செய்யு - 132
இங்கே ஒவ்வொருவருக்கும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான
ஒரு கதை இருக்கிறது. அழுது விடுவதற்கான கதை அது. அது அவர்களின் கதையாகவும் இருக்கலாம்.
சினிமாவில் சொல்வதற்காக வைத்திருக்கும் சோடித்த கதையாகவும் இருக்கலாம். அந்த உணர்ச்சிப்பூர்வமான
கதையோடு உணர்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தாம் இங்கே இருக்கின்ற ஒவ்வொருவரும்.
இங்கே இருக்கின்றவர்களை சினிமாவில் சான்ஸ் தேடுபவர்கள், சான்ஸ் தேடாதவர்கள் என இரண்டு
வகைகளில் அடக்கி விடலாம்.
சினிமாவில் சான்ஸ் தேடாதவர்களைச் சினிமாவுக்குச்
சம்பந்தம் இல்லாதவர்கள் என்று ஒதுக்கி விட முடியாது. அவர்களின் முதன்மையான பொழுதுபோக்கே
சினிமாதான். அவர்களை சினிமாவில் நடிக்க வருகிறீர்களா என்று கேட்டால் போதும் பாய்ந்து
வருவார்கள். அதுவரை எந்தக் கதையும் இல்லாத அவர்கள் சினிமாவுக்காக அற்புதமான கதையொன்றைச்
சோடித்துக் கொண்டு விடுவார்கள். சினிமா சான்ஸ் தேடி அலையாதவர்களுக்கும் யாராவது ஒருவர்
மூலம் சினிமாவில் நடிக்கும் சான்ஸ் கிடைத்து விடும் என்ற அசாத்திய கனவுகள் நிறைந்த
இந்த இடத்தில் பூரணலிங்கம் எப்படிப்பட்ட கதையோடு இருந்தார் என்பதைச் சொல்வதற்கு வார்த்தைகள்
இல்லை. அவர் அந்தக் கதையோடு வாழ்கிறார். அந்தக் கதையோடு தம் வாழ்க்கையைக் கழிக்கிறார்.
"ந்நல்லா கவனிங்க வெகடு!
சீன் பை சீன்!
இன்ச் பை இன்ச்! கதையை ஒங்களுக்குச் சொல்லியாகணும்.
ஓப்பன் பண்ணா..." என்று சொல்லிக்
கொண்டே சினிமா டேரக்டர்கள் இரு கைகளின் விரல்களை விரித்துக் காட்டுவது போல விரித்துக்
காட்டுகிறார் பூரணலிங்கம்.
விகடு அவர் சொல்வதை ஒரு வார்த்தையைக்
கூட விட்டு விடாதக் கவனிப்பில் உட்கார்ந்திருக்கிறான்.
"சைக்கிளோட சக்கரம் வேகமா சுத்தறதைக்
காட்டுறோம். அதுலதாம் வெகடு நம்ம ஹீரோ வர்றாம். அப்படியே கேமரா சக்கரத்துக்கு மேல
இருக்குற கேரியலுக்குப் போகஸ் ஆகுது. கேரியர் முழுக்க நியூஸ் பேப்பர். ஒரு ஆளு உயரத்துக்கு
கட்டி வெச்சிருக்கிறோம். கேமரா அப்படியே முன்னாடி கீழே வருது. வேகமாக மிதிச்சிட்டுப்
போற ஹீரோவோட கால்களைக் காட்டுறோம். அப்படியே கேமராவா ஸூம் பண்ணி முன்னாடி கொண்டு
வர்றோம். வியர்வைத் துளிகள் சொட்டு சொட்டாய்க் கொட்டுறதை அப்படியே போகஸ் பண்ணிக்
காட்டிட்டு ஹீரோவோட முகத்தைக் காட்டுறோம். இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஒரே
கருவக் காடு. எரும மாடுங்க அங்கயும், இங்கயும் மேஞ்சிகிட்டு நிற்குது. அத மேய்க்குற
மாதிரி ரெண்டு மூணு கோவணங் கட்டிய ஆட்களு. இதா வெகடு அந்த கிராமத்தோட சிச்சுவேஷன்.
அந்தக் கெராமத்துல பேண்ட் சட்ட போட்டு படிக்கிற ஒரே ஆளு நம்ம ஹீரோன்னா பாத்துக்குங்க.
சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற அந்த கெராமத்துல நம்ம ஹீரோ நியூஸ்பேப்பர் போட்டு படிக்கிறான்."
கதையைக் கேட்டதுமே விகடுவுக்கு, சாப்பாட்டுக்கே
கஷ்டப்படுற ஓர் ஊரில், அதுவும் பேண்ட் சட்டைப் போட்டுக் கொண்டு ஹீரோ மட்டுமே படிக்கின்ற
அந்த ஊரில் யார் அவ்வளவு நியூஸ்பேப்பர்களையும் படிப்பார்கள்? என்ற கேள்வி தாட்டிச்
செல்கிறது. அதைக் கேட்பதா? வேண்டாமா? என்று விகடு யோசித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் அப்படி யோசிப்பதை பூரணலிங்கம் கதையில் விகடு பாதிக்கப்பட்டு ஐக்கியமாகி விட்டதாக
நினைத்துப் பூரணலிங்கம் மேலும் சொல்கிறார்.
"ஹீரோவோட சைக்கிள் ஒரு பெரிய அரண்மனை
மாதிரி இருக்குற மாளிகை முன்னாடி நிற்குது. ஹீரோ சைக்கிள் பெல்லை அடிக்கிறான். உள்ள
கொலுசுச் சத்தம். கொலுசுச் சத்தத்தோடு பாவாடை தாவணியில ஓடி வார்ற ஹீரோயின். இங்கே
பெல்லுச் சத்தம். அங்கே கொலுசுச் சத்தம். மாத்தி மாத்திக் காட்டுறோம். அப்படியே ஒரு
சைலன்ஸ். "சார் பேப்பர்!" ஹீரோவோட குரல். அதை அக்சப்ட் பண்ற மாதிரி ஹீரோயினோட
கொலுசுச் சத்தம். ஹீரோ பேப்பரை நீட்டறான். ஹீரோயின் ஹீரோட்டேந்து பேப்பரை வாங்குறா.
அவ கையி அப்படியே பேப்பரைத் தாண்டி அப்படியே முன்னாடி போயி ஹீரோவோட கைய டச் பண்ணிகிட்டே
பின்னாடி வந்து பேப்பரை வாங்குது. இதுக்கு பேஷூக்கு க்ளோஸப் ஷாட் வைக்கிற மாதிரி கைகள்
ரெண்டுக்கும் ஒரு க்ளோஸப் ஷாட்டே வைக்கிறேன்.
"அப்பா! பேப்பர் வந்திடுச்சு!"ன்னு
சொல்லிட்டே ஹீரோயின் அதை வாங்கிட்டு உள்ளே ஓடுறா. அங்கே மன்சூர்அலிகான், சந்தானபாரதி
மாதிரி ஒரு ஆள் வெள்ளையும் சொள்ளையுமா உக்காந்துட்டு, "ஏம்மா! வூட்டுல இவ்ளோ
ஆளுங்க இருக்கிறப்போ! நீதாம் போயி பேப்பர வாங்கிட்டு வரணுமா?"ன்னு கேட்குறாப்புல.
அந்த ஆளுதாம் ஹீரோயினோட அப்பா. நம்ம கதையோட மெயின் வில்லன். ஊரையே கசக்கிப் புழிஞ்சி,
ஏழை மக்களை ஏமாத்தி, தொழிலாளிகளை மாடுக மாதிரி ஒழைக்க வெச்சி சம்பாதிக்கிறான். வில்லன்
அப்பா கேட்டதுக்கு ஹீரோயின் பதில் சொல்றா பாருங்க வெகடு, "காலயில ஒங்க கையில
நியூஸ்பேப்பர எங் கையாலதாம்ப்பா கொண்டாந்து கொடுக்கணும்! அப்பதாம் அதுல டென்ஷனா விசயம்
இருந்தாலும் நீங்க கூலா படிப்பீங்க!"
அதக் கேட்டுட்டு வில்லன் அப்பா சொல்றான்
பாருங்க, "எம் பொண்ணுன எம் பொண்ணுதாம். எனக்கு கொலஸ்ட்ரால், பி.பி.இருக்குறதால
சொல்றீயாம்மா? இதெல்லாம் இருந்தாத்தாம்மா பணக்காரன். இல்லன்னா ஒண்ணுமில்லாதவன்மா!
ஒண்ணுமில்லாதவன வியாதி கூட தீண்டாதும்மா!" அப்படின்னு சொல்லிட்டு ஹா ஹான்னு சிரிக்கிறான்.
இதுலயே வில்லனோட டெரர் தன்மையைக் காட்டிடுறோம். இன்னொரு விசயம் கேட்டீங்கன்னா,
நாம்ம ஏன் நம்ம ஹீரோவ நியூஸ் பேப்பர்
போடுறனவா காட்டுறோம்னு நினைக்கிறீங்க! அவன் ஐ.ஏ.எஸ்.க்குப் பிரிபேர் பண்றான் விகடு.
அவன் இருக்குற நெலமயில அவனால பேப்பர் வாங்க முடியுமா சொல்லுங்க. அதாங்! காலயில வர்ற
பேப்பர் எல்லாத்தியும் படிச்சி முடிச்சிட்டுதான் அவன் பேப்பர் போடவே ஆரம்பிக்கிறான்.
அவன் அப்படி பேப்பர் படிக்கிறதையே பாஸ்ட் பார்வேர்டுல ஒரு சீனா வைக்கிறோம். கதையில
ஒரு லாஜிக் இருக்கணும் பாருங்க. அதுக்குதான் ஹீரோவோட பேக்ரவுண்ட்ட இப்படி டிசைன்
பண்ணிருக்கேன்.
ஹீரோ ஐ.ஏ.எஸ். படிக்கிறதுக்கான புக்ஸைலாம்
யாருக்கும் தெரியாம ஹீரோயின்தான் வாங்கித் தர்றா. அத்தோட அவனுக்கு சட்டை, பேண்ட்,
ஷூ இப்படி எல்லாம் வாங்கித் தர்றவ அவதான். ராத்திரியெல்லாம் ஹீரோ கண்முழிச்சிப் படிக்கிறப்ப
யாருக்கும் தெரியாம ஹீரோவோட வீட்டுக்கு வந்து அவனுக்கு டீ போட்டு கொடுக்குறா. ஏன்னா
நம்ம ஹீரோ அப்பா அம்மா இல்லாத அனாதை. தனக்கு அம்மா இல்லாத பீலிங்கை அவன் ஹீரோயின்கிட்ட
பாக்கிறான். அப்படிதான் லவ் பத்திக்குது. ஹீரோயினுக்கும் அம்மா கெடயாது. அவ தன்னோட
அம்மா இல்லாத பீலிங்கை ஹீரோகிட்ட பாக்குறா. அப்படி டீ போட வர்றப்ப ஒரு நாளு ஹீரோயினுக்கு ரொம்ப பீல் ஆகிடுது. ஹீரோவ அப்படியே
ஒரு மாதிரி பாக்குறா. அந்த எடத்துல ஒரு சாங் வைக்கிறோம். இந்த எடத்த நல்லா நோட் பண்ணிக்குங்க
வெகடு. அந்த பாட்டுகளையெல்லாம் நீங்கதாம் எழுதப் போறீங்க. செம ரொமாண்டிக்கா பாட்டுக
இருக்கணும். பாட்டு முடிஞ்சவுடனேதாம் டிவிஸ்ட்டே. ஹீரோ இதல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தாங்றான்.
ஹீரோயின் ஏமாற்றத்தோடு ஒண்ணுஞ் சொல்லாமா
வூட்டக்கு ஓடியாறா. அங்க ரெண்டாவதா வைக்கிறோம் பாருங்க இன்னொரு டிவிஸ்ட். வில்லன்
அப்பன் பாத்துடறான். அடுத்த சீன்ல ஹீரோவோட குடிசை வூடு தீப்பத்தி எரியுது. அவன் படிக்கிறதுக்காக
வாங்கி வெச்சிருக்கும் அத்தனை புத்தகங்களும் எரியுது. அதை ஓடி ஓடி அணைக்கப் பாக்குறான்.
ஊருகாரங்க அவனப் பிடிச்சிகிட்டு வுட மாட்டேங்றாங்க. தீ எரியுது. ஹீரோவோட முகமும்
ஆவேசமா எரியுது. ரெண்டயும் மாத்தி மாத்தி காட்டுறோம்.
ஹீரோ ஆவேசமா வில்லன் அப்பன் வீட்டுக்கு
ஊரையே திரட்டிட்டு வந்து நீதி கேட்குறான். இங்க ஒரு சாங்க் வைக்கிறோம். நோட் பண்ணிக்குங்க
விகடு. சாங் ரொம்ப உணர்ச்சிகரமா அநியாயத்துக்கு எதிரா, தொழிலாளி வர்க்கத்த தூக்கிப்
பிடிக்கிற மாதிரி, முதலாளி வர்க்கத்த குழி தோண்டி புதைக்கிற மாதிரி இருக்கணும். இந்த
இடம்தான் கதையோட டேர்னிங் பாய்ண்ட்றதால பாட்டு செமையா பீலா இருக்கணும் பாத்துக்குங்க
வெகடு!" என்கிறார் பூரணலிங்கம்.
விகடுவுக்கு இப்போது கொஞ்சம் ஆர்வம்
தட்டியது போலிருக்க, பூரணலிங்கத்தை உணர்ச்சிப் பெருக்குடன் பார்க்கிறான். பூரணலிங்கத்துக்கு
கியர் கொடுத்து விட்டது போல ஆகிறது. பூரணலிங்கம் புல் ஸ்ட்ரென்த்துடன் விட்ட இடத்திலிருந்து
ஆரம்பிக்கிறார்.
"ஹீரோ வில்லன் முன்னாடி சபதம் செய்றான்
வெகடு. "உன்னோட இந்த ஆதிக்கத் திமிரு, முதலாளிங்ற ஆணவம், அடிமையா வெச்சிருக்கிற
சர்வாதிகாரம் எல்லாத்தியும் அழிச்சிட்டுதான் ஊருக்குள்ள நொழைவேம்!"ங்றான். சொல்லிட்டு
திரும்பப் போறான். அவன் பின்னாடி கோவணம் கட்டிட்டுப் போற ஆயிரம் ரெண்டாயிரம் பேர
காட்டுறோம். இந்த சீனைக் கொஞ்சம் பிரமாண்டமாவே பண்றோம் வெகடு.
அடுத்த சீனே - தட தடன்னு போய்ட்டு இருக்குற
டிரெய்னுதான். அதுலதாம் நம்ம ஹீரோ போயிட்டு இருக்கான் ஐ.ஏ.எஸ். படிக்கிறதுக்கு. அவன்
கையில பைசா காசில்ல. திருட்டு ரயிலு ஏறித்தான் போறான். டி.டி.ஆர். வர்றப்ப எல்லாம்
கக்கூஸ்ல ஒழிஞ்சிக்கிறான். அவன் அப்படி கூனிக் குறுகி ஒளிஞ்சிக்கிறத குளோசப் ஷாட்ட
வைக்கிறோம். டிரெய்ன் ஒவ்வொரு ஸ்டே்டா தாண்டிப் போறத ஒவ்வொரு சீனா வைக்கிறோம்.
ஆந்திரா பார்டர தாண்டறப்போ நம்ம ஹீரோ அழுவற ஒரு கொழந்தைய தாலாட்டிப் பாடி தூங்க
வைக்கிறான். இந்த எடத்திலயேும் ஒரு சாங்கு. அப்படியே ச்சும்மா உள்ளத்த உருக்கிடணும்.
அப்படி இருக்கணும் சாங்கு.
ஒரிஸ்ஸா பார்டற தாண்டுறப்ப ஒரு தாத்தாகிட்டேயிருந்து
பணத்தைப் புடுங்குற காவாளிப் பசங்கள நம்ம ஹீரோ பொராட்டிப் பொரட்டி எடுக்கிறான்.
டிரெயினுக்குள்ளயே பைட்டு. பைட்டுனா பைட்டு செம பைட்டு.
அப்புறம் மத்தியபிரதேசம் பார்டர தாண்டுறப்பயோ,
இந்த பீகார் பார்டர தாண்டுறப்பயோ ஒரு வயசுப் பொண்ண டிரெய்ன்ல ரேப் பண்ண ஒரு கும்பல்
டிரை பண்ணுது. நம்ம ஹீரோ பாத்துடறான். நம்ம ஹீரோ அறிவுரைச் சொல்லி திருத்தப் பாக்குறான்.
அவனுங்க ஹிந்தியில நை மாலும், நஹி கிஹின்னு நம்ம ஹீரோவ நக்கல் பண்ணிட்டு அந்தப் பொண்ண
நெருங்குறானுவோ. அப்போ ட்ரெய்னோட டாப் பிய்ச்சிகிட்டு ஒருத்தன் பறக்கிறான்.
"அந்தப் பொண்ணு மேல கைய்ய வெச்சீங்கன்னா பீஸ் பீஸா ஆயிடுவீங்க!"ங்ற ஹீரோவோட
வாய்ஸ் கேட்குது. கேமரா ஹீரோவோட குத்து வுடற கையை மட்டும் காட்டுது. அப்படியே ஒரு
நிமிஷம் அத மட்டுமே காட்டுறோம். நெக்ஸ்ட் செமத்தியான ஒரு பைட். பைட் முடிஞ்சதும் அந்தப்
பொண்ணு, அண்ணான்னு ஓடி வந்து அவன் காலுல விழுது. "பயப்படாதம்மா! நா இருக்குற
வரைக்கும் ஒரு சுண்டு வெரல் கூட ஒண்ண தொட முடியாது!" அப்படிங்றான் நம்ம ஹீரோ.
எதுக்கு இந்தப் பொண்ணு, பைட்டுன்னு கேட்டீங்கன்னா...
அந்த பொண்ணு வூட்டுலதான் நம்ம ஹீரோ டெல்லில
தங்குறான். அந்தப் பொண்ணும் ஒரு கஷ்டப்படற பொண்ணு. அம்மாவும் பொண்ணுமா டெல்லில இருக்காங்க.
ஹீரோ அந்த அம்மாவ தன்னோட அம்மாவா ஏத்துக்கிறான். அந்தக் குடும்பத்துக்காவும், தன்னோட
லட்சியக் கனவுக்காகவும் ஹீரோ டெல்லில மூட்டைத் தூக்குறான். பார வண்டி இழுக்குறான்.
நியூஸ் பேப்பர் போடுறான். சினிமா போஸ்டர் ஓட்டுறான். ஓட்டல்ல எச்சி எலைகளை எடுத்துப்
போடுற வேல பாக்குறான். டீகடையில பரோட்டா மாஸ்டராவும் வேல பாக்குறான். இன்னும் எத்தினி
எத்தினி வேல இருக்குதோ அத்தனை வேலயும் பாக்குறான். இதுக்கு நடுவுல ஐ.ஏ.எஸ்.க்கும்
படிச்சிக்கிறான். அவன் அப்படிக் கஷ்டப்படுற அந்த இடத்துல ஒரு சாங்கு. தன்னம்பிக்கை
தர்ற மாதிரி. ரொம்ப பவர்புல்லா வரணும் வெகடு." சொல்லிவிட்டு பூரணலிங்கம் ஒரு
சிறு இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அவர் முகத்தைப் பார்க்கையில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக
பொங்கி வழியும் எரிமலையைப் போல இருக்கிறது.
விகடு அவர் முகத்தையே வெறித்துப் பார்க்கிறான்.
பூரணலிங்கத்துக்கு தான் சொல்லிக் கொண்டிருக்கும் கதையையே சினிமாவாக எடுத்து முடித்து
விட்ட களைப்பு அவர் முகத்தில் தெரிகிறது.
"கொஞ்சம் தண்ணி மொள்ளுங்க வெகடு!"
என்கிறார் பூரணலிங்கம். விகடு மொண்டு கொடுக்கிறான். அதைக் குடித்து விட்டு பூரணலிங்கம்
கதையைத் தொடர்கிறார்.
"இங்க கிராமத்துல ஹீரோவோட நினைப்பாவே
கெடக்குறா ஹீரோயின். அங்க படிப்பு நினைப்பாவா கெடக்குறான் ஹீரோ. இத மாத்தி மாத்திக்
காட்டுறோம். அப்போ டெல்லில இருக்குற ஒரு பொண்ணுக்கு நம்ம ஹீரோவோட ஹார்ட் ஒர்க்,
குட்னெஸ் பிடிச்சிப் போயிடுது. அந்தப் பொண்ணு இவன காதலிக்க ஆரம்பிக்குது. தொரத்தித்
தொரத்திக் காதலிக்க ஆரம்பிக்குது. அதே நேரத்துல வில்லன் அப்பன் ஹீரோயினுக்கு கல்யாண
ஏற்பாட்ட பண்ண ஆரம்பிக்கிறான். ஹீரோவ தொரத்தித் தொரத்திக் காதலிக்கிற ஒரு டெல்லிப்
பொண்ணு. இங்க கல்யாண ஏற்பாடு நடக்கப் போற ஹீரோயின். அந்த எடத்துல போடுறோம் வெகடு
இன்ட்ரவெல் கார்டு! எப்பூடி?" என்கிறார் பூரணலிங்கம்.
*****
No comments:
Post a Comment