21 Jul 2019

கார் வாங்கலாமா? வேண்டாமா?



            ஏன் இன்னும் காரு வாங்காமா இருக்கீங்க? என்ற கேள்வியை அண்மைக் காலமாக அதிகமாக எதிர்கொள்ள வேண்டிருக்கு.
            திருவிழாவுல விக்குற காரு பொம்மைக் கணக்கா வீட்டுக்கு வீடு இப்போ  காரை வாங்கிப் போட்டுட்டு இருக்காங்க என்னவோ வூட்டுக்கு முன்னாடி ஒரு காரு கெடக்கிறது கெளவரங்றது போல. அப்படி வாங்கிப் போட்டுருக்குற காரை ஆடிக்கொரு தடவ, அமாவாசைக்கு ஒரு தடவ ரோட்டுல வெள்ளோட்டம் வுட்டுப் பாக்குறாங்க.
            பல வீட்டுக் காருங்கள ஊருல பாக்கிறப்ப ரோட்டுலயே விட்டு வெச்சிருக்காங்க அது அம்மணமா நிக்கக் கூடாதுங்ற கணக்கா அதுக்கு ஒரு டிரெஸ்ஸ போட்டு விட்ட மாதிரி ஒரு உறையைப் போட்டு விட்டு.
            வீட்டுக்கு முன்னாடி ஒரு காரை வாங்கிப் போட்டா அதுக்கே ஒரு எடத்த வாங்கி வீட்டைக் கட்டணும் போலருக்கு. அதுலப் பாருங்க! வூட்டுக்கு வூடு மரம் வளர்க்கச் சொன்னா அதுக்கு எடம் எங்கே இருக்குன்னு ‍கேள்வி கேட்டவங்க கூட ரோட்டு ஓரமா காரை வாங்கி விட்டு வெச்சிருக்காங்க!
            இந்த ஊருல இருக்குற காருகள திரட்டுனீங்கன்னா அதுகள நிப்பாட்டுறதுக்கே நாலஞ்சிக் கல்யாண மண்டபத்தப் பிடிக்கணும்.
            நீங்க திருவாரூரு டவுனுப் பக்கம் வந்துப் பாக்கணும்! இந்தக் காருகாரங்களால கடைத்தெருப் பக்கம் இடமிருந்து வலம் திரும்புறதும், வலமிருந்து இடம் திரும்புறதும் அவ்ளோ கஷ்டமா இருக்கு. அந்தக் காரைக் கடைத்தெருவுக்கு வெளிய ஓரமா விட்டுட்டு அவுங்க நடந்து வந்தா நல்லா இருக்கும்! கார வெச்சிருக்கவங்க நடக்கச் சம்மதிப்பாங்களா சொல்லுங்க? இதனால டவுனுப் பக்கம் போறதே செரமமாப் போயிடுது! கிராமத்தானா இருக்குற நாம்ம ஒரு சாமாஞ் செட்டு வாங்கக் கூட டவுனுக்குப் போகாம கிராமத்துலயே கெடந்துடலாமான்னு தோணுது.
            என்னா காரு இல்லாம மழைக்காலத்த சமாளிக்கிறதுதாம் கஷ்டமா இருக்கு. அதனாலென்ன மழை வாரப்ப நாம்ம ஏம் வெளியில போயிட்டு! அதுலயும் இந்த திருவாரூரு ஜில்லாவுல மீத்தேனு, ஹைட்ரோ கார்பனுன்னு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா ஒரு சொட்டு மழை பெய்யப் போறதுல்ல. அப்புறம் மழை இல்லாத ஊருல காரு நமக்கு எதுக்கு?
            அப்படியே மழைப் பேஞ்சாலும் நம்மூரு பஸ்ஸூ இருக்குப் பாத்துப்போம். என்னா அதுலன்னா மழை வெளியில பேய்ஞ்சா அதுல உள்ளேயும் பெய்யுது! ஊருலயும் எவ்ளோ பிராது எழுதிப் பாத்தாச்சி! பஸ்ஸூலாம் நட்டத்துல ஓடுறதா அலுத்துகிட்டு ஒழுகுற பஸ்ஸூக்கு எதுவும் செய்யாம இருந்துறாங்க! அதனாலென்ன மழை பேஞ்சப்ப நாமளா எப்போ மழையில நனைஞ்சிருக்கோம்? அந்தப் பஸ்ஸூல போறப்பயாவது நனைஞ்சிட்டுப் போயிட்டுப் போறோம்! அதனால யாருக்கு என்னா ஆயிடப் போவுது? நனைஞ்சா காய்ச்சலோ சளியோ வரப் போவுது. டாக்டருட்ட போனா அது அவருக்கு ஒரு வருமானமாவாவது இருக்கட்டும்.
            ரொம்ப முக்கியமாக காருக்கு இன்ஷ்யூரன்சு அப்பொறம் வருஷாந்திர மெயின்டென்டஸ் முப்பதாயிரம், அப்பைக்கப்போ ஊத்துற பேட்ரோலுன்னு செலவு கணக்குச் சொன்னதுமே சுருக்குன்னு ஆயிப் போயிடுச்சி. எப்போவ் அந்தக் காசுல வருஷத்துக்கு எப்படியோ குடும்பத்தையே ஓட்டிப்புடுவோம்! அந்தக் காசிக்கு காரை வெச்சி ஓட்டுறதுன்னா எப்புடி?
            இவ்வளவயும் சொல்லிப்புட்டு காரு வாங்குறதா இல்லையான்னு சொல்லாம வுட்டா எப்பூடி?
            "ஏம் மாப்ளே! எங்கேயோ மன்னார்குடியோ, திருவாரூரோ போவனும்னு சொன்னீயே! காரு ரொம்ப நாளா ஓடமா கெடக்கு! பெட்ரோல்ல போட்டுட்டு கார எடுத்துட்டுப் போயிட்டு வாயேன்! போறப்ப அப்டியே ஒரு மூட்ட அரிசிய மட்டும் வாங்கியாந்து போட்டு வுட்டுடு!" என்று சொல்ல ஊரில் நாலு பேர் இருக்கும் போது இப்போ காரு வாங்கி என்னவாகப் போகிறது சொல்லுங்கள்!
            "சார்! மாசத் தவணை ஆயிரம் ரூவாத்தாம்! ஒரு காரு வாங்கிக்குங்க சார்!" என்று வீட்டுக்கு முன் போட்டிப் போட்டுக் கொண்டு நாலைந்து பேர் வந்து நிற்கும் காலமும் வராமலா போய் விடப் போகிறது!
            இப்போது நீங்களே சொல்லுங்கள்! கார் வாங்கலாமா? வேண்டாமா?
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...