13 Jul 2019

ஐயாம் அமுல் பேபி ஸ்பீக்கிங்!



            "அடேய்! ஸ்காலர்சிப்பு பணம் வந்து நாளாவுதுடா! அக்கெளண்ட்ல போடணும்! பேங்க் அக்கவுண்ட்டு ஆரம்பிச்சுக் கொடுடா!" என்றால்,
            "அப்பாட்ட சொல்லிருக்கிறேம் சார்!" என்கிறான்.
            "டேய் இதையே எத்தனை நாள்தான்டா சொல்லுவே?" என்றால்,
            "நாங்க என்னா சார் பண்றது? இதோட பேங்குக்கு பத்து பாதினஞ்சி தடவைக்கு மேல போயாச்சி! ஒவ்வொரு தடவ போறப்பயும் அது வேணும், இது வேணும்னு சொல்லிச் சொல்லியே திருப்பி அனுப்புறாங்க சார்!" என்கிறான்.
            "எப்படியாவது கையில காலுல விழுந்தாவது ஆரம்பிச்சி வந்து கொடுத்துடா!" என்றால்,
            "அதெல்லாம் வுழுந்துப் பாத்தாச்சி சார்! வரிசையில நின்னு அப்பாவுக்கு ஒரு நாளைக்கு வேலைக்குப் போற கூலிதாம் சார் போவுது!" என்கிறான்.
            "மேலேயிருந்து நெருக்கடி மேல நெருக்கடியா கொடுக்குறாங்கடா! நானு என்னாடா பண்றது?"
            "பணமா எடுத்துக் கொடுங்க சார்! கையெழுத்துப் போட்டுத் தாரேன்!" என்கிறான்.
            "அப்படிலாம் கொடுக்க முடியாதுடா! அக்கெளண்ட்ட ஆரம்பிச்சித் தொலைடா! அரசாங்கத்துப் பணம்! வீடு தேடி வார்ற லட்சுமிய விட்டுடாதடா!" என்றால்,
            "அப்டில்லாம் அரசாங்கத்துப் பணத்துக்கு ஆசப்படறவுங்க நாங்கல்ல சார்! நீங்க வேணும்னா அரசாங்கத்துக்கே திருப்பி அனுப்பிச்சிடுங்க சார்!" என்று கோபமாய்ப் போகிறவனைப் பார்த்து,
            "அடேய்! அடேய்! நின்னுத் தொலைடா!" என்று பின்னால் ஓட வேண்டியிருக்கிறது.
            "ஏன் சார்! இந்த அரசாங்கம் எங்களுக்காக என்னென்னவோ செஞ்சுக் கொடுக்குது! ஒரு பேங்க் அக்கெளண்ட் ஆரம்பிச்சிக் கொடுக்கக் கூடாதா சார்! எங்களயெல்லாம் மதிச்சி எந்தப் பேங்குல சார் அக்கெளண்ட் ஆரம்பிக்க வுடறான்! பேங்குக்குள்ள போனாலே வரிசைல வா! வரிசைல வா!ன்னு காலு கடுக்க நாளு பூரா நிக்க வெக்கிறானுங்க! எங்கள என்னமோ தீண்டதகாத ஆளுங்க மாரி பாக்குறானுவோங்க! ஐநூறு, ஆயிரம்னு பணம் இருக்கான்னு கேட்குறானுவோங்க! அந்த ஐநூறும், ஆயிரமும் இருந்தா நாங்க ஏன் சார் பேங்க் பக்கமே போறோம்?" என்கிறான்.
            இதைக் கேட்கிறவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வருகிறது! வெறென்ன செய்ய முடிகிறது? இப்படி அழுது அழுதே கன்னம் வீங்கிக் கிடக்கிறது! பார்ப்பவனெல்லாம் அமுல் பேபி கணக்கா கன்னம் என்னமா இருக்கு என்று கிள்ளி விட்டுப் போகிறான்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...