12 Jul 2019

ஒண்ணே ஒண்ணு! கண்ணே கண்ணு!



செய்யு - 143
            விகடுவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உடம்புக்கு என்னதான் முடியவில்லை என்றாலும் வெங்கு தாங்கிக் கொள்ளும். ரெண்டு நாள் பாத்துட்டு டாக்டர்ட்ட போகலாம் என்று சொல்லும். அதற்குள் உடம்பு சரியாகி விடும். ஊசி போட்டுக் கொள்வதிலும், மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதிலும் தன்னையறியாத பயம் வெங்குவுக்கு இருந்தது. ஊசி போட வந்த நர்ஸை உதைத்தக் கதையும் நடந்திருக்கிறது.
            உடம்புக்கு முடியாத கட்டத்தில்தான் "ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போயித் தொலயுங்கடா!" என்று இப்போது புலம்பித் தள்ளுகிறது.
            "எந்த மாதிரி வெயாதி வந்தாலும் இந்த மாதிரி வெயாதி வரக் கூடாதும்மா! ரெண்டு புள்ளீங்களையும் வுட்டுப்புட்டு செத்துப் போயிடுவேன்னு பயமா இருக்கும்மா! இவ்வேன் வூடு தங்காம ஓடித் தொலயுறாம். ஒரு பொம்பளப் புள்ளய வேற பெத்துத் தொலச்சிருக்கேம். இதுங்கள நெனச்சாதாம்மா பயமாக இருக்கு! அடி யம்மாடி இந்த வலி தாங்க முடியாத வலியால்ல இருக்கு. இந்த வலிக்கு உசுரே போனாலும் பரவாயில்லன்னு தோணுது. இப்போ எதுக்கு ஆஸ்பத்திரிக்குப் போறேன்னு தெரியல. உசுரோட பொழச்சி வாரத்துக்குப் போறேனா? யில்ல பொணமா திரும்புறதுக்குப் போறேனான்னு தெரியலயே!" என்று ஆட்டோவில் போய்க் கொண்டிருக்கையில் சாமியாத்தாவிடம் சொல்லி அழுகிறது.
            "அடி! வாயே மூடுடி! நல்ல வெதமா குணமாயி வூடு திரும்புவே. எல்லாம் இந்தப் பயலால வந்தது! ஒன்னாலதாம்டா ஒங்க அம்மா இப்படிக் கெடக்குறா. ஒனக்கெல்லாம் ஏம்டா புத்தி இப்புடிப் போவுது. ஊருல ஒலகத்துல ஒன்ன மாரி புள்ளீங்களல பாக்குறீயா இல்லியா? எல்லாம் எப்புடி புத்தியா நடமாடுது. இவ்வேம் என்னான்னா பாட்டு எழுதுறேம், கதெ எழுதுறேம்னுகிட்டு! ஏம்டா ஒங்கக் குடும்பத்து பாடேதாம் பெரும் பாட்டாவே இருக்கிறது. ஒங்கக் குடும்பத்துக் கதெயேதாம் பெருங்கதெயா இருக்கே. இதுல நீ என்னத்தடா புதுக் கதெய எழுதுறே? புதுசா பாட்டு எழுதுறே?" என்கிறது விகடுவைப் பார்த்து.
            விகடு ஒன்றும் சொல்லவில்லை. வழக்கம் போல் கல்லூளிமங்கன் கணக்காய் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். சாமியாத்தா என்ன நேரத்தில் அப்படிச் சொன்னதோ! பிற்காலத்தில் இப்போது நினைத்துப் பார்க்கையில் இப்படி இந்தக் குடும்பத்துக் கதையை ஒரு பெருங்கதையாகவே எழுத வேண்டியதாகி விட்டது.
            "அவ்வெனே ஒண்ணுஞ் சொல்லாதே! நீ பாட்டுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லி வுட்டுபுடுவே. அவ்வேம் பாட்டுக்கு திருத்துறபூண்டிலேந்து பஸ்ஸ ஏறி எஞ்ஞயாவது திரும்பவும் பாட்டு எழுதுறேன்னு கெளம்பிட்டான்னா வெச்சுக்க நாம்ம செத்துப் போயிடுவேம். எனக்கென்ன ஒன்ன மாரி ரெண்டு ஆம்புள புள்ளீயா இருக்கு! ஒண்ணு போனா ஒண்ணு இருக்குங்றதுக்கு? ஒண்ணே ஒண்ணுதாம் இருக்கு! அதயும் வெரட்டி அடிச்சிப்புடாதே!" என்கிறது வெங்கு.
            "இப்பிடிப் பேசிப் பேசித்தாண்டி அவ்வனெ கெடுத்து வெச்சிருக்கிறே! ஒனக்குதாம் ஒடம்பு சரியில்லே! வூட்டுல ஒரு வேலய்ய பாக்குறானா? புத்தகத்தையும் நோட்டையும் எடுத்து வெச்சிகிட்டு எந்நேரமும் அதுலயே எப்படிதாம் உக்காந்திருக்கானோ! எல்லாம் ஒத்த ஆம்பள புள்ள ஒத்த ஆம்பள புள்ளன்னு நீயி கொடுக்குற எடம்! எலே அவ்வதாம் இப்பிடி ஒம் மேல பாசமா இருக்காளே! ஏம்டா நீ இப்பிடிப் பண்ணிட்டு அலஞ்சிட்டு ஒம் ஒடம்பையும் கெடுத்துகிட்டு, அவ்வே ஒடம்பையும் கெடுத்துட்டு அலயுறே? கொழுப்பாடா ஒனக்கு!" என்கிறது சாமியாத்தா.
            "இந்தாரும்மா! ஒழுங்க அழச்சிட்டு வாரதுன்னா வா! இல்லேன்னா இஞ்ஞயே எறங்கி வீட்டுக்குக் கெளம்பிப் போ! நானும் அப்பலேந்து சொல்லிட்டு இருக்கேம் அவ்வனெ ஒண்ணுஞ் சொல்லாதன்னு! கேட்காம திரும்ப திரும்ப எதாச்சும் சொல்லிட்டு! அவ்வேம் அதெக் கேட்டுட்டு எஞ்ஞாவது ஓடிப் போவணும். அந்த மனுஷம் என்னய போட்டுப் புடுங்கி எடுக்கணும். அதான்னே!"
            "ஆமாண்டி ஊருல இல்லாத அதிசயப் புள்ளீய பெத்துட்டே! அதுக்குப் போயி இப்புடி வக்காலத்து வாங்கிட்டு இருக்கே?"
            "ஒம் புள்ளீயல விட நல்ல புள்ளீயலாத்தாம் பெத்து வெச்சிருக்கேன். நீயும் ரெண்டு ஆம்பள புள்ளீயல பெத்து வெச்சிருக்கீயே! ஒண்ணாவது ஒனக்குச் சோறு போடுதா? இல்லே வூடு தங்க வுடுதா? நீயும் அஞ்ஞ பத்து நாளு, பொண்ணுங்க வூட்டுல பத்து நாளுன்னு மாறி மாறி தங்கிட்டு காலத்த ஓட்டிட்டு இருக்கே! ஊருல இந்த ஒண்ணுக்கே ஒண்ணே ஒண்ண பெத்துப்புட்டே! நாங்கல்லாம் ரண்டு மூணுல்ல பெத்துப்புட்டோம்! பின்னாடி வளந்து சொத்துக்கு என்னமாரி அடிச்சுக்கப் போவுதுங்களோன்னு அதுக்கும் கண்ணு வெக்குதுங்கோ! ஒம் புள்ளீங்க சொத்துக்கு அடிச்சிகிட்ட கதெதாம் ஊரே நாறிக் கெடக்குதே! இதுல ஒரு மருமவத்தாம் வந்திருக்கா! இன்னொன்னு வந்தா ஒம் நெலம என்னாவுமோ தெரில!"
            "நீயி ன்னாடா ஒண்ணும் பேசாம வந்துகிட்டு ஒங்க ஆயிய ஏத்தி வுட்டுகிட்டு இருக்கியா?" என்கிறது சாமியாத்தா விகடுவைப் பார்த்து.
            இதென்னடா தர்ம சங்கடமாய் இருக்கிறது என்று அதற்கும் ஒன்றும் சொல்லாமல் விகடு விழித்துக் கொண்டிருக்கிறான்.
            "எல்லாம் பேசுவீங்கடி பேசுவீங்க! ஒரு மருமொவ்வோ அப்படி வந்துட்டா இன்னொன்னுமா அப்படி வரும்? ரெண்டுமே சோடைப் போவுதுடி. சின்னவனுக்கு வாரது எப்படி இருக்கும் பாரு! ஏம்டி ஓம் புள்ளீய ஒரு வார்த்தப் பேசுனா எம் குடும்பத்தயே இழுத்துப் பேசுறீயே!" என்கிறது சாமியாத்தா.
            "அப்போ ஒம் புள்ளீயோ குடும்பம்தான் ஒம் குடும்பம்! பொண்ணுங்க குடும்பமெல்லாம் பெறத்தியாரு குடும்பம்! அப்படித்தானே!" என்கிறது வெங்கு.
            "இவ்வே யாருடி! ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிகிட்டு! எல்லாங் எம் குடும்பம்தாம்டி. ஒனக்கு ஒடம்பு சரியில்லன்னு இப்போ ஓடித்தான்டி வந்திருக்கேம். இந்தக் காலத்துல ஆம்பள புள்ள, பொம்பள புள்ள ன்னா? எல்லாம் ஒண்ணுதாம். பொம்பள புள்ளீகளாவது கொஞ்சம் கவனிக்குது. ஆம்பள புள்ளீங்கதாம் ம்ஹூம் ஒண்ணுஞ் சொல்றதுக்கில்லே!"
            "இப்பயும் எம் புள்ளயயே கொற சொல்லு! ஒம் புள்ள ஒன்ன கவனிக்கலன்னா அதுக்கு யாரு என்ன பண்றது? அதுக்கு ஏம் எல்லா ஆம்பள புள்ளயலயும் எம் புள்ளயயும் சேத்துக் கணக்குல எடுத்துக்குறே?"
            "ஏல்லே நீ இப்பிடி எடயில ஓடிப் போகலன்னாலும் ஒம்ம ஆயி அடங்க மாட்டாடா! ன்னா பேச்சுப் பேசுறா? அதுக்குதாம் அவளெ போட்டு ஒடம்பு சரியில்லாம ஆக்கிப் போட்டு இந்த நெலைக்கு வெச்சிருக்கே!" என்கிறது சாமியாத்தா. விகடுவுக்குக் கண்கள் கலங்குகின்றன.
            "எல்லே ஆட்டோவ நிப்பாட்டி இந்தக் கெழவிய பஸ்ஸ ஏத்தி ஊரப் பார்க்க அனுப்பி வுடுடா. இவ்வோ இம்ச தாங்க முடியல. சும்மா வருதா கெழவி? ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிகிட்டு!" என்கிறது வெங்கு.
            "இனுமே நாம்ம ஒண்ணும் பேசலடியோவ்! ஏதோ எம் மனசுல பட்டதச் சொன்னேம்! எம் மனசுல சொல்லி அழுவறதுக்கு நமக்கு எஞ்ஞ எடம் இருக்கு? இருக்குற எடத்திலயும்தான் நாம்ம எம் புருஷம் இல்லாமல வதெயழிஞ்சிக் கெடக்குறேம். இதுல இது வேறயா? நாம்ம ஒண்ணும் பேசலடியோவ்!" என்கிறது சாமியாத்தா.
            அதற்குப் பின் ஆட்டோ அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆட்டோவின் எஞ்சின் சத்தம் மட்டும்தான் கேட்கிறது. அவ்வபோது வலி தாங்க முடியாமல் வெங்குவின் முனகல் சத்தமும் கேட்கிறது.
            ஆட்டோ மாவூர் திரும்பி திருக்காரவாசல், கச்சனம் என்று போய்க் கொண்டிருக்கிறது.
            "ஏம்மா இப்பிடிப் பேசாம வார்ரே? பேசிட்டு வந்ததுல வலி தெரியுல. இப்போ கம்முன்னு வாரதுல வலி திம்திம்முங்குது!"
            "நீயி எங்ஙடி பேச வுடுறே? கடசீயில சண்டெயிலல்ல வந்து நிக்குறே! எம் மருமொவளே தேவலாம் போலருக்கு. இப்பிடி வார்த்தைக்கி வார்த்தைக்கிச் சண்டை போட மாட்டா! ஆலத்தாம்பாடி தாண்டுனா நாலு எட்டுல வண்டிய திருத்துறபூண்டி போயிடும். ஆஸ்பத்திரில போட்டு ரண்டு ஊசிய போட்டு ஒன்னய தூங்க வெச்சதாம் சரிபெட்டு வருவே!" என்கிறது சாமியாத்தா.
            "ஒன்ன ரெண்டு வார்த்த நல்ல வார்த்தையா பேசச் சொன்னா... நீயி வேற ஏம் இப்பிடிப் பேசி பயமுறுத்துறே? இப்பிடி ஒரு மருமவ‍ளுக்கே தலயில தூக்கி வெச்சிட்டு அலயுறே! இதுல ஒனக்கு நல்ல மருமொவாள மட்டும் வாய்ச்சிருந்தா ஒன்னய கையாலப் பிடிக்க முடியாது! ஆட்டுக்கு வால அளந்துதாம் வெச்சிருக்காம் ஆண்டவேம்!" என்கிறது வெங்கு.
            "வேண்டாதவ்வா கையி பட்டா குத்தம்! காலு பட்டா குத்தம்! அப்படிதாம்டி இருக்குது எங் கதெ. எதப் பேசுனாலும் குத்தம் கண்டுபிடிச்சுத் தொலயுறீயே! எல்லாம் எம்மட தலயெழுத்து!" என்று சலித்துக் கொள்கிறது சாமியாத்தா.
            "ஒம் பொண்ணுகிட்டேயே ஒழுங்கா பேசி ஒத்துமையா இருக்கத் தெரியலீயே! நீ எப்புடி ஒம் மருமவகிட்டே ஒழுங்கா பேசி ஒண்ணும் மண்ணுமா இருப்பேன்னு தெரியல!" என்கிறது வெங்கு.
            "இந்தப் பேச்சுலாம் ஒங்ககிட்டதாம். அவளுங்க யெங்கே பேச வுடுறாளுங்க. நல்ல வெதமா பேச்சுப் பேசி நாளுவுதுடி. அப்படிப் பேசாமெ கெடக்குறதானோ ன்னவோ இப்பிடி ஒங்களயெல்லாம் பாத்தா அடக்க முடியல. ஒடைஞ்ச வாயி ஓட்ட வாயி கணக்கா அது பாட்டுக்கு வந்துட்டே இருக்கு. நிறுத்த முடியல. மனசுல இப்பிடி உள்ளத ஓரஞ்சாரமா பேசி எறக்குனத்தாம்டி மனசு ஒரு மாரி இருக்கு! இந்தக் காலத்துப் பொண்டுவ்வோ எஞ்ஞ பேச வுடுறாளுங்க? எஞ்ஞ சொன்னத்த கேட்குறாளுவோ? அதுங்க பேச்ச கேட்டுட்டு, அதுங்க சொல்றபடி நடந்துகிட்டு... ன்னம்மோ போ! எதுவுங் பிடிக்கல! ஏத்தோ ஓடிட்டு இருக்கு! இஞ்ஞ இப்பிடியே ஆஸ்பத்திரில பத்து பாஞ்சி நாளு ஓட்டிடுவேம். அதுக்கப்புறம் அஞ்ஞ கெடந்துதாம் புழுங்கிச் சாகணும்!"
            "பத்து பாஞ்சி நாளு ஆகுமா? பாத்துட்டு ஒடனே திரும்ப முடியாதா?" என்கிறது வெங்கு.
            "ஏம்டி எல்லாத்தியும் பேசிட்டுதாம்டி துணி மணி அதுக்கு ஏத்த மாரி ப்ளாஸ்க்கு சாமாஞ் செட்டெல்லாம் எடுத்துட்டுக் கெளம்பி வார்றோம்! இப்போ ன்னான்னா பத்து நாளுகுமா? பாஞ்சி நாளாகுமான்னு வாயப் பொளந்த எப்புடிடி?"
            "ஒரு ரெண்டு மூணு நாளுல்ல வுட்டுற மாட்டாங்களா?"
            "இப்பதாம் பொழப்பனோ மாட்டேனோ? பொணமா போவேனோங்றே. அப்புறம் ரண்டு மூணு நாளுல்ல திரும்பிட முடியாதான்னு கேட்குறே. நல்ல பொழப்புதாம்டி ஒம் பொழப்பு!"
            "இந்த வலியில்ல ஒண்ணும் புரிய மாட்டேங்குதும்மா! ன்னா பேசுறேம், ன்னா பதில் சொல்றேம்னே மனசுக்கு ஒரைக்க மாட்டேங்குது!" என்கிறது வெங்கு.
            "எம்மா வேளாங்கண்ணி மாதா! நாகூரு ஆண்டவரே! எம் பொண்ண நல்ல வெதமா கொணப்படுத்தி வூடு கொண்டு போயிச் சேத்துடுங்க!" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறது சாமியாத்தா.
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...