மாசத்துக்கு மேல இருக்கும்!" என்றது வெங்கு.
            "மூணு மாசம்மா வலிய தாங்கிட்டே இருக்கீங்களா?"
            "இப்போ கொஞ்ச நாளத்தான் வலி ஜாஸ்தியா இருக்கு. முன்னாடி அந்த மாதிரியில்ல. வலிச்சிட்டுச் சரியாப் போயிடும்னு நெனச்சேன்!"
            " இப்பயும் வலியத் தாங்க முடியும்னு தாங்கிட்டே இருந்துடுவீங்க! கிட்னியில ஸ்டோன்! சிறுநீரகத்துல கல்லு! எப்டி வலிச்சிட்டு நின்னுப் போகும்? வலிதான் அதிகமாவும்! காலுல்லாம் இப்படி வீங்கிக் கெடக்குல்ல. இவ்ளோ நாளு டாக்டருட்ட காட்டாம வீட்டுலயே இருந்தா கத்திப் போட்டுதான் கல்ல எடுக்கணும்! எடுத்துடலாமா?" என்று சொல்லி விட்டு சுப்பு வாத்தியாரைப் பார்த்தது.
            வெங்குவுக்கு மிரட்சியாக இருந்தது. என்ன பதில் சொல்வதென்று குழப்பம். கத்திப் போட வேண்டும் என்றதும் தாங்க முடியாத பயம் முகத்தில் தெரிந்தது.
            "நீங்க என்னா சார் பண்றீங்க?" என்றது டாக்டர் சுப்பு வாத்தியாரின் பக்கம் திரும்பி.
            "வாத்தியார்ரா இருக்கேன்மா!" என்றது சுப்பு வாத்தியார்.
            "சுத்தம்! படிச்சவங்கதான நீங்க! இவ்ளோ அலட்சியமா இருந்திருக்கீங்க! முன்னால வந்திருந்தா நாலு மாத்திரையில கரைஞ்சுப் போற சமாச்சாரம். இப்படி எல்லாத்தையும் முத்த வுட்டுட்டு கொண்டு வந்திருக்கீங்க! படிக்காதவங்களும் இப்படிதாம் இருக்கு! படிச்சவங்களும் இப்படிதாம் இருக்கீங்க! நல்லா வெச்சுப்பீங்கன்னுதான சார் ஒரு பொண்ண கட்டி வைக்கிறாங்க! இப்படி வெச்சு இருக்கீங்களே!" என்கிறது அன்பரசி டாக்டர்.
            "அவரு எம் மருமவனுங்க! நல்ல வெதமாத்தான் பாத்துக்கிறாரு. எல்லாந் இந்தப் பய பண்ண வேலம்மா!" என்கிறது சாமியாத்தா விகடுவைச் சுட்டிக் காட்டி.
            "இந்த மிஸ்டர் என்ன பண்ணாரு! ஸ்டோன எடுத்துட்டுப் போயி கிட்டினில வெச்சிட்டு வந்துட்டாரா?" என்கிறது அன்பரசி டாக்டர்.
            "வூட்ட வுட்டு ஓடிப் போயி இப்பதாம் வந்திருக்கான்மா! அதுல படுத்தவத்தான். அன்னந்தண்ணி சரியா பொழங்காம கொள்ளாம அப்படியே படுத்தப் படுக்கையாயி இப்படி ஆயிட்டா!" என்கிறது சாமியாத்தா.
            "கல்லுக்குப் பின்னாடி நெறய கதை இருக்கும் போலருக்கே! அப்போ மாமியார், மருமவன், பேரன் எல்லாம் நல்லா இருந்துட்டு பொண்ண எக்கேடு கெட்டா என்னான்னு வுட்டுட்டீங்க!" என்று சொல்லிக் கொண்டே நர்ஸிடம் கையைக் காட்டி ஒரு ஊசியைப் போடச் சொல்கிறது. நர்ஸ் ஊசியைப் போட்டு முடித்ததும் "இனிமே கொஞ்சம் வலி கொறஞ்ச மாதிரி இருக்கும். அட்மிஷன் போட்டுக்குங்க. டெஸ்ட்லாம் எடுக்கச் சொல்றேன். முடிஞ்ச வரைக்கும் மாத்திரையிலயே கரைக்கப் பாக்கலாம். முடியாத கட்டத்துக்கு ஆபரேஷன்தான்." என்று சொல்லி விட்டு விகடுவைப் பார்க்கிறது.
            "என்னா மிஸ்டர்! இங்கிருந்து இப்படியே அம்மாவ விட்டுட்டு ஓடிப் போயிடாதீங்க! தங்கிருந்து குணப்படுத்தி அழச்சிட்டுப் போங்க! போவீங்களா?" என்கிறது அன்பரசி டாக்டர்.
            விகடு தலையை ஆட்டுகிறான்.
            சுப்பு வாத்தியார் நர்ஸிடம் விசாரித்து பணத்தைக் கட்டுகிறார். சாமியாத்தாவின் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்புகிறார். அவருக்கும் மனசு நிலைகொள்ளாமல்தான் இருக்கிறது. இருந்தாலும் வீட்டுக்குப் போயாக வேண்டும். மாடு கன்றுகளைப் பார்த்துக் கொண்டாக வேண்டும். பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் செய்யுவைப் பார்த்துக் கொண்டாக வேண்டும். எதற்காக எதை விடுவது? எதை ஏற்பது? யோசனையும், குழப்பமாகவும் இருந்தவர் கிளம்பி விட்டார்.
            நல்ல கிளினிக்தான் அன்பரசி டாக்டர் கிளினிக். நேரா நேரத்துக்கு மருந்து, ஊசி என்று பார்த்துக் கொள்கிறார்கள். வெங்குவுக்கு மூன்று நாட்கள் வரை இருந்த வீக்கமும், வலியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கின்றன. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகத் தொடங்குகிறது.
            செய்தி கேள்விப்பட்டு சிப்பூர் பெரியம்மா, சின்னம்மா, தேன்காடு சித்தி, பாகூர் சித்தி எல்லாரும் ஆளாளுக்கு வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள். பார்ப்பவர்கள் வெங்குவுக்காக ஒரு அழுகையை வைத்து விட்டு, "எல்லாம் இந்தப் பயலாலதாம்! மறுபடியும் அஞ்ஞ இஞ்ஞ ஓடிப் போயி ஒங்கம்மாவுக்கு எதாச்சிம் ஆனா கொன்னே புடுவோம் படவா! ஒழுங்கு மருவாதியா வூட்டுல இருந்து படிக்குற வழியப் பாருடா போக்கத்தப் பயலே! அத எழுதுறேன், இத எழுதுறேன்னு திரிஞ்சிட்டு இருந்தே, மவனே உண்டு இல்லன்னு பண்ணிப்புடுவோம் பாத்துக்க!" என்று தலையில் ஒரு குட்டு வைத்து விட்டுப் போகிறார்கள்.
            விகடு மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி மனம் குழம்பித் தவிக்கிறான். சாயுங்காலம் ஆனால் போதும் திருத்துறைப்பூண்டி கடைத்தெரு முழுவதும் அலையோ அலையென்று அலைகிறான். கிளினிக்கின் இடது பக்க ரோட்டில் போனால் வேதாரண்யம் போகும் ரோடு, வலது பக்கம் போனால் பஸ் ஸ்டாண்டு, அதைத் தொடர்ந்து திருவாரூர் போகும் ரோடு, எதிர்ப்பக்கம் போனால் மன்னார்குடி போகும் ரோடு என்று எல்லா ரோட்டிலும் நடைதான். நடப்பது எதுவும் ஆறுதலாக இல்லாத போது, காலால் நடையாய் நடப்பது ஒன்றே ஆறுதலாக இருக்கிறது அவனுக்கு. நடப்பதெல்லாம் நன்மைக்கோ என்னவோ! ஆனால் இப்படி நடப்பது ஒன்றே நன்மையாக இருப்பது போல படுகிறது. நடப்பதை எதிர்கொள்ள முடியாத போது இப்படி நடப்பது நடப்பதைக் கடக்க ஏதோ ஒன்றைத் தருகிறது.
            ஏதோ தவறான முடிவு எடுத்து விட்டோமோ என பல நேரங்களில் நெருடலாக இருக்கிறது. மனசு கிடந்து தவிக்கிறது. தன்னால்தான் தன் அம்மாவுக்கு இத்தனையும் என்பது போல மனது வரிந்து கட்டிக் கொள்கிறது. இப்படி அம்மாவை உடம்பளவிலும், அப்பாவை மனதளவிலும் நொறுங்கடித்து விட்டதாக நினைத்துக் கொள்கிறான். அதற்காக தன்னைத் தானே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாகவும் அவனுக்குப் புலப்படவில்லை.
            ஏதோ ஒரு வழி புலப்படும் என்று நம்பிக்கையில் அவன் தினந்தோறும் நடப்பதைப் பார்த்து கடைக்காரர்கள், "எவம்டா இவன் இன்ன நடை‍ ‍தெனமும் நடந்துட்டு கிடக்கிறான்?" என்று கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். இவன் நடந்த கதையை அத்தனையும் சொல்ல சொல்ல அவர்களுக்குப் பாவமாகப் போனதோ, பரிதாபமாகப் போனதோ சாப்பாடு, பழம், சாமான் என்று எது வாங்கினாலும் ஒரு கை கூட வைத்தே கொடுக்கிறார்கள். இவனுக்கும் ஆஸ்பிட்டலில் பொழுது போகவில்லை என்றால் கடையில் போய் உட்கார்வதும், அவர்களுக்கு ஒத்தாசை பண்ணுவதுமாக நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
            வெங்குவுக்கு நேரா நேரத்துக்கு மாத்திரை மருந்து சாப்பிடுவதை விட விகடு நேரா நேரத்துக்குச் சாப்பிடுகிறானா என்பதே கவலையாக இருக்கிறது. கையிலிருக்கும் காசை அவன் கையில் திணித்து, "ஏலே! கடைத்தெரு பக்கம் போறப்ப பரோட்டா கிரோட்டா வாங்கிச் சாப்புடுடா! அல்வா, ஜாங்கிரி, மைசூருபாக்கு, மிக்சருன்னு அத இத வாங்கித் தின்னுடா! இந்தாம்மா! இந்தப் பயலுக்கு பழத்தக் கிழத்தப் பிழிஞ்சிக் கொடு! நாம்ம தேறி வந்துடுவோம்னு நம்பிக்கை வந்திடுச்சி! இவ்வனே தேத்துனா போதும் இனுமே! இவ இஞ்ஞ கெடந்து சீக்காளியா போயிடுவாம் போலருக்கு! சீக்கரமே இஞ்ஞ எடத்தக் காலி பண்ணுனா போதும்னு இருக்கு!" என்கிறது. இதைக் கேட்க விகடுவுக்கு அழுகை அழுகையாக வருகிறது. எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று நினைத்து தூங்க முடியாமல் அழுகிறான். ஆஸ்பிட்டல் கொசு கடியில் எப்படிப் புரண்டு படுத்தாலும் தூக்கம் வேறு வர மாட்டேன்கிறது.
            விகடு சாப்பாடு வாங்கிக் கொடுப்பது, மருந்து வாங்கிக் கொடுப்பது தேவையென்றால் திருத்துறைப்பூண்டியிலிருந்து வீட்டுக்கு வந்து பணம் வாங்கி வந்து கொடுப்பது என்று அலைந்து கொண்டிருக்கிறான். தேன்காடு சித்தியும், சிப்பூர் பெரியம்மாவும் வீட்டுக்கு வரச் சொன்னதால் அங்கே போவதும், அவர்கள் சாப்பாடு செய்து கொடுத்தால் அதை வாங்கி வந்து கொடுப்பதும் என்று பகல் நேரத்தில் பஸ்ஸில் பொழுது ஓடுகிறது. இரவு நேரத்தில் ஆஸ்பிட்டலில் எப்படியோ பொழுது பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது.
            ஒரு வாரத்திற்குப் பின்பு வெங்குவுக்கு உடம்பில் நல்ல குணம். வீட்டுக்கே போய் விடலாமா என்று கூட தோன்றுகிறது. அந்த ஆர்வத்தில் அன்பரசி டாக்டரிடம், "வூட்டுக்குப் போவலாமா?" என்று கேட்கிறது.
            "குணம் கண்டா போதுமே! நீங்களே டாக்டராயிடுவீங்களே! ஒங்கள நல்லபடியாக்கி இங்க வெச்சிட்டு நான் என்னப் போறேன்?" என்ற அன்பரசி டாக்டர் நல்ல விதமாக குணமாக்கி விட்டு, பதினைந்தாவது நாளில் வீட்டுக்குக் கிளம்பலாம் என்கிறார்.
            "மாத்திரைங்க எழுதிக் கொடுத்திருக்கிறேன்! வேளை தவறாமா சாப்புடணும். அதுக்குதான் தங்கச் சொல்றது. பரவாயில்ல! நீங்க கிளம்புங்க! ஆனா மாசத்துக்கு ஒரு முறை வந்து செக் பண்ணிட்டுப் போகணும்! கல்லு முழுசா கரையணும், மறுபடியும் வந்துடக் கூடாது! அலட்சியமா வராம இருந்துடக் கூடாது!" என்று கிளினிக்கை விட்டு டிஸ்ஸார்ஜ் ஆகும் போது சொல்கிறார் அன்பரசி டாக்டர்.
            எல்லாவற்றுக்கும் தலையைத் தலையை ஆட்டிக் கொள்கிறார்கள் வெங்குவும், சாமியாத்தாவும், விகடுவும்.
            அப்படியே திருத்துறைப்பூண்டியிலிருந்து வீட்டுக்குக் கிளம்பி வர சாமியாத்தாவுக்கு இஷ்டமில்லை. அது தேன்காடு சித்தியையும், சிப்பூர் பெரியம்மாவையும் ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியிருந்தது. அவர்கள் வந்ததும் வெங்குவையும், விகடுவையும் அழைத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்கும், நாகூருக்கும் போக வேண்டும் என்கிறது.
            "அவ்வேம் வர மாட்டாம்! கோயிலு, சாமின்னா அவனுக்குப் பிடிக்காது!" என்கிறது வெங்கு.
            "ஏலே! நீயி ஒண்ணும் கும்புடவும் வாணாம்! உள்ளார வாரவும் வாணாம்! தொணைக்கு வாடா! கட கண்ணிகள பாத்து சுத்திட்டு இருடா!" என்கிறது சாமியாத்தா.
            "இந்தாருடா மவனே! ஒன்னாலதாம் ஒங்க ஒம்மாவுக்கு இப்பிடி ஆயிடிச்சி! டாக்டருங்க பாத்தாலும் வேண்டுதல்லதாம் கொணமாயிருக்கு. வேண்டிட்டு போவலன்னா மறுபடியும் ஒங்க ஒம்மாவுக்கு ஒண்ணுகெடக்க ஆயிடும்! ஒனக்கு வேணும்னா சாமியில்லாம இருந்துக்கோ! எங்களுக்கெல்லாம் சாமியில்லன்னா முடியாதுடா! புள்ளையப் பாரு! சாமியில்ல அதுஇதுன்னுட்டு! அதாலதாம்டா ஒங்க ஒம்மாவுக்கு இப்பிடி ஆவுது!" என்கிறது சிப்பூர் பெரியம்மா.
            "இந்தாரு இப்போ சும்மா இருக்கப் போறீயா இல்லியாக்கா!" என்கிறது வெங்கு.
            "இதுக்கொண்ணும் கொறச்சலில்ல. ஒம் புள்ளைய இப்ப என்னா சொல்லிட்டு? நம்மள சும்மா இருக்கச் சொல்றே?" என்கிறது பதிலுக்கு சிப்பூர் பெரியம்மா.
            "பேசிட்டே இருந்தா பேசிட்டே இருக்க வேண்டியதுதான். கெளம்புங்க நேரத்துல. பொழுதோட வூடு திரும்பாயவணும்!" என்கிறது சாமியாத்தா.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...