15 Jun 2019

ஜில்லாப்பான குளியல்



செய்யு - 116
            தேன்காடு கலா சித்திக்குப் பிறந்தது ரெண்டும் ஆண் பிள்ளைகளாக இருந்தன. ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்ற ஆசை சித்திக்கு நிரம்ப இருந்தது. அந்த ஆசையைச் சித்தி செய்யுவை அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொள்வதன் மூலம் தீர்த்துக் கொண்டது.
            காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு பரீட்சை விடுமுறை என்றால் தேன்காடு சித்தி திட்டைக்கு வந்து செய்யுவை அழைத்துக் கொண்டு போய் விடும். விடுமுறை நாட்கள் முடியும் வரை வைத்திருந்து கொண்டு வந்து விடும். கொண்டு வந்து விடும் போது செய்யுவுக்கு துணி மணிகள், வளையல், மணி, தோடு என்று ஏகத்துக்கும் வாங்கிக் கொண்டு வரும்.
            "யக்கா! ஒனக்கு மாரி ஒரு ஆம்பள புள்ளயும், ஒரு பொம்பள புள்ளயும் பொறக்கிறது அதிசயம்க்கா! நமக்குப் பாரு ரண்டும் ஆம்பளப் புள்ளயா போச்சு. சிப்பூரு மூத்த யக்காவுக்குத்தாம் ஒன்ன மாரி ஒரு ஆம்பளப் புள்ளயும், பொம்பளப் புள்ளயும். வாழ்க்கப்பட்டு யக்காவுக்கு மூணு பொண்ணுக்கு அப்பொறம் கடசியா ஆம்பள புள்ள. சிப்பூரு சின்ன யக்காவுக்கு எல்லாம் பொம்பள புள்ள. பாகூர்காரிக்கு ரண்டு பொம்பள புள்ளிக்கு அப்பொறம் இப்போதாம் ஆம்பளப் புள்ள. மூத்தவனுக்கு ரண்டும் ஆம்பளப் புள்ள. சின்னப் பயலுக்கு கல்யாணம் ஆனத்தாம் தெரியும்!" என்று அது சொல்லும் போது கேட்பவர்களுக்கு அதன் ஏக்கம் மனசுக்குள் மின்னல் வேர் விடுவது போல பாயும்.
            "எந்தப் புள்ளீகளப் பெத்தா ன்னாடி? கடசீக் காலத்துல கஞ்சி ஊத்துனாத்தாம் புள்ளீக! நாம பெத்தது ன்னா பண்ணப் போவுதுன்னு யாருக்குத் தெரியும்? தென்னய பெத்த இளநீரு! புள்ளீகளப் பெத்தா கண்ணீரும்பாங்க!" என்று சொல்லும் செய்யுவின் அம்மா வெங்கு.
            "அப்படிச் சொல்லாதே யக்கா! நம்ம புள்ளீகல்லாம் அந்த மாரி இருக்காது! ஆம்பளப் புள்ளன்னா கடசீ வரிக்கும் கஞ்சி ஊத்தும். பொம்பளப் புள்ளன்னா ஒடம்பு கிடம்பு சரியில்லன்னா வெச்சுக்க, ஓடி வந்து பாத்துக்கும். ரண்டையும் ஆம்பளப் புள்ளயப் பெத்துட்டு நாம்ம மருமகளுங்கிட்ட எப்புடி நொம்பலப்படப் போறேன்னு தெரியல. மருமகளுங்க மூஞ்சுல மொத்துனாக்கா பொம்பளப் புள்ளீக இருந்தாத்தாம் யக்கா வந்து சண்ட போட்டு கேக்கும். நம்மளுக்கும் கொஞ்சம் ஓரஞ்சாரமா இருக்கும். அதாம்க்கா நாம்ம செய்யுவ அழச்சிட்டுப் போறேம். பின்னாடி நமக்கு ஒண்ணுன்னா அதுதாம் வந்து பாத்துக்கணும். நல்லா நாலு கேள்வி கேட்டுக்கணும்."
            "ம்க்கும்! ரொம்பத்தாம் கனவு ஒனக்கு! அந்தக் குட்டிக்கு ஊரு சுத்துறது, எங்கயாவது போயி உக்காந்துக்குறதுன்னா இஷ்டம் பாத்துக்க. அதாங் ஒன்னய கண்டா ஓடியாறா!"
            "யக்கா! அப்டிலாம் சொல்லாதக்கா! நம்ம வூட்டுக்கு வந்தா அது பாக்குற வேலயின்னா! சோறு ஆக்கிப் போடுறது ன்னா! ஒனக்குப் பிடிக்கலன்னா சொல்லு நாமளே கொண்டு போயி வெச்சி வளக்கிறேம். படிக்க வைக்கிறேம். நாமளே பாத்து கல்யாணம் கட்டி வைக்கிறேம்!"
            "அந்த அளவுக்குப் வந்துப் போச்சா? இஞ்ஞ வூட்டுல இந்தாண்ட கெடக்கிறத, அந்தாண்ட எடுத்துப் போட மாட்டேங்றா! அஞ்ஞ சின்னாயி வூட்டுக்குப் போயி மாஞ்சு மாஞ்சு வேல பாக்குறாளா? வரட்டும் அவ்வே!‍ வெச்சிக்கிறேம்!"
            "புள்ளீங்கன்னா அப்படித்தாம் யக்கா! அதுங்க வூட்டுல ரண்டு சோறு திங்காது. அடுத்த வூட்டுக்குப் போனா ரண்டு தட்டு சோறு திங்கும். பொறந்த வூட்டுல பொறுப்பில்லாம இருக்குமுங்க. இன்னொரு வூட்டுக்குப் போனா பொறுப்பா இருந்துக்கும்ங்க. இந்தச் சந்தோஷலாம் எத்தினி நாளிக்குச் சொல்லு? கலியாணம் ஆயி போற வரிக்கும்தான். அதக்கப்பொறம் அதுங்க குடும்பம், அதுங்க சொமை, அதுங்க பாரம்னு ஆயிடும். ந்நல்லா நாலு மூச்சு வுட நேரமிருக்காது. அலச்சலும், வேலயுமா கழியுமுங்க பாவம். நம்ம செய்யு பொண்ணுக்கு அந்த மாதிரியெல்லாம் யில்லாம நல்ல புள்ளய பாத்து கட்டி வைக்கணும். நம்ம செய்யு புள்ள அவனுக்கு வேல பாக்காம, அவ்வேம் நம்ம செய்யு புள்ளிக்காக வேல பாத்துக் கொடுக்கணும். அப்பதாம் நாம்ம நெனச்சப்ப கூட்டியாந்து வெச்சிட்டு கொஞ்சிட்டு இருக்க முடியும்!"
            "நீயி ந்நல்லா அழச்சிட்டுப் போயி கொஞ்சிட்டு இருடி! ஒனக்கு வேற ன்னா வேலயிருக்கு? அஞ்ஞ வூடு கெடக்குற நெலயில நீ இஞ்ஞ அஞ்ஞயுமா அலஞ்சிட்டு இவள கொண்டு போயிட்டு கொண்டாந்து வுட்டுட்டு இருக்கே! ஏம்டி அந்த நேரத்துக்கு ஒரு ரண்டு வேலயப் பாத்தீன்னா வூடு வெளங்காமப் போயிடுமா?"
            "என்ன யக்கா! இத அழச்சிட்டுப் போயி செலவு பண்ணித்தாம் நாம்ம ஏழயாப் போவப் போறோமோ? ஆசைக்கு ஒரு பொம்பள புள்ள யில்லாம போயிடுச்சிப் பாரு. எந் தலயெழுத்து! இது அப்புடியே எம் பொண்ணு மாரில்ல வந்து போறந்திருக்கு! எம்ம வூட்டுக்காருக்கு இது மேல எம்புட்டு பிரியம் தெரியுமா? நாம்மதான்டி இந்த புள்ளிக்குக் கலியாணம் பண்ணி வெக்கணும்னு பேசிட்டு இருக்காரு! அதுவும் தேன்காட்டுலயே ஒரு நல்ல புள்ளய பாத்து கலியாணம் பண்ணி அஞ்ஞயே வெச்சுக்கணுமாம்!" இப்படித்தான் செய்யுவின் அம்மா வெங்குவும், தேன்காடு கலா சித்தியும் திட்டைக்கு வரும் போதெல்லாம் பேசிக் கொள்ளும்.
            திட்டைக்கு வரும் போதெல்லாம் செய்யுவோடு வெங்குவையும் தேன்காடு வந்து போகுமாறு தேன்காடு சித்தி கூப்பிடும். வெங்கு போகாது. "அவஅவளுக்கும் இஞ்ஞ ஆயிரெத்தெட்டு வேல கெடக்குடி. இந்த மாடு கண்ணுகள யாரு பாக்கிறது? பத்து நிமிஷம் வந்து மூஞ்ச பாக்கலேன்னா கத்தியே மனுஷரக் கொன்னுபுடும். வூடு, வயக்காடு பாக்கிறதுக்கே ரண்டு ஆளு வேணும் போலருக்கு. இதுல இந்த மனுஷம் வேற வூட்டக் கட்டுறேன்னு போட்டுகிட்டு சிரமும்னா சிரமும் அப்படிப் படுறாரு. இது நாம்ம வேற வந்து அஞ்ஞ ஒக்காந்துக்குறேம்!"
            "ன்னா யக்கா எப்போ பாத்தாலும் மாடு, கண்ணுன்னுகிட்டு? கவர்மெண்டு சம்பளத்த வாங்கிகிட்டு வூடு கட்டுறது அம்புட்டு கஷ்டம், இம்புட்டு கஷ்டம்னு அலுத்துக்கிறீயே! செத்த அப்படி யிப்படி வந்து பாத்தாத்தான் ஒலகம் புரியும்!" என்று சொல்லும் தேன்காடு சித்தி.
            "அதல்லாம் மாடு கண்ணுவோ வளத்துப் பாத்தாதான்டித் தெரியும்? வூட்டைக் கட்டுறதுன்னா ஒனக்கு அவ்வளவு ச்சும்மா போச்சா? வூட்டுக் கட்டிப் பாரு, கல்யாணம் பண்ணிப் பாருன்னு சொல்றாங்களே தெரியாதா ஒனக்கு? ஒனக்கென்ன ரண்டு ஆம்பள புள்ளிகளப் பெத்துட்டு ஊரு ஊரா சுத்தித் திரியுறே? ஒரு பொம்பள புள்ள இருந்தா கட்டிக் கொடுக்கணுமே! அதுக்குக் காசி சேக்கணுமேங்றது தெரியும்!" என்று பதிலுக்கு பதில் சொல்லும் வெங்கு.
            "நீயி ஒண்ணும் அதுக்கு நக, நட்டு சேத்து கட்டிக் கொடுக்க வாணாம். அத நாம்ம பாத்துக்கிறேம்! வந்துட்டுப் போறதுல்ல ஒனக்கு ன்னா இருக்கு?" என்று தேன்காடு சித்தி கேட்டால், "போடி வேலயத்தவளே! இஞ்ஞ ரண்டு நாளு தங்கி வேலயப் பாத்தாத்தாம் தெரியும்! ஒனக்கு வந்த வேல ன்னா? அவள அழச்சிட்டுக் கெளம்புறதுதான! மொதல்ல அழச்சிட்டுக் கெளம்பு. இஞ்ஞ ஆவுற வேலயயும் பேசிப் பேசியே ஆவ வுடாம பண்ணிடுவே போலருக்கே!" என்று வெங்கு முதலில் கிளப்பி விட்டு விடும்.
            தேன்காடு சித்திக்கு செய்யுவை அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொள்வதில் இருந்த பிரியம் செய்யுவுக்குக் கல்யாணம் ஆகும் வரையில் குறையவில்லை. செய்யு வயதுக்கு வந்தப் பிற்பாடும் அது அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டது. விடுமுறை என்றால் செய்யுவும் தேன்காடு சித்தி எப்போது வரும் காத்திருக்க ஆரம்பித்து விட்டாள்.
            தேன்காடு மணல்சாரியான ஊர். ஊரில் தென்னை மரங்களும், மாமரங்களும் அதிகம். தண்ணீரைக் குட்டைத் தோண்டி பிடித்துக் கொள்வார்கள். இதற்காகவே ஒவ்வொரு வீட்டுக்கும் நல்ல தண்ணி குட்டை என்ற ஒரு குட்டையை வைத்துக் கொள்வார்கள். வீட்டுக்கான தண்ணீர் பிடிப்பதற்கு மட்டுமே அந்தக் குட்டையை வைத்துக் கொள்வார்கள். மற்றப் புழக்கங்களுக்கு இன்னொரு குட்டையை வெட்டி வைத்துக் கொள்வார்கள். இப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீரின் தேவைக்கும், பயன்பாட்டுக்கும் ரண்டு குட்டைகள் இருக்கும். கூட்டுகுடிநீர்த் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வரும் வரை அநேகமாக அங்கிருந்த ஒவ்வொரு வீடுகளுக்குமான தண்ணீர் ஏற்பாடு அப்படித்தான் இருந்தது.
            தேன்காட்டில் ஒவ்வொரு வீடும் தோப்பு வீடு போல இருக்கும். தோப்புக்குள் புகுந்து இருநூறு அடி, முந்நூறு அடி தூரம் நடந்தால்தான் வீடே வரும். வீட்டுக்குள் நுழைவதற்குள் மாமரங்கள் வரிசை கட்டி நிற்கும். அல்லது தென்னை மரங்களாக இருக்கும். திட்டையோடு ஒப்பிடும் போது ஒவ்வொரு வீட்டுக்கும் அங்கே இருக்கும் இடப்புழத்தைப் பார்த்தால் யம்மாடியோவ் என்று வாயைப் பிளக்க வேண்டியதுதான். ஒரு கிராமத்துப் பிள்ளைகளைக் கொண்டு வந்து அங்கே ஒரு வீட்டுக்கு இருக்கும் தோப்பு இடத்தில் விளையாட விடலாம். அவ்வளவு பெரிசு. வேலியென்று பார்த்தால் வரிசையா கள்ளியை நட்டு  வைத்திருப்பார்கள். அது சில இடங்களில் இருக்கும். பல இடங்களில் இல்லாமல் திறந்த திறப்பா இருக்கும். அந்தக் கள்ளி முழுக்க பிள்ளைகள் எதையெதையயோ கிறுக்கி வைத்திருக்கும். தெரு ரோடு முழுக்க மணல் மணலாக கிடக்கும். நடப்பதே ஒரு வகையில் சிரமமாகத்தான் இருக்கும். இதில் சைக்கிள் என்றால் ரொம்ப கஷ்டம். பெரும்பாலும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வந்து தார் ரோடு வந்ததும் ஏறிக் கொள்வார்கள். வெகு சிலர் அந்த மணல் ரோட்டிலும் விடாப்பிடியாக சைக்கிளை மிதித்துக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது அது நல்ல வேடிக்கையாக இருக்கும். முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு சிரமப்பட்டுதான் மிதித்துக் கொண்டு வர வேண்டும். தெரு பாதை என்றிருந்தாலும் வீட்டு தோப்பிகளின் குறுக்கே புகுந்து போகும் பழக்கமும் அங்கிருந்தது. அப்படிப் போகும் போது ஒவ்வொரு மாமரத்திலும் சடை சடையாகத் தொங்கும் மாங்காய்களைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கும். ஒரு மாமரம் இவ்வளவு மாங்காய்களைக் காய்க்குமா என்று அதிசயிக்காமல் இருக்க முடியாது. தேங்காயைப் பார்த்தால் இவ்வளவு பெரிய தேங்காய் அங்கு மட்டும் எப்படிக் காய்க்கிறது என்று கேட்காமல் இருக்க முடியாது.
            விகடுவுக்குத் தேன்காடு போவதென்றால் வேப்பங்காயாகக் கசக்கும். தப்பித் தவறி போகும் சூழ்நிலை வந்தாலும் இரவுக்குள் கிளம்பி ஊர் வந்து சேர்ந்து விட வேண்டும் அவனுக்கு. இல்லையென்றால் பெருத்த ஆர்ப்பாட்டத்தைச் செய்து அவனைக் கிளப்பி விட்டால் போதும் என்ற நிலைக்கு அங்கிருப்பவர்களை ஆளாக்கி விடுவான். அவனுக்கு அங்கிருக்கும் குட்டையில் காலையில் குளிப்பது என்றால் ஒத்துக் கொள்ளாது. அதற்குப் பயந்தே தேன்காடு செல்ல மாட்டான். தப்பித் தவறிப் போகும் நிலை வந்தாலும் கிளம்பி வருவதில் குறியாக இருப்பான். காலேஜ் போய் படிக்க ஆரம்பித்தப் பிறகு அவனாக தேன்காடு வரவில்லை என்பதில் தேன்காடு சித்திக்கு வருத்தம் இருந்தது. இதற்கு நேர்மாறாக இருந்தாள் செய்யு. அவளுக்குத் தேன்காடு என்றால் தேன் போல இனித்தது. அதிலும் அந்தக் குட்டைக் குளியல் அவளுக்குப் பிடித்துப் போய் விட்டது. அந்த தண்ணியின் ஜில்லாப்பை அவள் விதவிதமாக ரசித்துச் சொல்வாள்.
            அவளுக்கு ஒரு விஷேப் பழக்கம் இருந்தது. குட்டையில் குளிப்பதற்காகப் போனாள் என்றால் நாள் கணக்கில் நேரம் எடுத்துக் கொள்வாள் என்று சொல்வது மிகையாகத் தோன்றினாலும் வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. குளிப்பது கொஞ்ச நஞ்ச நேரமாக இருந்தாலும், அந்தக் குட்டையைச் சுற்றி சிறு பிள்ளைகளைப் போல கையால் குழி தோண்டுவதும், அதை மூடுவதும் அவளுக்குப் பிடித்தமாயிருந்தது. குட்டை மணலில் குழி தோண்டி, மூடும் மணல் விளையாட்டிற்காகவே அவள் தேன்காடு போய் வந்தாளோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள். தேன்காடு சித்தியும் அதை நிரம்பவே ரசிக்கும். துணைக்கு அதுவும் சில குழி தோண்டி சிறுபிள்ளையைப் போல மூடும். வழக்கமாக சித்திதான் செய்யுவைக் குளிக்கச் செல்லும் போது அழைத்துக் கொண்டு போய் அழைத்துக் கொண்டு வரும். ஆனால் அப்போது அழைத்துக் கொண்டு போயிருந்த போது, சித்திக்கு வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. செய்யு அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள். உடனே வர வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். "ன்னா புள்ளே! சொன்னா கேட்க மாட்டேங்றீயே! நீயி குளிச்சுப் பழக்கப்பட்ட எடந்தானே! நீயி போயி குளிச்சிட்டு யிரு. செத்த நேரந்தாம். இந்த வெட்டுன மாங்காய அவிச்சிப் போட்டுட்டு வந்திடறேம்!" என்றது தேன்காடு சித்தி. செய்யுவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவள் ஏக குஷியோடு குட்டையில் குளிப்பதற்காகக் கிளம்பினாள். முதல் முறையாக சித்தி இல்லாமல் தனியாகக் குளிக்கச் செல்கிறாள்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...