16 Jun 2019

மண்ணுக்குள்ள தங்கமிருக்கு!



செய்யு - 117
            விளையாட்டுப் புத்தி செய்யுவைத் தூண்டியது. அவள் குளிப்பதை மறந்து குளியல் குட்டையில் மணலைத் தோண்டி விளையாட ஆரம்பித்தாள். முழங்கை அளவுக்குக் குடைந்து மணலைத் தோண்டுவதும் அடைப்பதும் என ஆரம்பித்து முழு கையும் உள்ளே போகும் அளவுக்குக் குடைய ஆரம்பித்தாள். மணலைத் தோண்டிக் கொண்டே போகப் போக கைகளில் உண்டாகும் ஜில்லாப்பு அவளைச் சிலிர்க்கச் செய்தது. நகங்களை மணல் துகள் பெயர்த்து எடுத்தது. அது சற்று எரிச்சலைத் தந்தாலும் அந்த விளையாட்டு தந்த ஆர்வத்தில் அதை அவளால் பெரிதுபடுத்த முடியவில்லை.
            இதுவரை எத்தனை குடைந்து எத்தனை அடைத்திருப்பாள் என்ற பிரக்ஞையின்றி இருந்தவளுக்கு, அந்த முறை தோன்றிய போது மேற்கொண்டு கை தோண்ட முடியால் ஏதோ தடுத்தது. எது கையை மேற்கொண்டு தோண்டிக் கொண்டு போக முடியாமல் தடுக்கிறது என்று ஒரு கணம் அவளுக்குப் பயமாக இருந்தது. எல்லாம் ஒரு கணம்தான். அப்புறம், ஏதோ ஒரு பொருள் கிடைக்கப் போகிறது என்ற ஆர்வம் அவளைத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. அந்தக் குடைவைப் பெரிதாகத் தோண்டலாம் என்ற முடிவுடன் சுற்றிலும் மணலைப் பறிக்க ஆரம்பித்தாள். அவள் தோண்டிய குடைவு பெரிதாக ஆரம்பித்தது.
            அவள் கையைத் தடுத்த இடம் வரைப் பெரிதாகத் தோண்டிய போது கையடக்கத்திற்கும் சற்றே பெரிய சொம்பு தட்டுபட்டது. செம்பாலான சொம்பு. சொம்புக்குத் திறப்பு இல்லாமல் வாயையும் செம்பைக் காய்ச்சி மூடியிருப்பார்கள் போல. சொம்பைக் கொண்டு வந்து மணலைத் தேய்த்து தண்ணீரில் முக்கி எடுத்தாள். சற்று பளபளப்பாக இருப்பது போலத் தோன்றியது.
            சொம்புக்குள் என்ன இருக்கும் என்ற ஆர்வம் செய்யுவைத் தோற்றிக் கொண்டது. அவளுக்குக் குளிக்கத் தோன்றவில்லை. குளிப்பதற்காக எடுத்து வந்திருந்த துண்டு, துணிகளை அப்படியே போட்டு விட்டு வீட்டை நோக்கி ஓடினாள்.
            சித்தி மாங்கொட்டைகளை ஒரு குண்டான் நிறைய அவித்துப் போட்டு விட்டு, மறுகுண்டான் அளவுக்குப் போட்டு அவித்துக் கொண்டிருந்தது. செய்யு அந்தச் சொம்பை பாவடைக்குள் உள்ளே வைத்து பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
            "ஏய் யம்மாடி! இன்னிக்கு யன்னா இம்முட்டு சீக்கிரமா குளியில் முடிஞ்சிடுச்சி?" என்றது சித்தி.
            "இன்னும் குளிக்கல சித்தி!" என்றது செய்யு.
            "இம்முட்டு நேரமும் என்னா பண்ணீங்க?"
            "வெளயாடிட்டு இருந்தேமா சித்தி..."
            "செரி! வெளயாடிட்டு இருந்தீங்க! வெளாயாடிட்டு இருந்தப்ப புதயல் கிடைச்சுதா?" என்று சொல்லி சித்தி சிரிக்க ஆரம்பித்து விட்டது.
            "அப்படிதாஞ் சித்தி தெரியுது!" என்று பாவாடைக்குள் உள்ளே வைத்திருந்த சொம்பை எடுத்து நீட்டினாள். ஒரு கணம் சித்திக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
            "என்னாடி தங்கம்! நாம்ம வெளயாட்டுக்குக் கேட்டா நெசமா ன்னம்மோ புதயல் மாரி எடுத்து நீட்டுறே?"
            "ஆமாஞ் சித்தி! நாம்ம குழிய தோண்டி வெளயாடிட்டு இருந்தமா! அப்போ கையில ஏதோ தண்டுபட்டிச்சா. நாம்ம குழிய பெரிசா எடுத்துத் தோண்டுனமா. தோண்டுனா... இது இருந்திச்சி சித்தி. நாம்ம இத எடுத்து ந்நல்லா தேய்ச்சி அலம்பி எடுத்துட்டு வந்திட்டேம் சித்தி!" என்றது செய்யு.
            சித்திக்குக் கண்களெல்லாம் கலங்க ஆரம்பித்து விட்டது. அடுப்பிலிருந்த விறகுகளை சற்றி வெளியே தள்ளிப் போட்டு எரிவதை மட்டுபடுத்தி விட்டு சொம்பை வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தது. செய்யுவை இழுத்து அவள் கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்தது.
            "பரவால்லடி தங்கம். செம்பு சொம்புடி. இப்படி மேல வெச்சி அடச்சி பூசியிருக்கானுங்களே! என்னாடி இருக்கும் இதுக்குள்ள?" என்றது சித்தி.
            செய்யு கண்களைக் கோழிமுட்டைக் கணக்காய் உருட்டிக் கொண்டு யோசித்தாள். "ன்னா இருக்கும்? தங்கக் காசா இருக்கும்!" என்றாள்.
            "அடிப் போடி இவளே! துன்னுருதான் இருக்கும் பாரு! ஆனா ந்நல்ல எடயால்லடி இருக்கு!" என்றது சித்தி.
            "அப்போ ஒடச்சிப் பார்ப்பம்!" என்றது செய்யு.
            "நாம்ம ஒடச்சா சொம்பு எதுக்கும் ஆகாம போயிடும். சித்தப்பா வரட்டும். அவுகதான் தோதா இத்தோட வாய வெட்டி எடுப்பாக. அப்படி எடுத்தாத்தான் தண்ணி குடிக்கக் கொள்ள வெச்சிக்கலாம்! என்னாங்றே?"
            "சித்தப்பா எப்போ வரும்?"
            "இஞ்ஞ கடைக்கிதானே போயிருப்பாக. வந்துடுவாக. அப்பொறம் செய்யு. இத்தே ரெண்டு தம்பிகட்டயும் சொல்லிப் புடாதே. ஊருக்கே டமுக்கு அடிச்சிடுவானுக. அப்பொறம் ஊரே வந்து பாக்கும். கண்ணு வெச்சிடும் ஆமா பாத்துக்க!"
            "நாஞ் சொல்ல மாட்டேம் சித்தி. நாம்ம வேணுன்னா கடத்தெரு பக்கம் போயி சித்தப்பாவ அழச்சிட்டு வாரட்டா!"
            "கொஞ்சம் பொறு புள்ள. வந்துடுவாக. இத்தே கொண்டு போயி சாமி மாடத்துல வையி. நீ வந்த நேரம் நல்ல செம்பு சொம்பா கெடச்சிருக்கு. தங்கச் சொம்பா கெடச்சிருந்தா நல்லாருந்திருக்கும்."
            "நாளிக்குக் குளிக்கப் போறப்ப எடுத்துட்டு வார்ரேம் சித்தி."
            "ம்ஹூம்! ஒனக்கு தோண்டுறப்பலாம் வெதவெதமா சொம்பு கெடக்கிற மாரி புதைச்சு வெச்சிருக்காங்க வாயேம்!"
            "அப்பொறம் இது தோண்டுனப்பதான கெடச்சிடுச்சி. அது மாரி அதுவும் கெடைக்கும்!" என்று சொல்லிக் கொண்டே செய்யு அதைக் கொண்டு போய் சாமி மாடத்தில் வைத்தது. அடுப்படிக்கு எதிர்ப்புறமாக இருந்த அலமாரியில் நல்ல விளக்கு, சாமிப் படங்களை வைத்து சாமி மாடமாய் வைத்திருந்தது சித்தி. சாமி மாடத்தில் வைத்து விட்டு செய்யு அந்த வீட்டுக்கு ஒவ்வொரு முறை வந்த போதும் நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தது.
            தேன்காடு சித்தி கல்யாணம் கட்டி வந்த போது பெரிய ஓட்டு வீடாக இருந்த வீடுதான் இது. அப்புறம் எடுத்து மராமத்து பார்க்க முடியாமல் வீட்டின் மேலண்டைப் பக்கம் இடிந்து விழுந்து போயி எஞ்சியிருந்த கீழண்டைப் பக்கம் குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தது சித்தி.
            தேன்காடு சித்தப்பாவுக்குச் சொத்து சுகம் அதிகம். அந்தச் சொத்துக்குப் பங்காளிகள் நான்கு பேர். சித்தப்பா கடைக்குட்டி. மிச்ச மூன்று பேரும் வேலை கிடைத்த போக்கில் வெளியூரில் இருந்ததால் சித்தப்பாவே அந்த இடத்தை ஆண்டு அனுபவித்து வந்தது. இது தவிர கொஞ்ச நிலபுலன்களும் தேன்காட்டில் சித்தப்பாவுக்கு இருந்தன. ஆனால் சித்தப்பா பெரிய சோம்பேறி. சோம்பேறியாக இருந்தாலும் மரத்தச்சில் பூவேலை பார்ப்பதில் கில்லாடி. எப்போதாவது வேலை பார்க்கும். வேலை பார்த்து காசு வந்து விட்டால் அந்தக் காசு கரையும் வரைக்கும் எந்த வேலைக்கும் போகாது. சில சமயங்களில் நிலபுலன்களை வித்து விட்டு அந்தக் காசை வைத்துக் கொண்டும் குடித்தனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும். அப்படி நிலபுலனைச் சொல்லாமல் கொள்ளாமல் விற்றதில் சித்தப்பாவின் அண்ணன்மார்களுக்கு அதன் மேல் கோபம். பேச்சு வார்த்தையும் நின்று போயிருந்தது. சித்தப்பா இருக்கும் இடத்தையும் பாகம் பிரித்து அப்படியே பிரித்து விட்டு கொடுத்து விட்டால் தேவலாம் என்ற நிலைக்கு அவர்கள் வந்திருந்தார்கள். இருக்கின்ற இந்தப் பொதுவான இடத்தையும் அது விற்று விடுமோ என்ற பயம் அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அண்ணன்மார்கள் வலுத்தக் கையாக இருந்தார்கள். இருந்த போதிலும் மேண்டைப் பக்கம் வீடு இடிந்துப் போனதைக் கேள்விபட்டும் எந்த உதவியும் செய்யாமல் இருந்தார்கள். இருக்கின்ற வீட்டைக் கூட மராமத்துப் பண்ணி வைத்துக் கொள்ளாதவனுக்கு எதைச் செய்து என்னவாகப் போகிறது என்ற மனநிலையில் சித்தப்பாவின் அண்ணன்மார்கள் இருந்திருக்க வேண்டும்.
            சித்தப்பா சில நேரங்களில் வீராவேசமாகச் சொல்லும், "வீட்டை எடுத்துக் கட்டிப்புடணும்டி!" என்று. வேலைக்குப் போய் காசு சேர்த்தால்தானே அது நடக்கும். சித்தப்பாவுக்கு வேலைக்குப் போவதென்றால் வேப்பங்காயாகத்தான் கசக்கும். சமயத்தில் அதுவாக வேலைக்குப் போகும். அப்படிப் போனால் ஒரு வருஷத்துக்குச் செய்ய வேண்டிய வேலையை வஞ்சனையே இல்லாமல் ஒரு மாசத்தில் முடித்து விட்டு வந்து படுத்துக் கொள்ளும். இதனாலேயே அதனது வேலைக்கு நல்ல மவுசு இருந்தது. "ஒண்ணாந் தெருக்கார்ரம் வேலக்கிதாம் கிளம்ப மாட்டாம். கிளம்பிட்டா இருவது தச்சுல ஆகுற வேலய பத்து தச்சுல முடிச்சிடுவாம். நமக்கும் காசி மிச்சம்!" என்று தேன்காட்டு சனங்கள் பேசிக் கொள்ளும். இதனால் தேன்காட்டுச் சனங்களுக்கும் சரி, சுத்துப்பட்டு சனங்களுக்கும் சரி சித்தப்பாவைக் கிளப்பிக் கொண்டு போவதில் ஏக ஆர்வம். சித்தப்பா கிளம்ப வேண்டுமே! "நீங்க முன்னாலயே அப்படி வூடு போங்க! நாம்ம அப்படியே பின்னாலயே வந்திடறோம்!" என்று வேலைக்குக் கூப்பிட வந்தவர்களை அனுப்பி விட்டு அப்படியே வீட்டுக்குள் வந்து படுத்து விடும்.
            சித்தப்பா இப்படி இருந்ததால், சித்தி வீட்டைச் சுற்றியிருந்த மாமரம், தென்னை மரங்களை ஊரில் குத்தகைப் பேசி காசு வாங்கிக் கொண்டு அந்தக் காசை வைத்துதான் பெரும்பாலான நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தது. மரங்களைக் குத்தகைக்குக் கொடுத்து விட்டால் அதிலிருந்த காய்களைப் பறிக்கக் கூடாது. ஆனால் சித்தி யாருக்கும் தெரியாமல் பறித்தது தெரியாதது போல ஆங்காங்கே காய்களைப் பறித்து யாருக்கும் தெரியாமல் விற்று விடும். வடவாதிக்கோ, திட்டைக்கோ, சிப்பூருக்கோ, வாழ்க்கப்பட்டுக்குப் போனால் பை பையாக மாங்காய்களையும், தேங்காய்களையும் கட்டிக் கொண்டு வரும். எல்லாம் குத்தகைக்காரர்களுக்குத் தெரியாமல் பறித்து வரும் திருட்டுக் காய்கள்தாம்.
            "ஏம்டி இப்படித் திருட்டுக் காய்கள பறிச்சாந்து எங்க பாவத்தக் கொட்டிக்கிறே?" என்று சாமியாத்தா கேட்கும்.
            "நாம்ம ன்னாம்மா பண்றது? அவுக வேலக்கிப் போனா நாம்ம ஏம் இப்படிப் பண்றேம்? இருக்குற காசி பஸ்ஸுகாருக்கு வந்துப் போறத்துக்குதாம் செரியா இருக்கு. ஒங்கள பாக்க வாரப்ப வெறுங்கையும், வீசுன கையுமா வார முடியும்? ஏத்தோ நம்மாள முடிஞ்சது இதுதாம் பாத்துக்க..." என்ற சொல்லி விட்டு அழ ஆரம்பித்து விடும். அதற்கு மேல் அது குறித்து யாருக்கும் எதுவும் பேசத் தோன்றாது.
            தேன்காடு சித்தியின் நிலையைப் பார்க்கும் போதெல்லாம் செய்யு, "நாம்ம வேலக்கிப் போயி சித்திக்கு நெறையா சம்பாதிச்சுப் போடுவேம். புடவ எடுத்துக் கொடுப்பேம். நகெ வாங்கிக் கொடுப்பேம். வீடு கட்டிக் கொடுப்பேம்!" என்பாள்.
            "ஏம் வயித்துல பொறந்தது கூட இப்படிச் சொல்லுதான்னு பாரேம் யக்கா! ஒம் மவதாம் இப்படிச் சொல்லுது. அது சம்பாதிச்சி ஒனக்குக் கூட கொடுக்காதாம். நமக்குதாம் கொடுக்குமாம்." என்று சொல்லியபடி செய்யுவை அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் வைக்கும் தேன்காடு சித்தி.
            "எல்லாத்தியும் சம்பாதிச்சி ஒம் சின்னாயிட்டே கொடு. ஒம்ம வூட்டுக்கார்ரேம் ஒம்ம மண்டயிலயே அடிச்சி வூட்ட வுட்டு தொரத்தட்டும்!" என்று சொல்லி விட்டு அம்மா வெங்கும் சிரிக்கும். செய்யுவுக்கு அந்த நினைவுகளிலிருந்து இப்போது மீண்டு வருவது சிரமமாக இருந்தது. யோசனையிலயே இருந்தது.
            "என்னாடி தங்கம்! சொம்ப வெச்சிட்டு பெரிசா யோசிச்சுட்டு இருக்கே? அதுல ன்னா இருக்கும்னா?" என்றது சித்தி.
            "சித்தப்பா சீக்கிரமே வந்துடும்ல சித்தி?" என்றாள் செய்யு.
            "வாராம எங்கப் போவாக! வூட்டுல வந்து படுக்கையப் போட்டத்தாம் அது ஒங்க சித்தப்பா! வேலக்கிப் போயிட்டா... உருப்படியா நாலு காசி சம்பாதிச்சிட்டா... அதா ஒங்க சித்தப்பா? ன்னம்மோ நாம்ம வாங்கி வந்த வரம் அப்புடி!"
            "சித்தப்பா வேலக்கிப் போவாததுல ஒனக்குக் கோபமா சித்தி?"
            "கோபமுல்லாம் ஒண்ணுமில்ல. வேலக்கிப் போனா நல்லாருக்கும். சொன்னா கோவம் வந்துடும். அதாஞ் சொல்றதில்ல. அது செரி! ஊருல இருக்குறவுக மாரி குடிச்சிபுட்டு, தம்மு ஊதிப்புட்டு, எவளோ ஒருத்திய வெச்சிகிட்டா இருக்காக? இல்லேல்ல. அது போதும்படி நமக்கு. ந்நல்லா திங்கணும். தின்னுபுட்டுத் தூங்கணும். அத ஒண்ணுத் தவுர வேற கொறயில்ல. ஆனா, வேலக்கிப் போகணும்னு நெனப்பு வந்துட்டா அவ்வளவுதாம்படி. வூட்டுல பணமா இறஞ்சிக் கெடக்கும்னா பாத்துக்கோயேம். எல்லாம் எந்நேரம்!"
            இவர்கள் ரெண்டு பேரும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே தேன்காடு சித்தப்பா வந்தது. சித்தப்பாவின் கையில் இருந்த பையில் கடையிலிருந்த வாங்கி வந்த சாமான்கள் இருந்தன. செய்யு ஓடிப் போய் பையை வாங்கிக் கொண்டாள்.
            "புள்ளிக்கு இன்னிக்கு மீனு வாங்கி வரலாம்னு பாத்தா, காசி கொடுக்க வேண்டிய ரண்டாம் தெருகாரன கடைப்பக்கமே காங்கல. ன்னா பண்றது. அதாங் கறிகாயா வாங்கி வந்திட்டேம். கடத்தெரு பக்கமே போக முடியல. போனா அவ்வேம் காசி கொடுக்கணும்ங்றாம். இவ்வேம் காசி கொடுக்கணும்ங்றாம். நாளிக்குப் பாத்துக்கலாம் போ!" என்றது சித்தப்பா.
            "இஞ்ஞ வாங்களேம்!" என்றது சித்தி.
            "அஞ்ஞயிருந்தே சொல்லு!"
            "இஞ்ஞ வாங்களேம்னா வாங்களேம்!"
            "அட என்னாடி இவ ஒருத்தி! நேத்துதாம் கலியாணம் ஆன மாரி!"
            "புள்ளிய வெச்சிட்டு பேசுற பேச்சா இது! இஞ்ஞ வாங்களேம்னா வாங்க!"
            "அலுத்து சலிச்சு நடந்து வந்தா செத்த உக்கார வுட மாட்டேங்றே பாரு நீயி!"
            சித்தியின் பேச்சுக்கு சித்தப்பா சாமி மாடத்தின் பக்கம் வர மாட்டாதது போல தெரிந்ததும், செய்யு சித்தப்பாவின் கையைப் பிடித்து அழைத்து வந்தாள். சித்தி சாமி மாடத்தில் இருந்த செம்பு சொம்பைக் காட்டியது.
            "இதென்னாடி புதுசா இருக்கு? சாமாங்காரம் கொண்டாந்து கொடுத்தாம்னா?" என்றது சித்தப்பா.
            "ஆம்மா! இந்த கால நேரத்துலயே சாமாங்காரம் கொண்டாந்து கொடுக்குறாம்? நம்ம செய்யு பொண்ணு இருக்குல்ல. அது குளிக்கப் போறப்ப மணலைத் தோண்டிருக்கு. அப்போ உள்ளே இருந்துருக்கு. அதாங் இது!" என்று குசுகுசுப்பாய்ச் சொன்னது சித்தி.
            "அட! இது... புதயல்ல இது. புதயல்லு எல்லாரு கைக்கும் கெடைக்காதுடி. தங்கத்துல கையில கெடச்சிருக்குப் பாருடி!" என்று சித்தப்பா குசுகுசுப்பாய்ச் சொல்லியபடி சொம்பை எடுத்துப் பார்த்தது.
            "ன்னாடி சொம்பு இது! இப்படி மேலயும் போட்டு அடச்சிருக்கானுவோ!" என்றது சித்தப்பா.
            "உள்ள ன்னா இருக்கும்ங்க?" என்றது சித்தி.
            "யிரு! மந்திரம் போட்டு பாத்துச் சொல்றேம்!"
            "தொறந்து பாருங்களேம்! நீங்க வரட்டும்னு அப்படியே வெச்சிட்டு உக்காந்திருக்றோம்!"
            சித்தப்பா வெட்டிரும்பையும், சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வந்து பலகைக் கட்டையை இழுத்துப் போட்டு சாமி மாடத்துக்கு எதிரே அடிப்படியிலேயே உட்கார்ந்தது. சுற்றிலும் பார்த்து விட்டு திண்ணைப் பக்கம் போய் கதவை அடைத்துக் கொண்டு வந்தது. கொல்லைக் கதவையும் அடைத்தது. பின் பலகைக் கட்டையில் நன்றாகக் குந்திக் கொண்டு கால் பாதங்கள் இரண்டால் சொம்பை அசையாமல் பிடித்துக் கொண்டது. வெட்டிருப்பை வைத்து மூடியைச் சுற்றிலும் சுத்தியலால் தட்டிக் கொண்டே வந்தது. பாதி வெட்டி எடுத்ததும் வெட்டிரும்பை அப்படியே உள்ளே கொடுத்து வெளியே வளைத்து உள்ளே பார்த்தது. சித்தியும் செய்யும் ஆவலாக சொம்பின் உள்ளே பார்த்தார்கள். பார்த்தவர்களுக்குக் கண்கள் இமைக்க மறந்து போயின. சொம்பு நிறைய துவரம் பருப்பு அளவுக்கு தங்கக் காசுகளாக இருந்தன.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...