21 Jul 2019

வீடே வீட்டைக் கட்டிக் கொள்ளும்!



செய்யு - 152
            வீட்டைக் கட்டி குடி வருவது ஒரு யோகம்தான். இந்தச் சுற்றுப்பட்டு ஊர்களில் எத்தனை வீடுகள் விதவிதமாகக் கிடக்கின்றன. அஸ்திவாரம் வரை வந்து நின்று போன வீடுகள், லிண்டல் வரை நின்று போன வீடுகள், ரூப் காங்கிரட் போட்டு அப்படியே கிடக்கும் வீடுகள், பூச்சு பூசாமல் அப்படியே கிடக்கும் வீடுகள், வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்தும் குடி போகாமல் கிடக்கும் வீடுகள் என்று வகை வகையாக இருக்கின்றன. அவசர அவசரமாகக் குடி வந்ததில் வெங்குவுக்கு வருத்தம் என்றாலும் அது நாள்பட நாள்பட மறைந்து விடும் என்று நினைத்தது சுப்பு வாத்தியார். வெங்குவுக்கோ இப்படியா சொந்தம் பந்தம் என்று யாரிடமும் சொல்லாமல் குடி போவார்கள் என்ற மனக்கிலேசம். அதுவும் இல்லாமல் இந்த மாதிரி சுத்தமாகவே பூச்சு பூசாமல் வீடு குடி போனது இந்த சுற்றுபட்டில் இந்த வீடாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் வேறு வெங்குவின் மனதில் சேர்ந்து கொண்டு விட்டது.
            இந்த விசயத்தில் எப்போதும் பேச்சு வாக்கில் சுப்பு வாத்தியாருக்கும், வெங்குவுக்கும் அடிக்கடி சண்டை வந்து விடும். "நல்ல விதமா வூடு கட்டுறது எதுக்கு? சொந்த பந்தங்க வந்தா தங்க போவத்தானே! இப்படி ஊரு அறியாத ரகசியமாக வூடு கட்டி குடி போவறதுக்கு எதுக்கு வூடு கட்டணும்! வூட்டுல இருந்து மாடுகள எல்லாத்தியும் வித்துப்போட்டா ஒரு மனுஷம் குடி போவாம் விடிஞ்சா கல்யாணம் கட்டுறா தாலியங்ற மாரி!" என்று வெங்கு ஆரம்பித்தால்... சுப்பு வாத்தியாரிடம் அதற்கு ஒரு கதை இருக்கும்.
            இந்தக் கதை நடந்து ஐம்பது அறுவது வருஷங்கள் இருக்கும்.
            ஓகையூரில் சின்னமணி, சுதந்திரபாலும் ரெண்டு பேரும் அண்ணன் தம்பிகள். ரெண்டு பேருமே ஓகையூர் சிலம்ப வாத்தியாரின் பங்காளி வகையறாக்கள்தான்.
            ஓகையூர் சின்னமணி இப்படிதாம் சுப்பு வாத்தியார் கணக்காய் அப்போது மச்சு வீடு கட்ட ஆரம்பித்தது. தன்னை விட வயதில் சின்னவனான தம்பி இப்படி வீட்டை எடுத்துக் கட்ட ஆரம்பித்து விட்டானே என்று சின்னமணியின் அண்ணன் சுதந்திரபாலுவும் மச்சு வீடு கட்ட ஆரம்பித்தது.
            எல்லாவற்றிலும் தம்பிக்குப் போட்டியாகவே வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தது சுதந்திரபாலு. தம்பி சின்னமணி எண்ணூறு சதுர அடியில் வீட்டைப் போட்டால், அண்ணன் சுதந்திரமுத்து ரெண்டாயிரம் சதுர அடியில் வீட்டைப் போட்டது. தம்பி வீட்டுக்கு நிலையைத் தூக்கி வைத்தால் சுதந்திரபாலு அதற்கு முந்திக் கொண்டு நிலையைத் தூக்கி வைத்தது. தம்பியின் வீட்டுச் சுவர் நான்கடிக்கு எழுந்து நின்றால் அதை விட ஒரு அடி கூடுதலாக ஐந்தடிக்கு சுவரை எழுப்பி வைத்தது சுதந்திரபாலு. ஒரு கட்டத்தில் சின்னமணிக்கும் போட்டி உணர்வு வந்து விட்டது. ரெண்டு பேருக்கும் வீடு கட்டுவதில் போட்டா போட்டியாகப் போய் விட்டது. ஊர் முழுக்க இதே பேச்சாகி விட்டது. இப்படி அண்ணன் தம்பி ரெண்டு பட்டு போட்டிக்குப் போட்டியாக வீடு கட்டினால் ஊர்தான் சும்மா இருக்குமா. ரெண்டு பேரிடம் வீட்டை இப்படிக் கட்டு, அப்படிக் கட்டு என்று ஏகத்துக்கும் யோசனைகளை அள்ளித் தெளிக்க ஆரம்பிக்க விட்டது.
            ஆனால் நேரம் பாருங்கள்,            துரதிர்ஷ்டவசமாக அந்த வருஷம் அடித்தப் புயலும் மழையும் சின்னமணி, சுதந்திரமுத்து ரெண்டு பேரையும் குடை சாய்த்து விட்டது. ஊரே வெள்ளம் தண்ணியாக ஆனதோடு ஊரில் ஒரு மரம் இல்லாத அளவுக்கு எல்லாம் விழுந்து போயின. விவசாயம் பண்ணியிருந்த வயல்களெல்லாம் பெரும் இழப்பாகிப் போனது. தோப்புத் துரவில் இருந்த மரங்களெல்லாம் விழுந்ததில் ஊரிலே வலுத்த கையாக இருந்த சின்னமணியும், சுதந்தரமுத்துவும் அந்த இழப்பிலிருந்து எழுந்து நிற்பதே தடுமாற்றமாகிப் போனது. இப்போது இருக்கின்ற மாதிரியா அப்போது வீடு கட்ட பேங்கில் கடனெல்லாம் வாங்க முடிந்தது? விவசாய வருமானத்தை வைத்துதான் வீட்டைக் கட்டியாக வேண்டும். ஊரில் விவசாயத்தில் வலுத்த கைகளால்தான் அப்போது வீட்டையும் கட்ட முடிந்தது.
            என்னடா வீட்டைக் கட்டப் போய் நிலைமை இப்படியாகி விட்டதே என்று ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரியாகப் போய் விட்டது. சின்னமணியை விட சுதந்திரமுத்து பெரிய வீடாகப் போட்டதால் ஏகப்பட்ட பணத்தை வீட்டில் விட்டிருந்தது. என்ன இருந்தாலும் வீடு ஓரளவுக்கு ஆகி விட்டது என்றாலும் தம்பிக்கு முன் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு வேறு சுதந்திரபாலுவைப் பிடித்துக் கொண்டு விட்டது. தம்பி கச்சிதமாக வீட்டைப் போட்டிருப்பதால் தனக்கு முன்னே வீட்டை முடித்து விடுவானோ என்ற பதற்றம் வேறு சுதந்திரபாலுவுக்குச் சேர்ந்து விட்டது.
            அண்ணன் சுதந்திரமுத்து யோசித்த அளவுக்கு எல்லாம் சின்னமணி ரொம்ப யோசிக்கவில்லை.             அது போக்குக்கு ரூப் காங்கிரட் போட வேண்டிய நிலையில் இருந்த வீட்டில் சட்டென வேக வேகமாக கூரையைப் போட்டுக் கொண்டு குடி போய் விட்டது. "இதென்னடா மாடி வீடு கட்டுறேன்னு சுவரெல்லாம் எழுப்பி கூரையைப் போட்டு மச்சு வூட்டை கூரை வூடு கணக்கா மாத்தி குடி போயிருக்கானே!" என்று ஊரே வித்தியாசமாகப் பார்த்தது. ஆனால் அடித்தப் புயலில் அவனவனும் வூடு இல்லாமல் தவிக்கும் போது சின்னமணி புத்திசாலித்தனமாக முடிவு எடுத்ததாகவும் இப்படியும் பேசிக் கொண்டது.
            அத்தோடு "என்னாடா சின்னமணி! இப்படி பண்ணிப் போட்டே?" என்று ஊரில் கேட்காத ஆளில்லை.
            "இதுக்கு மேல தெம்பில்லண்ணே! காசு வந்தா பாத்துப்போம்!" என்றது சின்னமணி.
            சுதந்திரபாலுவுக்கு தம்பி போல கூரையைப் போட்டுக் கொண்டு போய் விடக் கூடாது என்ற வைராக்கியம் வேறு. அதோட மனசுக்கு அது ஒரு பெரிய கெளரவப் பிரச்சனை. "ன்னாடா வூடு கட்டுறானுவோ! தக்கனோண்டும் துக்கினியோண்டும் கொசுவுக்கு வூடு கட்டுற மாரி! வூடுன்னா எம்ம மனசு மாரி விசாலமா இருக்கணும்டா! அவ்வேம் அவ்வேம் மனசு மாரிதான்டா வூடும் இருக்கும்! ஊரே வந்தாலும் தங்கணும்! அதுதாம்டா வூடு!" என்று வேறு போதாகுறைக்கு தம்பி கட்டும் வீட்டை சாடை மாடையாக நக்கல் அடித்திருந்தது சுதந்திரபாலு. அந்த நக்கலோடே, அப்படியே அந்த வைராக்கியத்தோடே வீட்டையும், சின்னபின்னமாகிக் கிடந்த வயலையும், தோப்பையும் பார்த்துப் பார்த்தே சுதந்திரபாலு ஒரு நாள் மாரடைப்பில் போய் சேரும் என்று யாருக்குத் தெரியும்? வீடுகட்டுன நேரந்தான் சரியில்லாமல் சுதந்திரபாலு போய் சேர்ந்து விட்டதாக ஊருக்குள் கதை விட்டி விட யார் வேண்டும் சொல்லுங்கள். ஊரே அப்படித்தான் கதை அளந்தது.
            சுதந்திரபாலு செத்ததற்குப் பின் அதன் மனைவிக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அப்பா ஊருக்குப் போய் விட்டது. பிற்பாடு அந்த வீட்டுக்குள்ளேயே கருவமரமும், எருக்கஞ் செடிகளும் கிளம்பி அப்படியே பாழடைந்தது போனது.  ஓகையூரில் இப்படி சிதிலமடைந்து கிடக்கும் சுதந்திரபாலுவின் வீட்டைப் பார்க்கையில் மாடி வீடு கட்ட நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும் லேசான பயம் வந்துப் போகும், சுதந்திரபாலுவின் வீட போல ஆயி விடக் கூடாதே என்று. ஒருவேளை சுதந்திரபாலுவும் தம்பி சின்னமணியைப் போலவே கூரையைப் போட்டு குடி போயிருந்தால் இப்படி ஆயிருக்காதோ என்று ஆளாளுக்கு அந்த வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் ஆராய்ச்சிதான்.
            அதற்குப் பின் சின்னமணி ஒரு ரெண்டு மூணு வருஷ காலத்திலேயே தலைநிமிர்ந்தது. அண்ணன் சுதந்திரமுத்து சாகுபடி பண்ண நிலங்களும் அதன் கைக்கு வந்து ஓகோ என்று தலையெடுத்தது. வீட்டுக்கும் காங்கிரிட் போட்டு புது வீட்டில் பொண்ணுக்கு கல்யாணத்தையும் வைத்து கொடிகட்டிப் பறந்தது.
            இந்தக் கதையின் தொடர்ச்சியாகத்தான், "கால் வீடோ, அரை வீடோ இல்ல முக்கால் வீடோ அதுக்கு மேல வீட்டைக் கட்டி முடியலன்னா ஏதோ ஒக்கப் பண்ணி குடி போயிடணும்டா சாமி! வீட்ட எடுத்துக் கட்டறவேம் கட்டற வூட்டுல குடியிருக்குறதுக்கும் ஒரு ராசி வேணுமப்பா!" என்ற சொல் வழக்கை ஓகையூரில் இப்போதும் கேட்கலாம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
            அந்த ஓகையூரின் சொல் வழக்கு ஓகையூரில் வயல் வைத்திருக்கும் சுப்பு வாத்தியாரின் காதுகளில் விழாமல் இருந்திருக்குமா என்ன? அது மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நன்றாக வாழ வேண்டும்தான் என்று வீட்டைக் கட்டிப் பார்க்கிறான் மனுஷன். அந்த வீடே கட்ட நினைப்பவனை வீழ்த்தி விடக் கூடாதல்லவா! அதற்கு ஒரே வழி கட்டுகின்ற வீடு எந்த நிலையில் இருந்தாலும் அதற்கு மேல் கட்ட முடியாத நிலையில் அப்படியே அதற்குள் குடி போய் விட வேண்டுமாம். அப்படி குடி போய் விட்டால் அது அந்த வீட்டுக்கு ஒரு மாதிரியாய்ப் போய் விடுமாம். இந்த மனுஷர்களை இப்படிக் குடி வர பண்ணிட்டோமே என நினைத்து எப்படியாவது தன்னைத் தானே நல்ல விதமாக எடுத்துக் கட்ட அந்த வீடே ஒரு வழியைக் காட்டுமாம். அப்படி ஒரு பேச்சும் அதே ஓகையூரில் உண்டு.
            இந்தக் கதைகளின் பின்னணியில் எப்படியோ வீட்டுக்கு பால் காய்ச்சி குடி வந்தததில் சுப்பு வாத்தியாருக்கு மனதில் அப்பாடா என்றிருந்திருக்க வேண்டும். காற்றோ மழையோ சுருண்டு கொண்டு படுத்துக் கொள்ள ஒரு வீடு இருக்கிறது என்று சுப்பு வாத்தியாருக்கு மனதில் ஒரு தெம்பு வந்து விட்டது. அந்தத் தெம்போடு நடுக்கூடத்தில் பாயை விரித்துப் படுத்துக் கொள்வதும், தாடி தாத்தா வந்தால் அதை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து பேசிக் கொண்டிருப்பதும் சுப்பு வாத்தியாரின் வழக்கமாகி விட்டது.
            இதுக்கு மேல்தான் என்ன வீடு? என்று இந்தக் கதைகளையெல்லாம் சொல்லி வெங்குவைச் சமாதானம் செய்ய சுப்பு வாத்தியாருக்குப் போதும் போதுமென்றானது பலபல கதைகளாக நீளக் கூடிய சமாச்சாரம்.
            இப்படியாக மனுஷ மனசின் முடிவுகளுக்குப் பின்னால் பற்பல காரணப் பின்னணிகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு மனுஷ மனசோட முடிவை இன்னொரு மனுஷ மனசு புரிஞ்சிகிட்டு அதை ஏத்துகிறதுக்குள்ள ரொம்ப கால நேரம் ஆகிடுது. ஏத்துக்க முடியாத அந்த மனுஷ மனசுக்கும் அப்படி ஏத்துக்க முடியாம இருக்குறதுக்கு காரண பின்னணிகள் இல்லாமலா இருக்கும்? அதுக்குள்ள ஏதெதோ நடக்காமல் இருந்தாகணும். அது வேற இருக்கு.
            வீடு குடி வாரப்ப இன்னின்ன மாதிரி இன்னின்ன சம்பவங்கள் நடக்கக் கூடாதுன்னு வெங்குவோட மனசுக்குள்ளயும் ஒரு சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும். ‍அதோட நேரத்தைப் பாருங்க! வீடு கட்டுற நேரமா பாத்து புள்ளே ஓடிப் போறான், அப்பாங்காரு செத்துப் போறாரு, தனக்கும் ஒடம்பு சரியில்லாமப் போகுது, மாடுகள எல்லாத்தியும் வித்தாகுது, பணங்காசுக்கு இது வரிக்கும் இல்லாத நெருக்கடி வந்தாகுதுன்னா எல்லாமும் சேர்ந்து மனசுல ஒரு சஞ்சலத்ததான உருவாக்கச் செய்யும். அப்படி உருவான சஞ்சலமும், குழப்பமும்தான் வெங்குவுக்கு. இந்தக் கிராமத்துப் பொம்பளைகளுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல சகுனம், கெட்ட சகுனம் பாக்குற குணம் ரொம்பவே அதிகம். அதெல்லாம் பார்த்து மனசுக்கு ஒத்து வந்தாகணும். இல்லேன்னா அதுகளுக்கு மனசு நிலைகொள்ளாமத்தானே தவிக்கும்.
            "வூடு குடி வந்த நேரம் நல்ல நேரமா இருந்தா போதும் போ!" என்று வெங்கு கடைசியாக ஒரு வழியாக நிலை கொண்டது. அது எப்படிப்பட்ட நேரமாக இருந்தது என்பது போகப் போகத்தான் தெரிந்தது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...