25 Jul 2019

குட்டி குட்டி வெளிச்சங்கள்!


குட்டி குட்டி வெளிச்சங்கள்!
            அதென்னப்பா சாதியம், பாலியல், மதவாதம் மூன்றும் ஒன்றாக இருக்கிறது என்றால்...
            இந்தப் பாலியலை ஆண் வர்க்கம் மட்டும் சாதியம் தாண்டி, மதத்தைத் தாண்டி செய்யலாம். பெண் வர்க்கம் செய்து விடக் கூடாது. அப்படிச் செய்யக் கூடாது என்று நேரடியாக சொல்ல முடியாது அல்லவா! அதற்காகத்தான் இந்த சாதியிம், மதவாதம், பாலியல் என்றெல்லாம் ஒன்று கோர்த்து நிற்கின்றன. பெண்களும் இந்த சாதி, மத அமைப்புகளின் பொறுப்புகளை ஏற்கும் போது இந்தக் கட்டமைப்புகள் அறவே அழிந்து போகும் என்று நினைக்கிறேன்.  இதற்கு முன்னுதாரணமாக ஏதாவது ஒரு சாதி அல்லது மதத்தின் தலைவராக ஒரு பெண்ணை நியமித்தால் நன்றாக இருக்கும். பெண்களின் குரல் ஒலிக்காமல், ஆண்களின் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருப்பதால்தான் சாதியம், மதம் என்பன போன்ற வார்த்தைகள் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன. இல்லையென்றால் எப்போதோ அழிய வேண்டிய வார்த்தைகள் இவைகள். பெண்களின் பேரன்பிற்கு முன் சாதியாவது மதமாவது? அவர்களின் பேரன்பை ஒலிக்க விடாமல் வீட்டுக்குள்ளே குறுக்கி வைத்திருப்பதால்தான் சாதியும், மதமும் புரையோடி பெருத்துக் கொண்டிருக்கின்றன.
*****
ஆர்கானிக் மந்திரம்
            "இதெல்லாம் ஆர்கானிக்கா? சர்டிபிகேட் ஏதும் இருக்கா?" என்றான் நாக்குபொடிச் சித்தன்.
            "அப்டில்லாம் ஒண்ணும் இல்ல!" என்று சொன்னதும்தான் அதெல்லாம் ஆர்கானிக் என்று நம்பி வாங்கினான் நாக்குபொடிச் சித்தன்.
*****
இந்தியா? இங்கிலீஷா?
            இந்தியைக் கற்றால் இந்தியா முழுக்க வேலை என்கிறாய்.
            ஆங்கிலம் கற்றால் உலகம் முழுக்க வேலை என்கிறார்கள்.
            யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழன் எதைக் கற்பான் சொல்!
            இந்தி இந்தி என்பவனும் என்ன செய்கிறான் சொல்! லண்டனுக்கு அனுப்பி பிள்ளைக் குட்டிகளை இங்கிலீஷ்தான் படிக்க வைக்கிறான்!
*****
விதிகளுக்கு ஏன் மரியாதையில்லை?
            இந்த நாட்டில் விதிகளுக்கு ஏன் மரியாதையே இருப்பதில்லை என்று ஆளாளுக்குக் கேட்கிறார்கள்.
            விதிமீறலைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்யாமல் அதற்கேற்ப புதுப்புது விதிகளை உருவாக்கிக் கொண்டே போனால் விதிகளுக்கு என்ன மரியாதை இருக்கும் சொல்லுங்கள்! இந்த விதியை மதித்து நடப்பதற்குள்தான் புதிய விதி வந்து விடுமே! அப்புறம் இந்த விதியை விட்டு விட்டு புதிய விதியை மதிக்க வேண்டியிருக்கும்!
*****
பூமி - மனிதன் வாழக் கூடிய கோளா?
            மனிதன் வாழக் கூடிய ஒரே கோள் பூமி.
            இந்தப் பூமியிலும் அகதி, விளிம்பு நிலை மக்கள் வாழவே முடியாது எனும் போது பிறகென்ன மனிதன் வாழக் கூடிய ஒரே கோள் பூமி என்று சொல்லிக் கொண்டு. மனிதன் வாழவும், வாழவும் முடியாத ஒரே கோள் பூமி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...