19 Jun 2019

மாளிகை வந்த நேரம்! மாளிகைப் போயாச்சி!



செய்யு - 120
            பாண்டிச்சேரியில் சொல்லி விட்டார்கள். சித்தப்பா காப்பாற்ற முடியாத நிலையை அடைந்து கொண்டிருந்தது. சித்தி அதற்காக விடவில்லை. சென்னை அடையாறு ஆஸ்பத்திரிக்குப் போனால் காப்பாற்றி விடலாம் என்று சொன்னதைக் கேட்டு அதற்கான முயற்சியில் இறங்கியது. அதனுடைய கையில் எந்நேரமும் ஒரு கம்புப் பை இருந்தது. அந்த பை நிறைய கத்தைக் கத்தையான மருத்துவ காகிதங்கள் இருந்தன. அந்தக் காகிதங்களை வைத்துக் கொண்டு சித்தப்பாவைப் பார்க்க வருவோர் போவோர்களிடமெல்லாம் ஒரு டாக்டரைப் போல விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது.
            சித்தப்பாவுக்காகவே வீட்டுக் கூடத்தில் மெத்தை போன்ற சாய்வு நாற்காலியை வாங்கிப் போட்டிருந்தது சித்தி. அதில்தான் எந்நேரமும் இருந்தார் சித்தப்பா. அந்த நாற்காலியில் சித்தப்பாவைப் பார்க்கும் போது அதில் உட்கார்ந்திருப்பது போலவும் இருந்தது, படுத்திருப்பது போலவும் இருந்தது. தஸ் புஸ் என்று சித்தப்பா பேசுவதும் குறைந்திருந்தது. வாயை அசைத்தாலே சித்தப்பா வயிற்றைப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
            அடையாறுக்கு அழைத்துப் போவதற்கு அதே ஆம்னிவேன்காரர் முன்வந்தார். இந்த முறை மெத்தைக்குப் பதிலாக அந்த சாய்வுநாற்காலியையே ஆம்னிவேனில் வைத்துக் கட்டி அதில் சித்தப்பாவைத் தூக்கிக் கொண்டு போய் வைத்து அடையாறுக்குக் கொண்டு போனது சித்தி. அடையாற்றில் மறுபடியும் பரிசோதனைகள் முதலிலிருந்து செய்யப்பட்டு, பரிசோதனைகளின் முடிவில் எல்லாம் கடந்து விட்டதாகச் சொல்லப்பட்ட போது சித்தி மனம் உடைந்துப் போனது. என்னவிதமான சிகிச்சை அளித்தாலும் சித்தப்பாவைக் காப்பாற்றுவது கஷ்டம் என்றும், இருக்கிற வரை நல்லவிதமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று நேரடியாகவே சொல்லி விட்டார்கள். சித்தப்பா எலும்பும் தோலுமாக ஆகி விட்டது.
            சித்தப்பாவுக்கு உயிர் மட்டும்தான் உடம்பில் இருந்தது. உயிர் இருந்தாலும் உடம்பு உயிரற்றதைப் போல இருந்தது. "இவுகள இப்படி வெச்சிட்டு பாக்க சசிக்கலயே. செத்துப் போனா கூட தேவலாம் போலருக்கே!" என்று தினம் தினம் சித்தி அழும் நிலைக்கு வந்து விட்டது.
            பெங்களூரு பக்கத்தில் ஏதோ இதற்கு வைத்தியம் இருப்பதாகக் கேள்விப்பட்டு சித்தி அங்கேயும் போவதென முடிவெடுத்தது. "ஆள பாத்தா போதுமாம் யம்மா! அவரு மருந்து கொடுத்தார்னா மூணே மாசத்துல குணம் காணுமாம்!" என்று சாமியாத்தாவிடம் சொல்லி விட்டு பெங்களூரை நோக்கிக் கிளம்பியது. அங்கும் பெருங்கூட்டத்தில் வரிசையோடு வரிசையாக காத்திருந்து மருந்து வாங்கிக் கொண்டு வந்து சித்தப்பாவுக்குக் கொடுத்தது. சித்தப்பா மருந்தைக் குடித்ததிலிருந்து கருந்திரவமாக வயிற்றுப் போக்காகப் போய்க் கொண்டே இருந்தது. அது இருந்த நிலையில் அதனால் அந்த மருந்தைக் குடித்து அந்த வயிற்றுப் போக்கைத் தாங்க முடியவில்லை. மருந்தை ஊற்றினாலே சித்தப்பா வாயை மூடிக் கொள்ள ஆரம்பித்தது. சித்தி துவண்டு போனது. மருந்தைக் கையில் வைத்துக் கொண்டு அழுதது.
            சித்தப்பாவை யார் பார்க்க வந்து எந்த மருத்துவம் சொன்னாலும் அதை உடனடியாகச் சித்தி செய்து பார்த்தது. வந்து பார்த்தவர்கள் சொன்ன முகவரிக்கு எல்லாம் பணத்தை மணியார்டர் பண்ணி அனுப்பியோ, பேங்கில் டி.டி. எடுத்து அனுப்பியோ மருந்தை வரவழைத்தது. சித்தி ஏகத்துக்கும் செலவு செய்தது. வீட்டில் ஓர் ஓரத்தில் மருந்த டப்பாக்களாய் நிரம்பும் அளவுக்கு மருந்துகள் தினம் தினம் தபாலில் வந்து கொண்டிருந்தன. சித்தி எல்லா மருந்துகளையும் ஒன்று மாற்றி ஒன்றாகக் கொடுத்துக் கொண்டே இருந்தது. எந்த மருந்துக்கும் சித்தப்பாவின் உடம்பு சரியாக மறுத்தது. எல்லா மருந்துகளும் சேர்ந்து சித்தப்பாவைக் குணப்படுத்த முடியாமல் போனதோடு, சித்தியின் பண இருப்பையும் காபந்து பண்ண முடியாமல் காலி செய்தன. நாளுக்கு நாள் சித்தப்பாவின் உடம்பைப் போல சித்தியிடமிருந்த பணமும் கரைந்து கொண்டே இருந்தது.
            ஒரு நிலைமைக்கு மேல் சித்தியால் செலவைச் சமாளிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று ஆரம்பித்து ஐம்பதாயிரம் வரை யார் எந்த மருந்தைச் சொன்னாலும் அதை வாங்கிக் கொடுத்தது. கடைசியாக அது சாமியாத்தாவுக்கு வாங்கிப் போட்டிருந்த செயின், செய்யுவுக்காக வாங்கி வைத்திருந்த செயின் எல்லாவற்றையும் அடகு வைத்து மருந்தை வாங்கிக் கொடுத்தது. அப்படி அடகு வைத்த செயின்களை அதனால் பிற்பாடு மீட்க முடியாமலும் போனது. அதற்கு மேலும் பணம் போதாமையாக இருந்த போது வீட்டுக்குப் பின்னால் இருந்த இடத்தை அடமானமாய் எழுதிக் கொடுத்து பணத்தை வாங்கிச் செலவு செய்தது.
            சித்தப்பாவை நேரில் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. உடம்பில் பிட்டு சதையில்லாமல் எலும்போடு எலும்பாக தோல் ஒட்டியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது சித்தப்பாவின் தோற்றம். தலையைப் பார்ப்பதற்கு தனி தைரியம் தேவையாக இருந்தது. அதைப் பார்த்து விட்டு கண்ணை மூடினால் அந்தக் காட்சி அச்சத்தில் தள்ளி மனதை ஒரு மாதிரியாக நெருடி பயமுறுத்தியது.
            "வுடுடி அடியே! நீயும் ஆவுற வரிக்கும் பாத்துட்டே! இனுமே மருந்தும் வாணாம், மாத்திரயும் வாணாம். வாய்க்கு ருசியா சமச்சிப் போடுவேம். இருக்குற வரிக்கும் இருந்துட்டு நல்ல விதமா போயிச் சேரட்டும்." என்றது சாமியாத்தா.
            எல்லா மருந்துகளையும் நிறுத்தி சித்தி கறியும், மீனுமாக தினம் சமைக்க ஆரம்பித்தது. சித்தப்பாவால் எதையும் எடுத்து சாப்பிட முடியவில்லை. அதுக்கு ஊட்டி விடத்தான் வேண்டியிருந்தது. சித்தப்பா பெருவிருப்பத்தோடு சாப்பிட ஆரம்பித்தது. சாப்பிட சாப்பிட சித்தப்பாவின் உடம்பில் ஒரு தெம்பு வருவது போலிருந்தது. ஒரு நாள் கறியோ மீனோ இல்லையென்றாலும் சித்தப்பா சாப்பிட மறுத்தது. கறி, மீன்தான் வேண்டும் என்று சைகையால் சொல்லியது. மீன் என்றால் ரொம்ப பிரியத்தோடு சாப்பிட்டது. உடம்பு லேசாகத் தேறி வந்தது. முன்பு பார்த்தது போன்ற படுபயங்கரமான தோற்றம் கொஞ்சம் மாறியிருந்தது. உடம்பில் லேசாக சதை பிடித்தது போலிருந்தது.
            சில நாட்களில் கறி, மீன் வாங்க காசில்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது வாங்கி வந்துப் போட்டது. சித்தப்பாவை வந்துப் பார்ப்பவர்கள் கொடுக்கும் நூறு, இருநூறு பணத்தையெல்லாம் சேர்த்து வைத்து கறி, மீனாகவே வாங்கிப் போட்டது. சமயங்களில் நூறு, இருநூறு கொடுக்கும் உறவுகளிடம் அதைத் தாண்டியும் ஐநூறோ, ஆயிரமோ கொடுக்குமாறும் சித்தி கேட்டது. அது கூடுதலாக பணம் கேட்பதற்காக எந்த வித கூச்சமும் கொள்ளவில்லை. சித்தப்பாவுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போட தேவையானப் பணத்துக்காக அது யாரிடமும் கையேந்த தயாராக இருந்தது.
            "யம்மா! அவுக தேறிப்பாக போலருக்கு!" என்று சித்திக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. "இது தெரியாமா மருந்து மாத்திரைய கொடுத்து நாமளே கொல்லப் பாத்தோமேடி! வெயாதி வந்தா அப்டியே விட்டுடணும் போலருக்குடியோவ்! அதுக்கு மருந்து மாத்திரய போட்டா வெயாதி இன்னும் பெரிசாகும்தான் போலருக்கு. எப்டியோ தேறுனா சரித்தாம்!" என்றது சாமியாத்தா.
            சித்தப்பாவின் உடம்பு நன்றாகவே அதற்குப் பின் தேறி வந்தது. அது பாதி உடம்புக்கு மீண்டு வந்து விட்டது. எந்நேரமும் வயிற்றுக்கு மேல் கைகளை வைத்த ஏதோ மந்திரம் போடுவது போல சுற்றிக் கொண்டிருப்பதை மட்டும் அதனால் விட முடியவில்லை. சித்தப்பாவை வந்தப் பார்த்த எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. "வைத்தியம் பாத்துத் தேறாத ஒடம்பு அதெ நிப்பாட்டுன ஒடனே தேற ஆரம்பிடுச்சே!" என்று வந்து பார்த்தவர்கள் சொல்லும் அளவுக்கு சித்தப்பாவின் உடம்பு இருந்தது. "வெயாதிக்குத் தர்ற மருந்தே, யில்லாத வெயாதியயெல்லாம் கொண்டாந்துடும். மருந்துதாம் பாதி வெயாதியே. அத நிப்பாட்ட்டிட்டா மனுஷனுக்கு ஏது வெயாதி!வெயாதிய உருவாக்குறதுக்கே மருந்த கண்டுபிடிச்சிருப்பானுவோ போலருக்கு!" என்ற வந்து பார்த்தவர்களும் சொன்னார்கள். சித்தப்பாவால் எழுந்து நடக்க முடியவில்லையே மற்றபடி உடம்பு தெளிவாக இருந்தது.
            மருந்தை நிப்பாட்டிய மூன்று மாதத்தில் சித்தப்பா பிழைத்துக் கொள்ளும் என்று எல்லாருக்கும் தோன்றியது.
            சித்தப்பா ஓரளவுக்கு நன்றாகத் தேறி வந்த அந்த மூன்று மாதத்துக்குப் பின் ஒரு நாள் செத்துப் போனது.
            சித்தப்பாவுக்கு உடல் வாதனைகளும், வலிகளும் ரொம்பவே இருந்திருக்க வேண்டும். அதை அனுபவித்து அனுபவித்து அதுக்கு மரத்துப் போயிருக்க வேண்டும். அதைக் கடந்த ஒரு நிலையில் எப்படியோ உடம்பு ஒரு நிலைக்குத் தேறி அது இறந்து போனது.
            "யம்மா பாரும்மா! யக்கா பாருக்கா! யண்ணா பாருண்ணா! வூட்டக் கட்டி... எம் புருஷன இப்படிக் கொண்டாந்து போட்டுப் பாக்கத்தாம் வூட்டுக் கட்டியிருக்கிறேம் பாருங்க யம்மா! யக்கா! யண்ணா! இதுக்குத்தாம் வூட்டுக் கட்டிருக்கேம் போலருக்கே. இனி இந்த வூட்டுல எப்படி நாம்ம இருப்பேம்! இந்த வூட்டுக் கட்டிக் குடி போன நாளுலேந்து படுத்தவுகதாம். படுத்தவுக படுத்தவுகதாம். ஒரேடியா படுத்தாச்சி! அடி யம்மா! யக்கா! நாம்ம இந்த வூட்ட கட்டிருக்கக் கூடாது." சித்தி சித்தப்பாவின் உடம்பின் மேல் விழுந்து அழுது புரண்டது. சித்தியை அசை மடக்குவது ரொம்ப சிரமமாக இருந்தது.
            "பொக்கிஷம் வந்த நேரம்! எம் பொக்கிஷம் போயாச்சி! புதயலு கெடச்ச நேரம். எம் புதயலு போயாச்சி. பவுனு வந்த நேரம். எம் பவுனு போயாச்சி. அதிஷ்டம் வந்த நேரம். எம் அதிஷ்டம் போயாச்சி. மால வந்த நேரம். எம் மால போயாச்சி. மரியாதி வந்த நேரம். எம் மரியாதி போயாச்சி. மாளிக கட்டுன நேரம். எம் மாளிக போயாச்சி. எல்லாம் கூடி வந்த நேரம். எல்லாம் எம்ம வுட்டுப் போயாச்சி!" என்று சித்தி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதது. சித்தி பைத்தியம் பிடித்ததைப் போல மாரிலும், சுவரிலும் மாறி மாறி கைகளால் அடித்துக் கொண்டே வறண்ட குரலில் சத்தமிட்டபடியே அழுதது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத பேரழுகையை அது அழுதது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...