12 Jun 2019

விஷம் தெளித்த பிள்ளைகள்!



செய்யு - 113
            வேணி அத்தை செத்து மறுநாள் பால் தெளியின் போது வேற்குடியே அல்லோலகலப்பட்டது. லாலு மாமாவின் மகள்களான ஈஸ்வரியும், குயிலியும் வீட்டுக்கு முன் கட்டிப் புரண்டு சண்டை போட ஆரம்பித்து விட்டன. ஒருத்தரை ஒருத்தர் மயிரைப் பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டன. பால் தெளிக்கு வந்த எல்லாருக்கும் தர்ம சங்கடமாகிப் போய் விட்டது.
            "ஏண்டி இப்டி அடிச்சீக்கிறீங்க?" என்று முருகு மாமாவின் மனைவி நீலு அத்தைதான் இடையில் புகுந்து கேட்டுப் பிரித்து விட்டது. அடித்துக் கொண்டு முடியைப் பிய்த்துக் கொண்டு ரெண்டு பேருக்கும் மூச்சு வாங்கியது.
            "இந்தச் சிறுக்கிதாங் வூட்டையே அரிச்சிக் கொட்டிட்டு கல்யாணம் ஆயிப் போயிட்டாளே! அப்பொறமும் இந்த வூட்ட அரிச்சிக் கொட்டிக்க நெனக்கிறா? வூட்டுல இருக்குற அம்மாவோட நக நெட்டு, வெள்ளி சாமானு, பித்தளை சாமானு, புடவ துணி மணிக எல்லாத்தியும் எடுத்து மூட்ட கட்டுறா? எதுக்குடின்னு கேட்டா... அதாங் அம்மா போயிட்டே... அம்மா இதையெல்லாம் எனக்குதாங் வாங்கி வெச்சதா சொல்றா? ஒனக்கு வாங்கி வெச்சதத்தாங் கல்யாணத்தப்ப எடுத்துட்டுப் போனீயேடி! இன்னும் ஒனக்கு ன்னா? யம்மா இப்படி நோயிலயும், நோவுலயும் கெடந்து கஷ்டப்பட்டிச்சே. ஒரு தபா வந்து பாத்திருப்பீயா? அதுக்கு துணி மணி தொவச்சிப் போட்டு, சாணி மூத்திரம் அள்ளுனது யாரு? நாந்தானே! இன்னிக்கு செத்ததும் வந்து சிங்காரிச்சுகிட்டு சிலுப்பிட்டு எல்லாத்தியும் அள்ளிட்டு நிக்குறீயே! நாளிக்கு நமக்கு ஒரு கல்யாணம்னா கொடுக்குறதுக்கு எதுவும் வாணாமா?" என்றது குயிலி மூச்சு விடாமல்.
            "நிச்சயதப்ப ஓடுன நாடுமாறி நாயிக்குப் பேச்சப் பாரு! ஒனக்கு இந்நேரம் கலியாணம் ஆயிருந்தா ஒனக்குச் சேர வேண்டியது தானா வந்திருக்கும். பங்கெல்லாம் பெரியவங்க பாத்து கல்யாணம் பண்ணி வெக்கிறவங்களுக்குதாம். ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு இல்ல, புரிஞ்சுக்கோ." என்றது ஈஸ்வரியும் விடாமல்.
            "ஒனக்குதாங் ஆண்டு அனுபவிக்க புள்ளையும் இல்ல ஒரு மண்ணும் இல்ல. அப்பொறம் எதுக்கு ஒனக்கு இதல்லாம்? இப்படி காசி காசின்னு நிக்குறீயே! யாருக்குச் சேத்து வெக்கிறே? நீ எத எடுத்துட்டுப் போனாலும் அது ஒனக்கு வமிசம் இல்லாமத்தான் அழியும் பாரு!" என்றது குயிலி.
            "எனக்கு புள்ள இல்லாம வமிசம் அழியும்னா, ஒனக்கும் அப்படிதான்டி. யாருக்குடி புள்ள இல்ல. இன்னும் பத்தே மாசத்துல பாருடி!" என்றது ஈஸ்வரி.
            "ம்க்கூம். இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல. வயித்துல புழு பூச்சி தங்கலன்னாலும், வாயில மட்டும் புழுவும், பூச்சியும், பாம்பும் புழுக்குறதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல. எத்தினியோ பத்து மாசத்த பாத்தாச்சு. த்தூ... ஒனக்கெல்லாம் ம்ஹூம்... நெனச்சிக் கூட பாக்காத. ஏய்... எல்லாம் நமக்குத் தெரியும்டி! ஒனக்கெல்லாம் ஒம் புருஷங் கூட படுத்து எதுவும் நடக்காது. எவம் கூடயாது படுத்துதாம் எதாவது நடக்கும்!" என்றது குயிலி.
            "இந்தாரு மரியாதியா பேசு. நிச்சயம் ஆவுறதுக்கு முன்னாடியே எவம் கூடயோ படுக்கப் போனது நீயா நானாடி?"
            "அட ச்சீய்! பேச்ச நிறுத்துங்குடி! அக்கா தங்கச்சிப் பேசிக்கிற மாரியாடி பேசிக்கிறீங்க? ன்னம்மோ சக்களத்திக மாரில்லடி சண்டிக்கி நிக்குறீங்க? இப்போ யாருக்கும் எந்தப் பங்கும் கெடயாது. தம்பி ஒருத்தம் இருக்கானேன்னு ஒருத்தியாச்சும் நெனச்சீங்களாடி?" என்றது நீலு அத்தை.
            அப்போதுதான் லாலு மாமாவின் மகன் வேலன் பேச்சுக்கு இடையே வந்தது. ஆள் பார்ப்பதற்கு குண்டு கல்யாணம் ரேஞ்சுக்கு இருந்தது. நடந்து நாலு அடி எடுத்து வைத்ததுமே அதுக்கு மூச்சு வாங்கியது.
            "இவ்வேம் ஒருத்தம்! ஆஸ்டல்ல உக்காந்து டாக்டருக்குப் படிக்கிறேம், டாக்டருக்குப் படிக்கிறேம்னு தின்னு தின்னு ஊதிப் பெருத்துட்டு இஞ்ஞ வந்து ஏம்டா மூச்சி வாங்கி நிக்கிறே?" என்றது ஈஸ்வரி.
             "பங்குலாம் யாருக்கிம் கெடியாது. எதுவா இருந்தாலும் அப்பா செத்ததுக்கு அப்பொறம்தாம்!" என்றது வேலன்.
            "அது எப்படா சாகும்? நீயி எப்படா பங்குப் போடறது?" என்றது ஈஸ்வரி.
            பால் தெளிக்கு வந்திருந்த அத்தனைப் பேருக்கும் மூச்சே நின்று விடும் போலாகி விட்டது. இதைக் கேட்டதும் லாலு மாமா சிலையாகி விட்டது போல நெஞ்சைப் பிடித்தபடி அப்படியே தரையில் யோகியைப் போல உட்கார்ந்து விட்டது.
            "இதுகள மொதல்ல களச்சி விடுங்கடா!" என்றது நீலு அத்தை.
            மூன்று பேரையும் ஆட்கள் மூன்று மூலைக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள்.
            "வாத்தியாரு வூட்டுப் புள்ளைக மாரியா பேசுதுங்க! இப்பிடியா சிறுக்கி, நாடுமாறின்னுட்டு. பச்சப் பச்சயால்லா பேசுதுங்க! இதுல வேற அத படிக்கிறேம், இதப் படிக்கிறேம்னுகிட்டு...இதுங்க ஏதும் பால்தெளிக்கு வந்த மாரியே தெரியல. எல்லாம் விஷத்த தெளிக்க வந்திருக்கு! பணங் காசின்னா இப்பிடியா புள்ளீகப் பேசிக்கும்! நாமளும் என்னின்னமோ புள்ளீகளப் பாத்தாச்சி. இந்த மாரிப் புள்ளீகள பாத்ததில்லே!" என்று பால் தெளிக்கு வந்த சனங்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்றன.
            இந்த சண்டைக்கும், சச்சரவுக்கும் அப்புறம் என்ன நடந்ததோ! "இப்பிடியா அம்மாக்காரி செத்த ஈரம் காயிறதுக்குள்ள புள்ளீங்க பேசிக்கும்?" என்ற பேச்சைத் தவிர, ஈஸ்வரி குறித்தோ, குயிலி குறித்தோ, வேலன் குறித்தோ அதிகம் பேச்சில்லாமல் போனது.
            வேணி அத்தை செத்த மறுவருடம் லாலு மாமா வாத்தியார் வேலையிலிருந்த ரிட்டயர்ட் ஆனது. வேற்குடியில் இருக்கப் பிடிக்காமல் மணமங்கலத்தில் வாங்கிப் போட்டிருந்த வீட்டில் அதுவும் குயிலியும் சில நாட்கள் இருந்தது. என்ன நினைத்ததோ, அங்கேயும் இருக்கப் பிடிக்காமல் தஞ்சாவூர் போவதென்று முடிவு எடுத்தது. அதுக்கு ஏகப்பட்ட நிலங்கள் ஓகையூரில் இருந்தன. வடவாதி கடைத்தெருவில் ஒரு பெரிய இடத்தையும் வாங்கிப் போட்டிருந்தது. தஞ்சாவூர் போய் விட்டால் மகன் டாக்டருக்குப் படித்து விட்டு வந்தால் கிளினிக் வைக்க வசதியாக இருக்கும் என்று கணக்குப் போட்டது.
            எந்த ஊர்ப் பகுதியில் அது இத்தனைக் காலமாக ஆண்டு அனுபவித்தாதோ, அதே ஊர்ப் பகுதியைப் போகும் போது, "இந்த ஊர்லலாம் மனுஷம் இருப்பானா? இன்னும் ஒரு வளர்ச்சி இல்லாம... எத்தினி வருஷந்தாம் இந்த ஊர கட்டிட்டு அழறது? நாலு காசு பாக்க முடியுதா? பசின்னா போயி சாப்புட நாகரிகமான ஓட்டல் இருக்கா? ஒரு நல்ல டீ குடிக்க முடியுதா? ருசியா ஒரு பட்சணம் சாப்பிட முடியுமா? இன்னா ஊரு இது? இஞ்ஞலாம் இனுமே இருக்க முடியாது. தஞ்சாரூ, திருச்சின்னு போனாத்தாம் செரி! வாழ்க்கையில நல்லா இருக்கலாம்! பெருசா வரலாம்! ஒண்ணுமில்லீங்க... அப்படி சாயுங்காலம் போயி ஒரு கடையில கணக்கு எழுதுனா மாசத்துக்கு ரண்டாயிரம் சம்பாதிக்கலாங்க! ஏய் யப்பாடி இஞ்ஞ இருந்து நாசமா போயிடுதீங்கடா! டவுனு கிவுனுல எடத்த வாங்கிப் போட்டு வூட்ட கட்டி முன்னுக்கு வரப் பாருங்க!" என்று சொல்லி விட்டுதான் கிளம்பியது. லாலு மாமா தஞ்சாவூருக்குப் போவது குறித்து யாருக்கும் எந்த வருத்தமுமில்லை. ஆனால் இப்படி அது பேசி விட்டுப் போனதுதான் கேட்டவர்களுக்கு எல்லாம் மனதில் வருத்தத்தை உண்டு பண்ணியது.
            தஞ்சாவூரில் வீட்டோடு விற்பனைக்கு வந்திருந்த ஒரு மனையை அப்போதே பதினெட்டு லட்சத்துக்கு வாங்கி அதில் குடி போனது லாலு மாமா. ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறையாவது தஞ்சாவூரிலிருந்து வடவாதிக்கு வந்து முருகு மாமா வீட்டில் தங்கி வாங்கிப் போட்டிருந்த மனை, வயல்களை ஒரு ரவுண்ட் பார்த்து விட்டு வந்து விடும். போகப் போக வாரத்திற்கு இரண்டு முறை வருவது முடியாமல் வாரத்திற்கு ஒரு முறையாக வந்து கொண்டிருந்தது. அதுவும் முடியாமல் போக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை என்று கணக்கு வைத்துக் கொண்டு விடாப் பிடியாக வந்துப் போய்க் கொண்டிருந்தது. அப்புறம் அதுவும் முடியாமல் மாதத்திற்கு ஒரு முறை என்று வந்து கொண்டிருந்தது. போகப் போக அதுவும் முடியாமல் போக, இங்கிருக்கும் மனை, வயல்களையெல்லாம் விற்கும் முடிவுக்கு வந்து விட்டது.
            ஊரில் இருந்த போதே மனை, வயல்களை விற்றிருந்தால் நல்ல விலைக்குப் போயிருக்கும். லாலு மாமா தஞ்சாவூரில் இடம் வாங்கிப் போய் விட்டதால், எப்படியும் அது விற்றுதான் தீர வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு பாதி விலைக்கும், கால் விலைக்கும் அதன் மனைகளையும், வயல்களையும் கேட்டார்கள். லாலு மாமாவுக்கு அதிர்ச்சியாகப் போய் விட்டது. "எல்லாத்தியும் எவ்ளோ வெல கொடுத்து வாங்கியிருப்பேம். இப்போ அடிமாட்டு வெலய்க்கு கேக்குறானுங்களே!" என்று அலுத்துக் கொண்டது.
            யாருக்கோ பாதி விலைக்கு விற்பதை விட அண்ணனான முருகு மாமாவுக்கே அந்த விலைக்குக் கொடுப்பது நல்லது என லாலு மாமாவுக்குப் பட்டிருக்க வேண்டும். முருகு மாமாவுக்கு ஏக சந்தோஷம். பாதி விலைக்கே வாங்கிக் கொள்வதாகச் சொல்லி ஏதோ கொடுப்பதைக் கொடுத்து விட்டு ஓகையூர் வயல்களை மட்டும் வாங்கிக் கொண்டது. அப்போது அந்த இடங்களை வாங்க ஒரு பெரிய போட்டியே இருந்தது. இருந்தாலும் லாலு மாமா தஞ்சாவூரில் இருப்பதைத் தெரிந்து கொண்டு விலையைக் குறைத்துக் கேட்டதில் எல்லாம் முருகு மாமாவின் கைக்குப் போனது. அதே நேரத்தில் முருகு மாமா மணமங்கலத்தில் வீடு மற்றும் தோட்டத்தோடு இருந்த மனையோ, வடவாதிக் கடைத்தெருவில்  இருந்த இடத்‍தையோ பெருந்தன்மையாக வேண்டாம் என்பது போல சொல்லி விட்டது. முருகு மாமாவுக்குத் தெரியும், மணமங்கலம் நிலத்தில் இருந்த வில்லங்கமும், வடவாதி கடைத்தெரு இடம் கோயில் இடம் என்பதும். வயல்களைப் போல அந்த இடங்கள் ரிஜிஸ்ரேஷன் ஆகாமல் கை பத்திரமாக கை மாறியவைகள் அந்த இடங்கள். அதனால் அது சாமர்த்தியமாக விலகிக் கொண்டது. அந்த இடங்களை கால் விலைக்கு வாங்கிக் கொள்ளக் கூட யாரும் தயாராக இல்லை. அதனால் அந்த இடங்களை யார் தலையில் கட்டுவது என்று யோசித்த லாலு மாமாவுக்கு சுப்பு வாத்தியாரின் ஞாபகம்தான் வந்தது.
            எந்த சுப்பு வாத்தியாரை வேணி அத்தையின் சாவு காரியத்தில் வரக் கூடாது என்று கேவலமாக லாலு மாமா பேசியதோ, அந்த சுப்பு வாத்தியாரைத் தேடி வீட்டுக்கே வந்தது லாலு மாமா.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...