நோக்கியா 1100 செல்பேசி வாங்கியதற்கும்,
தற்போது ஸ்மார்ட் போன் எனும் திறன்பேசி வாங்கியதற்கும் இடையே சில பல நூற்றாண்டுகள்
கழிந்தது போன்ற இடைவெளி. இடையே ஓர் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகள் கழிந்திருக்குமா?
என்று கேள்வி எழுப்புகிறது மனசு.
சில ஆண்டுகள் - கொஞ்சம் அதிகமாகப் போனால்
பத்து பதினைந்து ஆண்டுகளைத் தாண்டியிருக்காது இந்தக் கால இடைவெளி.
எது இந்தக் கால இடைவெளியை இவ்வளவு அதிகமாக்கிக்
காட்டுகிறது என்பது யோசனையாக இருக்கிறது!
இந்தத் திறன்பேசி வந்ததிலிருந்து ஒரு புதிய
யுகத்தில் குதித்தது போல இருக்கிறது. இந்தத் திறன்பேசிக்கு முன்பிருந்த காலத்தை ஏதோ
போன யுகத்தில் வாழ்ந்தது போல நினைத்துக் கொள்கிற பிரேமை!
இதெல்லாம் இல்லாமல் மனிதன் எப்படி வாழ்ந்திருப்பான்?
என்ற கேள்வியை சீரணிக்கவே முடியவில்லை. வீட்டில் போனே இல்லாத காலத்தை மறந்து போய்
விட்டாயா மனமே என்று அதைச் செவிட்டு இழுப்பு இழுக்க வேண்டும் போலிருக்கிறது.
அப்போது சிலர் வைத்திருந்த டப்பா போன்களைப்
பார்த்து, போன் என்றால் சிறியதாக இருக்க வேண்டும் சொல்லி விட்டு, இப்போது பாக்கெட்
கொள்ளாத அளவுக்குப் பெரிதாக வைத்திருக்கும் திறன்பேசியை நினைக்கையில் சிரிப்பாகத்தான்
இருக்கிறது.
இந்தத் திறன்பேசிக்குள் இருக்கும் கூகுள்,
முகநூல், கீச்சு, கட்புலனஞ்சல், அமேசான் என்று பார்த்துப் பார்த்து அதற்குள் வாழ்க்கையே
சுருங்கி விட்டது போல இருக்கிறது.
ஒரு செய்தியை அனுப்பி செய்தியைப் பெறுவதற்கான
கால இடைவெளி அப்போது ஒரு கடிதம் போய் பதில் கடிதம் திரும்பி வருவதற்கான ஒரு வார கால
இடைவெளியாக இருந்தது. இப்போது குறுஞ்செய்தியெனும் எஸ்.எம்.எஸ். டைப்பிக்கக் கூட அலுப்பாகப்
போயி கட்புலனஞ்சலில் பேசி அனுப்பியாகிறது. அடுத்த நொடியே அதற்கு விடையும் வந்தாகிறது.
காலம் இவ்வளவு சுருங்கியதால்தான் ஒரு பத்தாண்டு
கால இடைவெளி என்பது நூற்றாண்டு கால இடைவெளியாக, ஒரு யுகத்துக்கான இடைவெளியாகத் தெரியும்
அளவுக்கு விரிந்தது போல தெரிகிறதா என்ன?
ஒரு நாளுக்குரிய 24 மணி நேரம்,
ஒரு வாரத்திற்குரிய 7 நாட்கள்,
ஒரு வருஷத்துக்குரிய 365 சொச்ச நாட்கள்
எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால்
அப்படியில்லை. முன்பிருந்த கால இடைவெளி விரிந்து கொண்டே போவது போலவும், இப்போதிருக்கும்
கால இடைவெளி சுருங்கிக் கொண்டே போவது போலவும் ஒரு மனத்தோற்றம் உண்டாகிக் கொண்டே
இருக்கிறது. காலத்தை விரிக்கவோ, சுருக்கவோ முடியும் என்று சொன்னால் ஒரு காலத்தில்
நம்பியிருக்க மாட்டேன். ஏதோ ஒரு விளங்க முடியாத மனச்சூத்திரத்தில் காலம் விரிந்தோ
அல்லது சுருங்கித்தான் போய் கிடக்கிறது.
உங்களுக்கு எப்படியோ?
ஐன்ஸ்டீனைத்தான் கேட்க வேண்டும் என்பீர்களோ!
*****
No comments:
Post a Comment