20 Jun 2019

ஆரோக்கிய நாகரிக பைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு



            நம்ம சும்மாடுவாயனுக்கு காலுசட்ட சரியா போடத் தெரியாது. ஒழுகுற மூக்க சிந்தத் தெரியாது. நம்ம ‍தெரு மண்ணுல பெரண்டு அட்ட கருப்போடு அப்படியே நம்ம மண்ணுக்கு ஏத்த பிள்ள மாரி கெடந்தான். அவன் மாடு பிடிக்கிற வேகமென்ன? வாய்க்காலுல மட அடைக்கிற வேகமென்ன? கீற்று முடைஞ்சுப் போடுற வேகமென்ன? சைக்கிளு மிதிச்சிட்டுப் போயி கடைத்தெருவுல சாமான் செட்டுகள வாங்கிட்டு வர வேகமென்ன? அப்படியே நம்ம மண்ணின் மைந்தனா இருந்தான்.
            இந்த ஊருல கெடந்தா பொழக்க முடியாதுன்னு நம்மூருலேந்து சென்னைக்குப் போன செட்டுப் பயலுக அவனெயும் சென்னைக்குக் கொண்டு போனானுவோ. நம்மூருல உழைச்சி கெடந்த கட்ட இல்லீங்களா? சென்னையில வூட்டுக்கு வூடு தண்ணி கேனு போடுற வேலயின்னதும் பாய்ஞ்சி, பாய்ஞ்சி அவன் போட்ட வேகத்துல நாலு ஏரியாவ பிடிச்சிட்டான். மூணு சக்கர வண்டியில போயி தண்ணி போட்டுட்டு இருந்தவன் இப்போ குட்டியானைன்னு சொல்ற டாட்டா ஏஸ்ல வெச்சிட்டு தண்ணி போட்டுட்டு இருக்கான். நாலு வண்டிய சொந்தமா வாங்கி விட்டு டிராவல்ஸ் வேற நடத்திட்டு இருக்கான்.
            நாம்ம சென்னைக்குப் போனப்ப அடையாளம் கண்டுபிடிச்சிக் கூப்பிட்டுட்டுப் போயிட்டான். அவனுக்கு வந்த ஆசையைப் பாருங்க, நம்மள அழைச்சிட்டு அப்படியே பைவ் ஸ்டாரு ஓட்டலுக்குப் போயிட்டான். ஆகா! நமக்கு வந்த நேரம்னு ஏக குஷியா போயிடுச்சி. நாமல்லாம் அத வெளியில நின்னு ‍வேடிக்கைப் பார்த்ததோடு செரி. உள்ள போனது கெடயாது பாருங்க. நம்மள அதுக்குள்ள அழச்சிட்டுப் போயி,
            "அண்ணே! இந்தச் சாப்பாட்டை நீங்க சாப்பிட்டுப் பாக்கணுங்றான்!" சொல்லிட்டு ஆர்டர் போட்டுட்டான்.
            சரி! ஏதோ ரொம்ப காசு உள்ள ஐட்டமா வாங்கிக் கொடுக்கத்தான் போறான்னு நமக்கு நாக்கெல்லாம் எச்சிலா போயிட்டுங்க. அப்புறம் பார்த்தால்...
            ஓட்டலுக்காரன் ரண்டு மண்ணு கலயத்துல சோத்தக் கொண்டாந்து வெச்சிட்டுப் போறான்.
            நம்ம ஆளு, எடுத்துக் குடிங்கண்ணேங்றான்.
            எடுத்துக் குடிச்சா, நம்ம ஆத்தா பிழிஞ்சிப் போடுற பழைய சோறுதான்.
            அதுக்கு ஐநூறு ரூவாயை அப்படியே எடுத்து நீட்டிட்டு பாக்கிய டிப்ஸா எடுத்துக்கச் சொல்லிட்டான்.
            வெளியில வந்ததுக்கு அப்புறம், "அண்ணே! சிட்டின்னா சிட்டிதான்! நம்ம ஊருல இப்டியெல்லாம் ஆரோக்கியமா நாகரிகமா சாப்புட முடியுமா?"ங்றான்.
            "இதத் தின்னுபுட்டுதானடா நம்ம கிராமத்துல கெரவமேன்னு கெடந்தே. இப்போ இங்க வந்து காசு வந்துச்சுன்னு அத ஐநூறு ரூபாயைக் கொடுத்து பைவ் ஸ்டாரு ஹோட்டல்ல குடிச்சிட்டா ஆரோக்கியமும், நாகரிகமும் வந்திடுதா?"ன்னு கேட்க நாக்கு வரை வந்திடுச்சி.
            ஆனா... கேட்கத் தோணல பாருங்க! அவன் இருக்கிற நிலைமை இப்போ அப்படி இருக்கு! ஏதோ இந்தச் சென்னைக்கு வந்தும் நம்ம பாரம்பரியமான பழையச் சோற மறக்காம ஐநூறு ரூவா காச கொடுத்தாவது சாப்பிடுறானேன்னு நினைச்சி ஆறுதல் பண்ணிகிட்டு வந்துட்டேன்.
            இன்னொரு சந்தேகமும் வந்துப் போச்சி பாருங்க. நாம்ம வந்திருக்கிறதால இப்படி இம்புட்டு காச கொடுத்து பழையச் சோற வாங்கிச் சாப்புடறானா? இல்லேன்னா வூட்டுலயே ஒரு பாத்திரத்துல சோற்றைப் பிழிஞ்சிப் போட்டு சாப்புடுவானோ? ஏதா இருந்தாலும் காச கொடுத்து வாங்கிச் சாப்பிட்டா ஒரு நாகரிகம் வந்துதான் போயிடுது போங்க!
            இதப் போயி நம்ம கிராமத்துல  இருக்குற ஆத்தாகிட்டா சொன்னா எதால வேணாலும் நம்மள அடிக்கும். ஆத்தான்னு இல்ல கிராமத்துல யாருகிட்ட சொன்னாலும் மொதோ வேலயா அதச் செஞ்ட்டுதாம் மறுவேலை பார்ப்பாங்க. எத்தினி நாளுதான் யாருட்டேயும் சொல்லாம மனசுலயே போட்டுப் புழுங்கிட்டே இருக்குறது? அதாங்! இன்னிக்கு ஒங்கிகிட்டச் சொல்லிட்டேன். இந்த விசயத்தை நம்ம கிராமத்துல இருக்குற யாருட்டேயும் சொல்லாம பாத்துக்க வேண்டியது இனிமே ஒங்க பொறுப்பு!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...