செய்யு - 141
"வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணத்தைப்
பண்ணிப் பார்!" என்பது கிராமத்து வழக்கில் வீட்டைக் கட்ட முடியாத இயலாமையில்,
கல்யாணத்தைக் காலா காலத்தில் பண்ணிப் பார்க்க முடியாத ஏக்கத்தில் அடிக்கடி சொல்லப்படும்
ஒரு வாசகம். குடிசை வீடோ, கூரை வீடோ ஏதோ ஒரு வீடு இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும்
ஒரு மழை, காற்றுக்குத் தாக்குப் பிடிக்கின்ற அளவுக்கு ஒரு மச்சுவீடு கட்டிப் பார்க்க
ஆசை இருக்கிறது. அந்த ஆசைக்காக அதைச் சொன்னார்களோ அல்லது வீடே இல்லாதவர்கள் ஒரு குடிசை
வீட்டைப் போட்டுக் கூட வாழ்வது இயலாமல் இருக்கிறது என்பதற்காக சொன்னார்களோ!
வீடு என்பது ஒரு மாபெரும் கனவாகி விடுகிறது
எல்லாருக்கும். அந்தக் கனவுக்காகவே வாழ்ந்து, அந்தக் கனவுக்காகவே ஆயுளைத் தொலைக்க
வேண்டியதாகி விடுகிறது. "குடியிருக்கச் சொந்தமா ஒரு எடம் இருக்கா?" என்ற
சொந்த பந்தங்களின் ஏச்சையும், பேச்சையும் சகிக்க முடியாமலும் சமயத்தில் ஒரு வீடு என்பது
தேவையாக இருக்கிறது.
இந்த வீட்டைக் கட்டி ஆயுள் முழுவதும் வாங்கிய
கடனை அடைக்க கடனுக்கு சேவகம் செய்து வாழ்வதை விட ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து விடுவது
எவ்வளவுக்கோ மிச்சம். அந்த மிச்ச சொச்சத்திற்காக சொந்த வீடு இல்லாத கெளரவ குறைச்சலான
வாழ்வை வாழ்ந்து விட எந்த மனசு சம்மதிக்கிறது? கடனாளியாகி கெளரவ குறைச்சல் பட்டாலும்
பரவாயில்லை, சொந்த வீடு இல்லாமல் கெளரவக் குறைச்சல் பட்டு விடாது என்றுதானே அல்லாடுகிறது
மனசு.
நகர்புறத்தில் வீட்டைக் கட்டி முடித்து
விடுவது போல கிராமத்தில் ஒரு வீட்டைக் கட்டி முடித்து விடுவது அவ்வளவு எளிதில்லை.
நகர்புறங்களில் இருக்கும் சம்பாத்திய வாய்ப்புகள், வீட்டைக் கட்டுவதற்கான கடன் வாங்கும்
வாய்ப்புகள் கிராமத்தில் இருப்பதில்லை. கிராமத்தில் இருக்கின்ற வேலைவாய்ப்புகளே கம்மி
எனும் போது, நகரத்தில் இருப்பது போல பகுதி நேர வேலை வாய்ப்புகள் இங்கு ஏது? அப்படியிருந்தால்
அப்படி ஏதாவது வேலை பார்த்து காசு பணத்தைக் கொஞ்சம் திரட்டலாம். அப்படிச் சம்பாதித்து
அந்த அளவுக்கு செலவு பண்ண வேண்டாம் என்பதற்காக என்னவோ கிராமத்தில் அது போன்ற வாய்ப்புகளெல்லாம்
இருப்பதில்லை.
வீட்டைக் கட்டிப் பார்ப்பதோ, கல்யாணத்தைப்
பண்ணிப் பார்ப்பதோ சவாலான ஒன்றுதான். வீட்டைக் கட்டியபின் எங்கே அதை நிமிர்ந்து பார்ப்பது?
கடன் சுமைகள் தலையை அழுத்த, அந்தச் சுமையைக் கடந்து கட்டிய வீட்டை நிமிர்ந்து பார்ப்பது
சிரமம்தான். கடன்காரர்கள் கண்ணில் பட்டு விட்டால் அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து வாழ்வதற்கே
நேரம் சரியாகி விடும் என்பதால் கட்டிய வீட்டை பார்ப்பதற்கெல்லாம் நேரம் அமையப் போவதில்லை
என்பதற்காக அப்படி சொல்லியிருக்கலாம்.
சுப்பு வாத்தியாரின் நிலைமையும் அப்படித்தான்
இருக்கிறது. அவருக்கு முழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறது. விகடு வீட்டை விட்டு ஓடிய நேரத்தில் கஷ்டத்தோடு
கஷ்டமாக ரூப் காங்கிரட்டைப் போட்டு முடித்திருக்கிறார்.
காலையும், மாலையும் சிமெண்ட்டும், காங்கிரீட்டும்
செட் ஆக தண்ணீர் ஊற்ற ஆள் வைத்துக் கொண்டால் அதற்குச் செலவாகுமே என்று சுப்பு வாத்தியாரே
யாரையும் வைத்துக் கொள்ளாமல் அடிபம்பிலிருந்து அடித்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொண்டு
கிடந்திருக்கிறார்.
விகடு வந்து பார்த்த போது ரூப் காங்கிரட்
மேல் தண்ணீர் கட்டி நிரப்பியிருக்கிறார்கள். அதிலும் தண்ணீர் குறைய குறைய சுப்பு வாத்தியார்தான்
அடித்து ஊற்றிக் கொண்டு இருக்கிறார். விகடுவுக்கு இருந்த உடல்நிலையில் கையில் ரெண்டு
வாளிகளைத் தூக்கிக் கொண்டு ஊற்றுவதற்கு முடியாத அளவுக்கு உடம்பு அவ்வளவு பலவீனமாக
இருக்கிறது. தாட்டிகமாக இருந்து மகன்காரன் ரெண்டு வாளியில் சுமந்து கொண்டு தண்ணீர்
ஊற்ற வேண்டிய நிலையில் அப்பங்காரர் அதைச் செய்ய, இவன் ஒரு வாளியில் தூக்கிக் கொண்டு
ஊற்றிக் கொண்டு இருக்கிறான்.
வீயெம் மாமாதான் சென்ட்ரிங் அடித்திருந்திருக்கிறது.
அரை வேலையும், குறை வேலையுமாக அடித்த சென்ட்ரிங்கில் காங்கரிட் போடும் போது சில இடங்களில்
சென்ட்ரிங் உடைந்து கொட்டி பெரிய சிரமம் ஆகியிருக்கிறது. மின்விசிறிக்கென போட்டிருந்த
கொக்கிகள் ஏகத்துக்கு இடம் மாறி இருக்கிறது.
"என்னம்பி! இப்படிப் பண்ணிட்டீங்களே?"
என்றிருக்கிறார் சுப்பு வாத்தியார்.
"நீங்க கொடுக்குற காசுக்கு அவ்ளதாத்தான்
செய்ய முடியும்!" என்றிருக்கிறது வீயெம்
மாமா.
"பின்னாடி காசைக் கூட கொறைச்சலோ
தந்திடப் போறேம். அதுக்காக இப்டியா பண்றதும்பி?" என்றால் வீயெம் மாமா முறைத்துக்
கொண்டு,"நீங்க இப்டியெல்லாம் பேசுவீங்கன்னு தெரிஞ்சிதாம் பெரியவேம் வேலய விட்டு
விலகிட்டாம் போலருக்கு. நாம்ம வந்து நல்லா மாட்டிக்கிட்டேம்!" என்று சொல்லியிருக்கிறது.
ஏற்கனவே லிண்டல் காங்கிரட் போடும் போதும்
பிரச்சனையாகி இதிலும் இப்படியாகிறதே என்று நினைத்து அதற்கு மேல் ஒன்றும் பேசக் கூடாது
என்று அமைதியாகியிருக்கிறார் சுப்பு வாத்தியார். காசில்லாத குறை, அதற்குத் தகுந்தாற்
போல இந்த மாதிரி வைத்து முடிக்க வேண்டியிருக்கிறது என்ற கவலை அவர் நெஞ்சை அரித்திருக்கிறது.
அதுவுமில்லாமல் வீட்டை இது சரியில்லை, அது சரியில்லை என்று மாற்றி மாற்றியா கட்டிக்
கொண்டிருக்க முடியும்? ஒருமுறை சிமெண்டைக் குழைத்துப் போட்டு விட்டால் அவ்வளவுதான்.
போடும் போது கவனமாக போட வேண்டும். போடுவதில் ஒரு திட்டம் இருக்க வேண்டும். இல்லையென்றால்
கோணலானது கோணலானதுதான். மேடு, பள்ளமானது மேடு பள்ளமானதுதான். பிற்பாடு பூச்சில் கலவை
அள்ளிக் கொண்டு போகும். அப்படிச் சரிசெய்தால்தான் உண்டு. தேவையில்லாத செலவுதான்.
இல்லையென்றால் பார்வையில் பட்டு உறுத்திக் கொண்டே இருக்கும். இப்படி சிமெண்ட்டை அள்ளிப்
பூசி சரி செய்ததில் பிற்பாடு முக்காலடி சுவர் ஓரடிச் சுவரானதும், ஐந்து இன்ச் காங்கிரீட்
பூச்சிற்குப் பிறகு பத்து இஞ்சுக்கு மேல் ஆனதும் தனிக்கதை. காசில்லாமல் வீட்டைக் கட்ட
ஆரம்பித்தால், இப்படித்தான் காசை அள்ளிக் கொண்டு போகும் போலிருக்கிறது என்று அதற்கும்
சேர்த்து விசனப்பட்டுக் கொண்டார் சுப்பு வாத்தியார்.
எப்படியோ அப்படி இப்படி என்று அறுநூறு
சதுர ரூப் காங்கிரட்டை அள்ளிக் கொட்டுவதற்குள் போதும் போதுமென்று ஆகியிருக்கிறது.
வேலை முடிந்த போது இரவு எட்டு மணியாகியிருக்கிறது. சென்ட்ரிங் வேலை நேர்த்தியாக இருந்தால்
அரைநாள் வேலையில் முடிந்து விடும். சென்ட்ரிங் பிரச்சனை என்றால் சரிசெய்து சரிசெய்து
போடுவதற்குள் போதும் போதுமென்று ஆகி விடும். போடப் போடக் கொட்டிக் கொண்டிருந்தால்
முட்டுகளைச் சரிசெய்து பலகையை அடிப்பதும், கொட்டிய காங்கிரட்டை அள்ளுவதும் என்று வேலை
ரெட்டிப்பாகி விடும். அதுவும் முட்டுக்குள் புகுந்து காங்கிரீட் கலவையை அள்ளுவது ஒரு
சிரமம் என்றால் பக்கத்தில் உள்ள முட்டுகள் கழன்று பலகையோ, காங்கிரிட்டோ தலையில் விழுந்து
விடுமோ என்ற பயத்தை எதிர்கொண்டு ஆட்கள் உள்ளே நுழைந்து அள்ளுவது மற்றொரு சங்கடம்.
நல்ல வேளையாக உள்ளே புகுந்து அள்ளிய ஆட்கள் யார் மேலும் காங்கிரீட் கலவை உடைத்துக்
கொண்டு விழவில்லை. அந்த அளவுக்காவது பலமாகத்தான் வேலை பார்த்திருந்திக்கிறது வீயெம்
மாமா என்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.
ஆக மொத்தத்தில் இந்த அளவு வீடு கண்டதே
போதும் என்றாகி விட்டது சுப்பு வாத்தியாருக்கு.
முல்லேம்பாள் வீட்டில் வாடகைக்கு வந்து
கொடுத்த முன்பணத்தைத் தாண்டி மாதங்களாகிக் கொண்டிருந்தது. ஒருவழியாக அதைக் காலி செய்து
விட்டு கட்டும் வீடு பூசாமல் இருந்தாலும் பரவாயில்லை, போய் விடலாமா என்று யோசித்துப்
பார்க்கிறார் சுப்பு வாத்தியார். அப்படிப் போனால் மாசா மாசம் கொடுக்கும் வாடகைப்
பணமாவவது மிச்சமாகுமே என்று கணக்குப் போட்டுப் பார்க்கிறார்.
இதற்கிடையே முல்லேம்பாள் ஆத்தாவும் வாடகையைக்
கூட்டிக் கொடுங்கள் இல்லையென்றால் காலி பண்ணுங்கள் என்று தயவு தாட்சிண்யம் இல்லாமல்
சொல்கிறது. ஆரம்பத்தில் இருக்கும் கனிவும் பரிவும் எத்தனை நாள்தான் நீடிக்கும்? முல்லேம்பாள்
ஆத்தாவிற்கு இருந்த கனிவும், பரிவும் சுருங்க ஆரம்பித்து விட்டது. அத்தோடு அதற்கு
இந்த வீட்டை விற்று விட்டு காரைக்காலுக்குப் பெயரனோடு போய் விடலாமா என்ற எண்ணமும்
வேறு அதற்கு ஏற்பட்டு விட்டது. வீட்டை விற்பது என்றால் வாடகைக் குடித்தனத்தைக் காலி
செய்ய வேண்டுமே என்ற கவலையில் நாளொரு வண்ணமாக சாடையாக எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறது.
"இந்தக் காலத்துல கட்டுனவங்களுக்கு
வூடு எங்க வாய்க்குது? ஒண்ட வந்தவங்களுக்குத்தாம் ஒரு செரமும் இல்லாமல் வாய்க்குது.
எல்லாத்துக்கும் கொடுப்பின வேணும். அதது சாதகம் அப்படி இருக்குது. எஞ் சாதகம் இப்டி
இருக்கு. குடியிருக்க வாரப்பலாம் சர்க்கரையாத்தாம் பேசுறாங்க. வந்தத்துக்கு அப்புறம்
வேப்பங்கா கணக்கா நடந்துக்குறாங்க. கட்டுனவங்க செரமத்த நெனச்சுப் பாத்தா புரிஞ்சுக்குவாங்க!
அவுங்க வந்த நேரம் அப்புடி. நாம்ம வந்த நேரம் இப்புடி!" என்று பலபடியாக முல்லேம்பாள்
ஆத்தா பொளந்து கட்டுகிறது.
சென்ரிங்கிற்குப் போட்ட முட்டுகளை எடுத்தவுடன்
முதல் வேலையாக இந்த வாடகை வீட்டை விட்டு ஓடி, பூசாத வீட்டுக்குள் புகுந்து கொள்ள வேண்டும்.
ஆம்! அதைத்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார் சுப்பு வாத்தியார்.
இப்படியெல்லாம் வீட்டு நிலைமை இருக்க,
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டுதான் மெட்ராஸூக்கு ஓடினோமா என்று நினைக்கையில்
விகடுவுக்கு வெட்கமாக இருக்கிறது. சரி போனதுதான் போனோம் கொஞ்சம் சம்பாதித்து வந்திருந்தால்
வெட்கப்பட வேண்டிய அவசியமில்லாமலாவது இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறான்.
எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறதே தவிர நினைத்த மாதிரி எங்கே செய்ய
முடிகிறது?
"கூடவோ, குறைச்சலோ, பசியோ, பட்டினியோ,
இருக்கிறதோ, இல்லையோ இனி மழை பெய்தாலும், காற்றடித்தாலும், வெள்ளமே வந்து ஊரைக் கொண்டு
போனாலும் ஒதுங்கிக் கிடப்பதற்கு ஒரு வீடு ஆகி விட்டது! கையில் காசு வரும் காலத்தில்
எப்போது வேண்டுமானாலும் பூசிக்கொள்ளலாம்!" என்று மனதுக்கு ஒரு தெம்பு வந்தது
போலிருக்கிறது சுப்பு வாத்தியாருக்கு. "ஓடிப் போன பயலும் வந்து தொலைஞ்சிட்டான்.
இனி அவ்வேன் திரும்ப ஓடுனாலும் பரவாயில்ல! படிச்சாலும் பரவாயில்ல! படிக்காட்டியும்
பரவாயில்ல! இருக்குறதுக்கு ஒரு வீடு ஆகிப் போச்சு! வூட்டப் போட்டு மூடியாச்சி!"
என்று இன்னொரு பக்கத்தில் திருப்தியுமாக இருக்கிறது அவருக்கு.
அப்படியெல்லாம் தெம்பு வந்து விடவோ, திருப்திப்
பட்டு விடவோ காலம் விட்டு விடுமா என்ன? அதுதான் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக
அடித்து அடித்து விளையாடுகிறதே! படிக்காமல் ஓடிப் போய், தற்போது வந்து படிக்காமல்
உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு பிள்ளையோடு இன்னும் சில சங்கடங்கள் வந்து சேரும்
என்று அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார் சுப்பு வாத்தியார்.
*****
No comments:
Post a Comment