20 Jul 2019

வீட்டுக்குள் வந்தாச்சி!



செய்யு - 151
            இருந்த எல்லா மாடுகளையும் விற்றதில் வெங்குவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும் முறுக்கிக் கொண்டு விட்டது. ரெண்டு பேருக்கும் மனத்தாங்கல். அப்படியும் இப்படியும் குழப்பிப் பேசி வெங்கு கும்மியடித்ததில் சுப்பு வாத்தியார் பேச்சைக் குறைத்துக் கொண்டு விட்டது. வெங்கு ஏதாவது சுப்பு வாத்தியாரிடம் பேசுவது என்றால் சாடை மாடையாகப் பேசுவதோடு சரி! சாடை மாடையாக என்றால் ஒப்புக்குச் சப்புக்கு பேச்சு கிடையாது. சமயத்தில் படு காத்திரமாய்ப் பேசத் தொடங்கி விடும் வெங்கு. இப்படியாக வெங்கு சாடை மாடையாகப் பேசிக் கொண்டே இருந்தது. சுப்பு வாத்தியார் மெளனம் என்றால் அப்படி ஒரு மெளனகுருவாக இருக்க ஆரம்பித்தது.
            மாடுகளை விற்றதில், அதுவும் கடைசியாக விற்ற மாடும் கன்றும் ரொம்ப விஷேசமாய் இருந்தது. அந்தக் கன்று பார்க்க மான்குட்டிப் போல அப்படி ஒரு அழகு. முடி அப்படியே பொசு பொசுவென்று மொசக்குட்டிக்கு இருப்பது போலவே இருக்கிறது. அப்படியே மானும், மொசக்குட்டியும் சேர்ந்த மாதிரி ஒரு கன்றுக்குட்டி. கன்றுக்குட்டி இப்படியென்றால் மாடு அது ஒரு தனி வகை. மாட்டிலும் அது போன்ற ஒரு மாட்டைப் பார்க்க முடியாது. மேய ஓட்டிக் கொண்டு போய் அடித்து விட்டு வந்தால் சரியான நேரத்தில் அதுவாகவே வீட்டுக்குத் திரும்பி வந்து விடும். தெருக்காரர்கள் யாராவது மனத்தாங்கலால் அங்கே இங்கே என்று அதை அடித்து விரட்டினாலும் அது பாட்டுக்குப் போவது போல எங்கேயாவது போயி அங்கேயிருந்து திரும்பி சரியாகத் திரும்பி வீட்டுக்கு வந்து விடும். வீட்டிலிருந்து போய் யாராவது மேய்த்துக் கொண்டிருந்தாலும் நேரமாகி விட்டது என்றால் அது பாட்டுக்குக் கிளம்பி வீட்டுக்கு வந்து கொண்டேயிருக்கும். அது வீட்டுக்குக் கிளம்பி விட்டதென்றால் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இத்தனைக்கும் அதனுடைய கன்றுகள் மேய்ந்து கொண்டிருக்கும். எதையும் பொருட்படுத்தாமல் அந்த மாடு மட்டும் வந்து கொண்டிருக்கும்.
            "வளர்க்கவே வேண்டியதில்லடா! அது பாட்டுக்கு வளந்துக்கும்! மேய்க்கவே வேண்டியதில்லடா! அது பாட்டுக்கு மேய்ஞ்சுக்கும்! கன்னுகுட்டிக்குக் கூட பாலு கொடுக்காதேடா! ஒதைச்சு வுட்டுட்டு நம்மகிட்டதாம்டா பால கொடுக்கும்! அதயும் போயி இந்த மனுஷம் வித்தாம் பாரு! அப்பிடி ன்னாடா கஷ்டம் வந்துப் போச்சி? வாங்குன கடன வட்டியக் கட்டிட்டு ரண்டு மாசம் மூணு மாசம் தள்ளிக் கட்டிக்கிறது! எம் பேச்ச யாரு கேட்பா? எஞ் சொல்ல யாரு காதுல போடுவா?
            "வூடு கட்டிக் குடி போறப்ப நம்ம வூட்டு மாட்ட வெச்சுதாம்டா கோமாதா எங்க குலமாதான்னு வூட்டுக்குள்ள மொத அடி எடுத்து வர வெச்சி குடி போகணும்! இப்பிடி இருந்த மாடுகள எல்லாத்தியும் வித்துப்பூட்டிங்களாடா! எந்த மாட்ட வெச்சிடா குடிப் போகப் போறீங்க! மாடு இல்லாதவேம் இன்னொரு வூட்டுல மாட்ட புடிச்சாந்து குடி போவலாம். மாடு இருக்குற நாம்ம இப்பிடி எல்லா மாட்டயும் வித்துப்புட்டு இன்னொரு வூட்டு மாட்டப் புடிச்சாந்து குடி போவணும்னு ன்னடா தலயெழுத்து?" என்றெல்லாம் இஷ்டத்துக்கு எல்லா மாடுகளையும் விற்று விட்ட வேதனையில் பாட்டு வைத்துக் கொண்டிருக்கிறது வெங்கு.
            எதுவுமே காதில் விழாதது போல சுப்பு வாத்தியார் ரூப் காங்கிரிட் போடப்பட்டு பூசப்படாமல் இருக்கும் வீட்டைச் சுத்தம் செய்வதில் முனைப்பாக இருக்கிறது. அதுவே ஒரு ஏணியை வைத்துக் கொண்டு ரூப்பின் மேல் துருத்திக் கொண்டிருக்கும் காங்கிரட் பிதுங்கலை அப்படியும் இப்படியுமாக தட்டி விட்டுக் கொண்டிருக்கிறது.
            "இந்த மனுஷனுக்கு ன்னா ஆச்சுன்னே தெரியலியே! எது கேட்டாலும் எந்தப் பதிலும் வரததேயில்ல. அந்த வூட்டலேர்ந்த எல்லா சாமான் செட்டுகளயும் மாட்டுக் கொட்டகைக்குக் கொண்டாந்து போட்டு மாரடிக்குறாரு. இப்போ என்னான்னா கட்டிட்ட இருக்குற வூட்ட சுத்தம் பண்றேம்னு கிளம்பிருக்காரு! ஏலே வெகடு! ஏட்டி செய்யு! நீங்களாட்டியும் ன்னான்னு கேளுங்க!" என்கிறது வெங்கு.
            கேட்டதற்கு சுப்பு வாத்தியார் சொல்கிறது, "வர்ற புதங்கெழம நாளு நல்லா இருக்கு! அன்னிக்கே இஞ்ஞ குடி வந்திடுவேம்!"
            விசயத்தை வெங்குவிடம் சொன்னால், "இத்து ன்னாடா புது கதெயா இருக்கு! வூட்டுல பொட்டுக்குக் கூட பூச்சு பூசல! அந்த வூட்டுல எஞ்ஞ படுக்குறது? எஞ்ஞ பொழங்குறுது? அட, எஞ்ஞடா சொறு பொங்குறது? ன்னாடா ஆச்சு ஒங்க அப்பாவுக்கு?" என்கிறது. பிள்ளைகளிடம் கேட்ட இதை அப்படியே சுப்பு வாத்தியாரின் காதில் விழுமாறு சாடையாகவும் கேட்கிறது.
            "குடி வந்துட்டு கொஞ்சம் கொஞ்சமா பூசிக்கலாம். படுக்கக் கொள்ள, பொழங்க கொள்ள வூட்ட சுத்தம் பண்ணிப்போம். பின்னாடி கூரையில ஒரு சாய்ப்பு இழுக்குறேம். அஞ்ஞ அடுப்பு வெச்சி சமைச்சிக்கலாம்!" என்று சொல்லி விட்டு ஒத்தை ஆளாய் பத்து பதினைஞ்சி மூங்கில் கழிகளை வைத்துக் கொண்டு அடுப்படிக்கென சாய்ப்பு போடும் வேலையில் இறங்குகிறது சுப்பு வாத்தியார்.
            "இந்த மனுஷனுக்கு ன்னம்மோ ஆயிப் போயிடுச்சிடா! நாம்ம சொல்றதெல்லாம் மண்டயில ஏறாது. அது போறப் போக்கிலயே போகட்டும். நமக்கென்ன? அஞ்ஞ வாடகெ வூட்டுல சமச்சா ன்னா? இஞ்ஞ இந்த வூட்டுக் கொட்டாயில சமச்சா ன்னா? சோறா வேவ மாட்டேன்னு சொல்லப் போவுது? எஞ்ஞ பொங்குனாலும் சோறு பொங்கும்டா! எஞ்ஞ கொதிச்சாலும் கொழம்பு கொதிக்கும்டா? ஒலையுல அரிசியயும், சட்டியில புளித்தண்ணியயும் கரச்சி வுட்டா ஆக்கிப் போடறதுக்கா பஞ்சம்! ஒரு ரண்டு மாசம் அந்த வாடகெ வூட்டுலயே தங்கி கொஞ்சம் முன்ன பின்ன பூச்ச பூசிட்டு வந்தாத்தாம் ன்னா? ஏம் இந்த அவசரம்? எல்லாம் அதது சுழிக்குதாம் பண்ணிட்டு அலயுதுங்கோ!" என்று யாரிடமோ பேசுவது போல சுப்பு வாத்தியார் காதில் விழுமாறு வெங்குவும் சத்தம் கொடுக்கிறது.
            "இந்தாரு! அந்த முல்லேம்பா ஆத்தா வூட்டு விக்குறதா முடிவு பண்ணி வூட்ட காலி பண்ணச் சொல்லுது! இதுக்கு மேல அஞ்ஞ இருக்க முடியாது. வெளில வந்துறதுதாம் மரியாதி. அதாங் இருபத்தஞ்சு தேதிக்குள்ள வாரதுன்னு முடிவு பண்ணியாச்சி. அதுக்கு மேலன்னா நாளு நல்லாயில்ல. இதுக்கு மேல வேற ன்னா பண்றது? பூசிட்டுதாம் இஞ்ஞ வரணும்னு நெனச்சா அது வரிக்கும் மாட்டுக் கொட்டாய்ல இருக்கறதுதாம் வழி! அஞ்ஞ இருப்போம்னா சொல்லுங்க இருந்துப்போம். இப்ப இருக்குற நெலயில நம்மட்ட பூசுறதுக்குக் காசியில்ல. இருந்த சில்லுண்டி கடன உடனயெல்லாம் மாட்ட வித்து கையில இருந்த காசிய வெச்சி அடைச்சாச்சி. பூசணும்னா அதுக்கும் எப்படியும் நாலஞ்சி மாசம் ஆயிடும். அதுக்குள்ள மழைக்காலமும் வந்திடும். மழைக்காலம் வந்திடுச்சின்னா கொட்டாய்ல இருக்குறது சங்கட்டமா போயிடும். எல்லாத்தியும் யோஜிச்சுதாம் பண்றேம். ஒண்ணும் அலங்கமலங்க போட்டு அடிச்சிட்டு நிக்காதீய்யே. பூச்சு பூசுனாலும் இதுதாம் நம்மெ வூடு. பூசாட்டியும் இதுதாம் நம்மெ வூடு."
            "யாராச்சியும் இது மாரி குடி வந்துட்டு வூட்டப் பூசுவாங்களா ன்னா? வூட்டுக்குள்ள குடி வந்துட்டாவே வூட்டு வேல பாக்கக் கூடாதுன்னு தெரியாதா ஒங்களுக்கு? ஏம் ஒங்க புத்தி இப்புடிப் போவுதோ?" என்று இப்போது நேரடியாகவே கெட்கிறது வெங்கு.
            "அதல்லாம் பாத்தத கதெ இப்போ முடியாது போலருக்கு! பேசிட்டே இருந்துட்டா ஆவுமா? இருக்குறத வெச்சி ன்னா செய்யு முடியும்னு பாத்துட்டுப் போறதுதாம் புத்திசாலிதனமா இருக்கும். சாஸ்திரம் சம்பிரதாயம்னு பாத்துட்டு இருந்தா முழுசா முடியறதுக்கு ஒரு வருஷத்துக்கு மேலயும் ஆவும். ஒரு வருஷ வாடகக் காசிக்கு வூட்டுல ஒரு ரூமைப் பூசி முடிக்கலாம்! வர்ற புதெங் கெழம இஞ்ஞ வாரதுக்கான வேலயப் பாருங்க!" என்கிறது சுப்பு வாத்தியார்.
            அது சரி! இங்கே வருவதற்கு என்ன வேலை இருக்கிறது? இருந்த சாமான்களில் முக்கியமானவைகள் எல்லாம் மாட்டுக் கொட்டகைக்கு வந்த பாடாயிற்று. அங்கே முல்லேம்பாள் வீட்டில் இருந்தது ஒரு சில தட்டு முட்டுச் சாமான்கள்தாம். ஒரு அரை மணிநேரம் அந்த வூட்டுக்கும், இந்த வூட்டக்கும் பத்து தடவைப் போய் வந்தால் அவையும் இங்கே வந்து சேர்ந்து விடும். ஆக இங்கே வருவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்திருந்தது.
            வீயெம் மாமாவை வரச் சொல்லி திண்ணைக்கும், கொல்லைக்கும் மட்டும் கதவை சீக்கிரம் தயார் பண்ணி முறுக்கச் சொன்னது சுப்பு வாத்தியார். அறுத்துப் போட்டிருந்த வேங்கை மரத்திலிருந்து தோதான பலகைகளாய் எடுத்துப் போட்டு ஒரே நாளில் கதவைத் தயார் பண்ணி மாட்டி விட்டுப் போனது வீயெம் மாமா.
            பழைய வீட்டிலிருந்த கரண்ட் கனெக்சன் அப்படியே இருந்தது. புது கனெக்சனை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அதிலிருந்து கனெக்சன் எடுத்து திண்ணைக்கு ஒரு குண்டு பல்பு, கூடத்துக்கு ஒரு டியூப் லைட், ரெண்டு அறைக்கும் அறைக்கொரு குண்டு பல்பு, கூடத்துக்குப் பின்னால் இருந்த சமையல் கூடத்துக்கு ஒரு டியூப் லைட், கொல்லைப் பக்கப் புழக்கத்துக்கு ஒரு குண்டு பல்பு, அப்படியே மாட்டுக் கொட்டகைக்கு ஒரு குண்டு பல்பு என்று ஒரு எலெக்ட்ரீஷியனைக் கொண்டு வந்து ஏற்பாடு செய்தது சுப்பு வாத்தயார்.
            அக்கம் பக்கத்திலிருந்த ஏழெட்டு வீடுகளுக்கு மட்டும் சொல்லி பால் காய்ச்சியாகிறது அந்த புதன் கிழமையில். ஒரு பெரிய மாலையை, நிஜமாகவே பெரிய மாலைதாம். அதை மட்டும் வாங்கி வந்து தெரு நிலைக்கு பந்தாவாகாப் போடபட்டிருக்கிறது.
            வந்தவர்களுக்கு எல்லாம் பாலைக் காய்ச்சிக் கொடுத்து அவர்களுக்கு மட்டும் மத்தியானமாக சாப்பாடு போட்டு ஆகிறது. அப்படியே மத்தியானமாய்ச் சாப்பிட வந்த மேஸ்திரி கொத்தனாருக்கும், வீயெம் மாமாவுக்கும் வேட்டி, சட்டை, தேங்காய், பூ, பழம், வெற்றிலைப் பாக்கு அத்தோடு ஐநூறு ரூபாய் பணத்தை தாம்பாளத் தட்டி வைத்துக் கொடுத்தாகிறது.
            "என்னா வாத்தியாரே! வூட்டக் கட்டி ஊரையே கூட்டி விருந்து போடுவீங்கன்னு பாத்தா இப்படி இந்தத் தெருவுல ஏழெட்டு வூடுகளோட நிப்பாட்டிப் புட்டீக! அதனாலயும் ஒண்ணுமில்ல. வேற விஷேசம் ஏதும் வாராமலா போயிடப் போவுது? அப்போ ரண்டு பங்கா விருந்து பண்ணிப்புடணும் ஆமா!" என்கிறார்கள் வந்தவர்கள்.
            தாடி தாத்தா மட்டும் படக் கடையிலிருந்து மையமாய் பிள்ளையாரும், ரண்டு ஓரத்திலும் பக்கத்துக்கு ஒன்றாக லெட்சுமியும், சரஸ்வதியும் இருக்கும் படத்தை வாங்கி வந்து சமையல்கூடத்தில் இருக்கும் ஜன்னலில் ஆணியை அடித்து அவராகவே மாட்டி விடுகிறார். வெங்கு அந்த இடத்துக்குப் பக்கத்திலேயே நல்ல விளக்கு, ஐயனாரப்பர், மாரியம்மன் படங்களை மாட்டி விட்டு சாமி மாடமாக வைத்துக் கொள்கிறது.
            "எம்ம தலயெழுத்து! எம்ம வூட்டுக்குக் குடி வாரப்ப எம்ம வூட்டு மாடு கண்ணு இல்லாம இப்படிக் குடி வரணும்னு இருக்கு!" என்று அலுத்துக் கொள்கிறது வெங்கு.
            "அதெல்லாம் ஒண்ணும் நெனைக்காதீங்க! எத்தனியோ பேரு இது மாரி நெனச்சிட்டு வேலய முடிச்சிட்டு குடி வாருவோம்னு குடி போவாமலே இருக்காம். வூடும் அப்படியே பத்து இருவது வருஷம் கெடந்து போயிடும். சட்டுபுட்டுன்னு எதயும் யோசிக்காம குடி வந்ததைப் பத்தி சந்தோஷப்படுங்க. இப்போ நாட்டுல இருக்குற நெலமயில இதுதாஞ் சரி. நல்ல வெதமாக குடி வந்தத நெனச்சி ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்க! அமோகமாக வருவீங்க பாருங்க!" என்கிறார் தாடி தாத்தா.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...