24 Jul 2019

ஆற்றோடு போகும் ஆற்றின் கதை



செய்யு - 155
            "ஆத்துல எத எதெ இழுத்து வுடுறானுவோ பாரு! டவுனுப் பக்கமா ஓடி வார்ற ஆறுல்லாம் பாவஞ் செஞ்ஞ ஆறு! ஆறே பாவஞ் செஞ்ச ஆறா போயிடுறதால அந்த ஆத்துல முழுவி எந்தப் பாவத்தெ கழுவச் சொல்றே? அடி ஆயி இனுமே இந்த ஆத்துல குளிக்குறதும் ஒண்ணுதாம்! குளிக்காம நாறிப் போயி கெடக்கிறதும் ஒண்ணுதாம்! நாறிப் போன ஆத்துல வுழுந்து குளிச்சி நாறிப் போறதுக்கு குளிக்காமலயே கெடக்கலாம்!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            "எப்படி யக்கா இத்து மாரிலாம் ஆத்துல வருது?" என்கிறது வெங்கு.
            "அந்த கதெயே ஏம்டி கேட்குறே? பொண்டுவோ முன்ன காலத்துக் கணக்காவா இருக்கா‍ளுவோ? அவ்வளுவோ சும்மா கெடந்தாலும் வெட்டிப் பயலுவோ சும்மாவா இருக்கானுவோ? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப் போயிடுது! மருந்து கிருந்த அரச்சிக் குடிச்சிப் பாக்குதுங்க! மாத்திர மருந்த போட்டுப் பாக்குதுங்க! கர்ப்பம் கலஞ்சாப் போச்சி! கலயாட்டியும் இந்த பயலுவோளே அதுகள அழச்சிட்டுப் போயி கலச்சி வுடுறானுவ்வோடி! கலைக்க முடியாட்டியும் ஆயுதம் போட்டு இழுத்து விட்டுடுறானுவோ! இதுக்குன்னே டவுனுல ஏகப்பட்ட ஆஸ்பத்திரிக இருக்குறதா பேசிக்கிறாளுவோ! அப்படிக் கலயறத, ஆயுதம் போட்டு எடுத்தத ஆத்தோட ஆறா வுட்டுடுறானுவோ! அப்படி வாரதுதாம் குளிக்குறவங்க மேல இப்படி அப்படித் தண்டுபடுது! நீயி என்ன ஏதோன்னு பயந்துபுட்டு கையால புடிச்சிப் பாத்துப்புட்டே!" என்று தம்மேந்தி ஆத்தா சொன்னதும் வெங்குவுக்கு ஒடம்பெல்லாம் ஒரு மாதிரியாக நடுங்குகிறது.
            "யாம் பெத்தப் பயே அப்பவே சொன்னாம்! அவனே வேற திட்டிப் போட்டு வீரப்பா குளிக்க வந்தா இந்த கதெ ஆகுதே!" என்கிறது அழாத குறையாக வெங்கு.
            "ஏந் தங்காச்சி! ஊருல அப்படி இப்படின்னு ஆத்துல இந்த கதெய்யா வாரதா பேசிட்டு இருந்தாளுவோ! நாங் கூட நாம்ம ஆத்துல போயி குளிக்குறத பாத்துட்டு கோட்டி புடிச்சா கணக்கா கதெ கட்டி வுடுறதாதாங் நெனச்சேம்டி! நெசமுன்னு நம்பலே! நேர்லயே பாக்குற மாரி ஆயிப் போச்சுடி! ஒனக்கென்ன ஒம்ம வூட்டுலதாம் பைப்படி இருக்கே! அஞ்ஞயே குளிச்சிக்கோ! ஏ யம்மா! நானும் முச்சந்தி பைப்புல ரண்டு வாளி அடிச்சேந்தான்னா குளிச்சித் தொலச்சிருவேம்! இந்த ஆத்த இன்னியோட தலய முழுகிட்டு திரும்பிப் பாக்காம போயிடணும்!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            அவர்கள் பேசிக் கொண்டே கரையேறி மெயின் ரோட்டைக் கடந்து தெருவுக்குள் நடந்து வருகிறார்கள். முச்சந்தி பைப் வருகிறது. தம்மேந்தி ஆத்தாவே முச்சந்தி பைப்பில் ஒரு வாளி தண்ணீரை அடித்து வெங்குவின் மேல் ஊற்றி விடுகிறது. அப்படியே அதுவும் ஒரு வாளி தண்ணீரை அடித்து தன் மேலும் ஊற்றிக் கொள்கிறது.
            "இவுளுங்க என்னடி ஆத்துலயும் குளிச்சிட்டு இப்படி முச்சந்தி பைப்புலயும் தண்ணி அடிச்சி குளிக்கிறாளுவோ? இதென்ன புதுக் குளியல் முறையால்ல இருக்குது! ஊருல இல்லாத அதிசயமா புதுசா புதுசால்ல கண்டுபிடிக்குறாளுங்களே!" என்று அதிசயமாய் அதை ரெண்டு பெண்டுகள் வேடிக்கைப் பார்க்கின்றன. என்ன எதுவென்று கேட்க அதுகளுக்கும் ஆசைதாம். தம்மேந்தி ஆத்தா ஒரு நேரம் பேசுகின்ற மாதிரி ஒரு நேரம் பேசாது. சமயத்தில் வாயைக் கிழித்து விடும் அளவுக்கு பேசி விடும் என்ற யோசனையில் கேட்க தயங்கிக் கொண்டே அதுகளும் அப்படியே நிற்கிறதுகள். இதுகள் ரெண்டு எதையும் கண்டுக்காத மாதிரி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறதுகள்.
            "போடி தங்காச்சி! ஆத்துக் குளியல இன்னியோட தலை முழுகியாச்சி! பிடிச்ச பீடை ஒழிஞ்சாச்சி! ஆத்துல குளிச்சாதாம் அதல்லாம் ஒழியும்னு பேசிப்பாங்க! இனுமே காலத்துக்கும் அதுல குளிக்காட்டிதாம் அதல்லாம் ஒழியும்டி! வூட்டுக்குப் போய் வெளக்க கொளுத்தி வெச்சிட்டு சாமிய வேண்டிட்டு காலுல வுழுந்து எந்திரி எல்லாஞ் சரியாப் போயிடும். இப்பதாம் வூட்டக் கட்டிட்டு குடி போயிருக்குறே! வூட்டுக்குள்ள போறப்ப ஒரு செம்பு தண்ணிய காலுல ஊத்திட்டு உள்ளப் போ!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            இது வேற வூடு கட்டி குடி போயிருக்கிறத இப்படி ஞாபகப்படுத்தி விட்டு பீதிய கெளப்புதே என்ற நடுக்கத்தில், "நீயும் ஒரு எட்டு வாயேம் யக்கா!" என்கிறது வெங்கு.
            "நீ போடி மொதல்ல! நாமளும் வூட்டுக்குப் போயி பண்ண வேண்டியத பண்ணிட்டு வந்து நிக்கிறேம்! ஒண்ணும் தோஷமும் யில்ல ஒரு மண்ணும் யில்ல. முன்னால போ நீயி பின்னால வாரேம். வூட்டுல கெழவனெ கொஞ்சம் கவனிச்சிட்டு வாரேம். இல்லாட்டி நாளு பூரா வூட்டுல பொண்டுக இருக்காளுங்களா இல்லியான்னு கதெ வெச்சிட்டு இருப்பாம்! வூட்டக்குள்ள மனுஷம் தங்க முடியாது!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            ‍வெண்ணாற்றைப் பொருத்த மட்டில் வானத்துக்குத் தெரிகிறது இந்த ஆற்றில் எதை விட வேண்டுமென்று. அது எங்கேயோ உருவாகி எப்படியெப்படியோ பேர் மாறி இங்கே வருவதற்கு முன்னே உருவான மலைப் பகுதிக்கும் தெரியும் இந்த ஆற்றில் எதை விட வேண்டுமென்று. வானம் மழையாய்ப் பொழிந்து தண்ணீரை விட்டால், மலைப் பகுதி மணலையும், மூலிகைகளின் மணத்தையும் அந்தத் தண்ணீரில் கலந்து விட்டால் மனுஷப் பயலுக்கு இந்த வெண்ணாறு கலந்து விடுவதற்கு எல்லாமுமாக இருக்கிறது. இந்த ஆற்றிலே பாவத்தைக் கழுவியும் கொள்கிறான். கழுவிக் கொண்டதற்கு பிராயசித்தமாக பாவத்தைக் கலந்தும் விடுகிறான். வெண்ணாறு எந்தப் பேதத்தையும் பார்க்காது. கலந்து விடும் எல்லாத்தையும் அடித்துக் கொண்டு ஓடுகிறது. அதோட மனநிலை என்பது ஏதோ தத்துவத்தில் சொல்வார்களே அத்தைவம் என்று, அப்படிப்பட்ட மனநிலைதான். எல்லாவற்யைும் கடந்த மனநிலை அதுக்கு. இல்லையென்றால் அது இத்தனை காலம் இந்த மனுஷப் பயல்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்க முடியுமா? அவன் சொன்னபடியெல்லாம் கேட்டவாசித்தான் அதை ஒட விட்டிருக்கிறான்.
            நீர் பருக, விவசாயம் செய்ய, குளம் குட்டைகளுக்கு நீர் தேக்க என்றிருந்த ஆறு இப்போது அவனுக்கு கழிவுகளைக் கலந்து விட ஒரு வாய்க்காலாகப் போய் விட்டது. ஒரு வகையில் மனுஷனுக்குக் கழிவுகள் இருக்கும் வரை இந்த ஆறும் இருக்கும். வெண்ணாறாக இருந்தது வருங்காலத்தில் என்ன ஆறாக இருக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. இதுவும் வருங்கால கூவமாக மாறி மூக்கைப் பிடித்துக் கொள்ள செய்யப் போகிறதா என்பது புரியவில்லை.
            மரத்தைப் போலத்தான் ஆறும். வெட்டினாலும் சரி, வெட்டாவிட்டாலும் சரி மரம் என்ன செய்ய முடிகிறது? வெட்டுவதற்கு எதிராக அந்த மரத்தால் குரல் கொடுக்கவா முடிகிறது? அது இருப்பதும் இல்லாமல் போவதும் அந்த மரத்துக்கே நிச்சயமில்லை. இந்த ஆறும் அப்படித்தாம். தண்ணீர் ஓடினாலும், ஓடா விட்டாலும் அப்படியேதான் கிடக்கிறது. அதை வெட்டினாலும் மணலை அள்ளினாலும் அதனால் என்ன பண்ண முடிகிறது? அது தண்ணீராய் ஓடினால் இதைக் கலக்கலாம், அதைக் கலக்கக் கூடாது என்று எதுவும் சொல்ல முடிகிறதா அதனால்? மனுஷனுக்குக் கட்டுப்பட்டு இருப்பதோ, இல்லாமல் தொலைவதைத் தவிர ஆறுக்கு வேறு என்ன வழியிருக்கிறது? ஒரு வழி வேண்டுமானால் இருக்கிறது! எப்போதாவது கரைபுரண்டு வெள்ளமாய் ஓடி கரையை உடைத்து ஊருக்குள் புகுந்து நல்லவன், கெட்டவன் என்று பார்க்காமல் எல்லாரையும் பழி தீர்த்துக் கொள்கிறது.
            மனுஷப் பயல் எது செய்தாலும் அது இந்த ஆற்றில் தெரிகிறது. தொழிற்சாலையைக் கட்டுகிறானா அது இந்த ஆற்றில் தெரியும் அவன் கலந்து விடும் அதன் கழிவுகளிலிருந்து. பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளைக் கட்டுகிறானா அதுவும் இந்த ஆற்றில் தெரியும் அவன் கலந்து விடும்  அதன் கழிவுகளிலிருந்து. பெரிய பெரிய வணிக வீதிகளை உருவாக்குகிறானா அதுவும் இந்த ஆற்றில் கலந்து விடும் அதன் கழிவுகளிலிருந்து தெரியும். மனுஷன் எதை உருவாக்குகிறான் என்பதை ஊடகத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதை விட, ஓவ்வொரு ஊரின் ஊடாக ஓடும் இந்த ஆறுகளைப் பார்த்தே எவ்வளவோ தெரிந்து கொள்ள முடியும்தான்!
            அத்தோடு இந்த மனுஷப் பயல் எதை அதிகம் பயன்படுத்துகிறான் என்பதும் இந்த ஆற்றைப் பார்த்தே சொல்லி விடலாம். இவன் ஆத்துத் தண்ணி கணக்காய் ஒரு நாளைக்கு எவ்ளோ போதைச் சரக்குக் குடிக்கிறான் என்பதற்கு ஏற்ற அளவுக்கு அவன் வாங்கும் வாட்டர் பாக்கெட்டுகள் உறை உறையாய் இந்த ஆற்றில்தான் போஸ்ட் பண்ணி விடுகிறான். வெங்காயத் தாமரை மண்டுன குளம் கணக்கா சமயத்துல ஒரே பாலிதீனாவும் இந்த ஆறு அள்ளிட்டு வாரதைப் பார்க்கிறப்ப, கூலி கொடுக்காத துப்புரவுத் தொழிலாளி கணக்கா நகராட்சிக்கும், ஊராட்சிக்கும் இந்த ஆறு என்னா சேவகம் பண்ணுது தெரியுமா? டவுனு வழியா ஓடியார இந்த வெண்ணாறு ஒவ்வொரு  டவுனுக்கும் பண்ணுற ஊழியத்துக்கு அதெ கவனிக்கிறதுக்கு பைசா காச கூட மனுஷன் எடுத்து வைக்கிறதில்ல! ஓசியிலயே வேலய வாங்கிட்டு ஓசியிலயே அதோட கதெயையும் முடிச்சி விட்டுட்டு இருக்கிறான்.
            போகுறப் போக்குல நம்மோட கதையை விட்டுட்டு ஆத்தோட கதையைப் பேசிட்டு இருக்கோம்னு நெனச்சிக்காதீங்க! இந்த ஆத்தோட கதைததான நம்மோட கதையும். நம்மோட கதைதான இந்த ஆத்தோட கதையும். நம்ம கதை அப்படியே இந்த ஆத்துல தெரியுது. அது என்னவோ இந்த ஆறுகளெல்லாம் பொழுது போகாம டைம் பாஸூக்காக ஓடுறதா இந்த மனுஷன் நெனச்சிட்டு இருக்கிறான். அது இந்த மனுஷப் பயலுக்காகத்தான் அவனோட கதையைச் சுமந்து ஓடிட்டு இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியவே போறதில்ல. அவனுக்கு அந்தக் கதை தெரிஞ்சி என்னாதான் ஆகப் போகுது? அவனுக்குத் தெரிஞ்சிக்க வேண்டிய சினிமா கதைதாம் நெறைய இருக்கே!
            இந்த ஆத்துல மணலு கொறஞ்சா தண்ணி தட்டா ஆகுது. தண்ணியே கொறஞ்சா வயலுங்க தட்டா ஆவுது. குறுவை, சம்பான்னு ரெண்டு போக சாகுபடி இருந்தா எவன் நெலத்த ப்ளாட்டு போட வுடுவானுங்கங்கறீங்க? அப்படியெல்லாம் ப்ளாட் போட வுடாட்டி நம்மோட ‍பொருளாதார வளர்ச்சி என்னாவுறதுன்னு நெனச்சிட்டு நம்மோட அரசியல்வாதிங்க கர்நாடகக்காரங்கிட்டச் சொல்லி தண்ணியே வுட வாணாம்னு சொல்லிப்புடற மாரிதாம் தெரியுது நெலமையைப் பாக்கிறப்ப! ஏதோ அப்பைக்கப்போ தண்ணிய கொஞ்சம் ஓட விட்டாத்தாம் மினரல் வாட்டரு கம்பெனிக்காரங்க பொழைப்பாங்க மாதிரி அப்போக்கைப்போ தண்ணிய ஓட வுட்டா அதுல எதெ கலக்கிறது? எதெ வுடறதுன்னு குழம்பிப் போயி எல்லாத்தையும் கலந்து வுட்டுத் தொலயுறாங்க!
            எப்படிப் பார்த்தாலும் மனுஷனால ஆற்றை அழிச்சிட முடியாதுங்றதுதாம் ஒரே ஆறுதல்! அவனுக்கு சாக்கடையை ஓட வுடறுதுக்காவது ஒரு ஆறு தேவையாத்தானே இருக்கு!
            அட என்னப்பா! இந்த ஆறு நீளமா ஓடுறதால இந்த ஆத்தோட கதையும் இப்படியே நீளமா ஓடும் போல இருக்கே! இந்த தம்மேந்தி ஆத்தா அதோட கெழவனுக்கு செய்ய வேண்டிய பணிக்கைகளைச் செஞ்சிட்டு வாரதுக்குள்ள கொஞ்சம் ஆற்றோட கதையைப் பேச வேண்டியதாப் போச்சி!
            இத்தோ! தம்மேந்தி ஆத்தா வந்திடுச்சி! அதுக்கும் ரொம்ப நாளா வெங்குகிட்ட வந்து நெறய கதைகளைப் பேசணும்னு ஆசைதாம். இப்போ வெங்குவே ஏதோ நடுக்கத்துல கூப்பிட்டு விட்டாச்சில்லே! நெறய கதையைப் பேசப் போறாங்க! சினிமாவுல ஒரு இன்டர்வெல்லுக்கு அப்புறமா கதையே ஒரு விதமா சூடு பிடிக்கும்ல! அப்படி சூடு பிடிக்கிற கணக்கா ஏதேதோ கதைகளைத்தான் பேசப் போறாங்கன்னு நினைக்கிறேன். கேட்டாத்தானே தெரியும் என்ன பேசப் போறாங்கன்னு!
            "ஏட்டி தங்காச்சி! என்னாடி பண்ணிட்டு இருக்கே? வாரதுக்கு செத்த நாழி ஆச்சிடி!" என்று உள்ளே நுழைகிறது தம்மேந்தி ஆத்தா.
            "இந்தா யக்கா! இப்படி கொல்லயப் பாத்து பைப்படி பக்கமா வா!" என்கிறது வெங்கு.
            "ஒம் மவ்வே?"
            "அவளெ இப்பதாம் பள்ளியோடம் கெளப்பி அடிச்சி விட்டேம்!"
            "அந்தப் பயே?"
            "ரூமுள்ள பாக்கலியா! பொத்தகத்த எடுத்து உக்காந்துட்டா பொத்தகத்துலயே பூட்டி வைக்க வேண்டியதுதாம்!"
            "வாத்தியாரு கெளம்பிட்டாரா?"
            "மன்னார்குடி வேலைன்னு காலயில ஏழரைக்கல்லாம் கெளம்பிட்டாரேன்னு குளிக்க வந்ததுக்குதாம் இந்த மாதிரி கதையா ஆயிப் போயிடுச்சி! நெதானமா பத்து பதினொண்ணுக்குப் போயிருந்தா இப்படி ஆயிருக்காது!"
            "எல்லாம் நல்லதுக்குன்னு நெனச்சிட்டுப் போ! அந்தக் கதையைக் கேக்கணும்னே நெனச்சிட்டே இருந்தேம்! அப்புறம் என்னாச்சி?" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...