14 Jul 2019

கதைகள் முடிவதில்லை!



செய்யு - 145
            மதுரையைத் தூங்கா நகரம் என்று சொல்கிறார்கள். திருத்துறைப்பூண்டியும் ஒரு வகையில் தூங்கா நகரம்தான். ஊரடங்கிப் போன நேரத்திலும் விழித்துக் கொண்டிருக்கும். நடுராத்திரியில் எழுந்து வந்து பார்த்தாலும் ரோட்டில் ஆட்களின் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கும். வேளாங்கண்ணி மாதாவுக்கு வேண்டிக் கொண்டு நடப்பவர்கள் நடந்து கொண்டிருப்பார்கள். ஆஸ்பத்திரியில் விகடுவுக்கு தூக்கம் வராமல் திருத்துறைப்பூண்டி சாலைகளில் திரிந்த போது முத்துப்பேட்டை ரோடு, வேதாரண்யம் ரோடு, மன்னார்குடி ரோடு, திருவாரூர் ரோடு என்று எந்த ரோட்டிலும் ஆட்களுக்குப் பஞ்சமிருக்காது. ஒத்தையாய், ரெட்டையாய், கூட்டமாய் என்று வித விதமாக ஆட்கள் நடந்து கொண்டிருப்பார்கள்.
            சின்னப் பிள்ளைகள், வயதானவர்கள், வயசுப் பெண்கள், நடுத்தர வயதுக்காரர்கள், கல்யாணம் ஆனவர்கள், கல்யாணம் ஆகாவதர்கள் என்று நடந்து போகும் மக்களில் அத்தனை வகைகளையும் பார்க்கலாம்.  அதெப்படி வயசுப் பெண்கள் நடுராத்திரியில் இப்படி எந்த பயமுமில்லாமல் நடந்து போகிறார்கள் என்று பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் போகிறார்கள். பகல் பொழுதை விட ராப் பொழுதுதான் நடப்பதற்கு தோதுபடுவதாகச் சொல்வார்கள். பகலைப் போல ராத்திரியில் வெயில் இருப்பதில்லை. பகல் வெம்மையானது என்றால் ராத்திரி குளுமையானது. பகலின் இரைச்சல், அமளிதுமளி எதுவும் இரவில் இருப்பதில்லை. இரவின் ஏகாந்தம் அவர்களை மேலும் மேலும் நடக்கத் தூண்டும் போலிருக்கிறது. அப்படி நடந்து செல்பவர்களுக்காக ஒரு சில டீக்கடைகளும் திறந்திருக்கும். ஒரு டீயை அடித்து விட்டு சிறிது நேரம் அவர்கள் பேசியிருந்து விட்டு செல்வதைப் பார்க்க விகடுவின் மனதுக்குள் அப்போது ஏதோ ஒரு விநோதம் கூடிக் கொள்ளும். எதைப் பேசினாலும் பேச்சின் முடிவில் மாதாயேசு என்பதைப் சேர்த்துக் கொள்வார்கள். பகலில் நடந்து போகுபவர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் இராப் பொழுதில் நடந்து போகுபவர்கள் எண்ணிக்கையில் அதிகம்தான்.
            அநேகமாக ராப்பொழுதில் பனிரெண்டு அல்லது ஒரு மணியாகி விட்டால் எந்த வாகனத்தையும் பார்க்க முடியாது. மறுபடியும் வாகனத்தைப் பார்க்க அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணியாகி விடும். அந்தப் பொழுதுகளில் அவர்கள் மட்டும் அவர்கள் பாட்டுக்கு நடந்து கொண்டே இருப்பார்கள். அவர்களோடு சிறிது தூரம் நடந்து போய் விட்டு திரும்புவது விகடுவுக்கு சிலிர்ப்பாக இருக்கும். நடந்து போய் விட்டு திரும்புவான். அநாதைப் போல கிடக்கும் அந்தச் சாலையில் நடப்பதுதான் எவ்வளவு சுகானுபவம் தெரியுமா? அந்த சுகானுபவத்துக்காகவே திருத்துறைப்பூண்டி ஆஸ்பிட்டலில் கிடக்க முடியாவிட்டாலும், திருத்துறைப்பூண்டி ரோடுகளில் கிடக்கலாம். வாகனங்களே போகாத சாலைகளில் மனிதர்கள் நடந்து போகும்தான் எத்தனை அழகு பூண்டு விடுகின்றன அந்தச் சாலைகள்! வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்றுதான் அது!
            அவனுக்கு நரிவலத்து ஹெச்சம்மின் ஞாபகம் வந்து விடும். இந்தச் சாலைகளில் ஏதோ ஒரு சாலை வழியாகத்தான் அவர் சைக்கிளில் நரிவலம் போயிருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டு அது எந்தச் சாலையாக இருக்கும் என்று தேடிக் கொண்டிருப்பான். அவர் சைக்கிள் போன சுவடு அழிந்து போகும் அளவிற்கு சாலை மீது எத்தனையோ சாலை போட்டிருப்பார்கள். ஏதோ ஒரு சாலைக்குள் அதன் சுவடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையோடு ரோட்டையே ஆழமாகப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறுவயதில் சிப்பூர் பெரியம்மாவின் வீட்டுக்குப் போக எட்டாம் நம்பர் பஸ்ஸில் மாவூர் வந்து இறங்கி, மாவூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வந்து, திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை பஸ் பிடித்துப் போன ஞாபகம் வந்து விடும். அப்போதெல்லாம் திருத்துறைப்பூண்டியை இப்படி இறங்கிப் பார்த்ததில்லை. பஸ்ஸில் போகிற போக்கில் பார்த்ததுதான்.
            இந்த பதினைந்து நாட்களில் திருத்துறைப்பூண்டியில் கால் படாத இடமில்‍லை என்ற அளவுக்கு நடந்தாயிற்று. கோயிலுக்கு மட்டும் போகவில்லை. அந்தக் குறைதான் போலிருக்கிறது இப்போது கோயில் கோயிலாக போய் விட்டு வீட்டுக்குப் போக வேண்டும் என்றிருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறான் விகடு. வேளாங்கண்ணி, நாகூர் என்று எங்கும் வர முடியாது என்று சொன்னால் தலையை இறக்கி விட மாட்டார்கள் என்றாலும் "ஒங்கம்மாவுக்கு இப்படி ஆனதுக்கு நீதாம்டா காரணம்! மறுபடியும் ஏதாவது ஆயிடுச்சுன்னா அதுக்கு இதுதான் காரணம்" என்று கொன்று போடுவதை விட கொடுமையாக சொல்லால் கொன்று போட்டு விடுவார்கள்.
            அப்படியும் கோக்குமாக்குத்தனமாய் யோசிக்க இதில் என்ன இருக்கிறது? அதையும் தாண்டி ஓரிடத்தில் பிறந்து ஒன்றாய் சென்று அவர்களுக்கும் நாட்களாகி விட்டது. எங்கேயாவது தொலைதூரத்துக் கல்யாணம் காட்சி என்றால் இப்படி ஒன்றாய்ச் சந்தித்து போவதுண்டு. அதுவும் ஆம்படையான்களின் நோக்கைப் பிடித்து அந்த நோக்குக்கு நூல் பிடித்தாற் போல. இதுபோன்ற வாய்ப்புகள் அபூர்வம்தான். நேர்த்திகடனுக்குப் போவதை விடவும் அதுதான் இதில் முக்கியம். இஷ்டத்துக்குப் பேசலாம். கூடவோ குறைவோ நேரங்காலம் பார்க்காமல் உட்கார்ந்து விட்டு வரலாம். பிடித்ததை வாங்கிச் சாப்பிடலாம். எல்லாம் சின்ன சின்ன விசயங்கள் என்றாலும் அந்த சின்ன சின்ன விசயங்கள் அவர்களுக்கு பெரிய பெரிய விசயங்கள். எப்போதாவது கிடைப்பன எப்போதோ வழி தவறிப் போய் பெய்யும் கொடைமழை போல. விகடு இந்த விசயத்தில் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வருபவன். தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட பிள்ளைதான் என்றாலும் அவர்களுக்கு அவன் கைக்குழந்தை போலத்தான். கையைப் பிடித்துதான் அழைத்துச் செல்வார்கள். ஆகவே இந்தப் பயணத்தில் வழிநடத்தலும் அநேகமாக அவர்களில் சிப்பூர் பெரியம்மாவோ அல்லது தேன்காடு சித்தியோதான்.
            பெண் பிள்ளைகளாய்ப் பிறந்ததாலே சாமியாத்தாவை எங்கும் அழைத்துக் கொண்டு போக முடியவில்லை என்ற ஏக்கமும் பெரியம்மாவுக்கும், சித்திக்கும், வெங்குவுக்கும் இதன் பின்னால் இல்லாமல் இருக்காது. நிச்சயமாய் ஆம்பிளைப் பிள்ளைகளாய்ப் பிறந்து விட்ட குமரு மாமாவும், வீயெம் மாமாவும் மருந்துக்குக் கூட சாமியாத்தாவை எங்கும் அழைத்துக் கொண்டு போகப் போவதில்லை. சாமியாத்தாவுக்கு இப்படியெல்லாம் ஏகப்பட்ட ஆசைகள் மனதில் உண்டு. சமயபுரத்து மாரியம்மன் கோயிலுக்குப் போக வேண்டும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் போக வேண்டும், சிதம்பரம், திருவண்ணாமலைக்கும் போக வேண்டும் என்று பெரிய பட்டியலே உண்டு. கோயில் கோயிலாய் நடந்து போய்க் கொண்டு இருக்கும் போதே உசுரு போயிட வேண்டும் என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்கும். அதனுடைய எத்தனையோ ஆசைகளில் மகாபாரதத்தைப் படிக்க வேண்டும், அந்தக் கதைகளைப் பேச வேண்டும் என்ற ஆசையை மட்டுந்தான் விகடுவால் நிறைவேற்ற முடிந்தது. அதற்கு இந்தப் பயணம் எப்படியோ ஒரு வாய்ப்பாகப் போனது. முன்பு ஒருமுறை சாமியத்தா திட்டைக்கு வந்திருந்த போது விகடு, அவனிடம் இருந்த மகாபாரதப் புத்தகத்தைக் கொடுத்த போது சாமியாத்தாவுக்கு அவ்வளவு சந்தோஷம். "கெழவிக்கு மொகத்துல சந்தோஷத்தப் பாரேன்! இந்த வயசுல அதயெல்லாம் படிச்சி ன்னா பண்ணப் போறே?" என்று வெங்கு கேட்டது நேற்று கேட்டது போல இருக்கிறது.
            "ஏலே! இத்தே படிச்சிட்டியா?" என்கிறது சாமியாத்தா அப்போது.
            "தெரியும்த்தா!" என்கிறான் அப்போது விகடு.
            "சொல்லு பாப்பம்!" என்கிறது சாமியாத்தாவும் விடாமல்.
            "சொத்துத் தகராறுக்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்டால் கடவுளாலும் ஒன்றும் பண்ண முடியாதுத்தா! அதாங் கதை!" என்கிறான் விகடு.
            "ஏலே! கிறுக்குப் பய புள்ளே! முழுக் கதையும் படிச்சிட்டியாடா! அதச் சொல்லு!" என்கிறது சாமியத்தா.
            "அண்ணன் தம்பிகளா பொறந்துட்டா ரத்தம் சிந்தாம இருக்க முடியாதுத்தா! மண்ணு, பொன்னு, பெண்ணு, பதவி, அதிகாரம், அகங்காரம், மொறை, தலைன்னு எல்லாத்துக்கும் காலத்துக்கும் அடிச்சிகிட்டே கிடக்கணும்த்தா! அப்படி சண்டை போடுறதுதாம் தர்மம்! சண்டை போடாம ஒதுங்கிக்கிறது அதர்மம்!"
            "அடே! ஒத்த ஆம்பளப் புள்ளயா பொறந்துட்டீங்கறா தெகிரியமா? யில்ல ஒம் மாமங்காரங்க ரண்டு பேரயும் கோத்து வுட்டுட்டு நக்கலு பண்ற கொழுப்பாடா? நாட்டுல அண்ணம், தம்பியா பொறக்காதவங்களாம் என்ன பண்ணுவாங்களாம்!" என்கிறது சாமியாத்தா.
            "சொந்தத்தில், உறவில் இல்லாம போனாலும் அக்கம் பக்கத்துல இருக்கிறவங்கள அண்ணன், தம்பிகளா நெனச்சிகிட்டு அடிச்சிக்கணும்த்தா! வேற வழியே இல்ல!" என்கிறான் விகடு.
            "இந்தாருடா! சாமி பிடிக்காதுங்றதுக்காக சொல்லதடா! நெசமாத்தாம் சொல்றீயா?"
            "ஏம்த்தா! உனக்குப் பாரத கதை தெரியாதா என்னா?"
            "தெரியும்டா! பாரதத்த பல வாயால கேக்கணும்டா! படிச்சவேம் நீ! ஒம் வாயாலயும் கேக்கலாம்னு பாத்தா இப்பிடி எகனைக்கு மொகனையா பேசுறீயேடா!"
            "கிருஷ்ணர் கடவுள்தானேத்தா! ஏன் அந்தச் சண்டையை நிறுத்த முடியலே?"
            "அதல்லாம் அப்படிதாம்டா! நடக்குறது நடந்துதாம் முடியும்! கடவுளு நம்ம பக்கம் தொணையிருந்தா ஜெயிக்கலாம்! அவரு நம்ம பக்கம் இருக்குற மாரி நடந்துக்கணும்!"
            "அப்போ சண்டை போட்டுதானே ஆக வேண்டும்? சண்டை போடுகிற போது கடவுளோட துணை வேணும் இல்லியா? சண்டையே போடலன்னா...?"
            "அடப் போடா! ஒங்கிட்ட வந்து கேட்டேம் பாரு! சண்டை வர்றப்ப எப்புடிடா சண்டை போடாம இருக்க முடியும்?"
            "அதைத்தாம்த்தா சொன்னேன்! ஒருத்தொருக்கொருத்தர் அண்ணன் தம்பிகளா நினைத்துக் கொண்டு அடித்துக் கொள்ள வேண்டும்!" என்கிறான் விகடு.
            "அட போடா கல்லுளி மங்கா! சண்டையில சண்டை போடாம இருக்கிறவம்தான் கடசியில ஜெயிப்பான். அதுத் தெரியுமாடா ஒனக்கு! பாரதத்துல கடசீயில அதுதாம் இருக்கு. சண்டையே நடந்தாலும் சண்டையே நடக்காத மாதிரி மனசெ வெச்சிக்கணும். அதுதாங் சூட்சமம். அதப் புரிய வைக்கிறதுக்குதாம் அந்தக் கதெ. அவ்ளோ பெரிய சண்டெ. சண்டெங்றது ஜெயிக்கிறவேம், தோக்குறவேம் எல்லாத்தியும் சேத்துதாம் அழிக்கும். அதுக்கு நல்லவேம், கெட்டவேம் தெரியாது. சண்டெ போடணுங்ற மனசு வந்துட்டா அது கடசீல அழிஞ்சதாம் ஆகணும். அதெ சாட்சிப் பாவமா இருந்து கிருஷ்ணரு சொல்றாரு. அதுக்குதாம் அந்தச் சண்டெய அவரு நடக்க வுட்டுபுட்டு வேடிக்க காட்டுறாரு! கடசீ வரைக்கும் நீயி பாரதத்தைப் படிச்சிருக்கீயா? இன்னோரு தடவ நல்லா படிச்சுப் பாரு! படிச்சுட்டு எங்கிட்டே சொல்லு! கதெய்ய ந்நல்லா உள்ள எறக்கி வெச்சிருக்கே! அப்பைக்கு அப்பே நெனச்சிகிட்டே இரு!" என்கிறது சாமியாத்தா. அப்போது பேசியதையெல்லாம் கலைந்து போகுமாறு சிப்பூர் பெரியம்மா சொல்கிறது,
            "இந்தாருடா மவனே! டிக்கெட்டுலாம் நாம்ம போட்டுக்கிறேம். நீயி ஆத்தா! ரண்டு பேரும் ஒண்ணா ரெட்ட சீட்டா பாத்து உக்காந்துக்குங்க! நானு, ஒங்கம்மா, சித்தி நாங்க மூணு பேரும் மூணு சீட்டா பாத்து உக்காந்துக்கிறோம். ஒண்ணா உக்காந்து பேசி பஸ்ல போயி ரொம்ப நாளாயிட்டுடா!" என்று வேளாங்கண்ணிக்கு பஸ் ஏறும் போதே திட்டமிட்டுச் சொல்கிறது.
            இந்த வேளாங்கண்ணி பயணத்தைக் கூட நடைபயணமாய் அமைந்திருந்தால் சாமியாத்தாவுக்கு சந்தோஷம் இன்னும் கூடியிருக்கும். கதை பேசிக் கொண்டே போகலாம். அதனாலென்ன! பஸ்ஸிலும்தான் பேசிக் கொண்டே போகலாம். ஆஸ்பிட்டலிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து வெங்குவை அப்படி அழைத்துப் போக முடியாது என்பதற்காகவே பஸ் பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டதும் பரவாயில்லைதான்.
            பஸ்ஸில் ஆத்தாவும், பேரனுமாக ஒன்றாக உட்கார்ந்தது விகடுவுக்கு வசதியாகப் போய் விட்டது. ஏதையாவது பேசிக் கொண்டே வர வேண்டும் என்பது போலிருக்கிறது. விகடு மகாபாரதத்தைச் சின்ன சின்ன கதைகளாக மனதில் ஞாபகம் வர வர சொல்லிக் கொண்டே வருகிறான்.
            "ஆமாம்டா! அதாங்! அதுக்கப்புறம் இத்து வருமேடா! அத்து வருமேடா!" என்று சாமியாத்தாவும் எடுத்துக் கொடுத்துக் கொண்டே வருகிறது. இடையிடையே அதுவும் கதைகளைச் சொல்கிறது.
            இப்படித்தான் வேளாங்கண்ணியில் வந்து இறங்கி, நாகப்பட்டிணம் போய், அங்கிருந்து நாகூரில் போய் இறங்கி, மறுபடியும் நாகப்பட்டிணம் வந்து கடற்கரையில் இறங்கி மீன், கருவாடு எல்லாம் வாங்கிக் கொண்ட, மறுபடியும் நாகப்பட்டிணத்திலிருந்து திருவாரூர் பஸ் பிடித்து சிக்கல் வந்து இறங்கி, மீன் கருவாட்டை எல்லாம் அங்கிருந்த ஒரு கடையில் சொல்லி வைத்து விட்டு, கோயிலுக்குள் நுழையும் வரை கதை என்று கதை கதையாகப் போகிறது. ஆத்தாவும், பேரனும் இப்படிப் பாரதக் கதைகளைப் பேசிக் கொண்டு வந்தால், சகோதரிகள் மூன்று பேரும் சொந்தக் கதை, சோகக் கதைகளைப் பேசிக் கொண்டு வருகிறார்கள்.
            "ஆத்தாவும் பேரனும் கதெயில்ல பிடிச்சுட்டாங்குடி. நமக்கு டீ, பட்சணம் வாங்கிக் கொடுக்குற செலவு மிச்சம்டி!" என்று சொல்லிச் சிரிக்கிறது இதைப் பார்த்துக் கொண்டே தேன்காடு சித்தி.
            "இந்த மாரி உக்காந்து பேசிட்டு இருக்குறதுக்குதாம் லாயக்கு! வேற ஏதாச்சிம் கேளு! ஒண்ணும் வாயிலேந்து வாராது. கல்லுளிமங்கம் கணக்கா உக்காந்திருப்பாம்!" என்கிறது வெங்கு.
            "நல்லாத்தாம்படி கதெயச் சொல்றாம்! நம்ம வகையில இப்பிடி ஒண்ணு கெடந்து தொலஞ்சிட்டுப் போவுதுடி வுடு! அதெ பிடிச்ச கெரவம் அப்பிடிருக்கு!" என்கிறது சிப்பூர் பெரியம்மா.
            இப்படிப் பேசிக் கொண்டு வந்ததில் சாமியாத்தாவுக்கு ஏக சந்தோசம். அது தன் வாழ்நாளில் அதிகபட்ச சந்தோஷமாக இருந்தது அந்தக் கணங்களாகத்தான் இருக்கும். வேளாங்கண்ணியிலும், நாகூரிலும் முடிந்து வைத்த காசைப் போட்டதோடு சரி. அதன் முழு கவனமும் பாரதக் கதையிலேதான் இருந்தது. பசி கூட அதற்கு மறந்து போனது போலிருந்தது. நாகப்பட்டிணத்தில் இறங்கி ஹோட்டலில் சாப்பிட்ட போது கதையைப் பேசுவதிலேயே அதன் கவனம் இருந்தது. ஏதோ அரையும் குறையுமாகச் சாப்பிடுகிறது.
            "இந்தாருடா! நீயி நல்லபடியா வேலைக்குப் போயி நம்மள ராமேசுவரத்துக்கு அழச்சிட்டுப் போறீயாடா? போறப்ப இத்து மாரியே கதெயெல்லாம் பேசிட்டே போவணும். இராமாயணம் படிச்சிருக்கில்லே. அதத்தாம்டா அஞ்ஞ போறப்ப பேசிட்டுப் போவணும்!" என்கிறது சாமியாத்தா.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...