செய்யு - 121
மரணம் ஓர் ஊற்றைப் போல. அது கருணையாக
ஊற்றெடுக்கலாம். குரூரமாக ஊற்றெடுக்கலாம்.
ஒரு சில மரணங்களில் ஊற்றுக்கண் திறக்கமாலே போய், அது நிஜமான மரணமாகவே முடிந்து போய்
விடலாம்.
சில மரணங்களில் எவ்வளவு கொடியவராக இருந்தவரும்
நல்லவராக மாறி விடுகிற அதிசயமும் நடக்கலாம். சில மரணங்கள் அதற்கு நேர் மாறாக எவ்வளவு
நல்லவராக இருந்தவரும் கொடியவராக மாறி விடும் அவலமும் நடக்கலாம். மரணங்கள் ஒவ்வொன்றுக்கும்
வெவ்வேறு விதமான தாக்கங்கள். விதவிதமான மரணங்களை ஏற்படுத்தும் கருவிகளைக் கண்டுபிடிக்கச்
சொன்ன ராசாவும் இந்தப் பூமியில் இருந்திருக்கிறார். கலிங்கப் போரின் மரணங்களைக் கண்டு
மனம் திருந்திய அசோக ராசாவும் இந்தப் பூமியில் இருந்திருக்கிறார்.
திட்டையிலும் இதற்கு சாட்சிகள் இருந்தன.
திட்டையின் விகடு இருந்த தெருவுக்குப் பக்கத்தில் இருந்த தெருவில் ஒரு தாத்தா செத்த
பின் அந்த ஆத்தா கருணையின் வடிவமாகவே மாறி விட்டது. அது வரைக்கும் சிறு பொருளையும்
யாருக்கும் கொடுக்காமல் இருந்த அது தாத்தாவின் மரணத்துக்குப் பின் எதைச் சாப்பிட்டாலும்
யாருக்கும் கொடுக்காமல் சாப்பிடாது.
அதே தெருவில் இரண்டு வீடு தள்ளியிருந்த
இன்னொரு தாத்தா இறந்த போது அந்த வீட்டின் ஆத்தா கொடுக்கும் மனநிலையிலிருந்து முற்றிலும்
மாறி விட்டது. எதைப் பார்த்தாலும் அது வீட்டுக்குள் பத்திரப்படுத்த ஆரம்பித்து விட்டது.
சிறு துரும்பும் அதன் கண்களுக்குத் தப்பித்து வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அதுவரை
எல்லாருடனும் நன்றாகப் பழகி, எல்லார் வீட்டுக்கும் போய் வந்த அந்த ஆத்தா அதற்குப்
பின் யார் வீட்டிற்கும் போகாது. அக்கம் பக்கத்தினர் யாரையும் வீட்டுக்குள் நுழைய விடாது.
அந்த ஆத்தா சாகும் வரை அதன் வீட்டுக்குள் யாரும் நுழைய முடியவில்லை என்பது தனிக்கதை.
அது செத்த பின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது வீடு குப்பை மேடு போல இருந்தது.
வெட்டிய நகம், கொட்டிய முடி உட்பட அனைத்தையும் ஒரு மஞ்சள் பையில் போட்டு கட்டி வைத்திருந்தது
அந்த ஆத்தா. சாமான்கள் வாங்கி வந்த பாலிதீன் பைகள் உட்பட எல்லாவற்றையும் நான்கைந்து
சணல் சாக்கில் போட்டு கட்டி வைத்திருந்தது. எப்படி அந்த ஆத்தா தாத்தாவின் மரணத்துக்குப்
பின் அப்படி மாறிப் போனது என்பது ஆச்சரியமாக இருந்தது.
தேன்காடு சித்தப்பா உயிரோடு இருந்த வரை
ஒட்டாமல் இருந்த சித்தப்பாவின் பங்காளிகள் மாறிப் போயினர். அவர்களைச் சித்தப்பாவின்
மரணம் வெகுவாகப் பாதித்து விட்டிருந்தது. அவர்கள் சித்திக்கு அனுசரணையாக இருக்க வேண்டும்
என்ற முடிவுக்கு வந்திருந்தனர். அதுவரை ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த இருந்தவர்கள் தங்களது பாகங்களைச் சித்தியின் அனுபவ பாத்தியத்துக்கு
விட்டுக் கொடுத்தனர். பிள்ளைகள் தலையெடுக்கும் வரை அதை குத்தகைக்கு விட்டு வருமானம்
பார்த்துக் கொள்வது என்றும் அதற்குப் பின் அந்தப் பாகங்களை அவர்கள் எடுத்துக் கொள்வது
என்றும் ஏற்பாடானது.
சித்தப்பாவின் மூத்தப் பங்காளி சித்தியின்
மகன்களான வேலுமணி, தனிகொடி என ரெண்டு பேரின் படிப்புச் செலவையும் பார்த்துக் கொள்வதாகச்
சொன்னது. அதில் வேலுமணிதான் பாலிடெக்னிக் வரை படித்து அவருக்குச் செலவு வைத்தது. தனிகொடி
ஏழாவது வந்த உடன் படிக்க முடியாது என்று அடம் பிடித்து படிப்பை நிறுத்தி விட்டு மறுவேலை
பார்த்தது. அவன் தச்சு ஆசாரிகளோடு சேர்ந்து கொண்டு வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டான்.
சித்தியுடன் சொந்த பந்தங்கள் உட்பட யார் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. படிப்பை
நிறத்துவதில் அவன் அவ்வளவு உறுதியாக நின்று அதை நிறுத்தினான்.
"இவுனுக படிச்சி குடும்பத்தைத் தூக்கி
நிறுத்துவானுவோன்னு நெனச்சா அதுல ஒருத்தம் இப்படிப் பண்றானே! ஏந் தலயெழுத்து பாருங்கோ!"
என்று சித்தி ஆரம்பத்தில் அழுதது. அவனைப் போட்டு அடிக்கவும் செய்தது. அவன் வேலைக்குப்
போய் சம்பாதித்து சித்தியின் கையில் கொடுக்க ஆரம்பித்ததும், முதலில் வேண்டா வெறுப்பாக
அந்தப் பணத்தை அவன் முகத்தில் தூக்கி எறிந்தது. அவன் அதைப் பற்றிக் கவலையில்லாமல் விழுந்து
கிடக்கும் பணத்தைக் கண்டு கொள்ளாமல் வெளியே போய் விடுவான். அவன் போன பிறகு அழுது
கொண்டே சித்தி அந்தப் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளும். சித்தியால் நெடுநாள் வரை
பணத்தை அப்படி அவன் முகத்துக்கு எதிராக தூக்கி எறிய முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு
மேல் ஒன்றும் சொல்லாமல் வைத்துக் கொள்ள ஆரம்பித்தது. அத்துடன் "இவ்வேம் வேலக்கிப்
போறதும் பரவாயில்ல. செலவு கிலவுக்கு ஆவுது. ந்நல்லா தொழில கத்துப்பாம் போலருக்கு.
அவுக மாரி வேல பாக்குறதா பாக்குறவுக சொல்றாக. தொழில ந்நல்லா கத்துகிட்டப் பிற்பாடு
வெளிநாட்டிக்கு அனுப்பிச்சா போதும்!" என்று சொல்ல ஆரம்பித்து விட்டது. இதெல்லாம்
பிற்பாடு அடுத்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தது.
சித்தப்பாவின் மரணம் தேன்காடு சித்தியை
வெகுவாகப் பாதித்து விட்டது. அதற்குப் பின் அது ஊரில் கிடைக்கும் அத்தனை வேலைகளுக்குப்
போய் குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் மத்தியில் அதுக்கு அலுப்போ
சலிப்போ என்றால் திட்டைக்கு வந்து செய்யுவை அழைத்துக் கொண்டு போய் ரெண்டு நாட்கள்
அழைத்துக் கொண்டு போய் வைத்திருந்து கொண்டு வந்து விடும். சுப்பு வாத்தியார் வாழ்க்கப்பட்டு
பெரியம்மாவுக்குச் செய்தது போலேவே மாதத்திற்கு ஒருமுறை நெல் அவித்து அரை மூட்டை அரிசியைக்
கொண்டு போய்க் கொடுத்து கையில் ஐம்பதோ நூறோ பணத்தைக் கொடுத்து வந்து கொண்டிருந்தார்.
சுப்பு வாத்தியார் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த நிலையில் அவ்வளவுதான் அவரால் முடிந்தது.
தேன்காடு சித்தப்பா இறந்த ரெண்டாவது மாதத்தில்
வைத்தி தாத்தா மரணித்துப் போனது. உயிரோடு இருந்த வரை வைத்தித் தாத்தாவைப் பார்த்துக்
கொள்வதில் சுணக்கம் காட்டினாலும் குமரு மாமாவும், மேகலா மாமியும் சாவு காரியத்தை முனைப்பாகச்
செய்வது போல கவனிப்புக் காட்டின. வைத்தித் தாத்தாவைத் திட்டினாலும், அகெளரவப்படுத்தினாலும்
கொஞ்சம் கவனிப்புக் காட்டிப் பார்த்துக் கொண்டது வீயெம் மாமாதான். சாமியாத்தா தேன்காடு
சித்தப்பாவின் உடம்பு முடியாமல் போனதற்காக தேன்காட்டில் தங்கியதால் கடைசிக் காலத்தில்
அதுவும் வைத்தித் தாத்தாவை அதிகம் பார்த்துக் கொள்ள முடியவில்லை.
மற்றபடி முருகு மாமாவும், லாலு மாமாவும்
ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்வது போல வைத்தி தாத்தாவின் சாவு காரியத்தில் உற்சாகமாக
கலந்து கொண்டன.
சாவு, கல்யாணம் எல்லாம் ஒரு வகையில் உறவுகளைச்
சிதறடிப்பதையும், ஒன்று சேர்ப்பதையும் ஒரு சேர செய்யக் கூடியவை. சாவுக்கு அப்படியொரு
கருணையும், குரூரமும் ஒரு சேர இருக்கின்றன. எந்தச் சாவில் எந்த உறவு சேர்ந்து கொள்ளும்,
எந்த உறவு புட்டுக் கொள்ளும் என்பதெல்லாம் அந்தச் சாவு மட்டுமே அறிந்த ரகசியம்.
வைத்தி தாத்தாவின் சாவில் ஒட்டு மொத்தக்
குடும்ப வகையறாக்களும் கூடியிருந்தன. ஒவ்வொரு சாவிலும், கருமாதியிலும் சரக்கு அடித்து
போதையாவது, போதையில் கண்டமேனிக்கு ஆடி ரவுசு பண்ணுவது, பிணத்தைத் தூக்கி அடக்கம்
செய்தவற்குள் ஆயிரத்தெட்டு நொட்டாரம் சொல்வது என்பதெல்லாம் வழக்கமாகிக் கொண்டிருந்தன.
வைத்தி தாத்தா உயிரோடு இருந்திருந்தால் இதையெல்லாம் செய்ய முடியாது. அது செத்து பாடையில்
ஏறக் கிடந்ததால் இதெல்லாம் அரங்கேறின.
தேன்காடு சித்தப்பாவின் சாவில் பங்காளிகள்
ஒட்டிக் கொண்டனர் என்றால், வைத்தி தாத்தாவின் சாவில் குமரு மாமாவும் வீயெம் மாமாவும்
சண்டைக்கு நின்றன. ரெண்டு பேரும் சொத்தைப் பிரித்து விட்டுதான் வைத்தித் தாத்தாவைப்
பாடையில் வைத்துத் தூக்க வேண்டும் என்று வாய்ச் சண்டையில் ஆரம்பித்து கைச் சண்டையை
நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. அதோடு முருகு மாமாவும், லாலு மாமாவும் சேர்ந்து
கொண்டு, "எங்க யக்காவுக்கு ஒரு பங்கு பிரிக்காமல் பாடையைத் தூக்கக் கூடாதுடா!"
என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன. போதை அந்த அளவுக்கு எல்லாரது வாயையும் எகிற வைத்தது.
அவர்கள் நிஜமாகவே போதையில் அப்படி உளறினார்களா? அப்படி உளறுவது போல பேச வேண்டும்
என்பதற்காக போதையை ஏற்றிக் கொண்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சமாய் இருந்திருக்கும்.
பிற்பாடு இந்தச் சந்தேகம் சரியானதுதாம் என்பதற்கான நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன.
சரக்கை அடிக்காதவன் சாவு காரியத்துக்கு
வருவதற்கே தகுதியில்லாதவன் என்ற நிலை அது முதல் ஏற்பட ஆரம்பித்திருந்தது. வாழ்க்கப்பட்டு
பெரியம்மா, சிப்பூர் பெரியம்மா, பெரியப்பா, சிப்பூர் சித்தி, சித்தப்பா, பாகூர் சித்தி,
சித்தப்பா, தேன்காடு சித்தி, சுப்பு வாத்தியார், வெங்கு உட்பட அனைவருக்கும் இது ஒரு
வகையான தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியது. எல்லாருக்கும் இந்தச் சண்டையைப் பார்த்தப் பிறகு
வைத்தி தாத்தாவைப் பிணமாய்க் கிடந்து நாற விடாமல் எப்படியாவது அடக்கம் செய்து விட்டால்
தேவலாம் என்பது போலிருந்தது. அதுவும் சொத்தைப் பிரித்து விட்டுப் பாடையைத் தூக்குவது
என்றால் எப்போது தூக்குவது? ஆக யோசிக்க நேரமில்லாமல் ஒரு பஞ்சாயத்தைப் பேசியாக வேண்டும்.
இதுயிது உனக்கு, இதுயிது அவனுக்கு என்று சட்டுபுட்டு என்று அதை முடித்தாக வேண்டும்.
அப்படிதான் சாவு காரியத்துக்கு வந்திருந்த பெரிசுகள் முடித்து விட்டார்கள்.
வீட்டை குமரு மாமா எடுத்துக் கொள்ள வேண்டும்,
வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த மனையை வீயெம் மாமா எடுத்துக் கொள்ள வேண்டும், ஓகையூரில்
இருக்கும் ஆறரை மா நிலத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும், வடவாதியில்
பட்டறையோடு பட்டறை இருக்கும் இடத்தை குமரு மாமா எடுத்துக் கொள்ள வேண்டும், அதற்குப்
பதிலாக வீயெம் மாமாவுக்கு ஒதுக்கிய மனையில் ஒரு வீட்டை குமரு மாமா கட்டித் தந்து விட
வேண்டும், திட்டையில் இருக்கும் ரெண்டேகால் மா நிலம் சாமியாத்தாவுக்கு. அதை சாமியாத்தாவை
வைத்துப் பார்த்துக் கொள்பவர்கள் பார்த்துக் கொண்டு அதன் சாவுக்குப் பிற்பாடு அவர்கள்
எடுத்துக் கொள்ளலாம் என்று பேசி முடிவானது. இந்தப் பாகப் பிரிப்பில் வைத்தி தாத்தாவின்
பெண் மக்கள் விடுபட்டுப் போனார்கள்.
சிப்பூர் பெரியப்பா மட்டும், "பொண்ணுங்களுக்கும்
எதாச்சும் செஞ்சு வுட்டா தேவலாம்!" என்றது. முருகு மாமாவுக்கும், லாலு மாமாவுக்கும்
கோபம் வந்து விட்டது. "நக நெட்டு போட்டு காசழிச்சு கல்யாணத்தயும் பண்ணி விட்டுட்டு
சொத்துல பங்கும் கொடுக்குறது எந்த வூரு ஞாயம்? பொண்ணுங்களுக்கு நயா பைசா பங்கு கெடயாது!"
என்று சத்தம் போட்டன.
பெரியப்பா அப்படிக் கேட்டதில் சிப்பூர்
பெரியம்மாவுக்கும் கோபம் வந்த விட்டது. "எங்கப்பாரு நிம்மதியா இடுகாடு போன தேவலாம்னு
நாங்க அழதுட்டுக் கெடந்தா இவருக்குச் சொத்து வேணுமாம்ல சொத்து! ச்சும்மா வாய மூடிட்டு
போய்யா!" என்று புருஷன் என்று கூட பார்க்காமல் பேசியது.
"நமக்கு ன்னாடி வந்துச்சு? நாம்ம
ஒண்ணும் சண்டயெல்லாம் போடல ஒம்மட தம்பிக மாரி. ஏதோ சொத்துப் பிரிச்சு வுடறாங்களேன்னு
ஒரு வார்த்த கேட்டுப் பாத்தேம். கொடுத்தா கொடுக்கட்டும். கொடுக்கலன்னா போவட்டும்!"
என்றது சிப்பூர் பெரியப்பா.
"கொடுப்பாக கொடுப்பாக! நக நெட்டு
வாங்குனது பத்தாது. சீரு செனத்தி செஞ்சது பத்தாது. பெரசவம் பாத்து விட்டது பத்தாது.
ஆறு பெண் மக்களுக்குச் செஞ்சி எம் தம்பியோ வதயழிஞ்சு கெடக்குறானுவோ. ந்நல்லா கேட்பியளோ
பங்கு? ஒம்மட அப்பாரு ஆயி சேத்து வெச்ச சொத்துல போயி கேளுங்க பங்கு! வாங்கிட்டு வாங்க
பாப்பம் பங்கு?" என்றது சிப்பூர் பெரியம்மா. அதற்கு மேல் பேசாமல் அங்கிருந்த அகன்று
கொண்டது சிப்பூர் பெரியப்பா.
சுப்பு வாத்தியார் எதையும் பேச முடியாத
நிலையில் உட்கார்ந்திருந்தது. விகடு பண்ணிய
காரியத்தால் வைத்தி தாத்தாவின் சாவு பேச்சை விட அது பெரும் பேச்சாக இருந்தது.
"எல்லாம் மனை போட்ட நேரம்!" என்று சுப்பு வாத்தியாரைப் பார்க்கும் எல்லாரும்
சொல்லச் சொல்ல ஆற்றாமையாக வந்தது சுப்பு வாத்தியாருக்கு. விகடு எதிரே இருந்த கோனார்
தாத்தாவின் வீட்டு திண்ணைப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான். ஆளாளுக்கு அவனை விசாரித்துக்
கொண்டிருந்தனர்.
*****
No comments:
Post a Comment