சின்ன வயசுல வெளயாட்டு புத்தியில வூடு
தங்குறது கெடயாது. எந்நேரமும் வெளயாட்டுதான். பசிச்சா கூட சாப்பிடுறது கெடயாது. சாப்பிடுற
நேரத்துல ரெண்டு வெளயாட்டு வெளயலடலாம்னு வெளயாடறது. அப்படி ஒரு வெளயாட்டுப் பித்து.
வீட்டுல ரொம்பவே திட்டுவாங்க. "இவனுங்களயெல்லாம் சூத்துல சூடு வெச்சதாம் அடங்கி
வூடு தங்குவானுவாங்க!" என்று திட்டாத அம்மாக்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அப்போ அம்மாக்கள் விட்ட சாபமோ என்னவோ
இப்போ நிஜமாகவே தினமும் பிட்டத்திலே சூடு வைத்துக் கொண்டு அலைய வேண்டியதாக இருக்கிறது.
தாய்மார்களின் சாபம் பொய்க்காமல் போவதில்லை போலிருக்கு.
2018 ல அடிச்ச கஜா புயலு ஒட்டுமொத்த மரங்களயும்
சாய்ச்சிட்டுப் போனதுக்கு அப்புறம் இருந்த கொஞ்ச நஞ்ச மரங்களயும் மின்சார வாரியத்துலேர்ந்த
வந்து கழிச்சுப் போட்டு போயிட்டாங்க. அந்த மரங்களோட கிளைகள் மேல போற லைன்ல ஒரசி
பொறி பொறியா பறக்குதுன்னு அப்படிப் பண்ணதுல இப்போ என்னாச்சின்னா இந்த வண்டிகள நிறத்த
நிழலில்லாம போயிடுச்சி. மனுசங்களே ஒதுங்க நிழலில்லாததுக்கு வண்டிகளுக்கா நிழலு தர
முடியும்?
ஒட்டிட்டுப் போற வண்டிகள வெயில்லதாம்
போட வேண்டிருக்கு. வெயில்ல போட்டுட்டு திரும்ப எடுக்குறப்ப சீட்டு சுடுது பாருங்க!
அது ஒங்க வீட்டு சூடு, எங்க வீட்டு சூடு இல்ல, சூரியனயே கொண்டாந்து சீட்டுக்குள்ள
வெச்ச மாதிரி அப்படி ஒரு சூடு. சுடுற சூட்டுல பிட்டமே உருகி ஊத்திப் போயிடுமோங்ற
மாதிரி இருக்கு.
இதால பாருங்க வண்டியில போறதுக்கே பயமா
இருக்கு. அடங்கி ஒடுங்கி வீட்டுலயே உட்கார்ந்திடறது. அப்போ அப்படித் திட்டுன அம்மாதாம்
இப்போ வேற மாதிரி, "ஏம்டா! இப்பூடி வூட்டுலயே அடஞ்சிக் கெடந்தா வூட்டு வேலயெல்லாம்
யாரு பாக்குறது? வெளிய தெருவ போயிட்டு வாடா!" என்று திட்டித் தள்ளுகிறது. இதில்
கூட பொண்டாட்டியும் இருந்து கொண்டு, "மெளவா தூளு அரச்சி வாரச் சொல்லி நாலு
நாளுச்சி அத்தே! இன்னும் அரச்சிட்டு வாரக் காணும்!" என்று வெந்த புண்ணில் மொளவாத்
தூள அள்ளித் தூவுது.
இதுக்கு வண்டி சீட்டு வெயில்ல கிடந்து
சுடுற சூடே பரவாயில்லன்னு வெளியில கெளம்பி வந்திட வேண்டியதாயிருக்கு. வெளியில வந்தா
சூரியரு சுட்டுக் கொளுத்துராரு. ஏப்பா சூரியரே! உமக்கெல்லாம் இப்படிக் கொளுத்துற
அளவுக்கு எரியறதுக்கு எங்கேருந்துப்பா வெறகு கெடைக்குது? இங்க எரிக்கிறதுக்கு வெறவு
இல்லாம எல்லா மரமும் விழுந்து போச்சி பாத்துக்குங்க!
*****
No comments:
Post a Comment