11 Jul 2019

இரத்தமாய்ப் பிரியும் நீர்!



செய்யு - 142
            "ஒன்னய நெனச்சு நெனச்சே இந்த ஒடம்பு நோவாப் போவுதுப்பா! ஒமக்கு நல்ல புத்திய ஆண்டவேம் எப்போ கொடுக்கப் போறோனோ? ஏம் ஐயனாரப்பா! அடி ஆயே மகமாயே! ஒங்கட காதுகளுக்கு எம்மட வேண்டுதலு விழுதில்லையோ!" என்று விகடுவைப் பார்த்தும் பார்க்காதது போல வெங்குவுக்கு தினம் தினம் அழுகைதான்.
            முன்பைப் போல் புல்லறுக்கப் போவதோ, மாடுகளைப் பார்ப்பதோ வெங்குவால் முடியவில்லை. சுப்பு வாத்தியாரால் பள்ளிக்கூடத்துக்கும் போய்க் கொண்டு வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, மாடுகளையும் பார்த்துக் கொண்டு சிரமமாகத்தான் இருக்கிறது. மணமங்கலம் பள்ளிக்கு சைக்கிளில் போய்க் கொண்டும், வந்து கொண்டும், வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் செய்யுவுக்கும் சிரமமாகத்தான் இருக்கிறது.
            விகடு அவன் பாட்டுக்குப் பிடித்த வைத்த பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்திருக்கிறான். புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் மணிக்கணக்கில் மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.
            "இப்பிடி இவ்வேன் காலேஜி புத்தகத்தைப் படிச்சா எங்கேயோ போயிருப்பான்! சுழி! என்னென்ம்மோ புத்தகத்தை வெச்சி படிச்சிட்டுக் கெடக்கிறான். இப்பிடி புத்தகத்துல எழுதிருக்கிறத வாசிச்சுட்டு கெடக்கணும்னு அவ்வேன் தலயெழுத்துல எழுதிருக்குப் போல" என்று வெங்கு அவனைப் பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்கிறது. எல்லாம் நினைத்துக் கொள்வதுதான். அவனை எதையாவது கேட்டு, எதையாவது சொல்லி மறுபடியும் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவானோ என்ற பயம் எல்லாருக்கும் இருக்கிறது.
            அதற்காக அப்படியேவா விட்டு விட முடிகிறது? ஒரு நேரத்தில் வரும் பேச்சை ஒரு நேரத்தில் அடக்கிக் கொண்டாலும், இன்னொரு நேரத்தில் அப்படியா முடிகிறது? தன்னையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்துதான் தொலைக்கின்றன. அப்படித்தான் சமயங்களில் வெங்கு பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறது.
            "ஒனக்கு என்னடா கொறச்சல்? பேசாம வூட்டோ கெட. ஒம் முகத்த பாக்கமா ஒடம்புக்கு முடியாம போயித் தொலயுதுடா! இப்போதாங் கொஞ்சம் ஒடம்பும், மனசும் தெளுவா இருக்குற மாரி இருக்குடா! போனதுதாம் போனீயே ஒடம்பயாவது தெடகாத்திருமா வெச்சிருக்கியான்னா அதுவுங் இல்ல. ன்னடா இது ஒடம்பு? சோனி நாயிக்கு செரச்சி வுட்ட மாரி! ஒம் ஒடம்புக்குச் சாப்புட சம்பாரிக்க முடியலன்னா அது என்னடா வேல? அதுக்குப் போயி மல்லுகட்டிட்டு நின்னுறிக்கியே! ஒடம்புதான் உசுரு! ஒடம்புதாம்டா வாழ்க்க! அது வுட்டுடக்கூடாது. அதுக்காதத்தானடே எல்லாம். அது வுட்டுப்புட்டு நீ யென்னத்த சாதிக்கப் போறே! வெளியில கெளம்புற வேலயெல்லாம் வுட்டுப்புடு. ஊர்ல ஒண்ணொண்ணும் படிக்க வெக்க மாட்டேங்குதேன்னு கலங்கி நிக்குதுங்க. இவனெ காலேஜிக்குக் கொண்டு போயி படிக்க வெச்சா இந்த மாரி வந்து நிக்குறானே! அடெ யப்பா வூட்டோ கெடடா! ஒங்க அப்பாருட்ட சொல்லி ஒரு வாத்தியாரு வேலய வாங்கித் தரச் சொல்றேம்! புள்ளீகளுக்குப் பாடம் சொல்லிக் கெடந்துட்டு வூட்டோட கெட!" என்கிறது வெங்கு.
            " ஆம்மா! நாம்ம பள்ளியோடம் வெச்சு நடத்துறோம் பாரு! ஒம் புள்ளிக்கு வேலய போட்டுக் கொடுக்க! யில்ல... நாம்ம ன்னா கவர்மெண்டா வெச்சு நடத்திட்டு இருக்கிறோம் வேல போட்டுக் கொடுக்க! அதெல்லாம் படிச்சாதாம் இன்னிக்கு வேல. நாம்ம படிச்சிட்டு பத்து வருஷத்துக்கு வேலயில்லாம கட்டயடிச்சிட்டுக் கெடந்தேம். அதுக்கப்புறம்தான் வேல வந்திச்சி. ஏத்தோ அப்போ வேல வந்திச்சி. இதுகள படிக்க வைக்கிற தெம்பும், இதுக படிப்புக்காக வூட்ட மாத்திட்டுப் போற தெகிரியமும் இருந்துச்சி. படிச்சாத்தாம் எதயும் செய்யலாம். அதால இந்தாரு நீ பாட்டுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ண கெளப்பி வுட்டுட்டு புத்திய பெசகி விட்டுப் புடாதே! ஒழுங்கா காலேஜிக்குப் போற வழிய பாக்கச் சொல்லுவியா! எப்பப் பாத்தாலும் வூட்டோட கெட, வூட்டோட கெடன்னா அவ்வேம் ன்னா வயசுக்கு வந்த புள்ளயா? இந்தக் காலத்துல வயசுக்கு வந்த புள்ளீவோளே ன்னம்மா போயி படிக்குது தெரியுமா? வடவாதி மேரி டீச்சரு பொண்ணு இருக்குல்ல. பன்னென்டாவது முடிச்சிது. மார்க்குன்னா மார்க்கு. அப்பிடியொரு மார்க்கு. அந்த மார்க்குக்கு ஆடுதொறயில டீச்சரு டிரெயினிங் முடிச்சிது. முடிச்சி ரண்டு மாசமாயிருக்காது. இத்தோ வேலக்கிப் போயிட்டு இருக்கு. புள்ளீங்கன்னா அது மாரில்ல இருக்கணும்!" என்கிறார் சுப்பு வாத்தியார்.
            "இந்தாருடா ராசா! நீயொண்ணும் மனசுல வெச்சிக்காதே! அது செரி! அவ்வேம் யாருக்கென்ன தப்பு பண்ணாம்? யாருக்கென்ன குத்தம் வெச்சாம்! ஏதோ ஆசெ! பாட்டெழுதணும்னு. போனாம். எங்கப்பாரு செத்து அவனெ இஞ்ஞ கொண்டாந்துட்டாரு. ஏலே இஞ்ஞயே பாட்டெழுதிட்டு இஞ்ஞயே கெடடா. யாருடா ஒன்னய என்ன பண்ண முடியும்?" என்கிறது வெங்கு.
            விகடுவுக்கு சிரிப்பு வராத குறைதான். "அம்மா! நீ பேசாமல் இரு!" என்கிறான்.
            "இந்தாருடா! புள்ளைக்கு காலேஜி போனதுல மாற ஆரம்பிச்சப் பேச்சி, மெட்ராஸூ போனதுக்கப்புறம் ன்னம்மா மாறிப் போச்சி! நாலு எடத்துக்குப் போயி வந்தாத்தாம் இப்படி மாத்தமெல்லாம். போதும்டா யம்பி மாத்தம்! இனிமே எங்கயும் போயித் தொலஞ்சிடாதே! கொஞ்ச நாளாவே முதுகுக்கப் பின்னால, அடிவயித்துல சுருக் சுருக்னு குத்துதுடா கொடயுதுடா! வலின்னா வலி தாங்க முடியல!" என்கிறது வெங்கு.
            "மருத்துவரிடம் காட்ட வேண்டியதுதானே!" என்கிறான் விகடு.
            "நீயாவது அம்மாவ சோணாச்சலம் டாக்டருகிட்டே அழச்சிட்டுப் போயிட்டு வாயேன்! அப்பா கூப்புட்டா கெளம்ப மாட்டேங்குது!" என்கிறாள் செய்யுவும் இதைக் கேட்டுக் கொண்டு.
            "நீயி ஓடிப் போன ஏக்கத்துல அப்படியே கெடந்துட்டம்டா! அந்தாண்ட இந்தாண்ட நகரத் தோணல. சாப்பாடு தண்ணி போகல. அதுல கொஞ்சம் ஒடம்புக்கு ஏதோ ஆயிடுச்சி. எழுந்து கொஞ்சம் நடமாட்டம் இப்பதான ஆயிருக்கு. இனுமே சரியாப் போயிடும். ஒரு நாலு நாளிக்குப் பாப்பம். வலி தாங்கிக்குற மாரிதாம்டா வலிக்குது. ஆனா ன்னம்மோ தெரியல தாங்கிக்க முடியலடா. இதெல்லாம் ன்னா வலி? இத விட வலியெல்லாம் தாங்குன ஒடம்புதாம். இப்போ ன்னம்மோ முடியல்ல. வயசாகுதுல்ல!" என்கிறது வெங்கு.
            தம்மேந்தி ஆத்தா என்னென்னமோ கை வைத்தியமாக செய்து பார்க்கிறது. "நீரு பிரியறதுலதாங் கொற மாரி தெரியுதுடி. இந்த ஆனநெருஞ்சில கொண்டாந்து தண்ணில வுட்டு அப்படியே சுத்திகிட்டே இருந்தா நொறச்சிகிட்டு வரும் பாரு! அந்த தண்ணியெ எடுத்துக் குடிக்கணும். பிரியாத நீரும் பிரிஞ்சிட்டு வந்துடும்!" என்று ஏதேதொ செய்து பார்க்கிறது. வாழை மரத்தை குழிவாய் வெட்டி எடுத்து விட்டு அதில் சேகரமாகவும் நீரைக் கொண்டு வந்து கொடுத்துப் பார்க்கிறது. எல்லாத்துக்கும் குடிக்கிற அந்த கொஞ்ச நேரம்தான் சரியாக இருக்கிறது. அப்புறம் முதுகுத் தண்டுக்குப் பக்கத்தில் சுருக் சுருக் என்ற வலியும், அடிவயித்தை வெட்டி எடுத்து தூக்கிப் போட்டு விடுகிறது போல வலியுமாக இருக்கிறது.
            "இதென்னடா எதுக்கும் கட்டுப்படாத வெயாதியா இருக்கு! இந்தாரு வெகடு. அர கிலோ நல்ல முள்ளங்கிய வாங்கியா. அதுவா நானான்னு பாத்துப்புடுவோம்!" என்று தம்மேந்தி ஆத்தா விகடுவை முள்ளங்கிக் கிழங்கை வாங்கி வரச் சொல்லி அதை அப்படியே பச்சையாக சாறாகப் பிழிந்து எடுத்துக் கொடுத்துப் பார்க்கிறது. அதுவும் அப்படித்தான் குடித்த கொஞ்ச நேரத்துக்கு வலியை சரி பண்ணுகிறது. அப்புறம் விட்டு விட்டு வலிக்கிறது.
            "நம்ம பெரிய நயினா கடயில பார்லி அரிசி இருக்கும் வாங்கியாடா! கஞ்சி வெச்சிக் கொடுத்து சரி பண்றான்னா இல்லியான்னு பாரு!" என்கிறது தம்மேந்தி ஆத்தா. அதையும் வாங்கி வந்த கொடுத்தாகிப் பார்த்து விட்டது.
            "எலேயப்பா! இது நம்மால ஆவுற காரியமில்லடா! டாக்கடர்ர புடிச்சிப் பாத்துத் தொலயுங்கடா! எத்தனியோ வலிய பாத்து ஆத்தியிருக்கேம்டா. இந்த மாரி ஆத்த முடியாத வலிய இப்பதாம்டா பாக்கிறேம்!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            முல்லேம்பா ஆத்தாவுக்கும் என்னமோ போலாகி விட்டது. வீட்டை விட்டு சாடை மாடையாகக் காலிச் சொன்னதன் மனக்குறைதான் இப்படி ஆகி விட்டதோ என்று அதற்கும் பயம் கண்டு விட்டது.
            "இந்தாரு ஆச்சி! ஒண்ணும் அவசரமில்ல! இப்போதைக்கு எங்கும் போவ வாணாம். ஒம் ஒடம்பு சரியான பிற்பாடு போயிக்கலாம். மனசுல எந்தக் கொறயும் வெச்சிக்காத ஆயி! எல்லாம் சரியாப் பூயிடும். மூர்த்தியப்பருக்கு வேண்டிகிட்டு, அப்படியே மகமாயிக்கு மாவிலக்கு மாவு போடுறேன்னு சேத்து வேண்டிக்கோ! வலி போற எடம் தெரியாம ஓடுதா இல்லியான்னு பாரு!" என்று முல்லேம்பா ஆத்தா ஆற்றுப்படுத்திப் பார்க்கிறது.
            நான்கு நாள்களுக்குப் பொறுத்துப் பார்ப்போம் என்று வெங்கு சொன்ன வலி நாற்பது நாளுக்கு மேல் கடந்து ஒன்றுக்குப் போக முடியாமல், அது ரத்தமாகப் போன போதுதான் வெங்குவுக்குப் பயம் கண்டது.
            "ன்னம்மோ ரத்தமா போயித் தொலயுதுடா! வலி தாங்கலடா! ஆஸ்பத்திரிக்கி அழச்சிட்டுப் போயித் தொலயுங்கடா! ஆம்பள டாக்டருகிட்டலாம் காட்ட மாட்டேம்! போம்பள டாக்டரா கூப்புட்டுப் போயித் தொலயுங்கடா! ஒங்கள ரண்டு பேரயும் பெத்தப்ப கூட இந்த வலி காங்கலடா! அந்த வலியா வலிக்குது. இந்த வலிய தாங்கிட்டு மனுஷம் உசுரோட இருக்க மாட்டாம்டா! கொண்டு போயித் தொலயுங்கடா!" என்கிறது வெங்கு. விஷயம் கேள்விப்பட்டு சாமியாத்தா ஓடி வந்து பார்க்கிறது. விபூதி அடித்துப் பார்க்கிறது. விபூதிக்குக் கட்டுபடாத வலியாக இருக்கிறது அது. வலியைத் தாங்க முடியாமல் முணுகல் வேறு அவ்வபோது கேட்கிறது.
            இந்தத் திட்டையிலும், சுற்றியுள்ள பகுதியிலும் யார் பெண் டாக்டரைப் பார்க்கிறார்கள். ஆண் டாக்டர்கள்தான் ஆண்கள், பெண்கள் என்று எல்லாருக்கும் சேர்த்து வைத்தியம் பார்க்கிறார்கள். சுப்பு வாத்தியார் விநாயகம் வாத்தியாரை விசாரிக்கிறார். அவர் விவரத்தைச் சொல்லி அவருக்குத் தெரிந்த நான்கைந்து பேரிடம் விசாரிக்கிறார். "இது மாரி வெசயத்துக்குப் பாத்துப் பதனமா ஓவர் டோஸூ பண்ணாம வைத்தியம் பாக்கிறதுக்கு அன்பரசின்னு ஒரு டாக்டரு திருத்துறபூண்டியில இருக்குறதா சொல்றாங்க வாத்தியாரே!" என்கிறார் விநாயகம் வாத்தியார்.
            இந்த சுற்றுவட்டாரத்துக்கு திருவாரூர், மன்னார்குடி என்று வைத்திய ஆஸ்பத்திரிகளும், வைத்தியர்களும் இருந்தாலும் பெண்களின் வைத்தியத்துக்கு திருத்துறைப்பூண்டி அன்பரசிதான் பேர் போன ஆள். சொந்தமான கிளினிக்கில் பெண்களுக்கான எல்லாவித பிரச்சனைக்கும் வைத்தியம் பார்த்து வந்தது அந்த அம்மாள். பீஸ் ஆளுக்குத் தகுந்தாற் போல்தான். முடியாத ஏழை பாழைகளிடம் அதிகம் கேட்காது. பசையுள்ள ஆட்கள் என்றால் பீஸ் வாங்குவதில் கறார் காட்டும். இப்போதைக்கு பணமில்லை, வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று சொன்னாலும் அன்பரசி டாக்டரிடம் அதுக்கு அனுமதி உண்டு. வைத்தியமும் நோக்குப் பாக்குப் பார்த்துதான். அவசரப்பட்டு கத்தியை வைப்பதோ, ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போய் விடுவதோ கிடையாது. கைராசியான டாக்டர் வேறு. போனவர்கள் எப்படியும் குணமாகித்தான் வருவார்கள். மவராசி பிரசவம் என்று போனாலும் அவ்வளவு சீக்கிரத்தில் கத்தி வைக்காது. சுகப்பிரசவம் ஆகின்ற வரைக்கும் காத்திருக்கும். சமயத்தில் வலி கண்டு சுகப்பிரசவம் ஆக சில பெண்மணிகளுக்கு ரெண்டு நாட்கள் வரை கூட ஆகியிருக்கிறது. அத்தனை நாளும் ஆஸ்பத்திரியிலே கிடந்து பிரசவத்தை முடித்துக் கொடுத்து விட்டுதான் வீடு கிளம்பும். பிரசவமாக வேண்டிய பெண்ணே சிசேரியன் பண்ணி விடுங்கள் என்றாலும் அவசரம் காட்டாது. கட்டக் கடைசியாக கத்தி வைத்த கேஸ்கள் கடந்த இருபதாண்டு அனுபவத்தில் அன்பரசியைப் பொருத்த மட்டில் பத்துக்கு மேல் இருக்காது. அப்படி ஒரு டாக்டர் அன்பரசி.
            திருத்துறைப்பூண்டி அன்பரசியிடமே காட்டுவது என்று முடிவாகிறது. பஸ்ஸில் போட்டுக் கொண்டு போக உடல் தோதுபடாது என்பது புரிகிறது. காரு பிடித்தால் காசு கூடுதலாக செலவாகும் என்று ஒரு ஆட்டோ பிடித்து ஆட்டோவிலேயே போவது என்று முடிவானதும், யார் யார் போவது என்ற கேள்வி அடுத்து வந்து நிற்கிறது. வீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது, மாடுகள் வேறு கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. விகடு இப்போது வெட்டியாக இருந்ததால் அது ஒரு வசதியாக ஆகிப் போனது. அவனையும் சாமியாத்தாவையும் துணைக்கு அனுப்புவது என்று முடிவாகிறது. ஆட்டோவில் அவர்களை ஏற்றி விட்டு சுப்பு வாத்தியார் டிவியெஸ் பிப்டியில் கிளம்பினார் திருத்துறைப்பூண்டி அன்பரசி கிளினிக்கை நோக்கி.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...